சிந்திக்க ஒரு கேள்வி.
***********************************
தாய் இன்றி நாம் இல்லை.
உலக ரீதியாக உலகில் ஒரு தாய் இருப்பதுபோல,
ஆன்மீக ரீதியாக விண்ணகத்தில் நமக்கு ஒரு தாய் இருக்கிறாள்.
தாய்ப் பற்று இல்லாதவனை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை.
நமது தாயை ஒருவன் தூற்றும் போது நமக்கு உணர்ச்சியே வராவிட்டால்
நமக்கும் தாய்ப்பற்று இல்லாதது போல் ஆகிவிடும்.
அன்னை மரியாளைப் பற்றி நாம் பேசும்போது,
"பைபிளில் இருக்கிறதா? "
என்று கேட்பவர்களே.
பைபிளில் உள்ள அவளைப் பற்றிய வார்த்தைகளுக்குத் தங்கள் இஸ்டம் போல் பொருள் கூறுகிறார்கள்.
இப்போ அவர்களுக்கு ஒரு கேள்வி:
நம் தந்தையின் குணத்தின் அடிப்படையில அவருடைய வார்த்தைகளுக்குப் பொருள் கொடுக்க வேண்டுமா?
அல்லது
அவருடைய வார்த்தைகளின் அடிப்படையில் அவரது குணத்தை மதிப்பீடு செய்ய வேண்டுமா?
தந்தையை மதிப்பவர்களுக்குத்தான் இக்கேள்வி புரியும்.
தந்தையின் குணத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள்,
அவர் என்ன சொன்னாலும்
அதில் அவருடைய குணத்தை மட்டுமே பார்ப்பார்கள்.
குணத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வார்த்தைகளை மட்டும் பார்ப்பார்கள்.
இறைவன் நமது தந்தை.
பைபிள் இறைவார்த்தை.
இறைவனை வைத்துதான் அவரது வார்த்தைகளுக்குப் பொருள்.
வார்த்தைகளை வைத்து இறைவனை மதிப்பீடு செய்தால் நாம் இறைவனை மதிக்க வில்லை என்றுதான் அர்த்தம்.
உ . ம்:
"கடவுள், இவ்வுலகில் மனிதனைப் படைத்தது குறித்து வருந்தினார்."
( ஆதி. 6:5)
இது வார்த்தை.
இதை வைத்து, கடவுள் மாறக்கூடியவர், வருத்தம் அடையக் கூடியவர் என்று முடிவு செய்வோமா?
கடவுள் மாறாதவர். அளவுகடந்த விதமாக மகிழ்ச்சியாய் இருப்பவர். அவரால் வருந்த முடியாது.
உலகை அவரே விரும்பிப் படைத்தார்.
படைக்கும்போதே உலகில் என்னென்ன நடக்கும் என்று தெரியும்.
படைக்கு முன்னரே உலகில் என்னென்ன நடக்கும் என்று நித்திய காலமாகவே தெரியும்.
படைத்ததற்காக அவரால் வருந்த முடியாது.
மக்களின் பாவ வாழ்க்கையின் கனா கனத்தை குறிப்பதற்காக எழுதப்பட்ட வார்த்தைகளை வைத்து
கடவுளின் தன்மையை மதிப்பீடு செய்யக்கூடாது.
படைப்பு :
முதல்நாளில் :
"ஒளிக்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்." (ஆதி. 1:5)
நான்காம் நாளில்:
"அப்போது கடவுள் பகலை ஆளப் பெரியதொரு சுடரும், இரவை ஆளச் சிறியதொரு சுடருமாக இரு பெரும் சுடர்களையும் விண்மீன்களையும்உண்டாக்கினார்."
(ஆதி 1:16)
இவை வார்த்தைகள்.
இவற்றை அப்படியே பொருள் கொண்டால்
முதல் நாளில் இரவு பகலையும்,
நான்காம் நாளில் சூரியனையும், நிலவையும் படைத்தார் என்று பொருள் வராது?
பைபிள் ஒரு
புவியியல் புத்தகமோ,
விஞ்ஞான புத்தகமோ,
சரித்திரப் புத்தகமோ அல்ல.
தெய்வீக செய்திகளைத் (Divine messages) தரும் நூல்.
படைப்பு பற்றிய அதிகாரங்கள் தரும் ஒரே "செய்தி' (Message)
சர்வ வல்லப கடவுள் நாம் வாழும் பிரபஞ்சத்தை ஒன்றுமில்லாமை யிலிருந்து படைத்தார்,
மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்,
அவர்களைத் தன் சாயலில் படைத்தார்,
மனிதன் இறைவன் கட்டளையை மீறிப் பாவம் செய்தான்,
கடவுள் மனிதனை மீட்க மீட்பரை அனுப்ப வாக்களித்தார்"
என்பது மட்டும்தான்.
வார்த்தைக்கு வார்த்தை அகராதிப்படி (as per dictionary) பொருள் கொடுக்கும் அடிப்படைவாதிகள் இறைவார்த்தையைக் கேலிக் கூத்து ஆக்குகிறார்கள்.
நமக்கு முக்கியம் செய்தி, (Message)
செய்தியைக் கொண்டுவரும் வரிகள் அல்ல.
"பைபிளில் இருக்கிறதா?" என்று வார்த்தைகளுக்குள் மட்டும் நுழைந்து தேடுபவர்கள், செய்தியை விட்டு விடுவார்கள்.
வார்த்தைகள் செய்தியைத் தாங்கி வரும் வாகனம். (vehicle)
அதாவது செய்தியை அனுப்புபவர் வார்த்தைகள் என்னும் வாகனம் மூலம் அனுப்புகிறார்.
வார்த்தைகள்தான் செய்தியைக் கொண்டுவருகின்றன.
அவற்றைவிட அனுப்புபவரும் அவர் அனுப்பிய செய்தியும்தான் முக்கியம்.
வார்த்தைகளின் பொருள்
கால மாற்றங்களுக்கு ஏற்பவும்,
பயன் படுத்துகிற மனிதர்களின் அனுபவ மாற்றங்களுக்கு ஏற்பவும்
மாறிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் கொடுக்கப்பட்ட செய்தி மாறாது.
கொடுக்கும் கடவுளும் மாற மாட்டார்.
இறுதி நாட்களின் வருகை பற்றி கூறும் ஆண்டவர்,
"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும்
" மகனுக்கும்கூடத் தெரியாது"
(மாற்கு, 13:32)
."மகனுக்கும்கூடத் தெரியாது"
என்ற இயேசுவின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வோமா?
"நானும் தந்தையும் ஒன்றே"
என்று சொல்லியவர்
"தந்தைக்குத் தெரியும், எனக்கு தெரியாது"
என்று சொல்வாரா?
அந்த வார்த்தைகளுக்கு இப்படி பொருள் கொண்டால்
நாம் இயேசுவை விட வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
உலக முடிவு நாம் எதிர் பாராத நேரத்தில் வரும்.
இக்கருத்துக்கு அழுத்தம் கொடுக்கவே
"எனக்குக் கூட தெரியாது." என்கிறார்.
அவர் கடவுள். அவரது ஞானத்தை மிஞ்சி எதுவுமே இல்லை.
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.'' (மத். 7:21)
இவை இயேசு சொன்ன வார்த்தைகள்தான்.
அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவரைப் பார்த்து,
"இயேசுவே,
நாங்கள் வானகத்திலுள்ள உம் தந்தையின் விருப்பப்படி நடப்போம்.
ஆனால் உம்மைப் பார்த்துக கூப்பிட மாட்டோம், நீர் கேட்டுக் கொண்டபடி" என்று சொல்வோமா?
அப்படிச் சொன்னால் நாம் பைத்தியக்காரர்கள்.
கணக்கு ஆசிரியர் சொன்னார்,
" 10 வரை என்றால் 9 முடிய என்று அர்த்தம்.பத்தைச் சேர்க்கக் கூடாது."
அவரே வீட்டுக்கு வந்து, மகனைப் பார்த்து,
" பாடங்களை படி" நான் தென்காசி வரை போய்விட்டு வருகிறேன்." என்று சொல்லிவிட்டு போனார்.
வரும்போது பையனுக்கு அல்வா வாங்கிக்கொண்டு வந்தார்.
பையன்,
" அப்பா, தென்காசி வரை தானே போனீர்கள்,
அல்வாக் கடை தென்காசிக்கு உள்ளே அல்லவா இருக்கிறது,
எப்படி ஊருக்கு வெளியே நின்று அல்வா வாங்கினீர்கள்? என்று கேட்டான்.
"ஊருக்கு உள்ளே போய்தான் வாங்கினேன்."
"அதெப்படி?
"கணக்கில் 10 வரை என்றால், 9 முடிய என்று அர்த்தம்.
பத்தைச் சேர்க்கக் கூடாது "
என்று சொன்னீர்கள்.
நீங்களே,
"தென்காசி வரை" என்று சொல்லிவிட்டு தென்காசிக்கு உள்ளே எப்படிப் போனீர்கள்?"
அப்பா சிரித்தார்.
"மகனே, எந்த வார்த்தைக்கும் பொருள் வார்த்தையில் இல்லை, சொல்பவரிடம் தான் இருக்கிறது.
நேற்று உனது மாமா வீட்டுக்கு வந்தவர், போகும்போது என்ன
சொன்னார்?"
"வருகிறேன் என்று சொன்னார்.
இப்போ புரிகிறது."
"அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார்".
( மத். 1:25)
மாதாவின் கன்னிமை பற்றி பைபிளில் கூறப்பட்ட வார்த்தைகள்.
நாம் மாதாவின் கன்னித் தன்மையை விசுவசிக்கிறோம்.
அதன் அடிப்படையில் நாம் வார்த்தைகளுக்குப் பொருள் கொடுப்போம்.
ஆனால் அந்த விசுவாசம் இல்லாதவர்கள் வார்த்தைகளை தங்கள் இஸ்டத்துடத்துக்குத் திருப்பி பொருள் காண்பார்கள்.
மாதாவைப் பிடிக்காதவர்களுக்கு அவளுடைய வாழ்நாள் முழுமையான கன்னிமைக்கு விரோதமாய்ப் பேச உதவிக் கொண்டிருப்பது
'பெற்றெடுக்கும்வரை'யில் உள்ள 'வரை.'
அவர்கள் கூறுவது,
"இயேசுவைப் பெற்றெடுக்கும்'வரை' அவர் அவளை அறியாதிருந்தார்.
அதன் பின் அறிந்திருப்பார்.
ஆகவே அவர் முக்காலமும் கன்னி அல்ல." என்பதுதான்.
"அதன் பின் அறிந்திருப்பார்"
என்று எதை வைத்து சொல்லுகிறார்கள்?
"வரை' என்ற இரண்டு எழுத்துக்களை வைத்து.
ஒரு அறிக்கையைச் (statement)
சாதாரணமாகச் சொல்வதற்குப் பயன்படுத்தும் வாக்கியத்தை விட,
அழுத்தம் கொடுத்துச் சொல்வதற்குப் பயன்படுத்தும் வாக்கியம் வித்தியாசமாக இருக்கும்.
"சாப்பிட்டாச்சா?"
"சாப்பிடல."
"உண்மையாக வா?"
"சத்தியமா! இந்த செக்கண்ட்வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை."
இரண்டாவது பதிலில்
"இந்த செக்கண்ட்வரை" என்ற சொற்றொடர் ' சாப்பிடவில்லை'
என்ற பதிலுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அவ்வளவுதான்.
'இனிமேல் அவர் சாப்பிடுவாரா?
சாப்பிட மாட்டாரா? என்பதை அதை வைத்து யூதிக்க முடியாது.
யூகித்தால் அந்த யூகம் சரியாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.
"அதனால் சவுலின் மகளாகிய மிக்கோலுக்குச் சாகும் வரை ஒரு பிள்ளை கூடப் பிறக்கவில்லை."
(2 சாமு .6:23)
"மிக்கோலுக்கு பிள்ளையே இல்லை" என்று மட்டும் சொல்லி யிருக்கலாம்.
அழுத்தம் கொடுப்பதற்காக
"சாகும் வரை" என்று சேர்க்கப் பட்டிருக்கிறது.
இதை வாசித்து விட்டு
"சாகும் வரை ஒரு பிள்ளை கூடப் பிறக்கவில்லை, செத்த பின் நிறைய பிள்ளைகள் பிறந்தன."
என்று யாராவது சொன்னால் அவரது பைத்தியக்காரத்தனத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்!!
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment