Monday, July 6, 2020

மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்"(மத்.9:22)

"மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்"
(மத்.9:22)
************************************

பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி

இயேசுவின் கையினால்  குணம் பெற  விரும்பி,  கூட்டத்தோடு கூட்டமாய் அவரைப் பின் தொடர்கிறாள்.

அவள் இயேசுவின் முன்னால் சென்று  சுகம் பெறுவதற்கான விண்ணப்பம் எதையும் வைக்கவில்லை.

ஏனெனில் அவளது விசுவாசம் மிகமிக ஆழமாக இருந்தது.

நமது உள்ளத்தின் ஆழத்தை இயேசு அறிவார்,

அங்கே புதைந்து கிடக்கும் தேவைகளை நாம் கேட்காமலே நிறைவேற்றுவார்,

நமக்கு இருக்க வேண்டியது அவர் மேல் ஆழமான விசுவாசம் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தாள்.

"நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்"

என்று மனதில் நினைத்தாள்.

நினைத்துக்கொண்டு

பின்புறமாக வந்து, அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

அவளுடைளுடைய விசுவாசத்தின்படியே

அவளது உள்ளத்தை அறிந்த இயேசு

"மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

இயேசு சொல்லும்போதே அவள் குணம் பெற்றாள்.

அந்தப் பெண் இயேசுவிடம் ஒன்றும் கேட்கவில்லை.

ஆனால் அவளுடைய இருதயத்தில் இயேசு மேல் விசுவாசம் முழுவதுமாக இருந்தது.

ஆகவே  தனக்குத் தேவையானதைக் கேட்காமலேயே தருவார் என்று நம்பினாள்.

அவளது விசுவாசம் வென்றது.

நற்செய்தியாளர்கள் எந்த நோக்கத்தோடு இயேசு செய்த புதுமைகளை எழுதி வைத்துள்ளார்கள்?

இயேசுவின் போதனைகளை எழுதிவைத்தது நாம் அவற்றை அறிந்து, அவற்றைப் பின்பற்ற.

புதுமைகளை எழுதி வைத்திருப்பது ,

"எனக்கும் புதுமை செய்யும் ஆண்டவரே."

என்று நாம் கேட்பதற்கா?

நாம் அப்படித்தான் நினைக்கிறோம்.

நாம் புனித அந்தோனியாரை விரும்புவதற்கு முக்கியமான காரணம் அவர் கோடி அற்புதர் என்பதற்காகத்தான்.

அவரைப் போல் நாம் புனிதமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக  அவரை விரும்புவோர் ஒரு சிலர் இருக்கலாம்.

அநேகர் அவரது புதுமைகளுக்காகத்தான் அவரை விரும்புகிறார்கள்.

நமது அன்னை மரியாளை நமது தாய் என்பதற்காக அவருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.

நாம் மாதாவைத்  தேடி திருத்தலங்களுக்குப் போவது எதற்காக?

நமது அன்பு நிறைந்த அன்னை என்ற அடிப்படையில்

  நமக்காக இயேசுவிடம் பரிந்து பேச

அவளை வேண்டுவதற்கு  மக்கள் என்ற அடிப்படையில்   நமக்கு முழு உரிமை  இருக்கிறது.

நம் தாயிடம் நாம் எந்த உதவிகள் வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஆனால் நாம் கேட்பது உண்மையான  பாசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

தாயைப்போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள்.

நாம் நமது தாயைப்போல் புண்ணியங்கள் நிறைந்தவர்களாக இருக்கிறோமா?

தாயிடம் இருந்த விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா?

தாய் தன்னை கடவுளின் அடிமையாக ஒப்புப் கொடுத்தார்களே,

நாம் நம்மை கடவுளின் அடிமைகளாக அர்ப்பணித்திருக்கின்றோமா?

தாய் தனக்கு வந்த வியாகுலங்களை எல்லாம் தனது மகனுக்காக ஏற்றுக் கொண்டாளே,

நாம் நமக்கு வரும் சிலுவைகளை எல்லாம் நமது மீட்பருக்காக ஏற்றுக் கொள்கிறோமா?

இந்த வினாக்களுக்கெல்லாம் ஆம் என்ற பதில் வந்தால்தான் நாம் உண்மையான மாதா பக்தர்கள்,

இல்லாவிட்டால், நாம் நமது நன்மைக்காகவே பக்தி வைத்திருக்கும் சுயநலவாதிகள்.

சிந்திப்போம்.

நற்செய்தியாளர்கள் புதுமைகளைக் குறித்திருப்பது நாமும் புதுமைகளை எதிர்பார்ப்பதற்காக அல்ல.

அப்புதுமைகளுக்குக் காரணமான விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காக. 

அதுதான் நோக்கம். நமது விசுவாசம் ஆழமாகிவிட்டால்

புதுமைகள் இயல்பாக (automatically) நடக்கும்.

ஆழமான விசுவாசம் உள்ளவர்களிடம் ஆண்டவர் அவர்கள் அறியாமலேயே புதுமைகளை நடத்திக் கொண்டிருப்பார்.

நாம் பிறருக்கு உதவி செய்வதை முழுநேரப் பணியாக உண்மையிலேயே ஏற்றுக் கொண்டோமானால்,

அப்பணிக்கு  உதவக்கூடிய எல்லா பொருட்களையும் ஆண்டவரே நமக்கு அருள்வார்.

அன்னைத் தெரசா அதற்கு சாட்சி.

அவள் தன் வாழ்நாள் முழுவதையும் கடவுளுக்காக

நோயாளிகளுக்கும், ஏழைகளுக்கும் சேவை செய்வதிலேயே செல்வழித்தார்.

அதற்குத் தேவையான பண உதவியை அவள் சம்பாதிக்கவில்லை.

ஆண்டவர் தான் கொடுத்தார், உதவியாளர்கள் மூலமாக,

தினமும் நற்செய்தி வாசிக்கிறோம்.

ஒவ்வொரு முறை ஒரு புதுமையை வாசிக்கும்போதும் நமது விசுவாசம் தொடர்ந்து ஆழமாகிக் கொண்டேயிருக்க வேண்டும்.

காலப்போக்கில் விசுவாசத்தை ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக மட்டுமே பயன்படுத்துவோம்,

விண்ணப்பங்களுக்காகப்
பயன்படுத்த மாட்டோம்.

நமது விசுவாசமே நம்மிடம் சொல்லும்:

"இறைவனையும், அயலானையும் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்.

உனக்கு என்ன வேண்டும் என்று உன் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

உன்னை அவர் கவனித்துக் கொள்வார்."

புனித பிரான்சிஸ் அசிசியாரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.

ஒரு பணக்கார ஜவுளி வியாபாரியின் மகன்.

ஆனால் ஏழ்மையின் (Poverty)யின் மேல் அளவு கடந்த பற்றுள்ளவர்.

கடையிலுள்ள துணிகளை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்தார்.

அதனால் கோபங்கொண்ட அவரது தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

மகிழ்ச்சியுடன்  விண்ணகத் தந்தைக்கு சுதந்தரமாக சேவை செய்ய  ஆரம்பித்தார்.

அவரது ஏழ்மையையும், சேவையையும் பார்த்து பலர் அவரோடு அப்பணிக்காக அவரோடு சேர்ந்தார்கள்.

நற்செய்திப் பணிக்காக ஒரு துறவற சபையை (Franciscan Religious order) ஆரம்பித்தார்.

அவரது சபையின் முக்கியமான. அம்சம், முழுமையான ஏழ்மை.
(Total poverty)

சபைக்கும், சபையினருக்கும் சொந்தமாக ஒரு குண்டூசி கூட இருக்கக்கூடாது.

அவ்வளவு ஏழ்மையான சபை.

சபையினர் சொந்தமாக ஏதும் இல்லாமலேயே இறைப்பணியாற்றுகிறார்கள்.

விண்ணகத் தந்தை அவர்களைக் கவனித்துக் கொள்கிறார். .

நாமும் ஆழமான விசுவாசத்தோடு இறைப்பணி ஆற்றுவோம்.

நம்மை இறைவன் கவனித்துக் கொள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment