Thursday, July 23, 2020

."நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."(அரு.15: 4)

."நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."
(அரு.15: 4)
************************************

"செடி வளர என்ன வேண்டும்?"

"தண்ணீர் வேண்டும்."

"அப்புறம்?"

"உரம் வேண்டும்."

"அப்பறம்?"

"ஆக்ஸிஜன் வேண்டும்."

"அப்புறம்?"

"சூரிய ஒளி வேண்டும்."

"அப்புறம்?"

"இவ்வளவும் போதும், சார்."

"ஒரு   மேஜையை வெயிலில் போட்டு, அதன் மேல் ஒரு  செடியைப் போட்டுத் தண்ணீர் ஊற்றினேன், உரம் போட்டேன், ஆனால் அது  வளர வில்லை."

"சார், மேஜை மேல போட்டா எப்படி வளரும்? அது பூமியில் வேரூன்றி நிற்க வேண்டும்."

"Correct. எந்த தாவரமும் பூமியில வேர் ஊன்றி நின்றால்தான் வளரும்.

பூமியை விட்டு வெளியே வந்து விட்ட தாவரம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் பட்டு தான் போகும்."

"சார், இது ஞானோபதேச வகுப்பு. நீங்க தோட்ட வேலைப் பாடம் நடத்திக் கிட்டிருக்கீங்க?"


"நானே உண்மையான திராட்சைக்கொடி: என் தந்தையே பயிரிடுபவர்."னு சொன்னது யாரு?"

"நம் ஆண்டவராகிய இயேசு,"

"அப்போ ஆண்டவர் தோட்ட வேலைப் பாடமா நடத்தினார்?"

"இல்லை, சார். ஞான உபதேச பாடம் தான், சார்.

நாம் இயேசுவோடு இணைந்திருந்தால்தான் பலன் தர முடியும் என்பத விளக்க

 தன்னைத் திராட்சைக் கொடிக்கும், நம்மை அதன் கிளைகளுக்கும் ஒப்பிடுகிறார்."

"very good. பூமியோடு இணைந்துள்ள தாவரம்தான் வளரும்.

கொடியோடு இணைந்த கிளைதான் பலன் தரும்.

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது. 

அவ்வாறே, நீங்களும் என்னில் நிலைத்திருந்தாலன்றி, கனி தர முடியாது." (அரு.15:4)

இதில் இன்னொரு நயமும் இருக்கிறது.

இயேசு திராட்சைக் கொடி. நாம் அக்கொடியின் கிளைகள்.

கொடியின் பண்பு தான் கிளைக்கும் இருக்கும்.

கொடி உண்ணும் உணவையே கிளையும் உண்ணும்.

அப்படியானால்
இயேசுவின் பண்புகள்தான் நமக்கும் இருக்க வேண்டும்.

தன்னலம் அற்ற அன்பு, இரக்கம், உதவும் குணம், மன்னிக்கும் குணம் இவையெல்லாம் தெய்வீகப் பண்புகள்.

இவை எல்லாம் நம்மிடமும் இருந்தால்தான் நாம் கொடியின் கிளை.

அடுத்து இயேசுவின் அருள்தான் நமது ஆன்மாவுக்கு உணவாக இருக்க வேண்டும்.
   
அதையும் மிஞ்சி இயேசு தன்னையே நமக்கு உணவாகக் கொடுத்திருக்கிறார்.

நமது ஆன்மாவில் ஓடுவது இயேசுவின் இரத்தம்.

அதுமல்ல இயேசுவே நமது உயிர்.

உயிர்தான் உடலை இயக்கும். உயிர் பிரிந்து விட்டால் உடல் இயக்கமற்றது ஆகிவிடும்.

அதே போல நமது ஆன்மாவை இயக்குபவர் இயேசுவே.

பாவத்தால் நாம் இயேசுவை இழந்துவிட்டால் நமது ஆன்மா 
இயக்கமற்றது ஆகிவிடும்.

ஒருவன்

பசியாய் இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுக்கிறான். 

தாகமாய் இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணீர் கொடுக்கிறான். 

அன்னியனாய் இருப்பவர்களை வரவேற்கிறான். 

 ஆடையின்றி இருப்பவர்களை  உடுத்துகிறான். 

 நோயுற்றோரைப்  பார்க்க செல்கிறான்.

. சிறையில் இருப்பவர்களைக்  காணச் செல்கிறான்.  

ஏழைகளுக்குத் தர்மம் செய்கிறான்.

மாணவர்களை இலவசமாகப் படிக்க வைக்கிறான்.

இந்த செயல்கள் எல்லாம் நற்செயல்களா?"

"தெரியாது சார்."

"ஏன் தெரியாது?"

"அவன் இயேசுவோடு இணைந்திருந்தானா இல்லையா என்று நீங்கள் சொல்லவே இல்லையே!"

.." அதை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அது அவனுக்கு மட்டும் தான் தெரியும்."

.."ஏன் அவனுக்கு மட்டும் தான் தெரியும்?"

"அது அவனுடைய ஆன்மாவின் நிலை. ஆன்மா ஆவி. நம் கண்ணுக்குத் தெரியாது."

.."சரி. அவனுடைய ஆன்மா எப்படி இருந்தால் அவனுடைய செயல் நற்செயல்?"

"அவனுடைய ஆன்மா சாவான பாவம் இல்லாமல், அதாவது, தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருக்க வேண்டும். (State of Sanctifying grace)

அப்போதுதான் அது இறைவனோடு உறவு நிலையில் இருக்கும்.

அடுத்து அவன் செய்கிற செயலை இறைவனது மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

சுய மகிமைக்காகச் செய்தால் நற்செயலுக்கு உரிய பலன் கிடைக்காது."

..."Correct. ஆண்டவர் சொல்கிறார்.

"நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."

இரு உள்ளங்களுக்கு இடையே உறவை உருவாக்குவது அன்பு.
 
இறைவனுக்கும் நமக்கும் இடையே உறவை ஏற்படுத்தும் அன்பை தேவ சிநேகம் (Charity) என்போம்.

இறைவனும் நாமும் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

இறைவன் மாறாதவர், ஆகவே அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

நாம் பரிசுத்த நிலையில் இருந்தாலும், பாவ நிலையில் இருந்தாலும் இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு  மாறாது.

ஆனால் நாம் சாவான பாவம் செய்யும் போது 

இறைவன் மீது அதுவரை  நாம் கொண்டிருந்த அன்பை இழக்கிறோம், அதோடு உறவையும் இழக்கிறோம்.

இறை உறவற்ற நிலையில் நம்மால் நற்செயல் எதுவும் செய்ய முடியாது.

இழந்த உறவை மீண்டும் பெற பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவமன்னிப்புடன் பாவத்தினால் இழந்த இறை உறவை மீண்டும் பெறுகிறோம்.

அதன்பின், இறைவன் தன் அன்புடன் நம்மில் நிலைத்திருப்பதுபோல,

 நாமும் அன்புடன் இறைவனில் நிலைத்திருக்க வேண்டும்.

இறைவனோடு நாம் கொண்டுள்ள நிலையான உறவுதான். நம்மை நிலை வாழ்விற்கு அழைத்துச் 
செல்லும்."

"கிறிஸ்துவோடு அன்புறவில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?"

.."தோட்ட வேலை ஒப்புமையையே எடுத்துக் கொள்வோம். 

விபசாயி முதலில் கல், முள் போன்ற வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி தோட்டத்தைச் சுத்தம் செய்கிறான்.

அப்புறம் நிலத்தை உழுது பக்குவப்படுத்துகிறான்.

'தோட்டம் சுத்தம் ஆகிவிட்டது. இது போதும்' என்று அதோடு நிறுத்தி விடுவானா?"

"நிறுத்திவிட மாட்டான். நிறுத்தி விட்டால் தோட்டம் சுத்தமாக இருக்கும். ஆனால் வருமானம் ஒன்றும் வராதே!

வருமானம் தரக்கூடிய ஏதாவது பயிரைப் பயிர் செய்வான்.

 அப்போதுதான் வேண்டாத களை ஏதும் முளைக்காது, வருமானமும் வரும். உழைப்புக்குப் பலன் கிடைக்கும்."

..." அதேபோல்தான், பாவமன்னிப்பு பெற்று ஆன்மாவைச் சுத்தம் செய்தால் மட்டும் போதாது.

விண்ணகம் சென்ற பின் அனுபவிக்க ஏதாவது சம்பாதிக்க வேண்டாமா?

விண்ணகம் செல்லும் எல்லோருக்கும் பேரின்பம் உண்டு.

ஆயினும் அதன் அளவு நாம் இவ்வுலகில் செய்யும் நற்செயல்களின் அளவைப் பொறுத்து அமையும்.

அதற்காக நற்செயல்கள் என்னும் பயிர் செய்து, விண்ணகத்தில் பலன் சேர்க்க வேண்டும்.

இப்பலன் விண்ணகப் பேரின்பத்தை அதிகரிக்கும்.

இறைவனுக்காக செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் விண்ணகத்தில் பலன் சேரும்.


"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத் 10:42)

மேலும் நற்செயல்களால் நாம் பெறும் இறையருள் பாவச் சோதனைகளுக்குள் நாம் விழாதபடி நம்மைக் காக்கும்.

ஆன்மாவை பாவ அழுக்கு இன்றி வைத்திருந்தால் மட்டும் போதாது.

அதை புண்ணியங்கள் என்ற மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

இயேசுவாகிய திராட்சைக் கொடியில் கிளைகளாக இணைந்திருக்கும் நாம்

 புண்ணியங்களாகிய நற்கனிகள் நிறைய தர வேண்டும்.

இயேசுவைப் பிரிந்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

கிறிஸ்தவன் என்ற பெயரில் பெயரளவில் வாழ்ந்தால் மட்டும் போதாது.

கிறிஸ்து + அவனாக

 (கிறிஸ்துவோடு இணைந்தவனாக)

 கிறிஸ்துவின் பண்புகளை நாமும் பெற்று மறு கிறிஸ்துவாக வாழவேண்டும்.

கிறிஸ்து பணி வாழ்வின்போது சென்றவிடமெல்லாம் நன்மைகளே செய்தார்.

நாமும் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம்.

நம் அன்புச் செயல்களால் நம் ஆன்மாவை விண்ணக  வாழ்விற்கு அழைத்துச் செல்வோம்.

நிலைத்திருப்போம் இறையன்பில்.
நிலைவாழ்வில் இணைந்திடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment