ஆண்டவரிடம் ஒரு கேள்வி.
************************************
வெகு நேரம் திவ்ய நற்கருணைப் பேழையை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.
கண்கள் பேழை மேல் இருந்தாலும் உள்ளம் அதை ஊடுருவிப் பார்த்தது
நமக்காக அங்கே அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்டவரைத்தான்.
நான் ஒன்றும் பேசாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது ஆண்டவருக்கே பொறுக்கவில்லை.
"ஹலோ!"
சப்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
யாரும் இல்லை.
"ஹலோ! லூர்து, அதென்ன பராக்கு?
கேள்வி கேட்பதென்று தீர்மானித்து வந்துவிட்டாய். கேட்க வேண்டியதுதானே."
"ஆண்டவரே நீங்களா பேசறீங்க?"
"இப்போது இங்கே உன்னையும், என்னையும் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?"
"நான் கேள்வி கேட்பதென்று தீர்மானித்து வந்திருக்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். அதை எப்படிக் கேட்பதென்றுதான் எனக்குத் தெரியவில்லை."
"நீ பேசிக்கொண்டிருப்பது உன்னைப் படைத்தவரோடு.
எல்லையற்ற அன்பின் காரணமாக உன்னைப் படைத்தேன்.
இப்போது உன்னைப் படைத்தவர் மட்டுமல்ல, நான் உன் சகோதரன்.
கேட்க வேண்டியதைப் பயப் படாமல் கேளு."
"அதுதான் உங்களுக்குத் தெரியுமே. நீங்களே பதில் சொல்லி விடுங்களேன்."
"நான் உன்னிடம் கேட்டா உன்னைப் படைத்தேன்?
உன்னிடம் கேட்டா உன்னைப் பராமரித்து வருகிறேன்?
உறவு என்பது பன்முக இணைப்பு.
யாரெல்லாம் உறவு வட்டத்திற்குள் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்க வேண்டும்.
தாய் பிள்ளையைக் கவனித்துக் கொண்டிருக்க, பிள்ளை ஏறிட்டுக் கூட பார்க்காமாலிருந்தால் அதற்குப் பெயர் உறவு அல்ல.
நான் உன்னோடு எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறேன்.
அதுபோல நீயும் என்னோடு எப்போதும் தொடர்பு வைத்திருக்க வேண்டும்.
நீ என்னோடு பேசுவது, வேண்டியதை என்னிடம் கேட்பது, என்னை ஆராதிப்பது, என்னைப் பற்றி தியானிப்பது இவை எல்லாம் உன்னை என்னோடு தொடர்பு படுத்தும் வழிகள்.
'நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்' என்று எண்ணி,
என்னிடம் பேசாமல் இருந்தால் அது உறவு அல்ல.
சரி இப்போது கேள்."
"ஆண்டவரே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். அது உமக்குத் தெரியும். உம்மை நேசிக்கும் எங்களுக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறீர்?"
"நீ படித்துக் கொண்டிருந்த காலத்தில் என்றாவது உன் ஆசிரியரிடம் சென்று,
'ஏன் சார் எங்களைப் படிக்கச் சொல்றீங்க?'ன்னு கேட்டிருக்கிறாயா?"
"இல்லை. ஆண்டவரே,"
"ஏன்?"
"ஏனென்றால் படிப்பதற்காகத்தானே பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன்."
"Correct. நீ எனது சீடன் ஆக விரும்பும்@ போது ஒரு நிபந்தனை போட்டேன். மறந்து விட்டதா?"
"மறக்கவில்லை, ஆண்டவரே.
'என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.'
என்று நிபந்தனை போட்டீர்கள்."
"நான் சீடர்களை நேசிக்கிறேன். ஆகவேதான் சிலுவையைச் சுமந்து கொண்டு வரச் சொல்கிறேன்."
"அதுதான் ஏன் என்று கேட்கிறேன்"
"நான் உனக்காகச் சிலுவையைச் சுமந்தது மறந்துவிட்டதா?"
"அதை எப்படி ஆண்டவரே மறப்பேன். சிலுவையைச் சுமக்க மட்டுமா செய்தீர்!
அதில் தானே எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக அறையப்பட்டு, உமது உயிரையே பலியாக ஒப்புக் கொடுத்தீர்!"
"நான் உன் பாவங்களுக்குப் பரிகாரமாகச் சிலுவையைச் சுமந்தேன்.
எனது சீடன் நீ.
குரு செய்வதைத்தானே சீடனும் செய்ய வேண்டும்."
"அது புரிகிறது, ஆண்டவரே.
நான் கேட்க விரும்புவதை எப்படிக் கேட்பது என்றுதான் புரியவில்லை."
"பாவம்தானே துன்பத்திற்குக் காரணம். உலகைப் படைக்கும்போதே பாவமே செய்ய முடியாத உலகமாய்ப் படைத்திருக்கலாம் அல்லவா? என்று கேட்க விரும்புகிறாய்."
"ஆம், ஆண்டவரே, அதேதான்.
நீர் சர்வ ஞானம் உள்ளவர்.
எங்களது முதல் பெற்றோரைப்
படைக்கும் போதே அவர்கள் பாவம் செய்வார்கள் என்று உமக்குத் தெரியும்.
தெரிந்தும் ஏன் படைத்தீர்?"
"படைக்கும் போது மட்டுமல்ல, நித்திய காலமாகவே எனக்குத் தெரியும்.
நீ முதலில் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்துகொண்டால் உனது கேள்விக்கே இடம் இருக்காது.
நான் எல்லா பண்புகளிலும் அளவு கடந்தவர்.
உங்களுக்கு என்னைப் பற்றி எவ்வளவு வெளிப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றேனோ
அவ்வளவு வெளிப்படுத்தியிருக்கின்றேன்.
உனக்குப் புரியும்படி ஒரு ஒப்புமை சொல்கிறேன்.
ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறாய். அங்கு ஏராளமான உணவு வகைகள் இருக்கலாம்.
ஆனால் உனக்குத் தேவையானதை மட்டும் கேட்பாயா? அல்லது ஹோட்டலை முழுவதும் ஆராய்ச்சி செய்வாயா?"
"எனக்குத் தேவையானதை மட்டும் கேட்பேன். எனக்குத் தேவை இல்லாததைப் பற்றித் தெரிந்து நான் என்ன செய்யப்போகிறேன்!"
"அதேபோல் தான், நான் அளவற்றவர்.
நான் அளவு உள்ளவனாக உன்னைப் படைத்தேன்.
நீ உலகில் வாழ்ந்து என்னை அடைய விண்ணகம் அடைவதற்கு எவ்வளவு தேவையோ
அவ்வளவுக்கு என்னை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
நீ என்னை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தி யிருக்கிறேன்.
அதை நீ முழுமையாக ஏற்று அதன்படி ஒழுங்காக நடந்தால்,
காலம் வரும்போது அளவுள்ள நீ
அளவற்ற என்னோடு கலப்பாய், விண்ணகத்தில்
இப்போ நீ கேட்க விரும்புகிற கேள்வி:
"பாவம்தானே துன்பத்திற்குக் காரணம். உலகைப் படைக்கும்போதே பாவமே செய்ய முடியாத உலகமாய்ப் படைத்திருக்கலாம் அல்லவா?"
கொஞ்சம் யோசித்துப் பாரு. மனிதன் மேல எவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவனை என் சாயலிலேயே படைத்திருப்பேன்!
என்னுடைய எல்லா பண்புகளையும் அவனோடு பகிர்ந்து கொண்டேன்.
அவனுக்குச் சிந்திக்க, செயலாற்ற முழுச் சுதந்திரம் கொடுத்தேன்.
என்னுடைய சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது.
நானும் மனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.
மனிதனுக்காக நித்திய பேரின்ப வாழ்வு தயாராக இருக்கிறது.
ஆனால் அதை அவன் சுதந்திரமாக முயன்று தனதாக்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் ஒரு பொம்மை அல்ல, படைத்து அப்படியே மோட்சத்தில் வைப்பதற்கு.
ஆனால் அவன் தன் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்தான்.
பாவ நிலையில் அவனால் விண்ணகத்தை அடைய முடியாது.
பாவத்திற்குக் காரணம் சுதந்தரம் கொடுக்கப்பட்டது அல்ல.
சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதுதான்.
நீ வெளியூர் போகும்போது உன்னுடைய சாப்பாட்டுச் செலவுக்காக உன் அப்பா ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
அதைச் சாப்பாட்டுக்காகப் பயன்படுத்தாமல் டாஸ்மார்க்கில் குடித்துவிட்டு,
'அப்பா ரூபாய் தந்ததால்தான் குடித்தேன், தராதிருந்தால் குடித்திருக்க மாட்டேன்' என்று சொன்னால் சரியாகுமா?
அதே போன்றதுதான் 'பாவமே செய்ய முடியாத உலகமாய்ப் படைத்திருக்கலாம்' என்று கூறுவதும்.
பாவம் செய்வதற்காக உலகைப் படைக்கவில்லை.
சாப்பிடுவதற்காகவே உன் அப்பா
ரூபாய் தந்தது போல,
என் நினைவோடு மனிதர் வாழ்வதற்காகவே அவர்களைப் படைத்தேன்.
சாப்பிடக் கொடுத்த ரூபாயைக் கொண்டு குடித்தது போல,
என் நினைவோடு வாழக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பாவம் செய்ய மனிதன் பயன் படுத்தி விட்டான்.
பாவம் செய்யக் காரணமாக இருந்தது சுதந்திரம் அல்ல,
சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தான்.
புரிகிறதா?"
"புரிகிறது, ஆண்டவரே."
"பாவம் செய்தது மனிதன். பரிகாரம் செய்தது நான்.
மனிதனைப் படைக்க வேண்டு மென்று நித்தியமாக திட்டமிட்டது போல,
மனிதனாய்ப் பிறந்து, மனிதனாய் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தால்
மனிதன் செய்த பாவத்திற்குட் பரிகாரம் செய்ய வேண்டுமென்றும்
நித்தியமாக திட்டமிடப் பட்டது.
நான் சர்வ வல்லபர். சுதந்தரமாகச் செயல்படுபவர்.
நான் நினைத்திருந்தால் பாவம் செய்தவர்களை அழித்திருக்கலாம்.
அல்லது அப்படியே மன்னித்தும் விட்டிருக்கலாம்.
எனது இஸ்டப்படி முடிவெடுக்க சர்வ உரிமை இருக்கிறது.
ஆனால் அன்பின் மிகுதியால் படைத்த படைத்த மனிதனுக்கு என் அன்பைக் காட்ட விரும்வினேன்.
என் அன்பைக் காட்ட தான் நான் மனிதன் செய்த பாவத்திற்கு நானே பரிகாரம் செய்ய நித்திய காலமாகத் தீர்மானித்தேன்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment