Friday, July 24, 2020

வார்த்தையைக் கேட்டும் பயனற்றுப் போகிறவன்.

வார்த்தையைக் கேட்டும் பயனற்றுப் போகிறவன்.
************************************
"முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில்,

 வார்த்தையைக் கேட்டு,

 இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை  நெரிக்க, 

பயனற்றுப் போகிறவனே." (மத்.13:22)

இறை வார்த்தை உயிருள்ளது.
உயிர் கொடுக்கக் கூடியது. 
"உண்டாகுக" என்ற ஒரே வார்த்தை இப்பிரஞ்சத்தையே உருவாக்கியது.


இயேசு இறைவார்த்தையை ஒரு  விதைக்கு ஒப்பிடுகிறார்.

விதைக்கும் உயிர் இருக்கிறது.

உயிர் இருப்பதால்தான் அது நிலத்தில் விழுந்தவுடன் முளைத்து தாவரம் ஆகிறது.

நிலத்தில் விழுந்த எல்லா விதைகளுமே முளைக்கின்றன.

ஆனால் முளைத்த எல்லாமே  வளர்ந்து பலன் தருவதில்லை.

சில வளர்வதேயில்லை.

எல்லா உயிர்ப்பிராணிகளுடையவும், தாவரங்களுடையவும் வளர்ச்சியை  அவை வாழும் சூழ்நிலைப் பாதிக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.


இயேசு விதைவிதைப்பவன் உவமையில்
முட்செடிகள் நடுவில் விழுந்த விதைகளைப் பற்றி பேசுகிறார்.

".சில முட்செடிகள் நடுவில் விழுந்தன. முட்செடிகள் அவற்றை நெரித்துவிட்டன."

தரையில் விழுந்ததால் அவை முளைத்திருக்கும். ஆனால் அவை வளர விடாமல் முட்செடிகள் அமுக்கிப்போட்டன. 



மனித மனத்தில் குடியிருக்கும் இவ்வுலகக் கவலையும், செல்வமாயையும் இயேசு

 முட்செடிகளுக்கு ஒப்பிடுகிறார்.

கரும்பலகை முழுவதும் ஏதாவது எழுதியிருந்தால் அதன்மேல் எதுவும் எழுத முடியாது.  

ஏற்கனவே எழுதப்பட்டதை அழித்தால்தான் புதிதாக எழுத முடியும்.

விளையாட்டில் மட்டும் ஆர்வம் உள்ளவனுக்கு

 படிப்பில் ஆர்வம் இருப்பதில்லை.

இறைவார்த்தை விண்ணுலகிற்கு வழிகாட்டக் கூடியது.

ஒருவனது மனத்தில் மண்ணுலகைப் பற்றிய கவலையும், பண ஆசையும் நிறைந்திருந்தால் அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை.

இறைவன் முதலில் உலகைப் படைத்துவிட்டு மனிதனைப் படைத்தது மனிதன் வாழ உலகம் உதவியாக இருப்பதற்காகத்தான்.

அதாவது உலகை மனிதனுக்காகப் படைத்தார், மனிதனை உலகிற்காகப் படைக்கவில்லை.

அதேபோல் தாயின் வயிற்றில் குழந்தை கருவுற்றவுடன் ஆன்மாவைப் படைத்து உடலோடு சேர்த்தார்.

ஆன்மா படைக்கப் பட்டது விண்ணுலக வாழ்வுக்காக, மண்ணுலக வாழ்வுக்காக அல்ல.

மண்ணுலகின் வழியே ஆன்மா செய்ய வேண்டிய விண் நோக்கிய பயணத்தில் அதற்கு  உதவியாக இருப்பதற்காகத்தான் உடல் படைக்கப் பட்டது.

ஆன்மாவிற்காகத்தான் உடல் படைக்கப்பட்டது.

உடலுக்காக ஆன்மா படைக்கப் படவில்லை. 

ஆன்மா மண்ணுலகு வழியே பயணிப்பது உடலின் உதவியால் விண்ணகத்தில் அனுபவிப்பதற்கு வேண்டிய பலன்களைச் சம்பாதிப்பதற்காகத்தான்

 தன் மண்ணுலகப் பயணம் முடிந்தவுடன்

ஆன்மா உடலை மண்ணில் விட்டுவிட்டு தான் விண்ணகம் செல்லும்.

அதன் விண்ணகப் பயணம் வெற்றிகரமாக அமைய 

 அதற்கு உதவியாக இருப்பதற்காகத்தான் அதற்கு இறைவார்த்தை  அருளப்படுகிறது.

ஆனால், ஆன்மா தான் படைக்கப் பட்டதின் நோக்கத்தை மறந்து,

மண்ணக வாழ்வையே நிலையானது என்று எண்ணி 

மண்ணைப் பற்றிய கவலைகளோடு வாழ்ந்ததென்றால் இறை வார்த்தை அதன் காதில் விழாது.

உலகம் பணத்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறது.

உலகவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பணத்தைத் தேடியலைகிறார்கள்.

இவர்கள் கோவிலுக்கு வந்தாலும் உலக சம்பந்தப்பட்ட, வேலை, வருமானம், கடன் போன்ற பணம் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களைத்தான் இறைவன் முன் வைப்பார்கள்.

இறைவார்த்தை சம்பந்தமான பிரசங்கம் இவர்கள் காதில் ஒலிக்காது.


இவர்கள் காதில் விழும் இறை வார்த்தையை அவர்கள் மனதில் நிறைந்துள்ள இவ்வுலகக் கவலையும், செல்வமாயையும், இவர்களது கருத்தில் ஏறாதபடி அழுக்கிவிடும்.

இறைவார்த்தை நமக்கு பலன் தர வேண்டுமென்றால்,

1. நாம் விண்ணகம் 
செல்வதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உறுதியான உணர்வு நம்மிடம்  இருக்க வேண்டும்.

2. நாம் உலகில் இருந்தாலும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல உறுதியான உணர்வும் இருக்க வேண்டும்.

3. உலகப் பொருட்கள் மீது, குறிப்பாக பணத்தின் மீது பற்று அற்றவர்களாக இருக்க வேண்டும்.

4. இறைவார்த்தை நமது ஆன்மீக உணவும், உயிரும் என்ற உணர்வும் இருக்க வேண்டும். அதைக் கேட்க மனதில் ஆவல் இருக்க வேண்டும்.

பக்குவப்பட்டிருக்கிற நிலத்தில் விழுகிற விதைதான் முளைத்து, வளர்ந்து பலன் தரும்.

அதேபோல் நமது மனது இறை வார்த்தையை ஏற்க பக்குவமாக, தயார் நிலையில் இருந்தால்தான் அது நமக்கு ஆன்மீகப் பலன் தரும்.

காலையில் பைபிள் வாசிக்க வேண்டும் என்ற பழக்கத்தின் அடிப்படையில் இல்லாமல்,

இறைவார்த்தையை வாசித்து. அன்று அதை வாழ வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் பைபிள் வாசிக்க வேண்டும்.

'சாப்பிட வேண்டுமே' என்று சாப்பிடுபவன் அவசரமாகச் சாப்பிட்டு விடுவான், ருசித்துச் சாப்பிட மாட்டான்.

ருசிக்காகச் சாப்பிடுபவன் மெதுவாக வாயில் நன்கு மென்று, நாவில் படரவிட்டு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவான்.

இறைவார்த்தையை ருசித்து வாசிக்க வேண்டும்.

ஆண்டவர் எவ்வளவு  இனிமையானவர் என்று ருசித்துப் பார்க்க வேண்டும்.

We must taste and see how Sweet the Lord Is!

வேலைக்குப் போகிற அவசரத்தில் வேகமாகப் பைபிள் வாசித்தால் ஆண்டவரை ருசிக்க முடியாது!

ஞாயிறு திருப்பலியில் பிரசங்கம் ஆரம்பித்தவுடனேயே சிலர் Watch ஐப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

சாமியார் பிரசங்கத்தை நீட்டிவிட்டால் கடையில் mutton fresh ஆக கிடைக்காதே என்ற கவலை அவர்களுக்கு!

பிரசங்க நேரத்தில் மனதில் வேறு எண்ணங்கள் இருந்தால், சாமியார் அளிக்கும் இறைவார்த்தை காதிலே விழாது!

வார்த்தையானவரின் வார்த்தைகள்தான் நமது ஆன்மீக வாழ்விற்கு உயிர்.

இறைவார்த்தை நமது ஆன்மாவுக்கு இரைவார்த்தை என்பதை உணர்ந்து கேட்போம்!

வார்த்தையின் நாயகனோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment