Thursday, July 30, 2020

"மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்." (மத்.13:47)

"மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்." (மத்.13:47) 
**************************************

இயேசு விண்ணரசை மீன்பிடிப்பதற்காகக் கடலில் வீசப்படும் வலைக்கு ஒப்பிடுகிறார்.

மீனவர்களின் நிரந்தர வேலையே மீன் பிடிப்பதுதான்.

அவர்களுடைய வாழ்க்கை ஆதாரமே அது தான்.

மீன்பிடிக்க வலையை வீசும்போது
எவ்வளவு மீன்கள் அகப்படும், நிறையவா அல்லது குறையவா என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

வலை கிழியக் கூடிய அளவுக்கு அதிகமும் அகப்படலாம்,

ஒரு மீன் கூட அகப்படாமலும் போகலாம்.

அகப்பட்ட மீக்களைக்  கரைக்குக் கொண்டுபோகும்போதுதான் 
மீன்களின் அளவும், தன்மையும் தெரியும்.

சிறிய மீன்களும் இருக்கலாம், பெரிய மீன்களும் இருக்கலாம், சாப்பிடக் கூடாதவையும் இருக்கலாம்.

நல்ல மீன்களை மட்டும் பிரித்து எடுத்து வியாபாரத்துக்க்குக் கொண்டு போவார்கள்.

ஆகாதவற்றைத் தூரக் கொட்டிவிடுவார்கள்.

இந்த உவமானப்படி, விண்ணரசின் அரசராகிய  இயேசுவே. மூன்று ஆண்டுகள் வலையை வீசிக்கொண்டுதான் இருந்தார்.

பலவகை மீன்கள் நிறைய அகப்பட்டன.

இராயப்பர் போன்ற நல்ல மீன்களும் அகப்பட்டன, யூதாஸ்
 போன்ற மோசமான மீன்களும்கூட அகப்பட்டன.

ஆனாலும் யூதாஸை மோசமான மீன் என்று அழைக்க நமக்கு உரிமை இல்லை.

ஏனெனில் காட்டிக் கொடுத்த அவனை இயேசுவே, "நண்பனே" என்றுதான் அழைத்தார்.

அவனையும் இயேசு அவ்வளவு நேசித்தார்

இயேசுவால் யாரையும் வெறுக்க முடியாது.

By nature, Love Cannot hate!

இயேசு வீசியது அன்புவலை.

சாதாரணமாக உலக மீனவர்கள் தேடுவது வியாபாரத்துக்கு ஏற்ற நல்ல மீன்களைத்தான். 

ஆகாத மீன்களை கஸ்டப்பட்டு இழுத்து வந்து தூரப் போடவேண்டியிருக்கும்.

அதற்காக நல்ல மீன்கள் அகப்படும் இடத்தைத்தான் தேடிப்போவார்கள்.

நமது ஆன்மீக மீனவராகிய இயேசு வித்தியாசமானவர்.

அவர் பாவி மீன்களைத்தான் தேடிப்போவார்.

பாவிகளைத் தேடிப் பிடித்து அவர்களின் பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார்.

"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது"
(மத் 4:17)

மத்தேயுவின் நற்செய்திட்படி இயேசு 
"மனந்திரும்புங்கள்" என்ற வார்த்தையுடன்தான் நற்செய்தியை  அறிவிக்கத் தொடங்குகிறார்.

அதாவது, பணி வாழ்வில் இயேசுவின் வாயிலிருந்து வந்த முதல் முதல் இறைவார்த்தை,

"மனந்திரும்புங்கள்" என்பது தான்.

மனந்திரும்பவேண்டியது பாவிகள் தானே!

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" 
(லூக்.5:32)

அவரது மீனவ சாம்ராஜ்யத்தின் குடிமக்களாய நாமும் மீனவர்கள்தான்.

ஆன்மீக ரீதியாக நமது வாழ்க்கையே அன்பு வலை வீசி மனித மீன்களை நமது அரசருக்காகப் பிடிப்பதுதான்.

வலை வீசுவது எப்படி?

எல்லா விசயத்திலும்  நமது ஆண்டவர்தான் நமது முன்மாதிரிகை.

அவர் செய்தது போல் நாமும் செய்தால் போதும்.

அவர் வாழ்ந்து காட்டினார். அவர் போதிப்பதைக் கேட்டவர்கள் அவரது வார்த்தைகளைக் கேட்டது மட்டுமல்ல, அவரது வாழ்க்கையைக் கண்கூடாகப் பார்த்தார்கள்.

அவரது போதனையும் வார்த்தையும் ஒத்துப் போனது.

நம்மில் சிலரைப் போல அரண்மனை போல வீட்டில் சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு,

வெளியே போய்  ''எளிய மனத்தோர் பேறு பெற்றோர்" என்று போதிக்க வில்லை.

அவரே ஏழையாக வாழ்ந்தார், போதித்தார்.

யாரையாவது பழி வாங்கிவிட்டு மன்னிப்புப் பற்றி பேசவில்லை.

எவ்வளவு பெரிய பாவியையும்,
"உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன, சமாதானமாய்ப் போ" என்று சொல்லி அனுப்பினார்.

சுகமில்லாமல் தேடிவந்தவர்களுக்கும் பாவமன்னிப்பு கொடுத்து விட்டு, அப்புறம் வியாதியைக் குணமாக்கினார்.

இறுதி வேளையில் சிலுவையில் தொங்கும் போது தன்னைப் பாடுபடுத்தி கொன்றவர்களையே மன்னித்தார்.

நாமும் கிறிஸ்தவ பண்புகளுடன் வாழ்வதுதான் மிகப் பெரிய வலை.

அதோடு வாய்மொழியாக நற்செய்தியை அறிவிப்பதோடு, நமது நற்செயல்களால் வலையை விரித்து வீச வேண்டும்.

மீன்கள் நம்மைப் பார்த்துதான் வலைக்குள் வரும்.

இந்த உவமைப்படி நமது வலைக்குள் அகப்பபடும் மீன்கள் நல்லவையா, கெட்டவையா என்று நினைப்பதோ, தீர்மானிப்பதோ நமது வேலை இல்லை.

பிடித்து இயேசுவிடம் ஒப்படைப்பது மட்டுமே நமது பொறுப்பு.

இறையரசை பரப்புவது நமது பணி.
இறையரசை ஏற்றுக்கொள்பவர்கள்

 இயேசுவைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள்.

யாரையும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கூற நமக்கு உரிமை இல்லை.

யாருடைய உள்ளமும் நமக்குத் தெரியாது.

இயேசுவுக்கு எல்லாம் தெரியும்.



இயேசுவின் போதனையைக் கேட்டவர்களில் பல தரப்பட்ட மக்கள் இருந்திருப்பார்கள் - 

பயிர்த்தொழில் புரிவோர், ஆடு மேய்ப்போர், மீன்பிடிப்போர் etc. போன்றோர்.

எல்லா மக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் உவமைகள் எடுத்திருப்பார்.

எல்லா உவமைகளும் அவர் எந்த நோக்கத்திற்காக மனுவுரு எடுத்தாரோ அதை மையமாகக் கொண்டிருக்கும்.  

மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டு, விண்ணகம் அழைத்துச் செல்வது தான் அவர் மனுவுரு எடுத்ததன்  நோக்கம்.

வலைவீசி மீன்பிடிக்கும் உவமையின் இறுதியில்

 வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, 

கரையில் அமர்ந்து, 

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு

 தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.

இவ்வாறே உலகமுடிவிலும் நடக்கும். வானதூதர் சென்று

 தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,

 தீச்சூளையில் தள்ளுவர்.. அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்.
என்று இயேசு கூறுகிறார்.

இயேசுவின் பண்புகளை வைத்துதான் அவரது வார்த்தைகளுக்குப் பொருள் காண வேண்டும்.

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம்,

"நடக்கவிருக்கும் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கும்" என்று சொன்னால்.

அதன் பொருள்,"நன்கு படித்து, நன்கு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெறுங்கள் என்பதுதான்.

அதை மீறி நன்கு படியாதவர்களுக்கு  ஆசிரியர் தண்டனை கொடுக்கத் தேவை இல்லை. அவர்கள் தேர்வில் fail ஆவதே அவர்களுக்கு அவர்களாகவே தேடிக்கொண்ட தண்டனை.

இயேசு மனிதர்களிடம் பேசும்போது மனித அனுபவங்களை மையமாக வைத்தே பேசுவார்.

அப்போதுதான் அவர்களுக்குப் புரியும்.

மனித அனுபவத்தில் எந்தக் குற்றவாளியாவது, நீதிபதியிடம் சென்று, "நான் குற்றவாளி, நானாக ஜெயிலுக்குப் போகிறேன்." என்று சொல்லி விட்டுப் போவானா?

நீதிபதிதான் தீர்ப்பிடுகிறார்.

உலக அனுபவப்படி சொன்னால்தான் மக்களுக்குப் புரியும்.

ஆகவேதான்

"தீச்சூளையில் தள்ளுவர்." என்று இயேசு சொல்கிறார்.

உண்மையில் "தீர்ப்பிட அல்ல, 
மீட்கவே வந்த இயேசு" யாரையும் தீர்ப்பிடமாட்டார்.

பாவம் செய்தவர்கள்  தங்களுக்குத் தாங்களே தீர்ப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இறந்த நொடியிலேயே 

ஆண்டவரோடு  அவரது அன்பில் பயணித்த ஆன்மா விண்ணகம் சென்று அவரோடு இணைந்துவிடும்.

ஆண்டவரை வேண்டாமென்று சாத்தானோடு பயணித்த ஆன்மா யாரும் தள்ளாமலேயே அதுவாகவே நரகத்திற்குச் சென்றுவிடும்.

ஆண்டவர் எந்த ஆன்மாவையும் வேண்டாமென்று சொல்ல மாட்டார்.

கெட்ட  ஆன்மாதான் ஆண்டவரை வேண்டாமென்று கூறிச் சென்று விடுகிறது.

உலக முடிவில் இறுதி நாளிலும் இதுதான் நடக்கும்.

கடவுளை இழப்பதால் கிடைக்கும் வேதனை மிகப் பெரிது. அதை அனுவவிக்கும்போதுதான் தெரியும்.

கடவுளை அடைபவர்கள் அனுபவிக்க விருக்கும் பேரின்பத்தின் அளவு அனுபவிக்கும்போது தான் தெரியும்.

அன்பு  வலை விரிப்போம்.

ஆள் பிடிப்வோம்.

ஆண்டவரின் அரசை அகலப்படுத்துவோம்.

மோட்ச பேரின்பத்தின் அளவைக் கூட்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment