"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.''
(மத்.9:37)
************************************
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரை
முதல் வகுப்பு மாணவர்களிடம் பேச அழைத்திருக்கிறோம்.
அவர் முனைவர் பட்டம் பெற சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையை அதே நடையில் விளக்குகிறார்.
முதல் வகுப்பு மாணவர்கள் என்ன செய்வார்கள்?
பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனா ஆவன்னா படிப்பவர்களுக்கு ஆய்வுக் கட்டுரை எப்படிப் புரியும்?
Be a Roman when you are in Rome.
என்ற ஒரு பழமொழி உண்டு.
எங்களுக்கு English refresher Course நடத்திய சாமியார் சொல்லுவார்,
"When you talk with a butler talk like a butter, he will give you a good Coffee."
(Butler English:
One master call for come India … eh England. I say not coming. That master very liking me. I not come. That is like for India — that hot and cold. That England for very cold.)
இயேசு சர்வ வல்லப கூடவுள். சர்வ ஞானம் உள்ளவர்.
அவர் சாதாரண மக்களிடம் பேசும்போது
தன் சர்வ ஞானமும் வெளிப்படும் வகையில் உயரிய நடையில் பேசி இருந்தால்
சாதாரண மக்களுக்கு எதுவும் புரிந்து இருக்காது.
விவசாய வேலை பார்ப்போர், ஆடு மேய்ப்போர், கூலிகள் போன்ற சாதாரண மக்களுக்கு விளங்கும்படியாக,
அவர்களுடைய அனுபவங்களுக்கு உட்பட்ட நிகழ்வுகள் உள்ள கதைகள் சொல்லி
நற்செய்தியைப் போதித்தார்.
ஆகையினால்தான் சாதாரண மக்கள் அவரது போதனையைக் கேட்கக் கூட்டம் கூட்டமாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.
"அறுவடையோ மிகுதி:" என்று கூறும்போது இறைவனின் இராட்சியத்தை விபசாயிகள் வேலை செய்யும் வயலுக்கு ஒப்பிடுகிறார்.
நிலத்தைப் பண்டுத்தி, நாற்றுப்பாவி,
நட்டு,
உரம் போட்டு,
நீர்ப்பாய்ச்சி,
களை பிடுங்கி,
வளர்த்த பின் கதிர் வந்து விளையும்.
முற்றிய தானியத்தை அறுவடை செய்து வீட்டிற்குக் செல்ல வேண்டும்.
நிலத்தைப் பண்படுத்தியதிலிருந்து அறுவடை வரை நிறைய வேலை இருக்கிறது.
அதேபோல,
ஆன்மாக்களைத் தேடிப் பிடித்து வந்து,
கிறிஸ்தவமாகிய வயலில் நட்டு,
அருள் நீரால் வளர்த்து.
அருள் வாழ்வில் முதிர்ச்சி அடைந்த ஆன்மாக்களை
.நமது வீடாகிய விண்ணகத்திற்கு
அழைத்துச் செல்ல
ஆன்மீக உழைப்பாளர்களர்கள் நிறைய தேவை.
ஆனால் உழைப்பாளர்களர்கள்
போதுமான அளவில் இல்லை.
"ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்." இயேசு சொல்லுகிறார்.
அவரது நற்செய்தியைக் கேட்க வந்த மக்கட்கூட்டத்தைக் கண்டு,
அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்ததைப் பார்த்து,
அவர்கள்மேல் மனமிரங்கினார்,
மக்கள் நிலையைப் பார்த்து,
"மக்களிடம் ஆன்மீகப் பணிபுரிய
போதுமான ஆட்கள் இல்லை.
ஆன்மீகப் பணி புரிய போதுமான ஆட்களை அனுப்பும்படி இறைவனிடம் வேண்டும்படி
சீடர்களிடம் கூறினார்.
இங்கு நாம் தியானிக்க வேண்டிய மிக முக்கிய கருத்து ஒன்று உள்ளது.
ஆன்மாக்களைக் கவனிக்க ஆயர்கள் வேண்டும்.
(இங்கு ஒப்புமை மேய்ப்புத் தொழிலிலிருந்து எடுக்கப்படுகிறது.)
ஆன்மீக வேலை செய்ய வேலையாட்கள் வேண்டும். (இங்கு ஒப்புமை விபசாயத்திலிருந்து எடுக்கப்படுகிறது.)
"ஆயனில்லா ஆடுகள்"
(மேய்ப்புத் தொழில்)
"அறுவடைக்கு வேலையாட்கள்."
(விபசாயத் தொழில்)
ஒப்புமை, மக்களுக்கு எளிதில் புரிவதற்காக.
கருத்து:
பணியாற்ற விசுவாசிகள் வேண்டும்.
கவனிக்க ஆயர்கள் வேண்டும்.
ஆயர்கள் விசுவாசிகளை சரியான பாதையில் வழிநடத்துபவர்கள்.
குருக்கள் முதல் பாப்பரசர் வரை
வழிநடத்துபவர்கள்தான்.
ஆண்டவர் தன் மனதில் என்ன நினைத்தார் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் என் மனதில் தோன்றிய எண்ணம் இது.
இப்போ என் மனதில் ஒரு கேள்வி தோன்றுகிறது.
'அறுவடையின் ஆண்டவர்' இயேசு தான்.
ஏன் அவரிடமே வேண்டும்படி அவரே சீடர்களுக்குச் சொல்லுகிறார்?
இதற்கு எங்கிருந்தோ ஒரு பதில் வருகிறது.
"அவர் வேண்டச் சொன்னது தந்தை இறைவனிடம்" என்று.
ஆனால் இயேசுவே சொல்லி யிருக்கிறார்:
"நானும் தந்தையும் ஒன்றே."
(அரு10:30)
"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்."
(அரு. 14:9)
ஆகவே இயேசுவிடம் கேட்கும்போது தந்தையிடமும் கேட்கிறோம்.
அதை விட நுட்பமாகச் சொன்னால்,
' பரிசுத்த தமதிரித்துவத்திடம், அதாவது, கடவுளிடம்' கேட்கிறோம்.
ஆக,
'அறுவடையின் ஆண்டவரைக் கேளுங்கள்' என்று இயேசு சொல்லியிருப்பதால்
நாம் அவரிடமே கேட்கலாம்.
இப்போ கேள்வி
யாரிடம்? அல்ல.
ஏன்?
நம்மைப் படைத்த கடவுளுக்கு நமக்கு எந்த வேண்டும் என்பது தெரியும்.
அவரது சித்தத்தை நிறைவேற்ற வேண்டியது தான் நமது பொறுப்பு.
அவர் நமக்கு வேண்டியதை நாம் கேளாமலேயே தருவார்.
நமக்காக எதுவும் கேட்க தேவை இல்லை.
ஆனால் நாம் மற்றவர்களுக்காக,
பொது நலனுக்காக
கேட்பது நம்முடைய நல்ல மனதைக் காட்டுவதோடு
இறைவனோடு நமக்குள்ள உறவை வலுப்படுத்துகிறது.
இறைவன் நமது இதயத்தில் நம்மோடு உறவாடுகிறார்.
நாமும் அவரோடு உறவாட வேண்டும்.
நமது உரையாடல் பொது நலனுக்காக இருக்க வேண்டும்.
திருச்சபை நமது தாய்.
தாயின் நலன்தான் நமது நலன்,
கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையில் முக்கிய உறுப்புக்கள்
தலையாகிய இயேசுவும்
நம்மை ஆளுகின்ற ஆயர்களும்
ஆளப்படுகின்றன விசுவாசிகளும்.
கிறிஸ்துவுக்காக நாம் எதுவும் கேட்க தேவையில்லை, ஏனெனில் அவர் கடவுள்.
ஆனால் ஆயர்களுக்காகவும்,
விசுவாசிகளுக்காகவும்
வேண்டுவது நம்முடைய கடமை.
அப்படி வேண்டுவது நமது அயலான் மீது நடக்குள்ள அன்பை வளர்க்கிறது.
இறை அன்பிலும், பிறர் அன்பிலும் நாம் வளர உதவுகிறது.
உலகில் நாம் தனிநபர் அல்ல.
சமூக நபர், கிறிஸ்தவம் ஆகிய நமது சமூகத்தில் நாம் உறுப்பினர்கள்.
திருச்சபை வளரும்போது நாம் வளர்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் வளரும்போது, திருச்சபை வளர்கிறது.
ஆகவேதான் பொது வளர்ச்சிக்காக நாம் நமது தலைவராகிக இயேசுவிடம் மன்றாடுவோம்.
இயேசு சொன்னது சீடர்களிடம் மட்டுமல்ல,
நற்செய்தியை வாசிக்கும் நம் ஒவ்வொருவரிடமும்தான்.
இறையரசு ஆன்மீக அரசு.
அவ்வரசை விரிவுபடுத்த நம் ஒவவொருவருக்கும் கடமை உண்டு.
ஆண்டவரை பார்த்து,
" ஆண்டவரே உமது அரசை விரிவுபடுத்த ஆட்களைத் தரும்படி
அறுவடையின் ஆண்டவரை வேண்டச் சொன்னீங்களே.
நீங்க தானே அறுவடையின் ஆண்டவர்.
தாரும் ஆண்டவரே,
உமக்குப் பணிவிடை செய்ய ஆட்களை அழையும்,
ஆண்டவரே."
என்று கேட்கிறோம்.
ஆண்டவர் சொல்கிறார்,
" உண்மைதான், மகனே.
வா. நான் உன்னை அழைக்கிறேன்.
இறைப்பணியில் எனது முழுநேரப் பணியாளராகப் பணி புரிய உன்னை அழைக்கிறேன்."
இப்போது நாம் என்ன சொல்லவேண்டும்?
"ஆண்டவரே, நீர் வேண்டத்தானே சொன்னீர். நான் வேண்டி விட்டேன். இனி உம்ம பாடு, உம்ம ஆள் பாடு"
என்று கூறி ஒதுங்கிக் கொள்ளலாமா?
நாம் ஒவ்வொருவருமே இறைப் பணி செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஆகவே, நாம் சொல்ல வேண்டிய பதில்:
"நான் ரெடி, ஆண்டவரே.
என்ன பணி செய்ய வேண்டும்?
மக்களை வழிநடத்த குருத்துவ பணியை ஏற்க வேண்டுமா?
அல்லது பொது நிலையிலேயே இருந்து உமக்கு சேவை செய்ய வேண்டுமா?
நான் எதற்கும் தயார்.
நான் என்ன செய்ய வேண்டும் ?"
ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.
மறை பரப்புப் பணியை எந்த நிலையிலும் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
பணிக் குருத்துவமும் இறை அழைத்தல்தான்.
பொதுக் குருத்துவமும் இறை அழைத்தல்தான்.
இறை அரசைப் பரப்புவது ஒவ்வொரு விசுவாசியின் பணி.
அதைச் செய்ய வேண்டும்.
"அறுவடையின் ஆண்டவரை வேண்டுங்கள்" என்று சொன்னால்
வேண்டினால் போதும் என்று அர்த்தமல்ல.
நாம் எப்போதும் ஆண்டவரிடம் சொல்வோம்:
"இயேசுவே, உமது அரசை விரிவு படுத்த எங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தும்."
லூர்து செல்வம்.
.
|
No comments:
Post a Comment