Sunday, July 26, 2020

"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும்." (மத்.13:44)

"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும்." (மத்.13:44)
**************************************

விண்ணரசு ( The kingdom of heaven)   எங்கே இருக்கிறது?

நமது மொழியில் 'அரசு' என்று சொன்னவுடனே நமது நினைவுக்கு வருவது ஒரு புவியியல் பிரிவு (geographical territory), அங்கே வாழும் மக்கள், மக்களை ஆளும்  அரசாங்கம்.

ஆனால் விண்ணகம் ஒரு புவியியல் பிரிவு அல்ல.

ஆகவே விண்ணகம் மண்ணில் இல்லை.

நமது மொழியில் 'விண்வெளி' என்று சொன்னவுடனே ஆகாயத்தைப் பார்ப்போம்.

ஆனால் விண்ணகம் அங்கும் இல்லை.

விண்ணகம் மண்வெளியிலும் இல்லை, விண் வெளியிலும் இல்லை.

ஆனால் எங்கும் இருக்கிறது.

அது எப்படி?

விண்ணகம் இறைவன் வாழும் இடம்.

இறைவன் எங்கே இருக்கிறார்?

எங்கும் இருக்கிறார். இறைவன் எங்கும் இருப்பதால், அவர் வாழும்
விண்ணகமும் எங்கும் இருக்கிறது.

கடவுள் பூவுலகில் இருக்கிறாரா?
இருக்கிறார்.

விண்வெளியில் இருக்கிறாரா?
இருக்கிறார்.

அப்படியானால் விண்ணகம்?

பூமியில் இருக்கிறது, ஆனால் புவியியல் பகுதி அல்ல.

விண்வெளியிலும் இருக்கிறது, ஆனால் விண்வெளிப் பகுதி அல்ல.

குழப்பமாக இருக்கிறதா?

ஆனால் குழப்பத்துக்குக் காரணம் நான் அல்ல.

நமது மொழிதான் காரணம்.

உருவமே இல்லாத ஆவிப் பொருளையும், உருவம் உள்ள சடப் பொருளையும் விளக்க நம்மிடம் ஒரு மொழிதான் இருக்கிறது.

வேறு வழி இல்லாமல் ஆன்மீகத்தையும், வௌகீகத்தையும் விளக்க ஒரே மொழியைப் பயன்படுத்துகிறோம்.

புரிந்து கொள்ளக்கூடிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பூமியும், விண்வெளியிலுள்ள கிரகங்களும் சடப்பொருட்கள். ஆகவே வெளியை ( Space) அடைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் விண்ணகம் ஒரு ஆன்மீக நிலை. ஆன்மீகத்துக்கு இடம் தேவை இல்லை. 

அங்கு வாழும் இறைவன் ஆவி. ஆகவே சடப் பொருளைப்போல இடத்தை அடைத்துக் கொண்டிருக்க வில்லை. 

ஆனால் இடத்தையும், அதில் உள்ள சடப்பொருட்களையும் தன் வல்லமையால் படைத்தவர் அவரே.

 ஆகவே தன் வல்லமையால் எங்கும் இருக்கிறார்.


இயேசு விண்ணரசை ஒரு புதையலுக்கு ஒப்பிடுகிறார்.

புதையல் என்றாலே மறைந்திருப்பதுதான்.

கண்ணுக்குத் தெரியும்படி நமது மேசையில் மீது இருப்பது எதையும் புதையல் என்று சொல்லமாட்டோம்.

ஆன்மீகம் ஒரு மறைபொருள், உண்மையிலேயே இருக்கும் பொருள்.

நமது உடலில் ஆன்மா இருக்கிறது. நாம்தான் ஆன்மா. 
 
நமது உடலிலுள்ள ஊனக் கண்ணால் நமது ஆன்மாவைப் பார்க்க முடியாது.

ஏனெனில் நமது ஆன்மா ஆவி, உடலில் உள்ள கண் சடப்பொருள்.

சடப் பொருளால் ஆவிப் பொருளைப் பார்க்க இயலாது.

ஒரு மனிதனின் உடலில் ஆன்மா இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

கண்ணால் பார்க்க முடியாத 
ஆன்மாதான் கண்ணால் பார்க்க முடிகின்ற உடலை இயக்குகிறது.

உடல் இயங்கிக் கொண்டிருந்தால் ஆன்மா இருக்கிறது என்று அர்த்தம்.

உடல் இயக்கத்தை இழந்து விட்டது என்றால், ஆன்மா பிரிந்துவிட்டது என்று அர்த்தம்.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை எப்படி அறிந்து கொள்கிறோம்?

கடவுள் ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகைப் படைத்தார்.

தனது வல்லமையால் கடவுள் எங்கும் இருக்கிறார்.

அவர் எங்கும் இருப்பதால்தான் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

அவரின்றி அணுவும் அசையாது.

அவர் நினைத்தால் இப்பிரபஞ்சத்தை  ஒன்றுமில்லாமல் ஆக்கி விடலாம்.

ஆனாலும் அவர் இருப்பார்.

அவர் நித்தியர்.

ஆக, இறையரசு எங்கும் இருக்கிறது.

நமக்கு உள்ளும் இருக்கிறது.

The Kingdom of God resides in the heart of man.

Our heart is the temple of the Holy Spirit.

நமக்குள் இருக்கும் இறையரசை உணராதவர்களுக்கு அது புதையல்.

தன் உள்ளத்தில் இருக்கும்  புதையலை உணராத ஒருவன் தன் இஸ்டம் போல் வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஆனால் நற்செய்தி அறிவிப்பவர் மூலம் அவனுக்கு உண்மை தெரிய வந்தால், இறையரசில் வாழ்வதற்காக எந்த தியாகத்தையும் செய்யத்துணிவான்.


 தனக்குள்ளதை எல்லாம் 
இழந்தால்தான் இறையரசில் வாழ முடியுமென்றாலும்,

 அதை எல்லாம் இழக்கத் தயாராக இருப்பான்.

நாம் வருடக்கணக்காய்த் தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

நமது இருதயத்தில் மறைந்திருந்த புதையலை வெகு காலத்திற்கு முன்பே எடுத்துவிட்டோம். 

அதாவது, பைபிள் வசனத்தின் மூலமும், ஞாயிற்றுக்கிழமை பிரசங்கங்கள் மூலம் இறையரசு நமக்குள் இருக்கிறது என்ற உண்மையை அறிந்திருக்கிறோம்.

நமது அரசர் இயேசு நமது இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பது நமக்குத் தெரியும்.

சமீபத்தில் நமது நாட்டில் Clean India movement என்ற இயக்கத்தை இந்திய அரசு ஆரம்பித்திருக்கிறது.

நமது விண்ணரசைப் பொறுத்தமட்டில் 2020 ஆண்டுகளுக்கு முன்பே 

நமது இதய அரசர் இயேசு இந்த இயக்கத்தை தன் இரத்தத்தைச் சிந்தி ஆரம்பித்து வைத்துவிட்டார்.

நமது அரசு ஆன்மீக அரசாகையால் அதன் குடிமக்களின் ஆன்மா சுத்தமாக இருந்தால்தான் அரசு சுத்தமாக இருக்கும்.

நமது ஆன்மாக்களில் பாவ அழுக்கு நிறைந்திருந்தமையால்,

 அவ்வழுக்கை இயேசு அவரது சொந்த இரத்தத்தினாலேயே கழுவி சுத்தப்படுத்தினார்.

அதன் காரணத்தால் அவர் தன் மன்னுயிரையே இழக்க வேண்டியிருந்தது.

தன் உயிரைக் கொடுத்து நம்மைச் சுத்தப் படுத்தினார்.

அனைத்துக் குடிமக்களின் முதல் வேலை அவரவர் ஆன்மாவை பாவ மாசின்றி சுத்தமாக வைத்திருப்பது  தான்.

அதற்காகத்தான் ஞானஸ்நானம்.

ஞானஸ்நானம் பெற்று நம் ஆன்மா பரிசுத்தம் ஆனபின்புதான் நாம் அவரது அரசின் குடிமக்கள் ஆனோம்.

ஏனெனில் பாவ அழுக்குள்ள சிம்மாசனத்தில் நம் அரசரால் உட்கார முடியாது.

அடுத்து சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவை தாழ்ச்சி, பொறுமை, கற்பு, தாராள குணம், மட்டசனம், பிறர் அன்பு, சுறுசுறுப்பு போன்ற புண்ணியங்களால்.அலங்கரிக்க வேண்டும்.

அரசெங்கும் நற்செயல் பூங்காக்கள் நிறைய அமைத்திட வேண்டும்.

நற்செயல் மரங்களுக்கு அன்பு என் நீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும்.

நமது அரசர் பரிசுத்தமாய் இருப்பது போல, அரசு முழுவதும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். 


இப்பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டிய அருள்வரங்களை அள்ளித்தர 

ஏழு தேவத் திரவிய அனுமானங்களை ஏற்பாடு செய்ததோடு, 

அவைகளை நிறைவேற்ற ஏராளமான குருத்துவப் பணியாளர்களையும் 

இயேசுவே நியமித்திருக்கிறார்.
 

அரசு என்று ஒன்று இருந்தாலே அதற்கு எதிரி ஒருவன் இருப்பான்.

நமது ஆன்மீக அரசின் எதிரி சாத்தான்.

நமது அரசரின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முயற்சிப்பதே அவன் வேலை.

அவனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டியது நமது கடமை.

அதற்காக நமது சர்வ வல்லப அரசர் தமது அருள் வரங்களால் நம்மை நிரப்பியிருக்கிறார்.

அவற்றின் உதவியோடு நாம் சாத்தானை வென்று கொண்டிருக்கிறோம்.

இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

விண்ணரசு மக்களின் இதயத்தில் இருக்கும் ஆன்மீக அரசு.

ஆகவே அதை உலகோர் தங்கள் ஊனக்கண்களால் பார்க்க முடியாது.

ஆயினும் நமது ஆன்மாதான் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதால், 

நமது நடவடிக்கைகளிலிருந்து நாம் இயேசுவின் அரசைச் சேர்ந்தவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்வர்.

"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு.13:35)


விண்ணரசின் இயக்கத்துக்கு ஒரே காரணம் இறையன்புதான். 

இறையன்பு இருக்கும் இடத்தில் இயல்பாக பிறரன்பும் இருக்கும்.

ஆகவே நமது பிறரன்பு செயல்களே நம்மிடம் இறையன்பு இருக்கிறது என்பதையும்,

நாம் இறையரசின் மக்கள் என்பதையும் வெளிக் காட்டிக் கொண்டிருக்கும்.

நாம் இறையரசைச் சார்ந்தவர்கள் என்பதற்கு வெளி அடையாளம் நாம் சேர்ந்திருக்கும், 

நமது அரசரால் நிறுவப்பட்ட,
கத்தோலிக்கத் திருச்சபை.

நமது ஆன்மீகப் பரிசுத்தத் தனத்தை வளர்க்க, 

இயேசு ஏற்படுத்தியுள்ள ஏழு தேவ திரவிய அனுமானங்களை நம்மில் நிறைவேற்றும் குருக்கள்

 திருச்சபையில்தான் இருக்கிறார்கள்.

இறையரசின் குடிமக்கள் அனைவரும் கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களே.

இறையரசின் மக்களாகிய நமக்கு உலகில் முக்கிய கடமை ஒன்று இருக்கிறது.

உலக மக்கள் அனைவர் இதயத்திலும் புதையலாக மறைந்து இருக்கும் விண்ணரசைப் பற்றி அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது நமது கடமை.

உலக மக்கள் அனைவரும்  இயேசுவின் விண்ணரசுக்குள் வர வேண்டும்.

உலகோர் அனைவரும் இயேசுவின் நித்திய பேரின்ப சாம்ராஜ்யத்துக்குள் வரவேண்டும்.

நமது இதய அரசரின் ஆசை இதுதான்.

நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment