Monday, July 13, 2020

."கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" (மத்.13:9)

."கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" 
(மத்.13:9)
**************************************

இயேசு விதைப்பவன் உவமையைச் சொல்லி முடித்தவுடன் ."கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

ஏன் அப்படிச் சொன்னார்?

விண்ணரசைப்பற்றிய வார்த்தைதான் விதை.

விதை விழும் இடத்தைப் பொறுத்து அது முளைத்து, வளர்ந்து, பலன் தருவதன் அளவு அமையும்.

விண்ணரசைப் பற்றிய வார்த்தை இறை வார்த்தை.


இறைவன் சர்வவல்லமை உள்ளவர்.

அவரது வார்த்தையும் சர்வவல்லமை உள்ளதுதான்.

ஆனால் அதைக் கேட்பவனுடைய மனப் பக்குவத்தைப் பொறுத்துதான்  அதன் பலன் இருக்கும்.

பட்டப் பகல் 12 மணி. சூரியன் மிகப் பிரகாசமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

ஒளி பட்ட இடமெல்லாம் நன்கு தெரிகிறது.

ஆனால் கண்ணை மூடிக் கொண்டிருப்பவனுக்கு எந்த பொருள் தெரியும்?

ஒரு பொருளும் தெரியாது.

தெரியாததற்கு ஒளி காரணம் அல்ல. 


கண்ணை மூடிக் கொண்டிருப்பவன்தான் காரணம்.

 வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். 

ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.

ஒவ்வொரு மாணவனும் பாடத்தைக் கவனிப்பதை பொறுத்தும்,

அவனுடைய சிந்திக்கும் திறனைக் பொறுத்தும்

 ஆசிரியருடைய போதனை ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு விதமாகப் பலன் தரும்.

 பாடம் நடக்கும் போது பையன் தூங்கிக்கொண்டிருந்தால் அவனுக்கு ஒரு பலனும் தராது.


இயேசு அடுத்துக் கூறிய வார்த்தைகளை வைத்துப் பார்க்கும் போது, 

அநேகர் அவரது வார்த்தைகளைச் சரிவரக் கேட்டது போல் தெரியவில்லை.

"அவர்கள் கண்டும் காண்பதில்லை: கேட்டும் கேட்பதில்லை: உணர்வதுமில்லை." என்று ஆண்டவர் 
கூறுகிறார்.

காதுகள் கேட்பதற்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் சொல்வதைக் கவனிக்காம லிருந்தால், காது இருந்தும் பயன் இல்லை.

ஒரு வேளை அநேகர் புதுமைகளை மட்டும் எதிர்பார்த்து வந்திருக்கலாம்.

அவர்கள் போதனை எப்போது முடியும், என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

அவர்களுக்குப் போதனை காதில் விழாது.

அநேக சமயங்களில் நாமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம்.

இப்போதும் இயேசு நம்மோடு  பேசுகிறார்.

கொஞ்சம் கவனித்துப் பார்ப்பவர்களுக்கு இயேசு நம்மை ஒவ்வொரு வினாடியும் பேசி வழி நடத்துகிறார்  என்பது புரியும்.

ஆலோசனைகள் நல்குவதற்கும், வழிகாட்டுவதற்கும் இயேசு நம்மோடு பேசுகிறார்.

இயேசு இருப்பது விண்ணகத்தில், 

மண்ணகத்தில்  இருக்கும்   நம்மோடு எப்படிப் பேசுகிறார்?

விண்ணகம் பற்றி சொல்லும்போது ஒரு அடிப்படை உண்மையை(basic truth) ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மண்ணகம் ஒரு இடம். (Physical place)

விண்ணகம் ஒரு இடம் அல்ல. ஒரு நிலை. (State)

விண்ணகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதே தவறு,

 ஏனெனில் 'எங்கே'
என்ற வினாச் சொல் சடப்பொருட்களைப் பற்றி விசாரிக்க நாம் பயன்படுத்தும் சொல்.

ஆனால் நமக்கு மனித மொழி மட்டுமே தெரியுமாகையால்

 வேறு வழி இல்லாமல் Spiritual things பற்றி விசாரிப்பதற்கும் அதே வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

அந்த வகையில் 

'விண்ணகம் எங்கே இருக்கிறது?'

 என்ற கேள்விக்கு மனித மொழியில் பதில்,

"விண்ணகம் எங்கும் இருக்கிறது."

ஆகவே விண்ணகத்தில் இருக்கும் இறைவன்,

அதாவது, நம்மோடு இருக்கும் இறைவன், 

நம்மோடு எப்போதும் (always) பேசுகிறார்.

நாம் எப்போதும் நம்மோடு  பேசிக்கொண்டிருக்கிறோம், நமது சிந்தனை வழியாக! 

நம்முள் இருக்கும் இறைவன்  நமது சிந்தனையையே நம்மோடு பேச வேண்டிய கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

நமது சிந்தனை வழியாக நம்மோடு பேசுவதைத்தான்

'இறைத் தூண்டுதல்' (inspiration) என்கிறோம்.

அடுத்து

பைபிள்,
நமது ஆன்ம வழிகாட்டி (Spiritual Director).
பங்கு குரு,
தாய்த்திருச்சபை,
அவரது படைப்பு (things created)

போன்ற கருவிகள் மூலமாக  நம்மோடு பேசுகிறார்.

நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் அவரைச் சார்ந்தவையாய் இருந்தால் அவர் பேசுவது நமக்குப் புரியும்

ஏதாவது ஒரு காரியத்துக்காக வேண்டிக்கொண்டிருக்கும்போது

நமது உள்ளத்தில் அதற்கான வழிகாட்டியாக ஒரு புதிய சிந்தனை தோன்றலாம்,

அன்றைய பைபிள் வாசகத்தில் அதற்கான  வழிகாட்டும் வசனம்
(directive verse) இருக்கலாம்,

அன்றைய பிரசங்கத்தில் அதற்கான குறிப்புகள் இருக்கலாம்,

நமது இல்லத்திலிருந்து கூட  வழிகாட்டுதல் வரலாம்.

ஒரு உதாரணம். நண்பர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்ட உண்மை அனுபவம்.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ticket book செய்துவிட்டார்.

இன்றைய காலக் கட்டத்தில் கொரோனாக்கள் ஊடே அவற்றைத் தொடாமல் எப்படி பிரயாணம் செய்வது என்பதை செப உணர்வோடு சிந்தித்திக் கொண்டிருந்தார்.

அவருடைய பூட்டி, நான்கு வயது, விளையாடிக் கொண்டிருந்தவள்,

அவளுடைய அப்பாவைப் பார்த்து,

"அப்பா, இந்த Chairல் நீங்கள் உட்காரக் கூடாது."

"ஏம்மா?"

"இதில் அந்தோனியார் உட்கார்ந்திருக்கிறார்."

அப்பா சிரித்துக் கொண்டார்.

கொஞ்சம் நேரம் பொறுத்து அவளே அதே Chairல் உட்கார்ந்து கொண்டாள்.

நண்பர் அவளைப் பார்த்து,

"ஏம்மா, Chairல அந்தோனியார் உட்கார்ந்திருக்கிறார், நீங்க உட்காரக் கூடாதுன்னு அப்பாக்கிட்ட சொன்ன. இப்போ நீயே உட்கார்ந்திருக்க?"

"நான் Chairல் உட்காரலிய!"

"அப்போ எங்கே உட்கார்ந்திருக்க?"

"நான் அந்தோனியார் மடியில உட்கார்ந்திருக்கிறேன்."

நண்பருக்கு உடனே ஒன்று புரிந்தது.
பூட்டி வழியாக இறைவனே பேசிவிட்டார்!

உடனே நண்பர் இறைவனிடம்,

"இயேசுவே நன்றி. நான் உமது மடியில்தான் இந்தியாவுக்குப் பயணிக்கப் போகிறேன். 

உமது மடியில் இருக்கும்போது நான் எதுக்கும் அஞ்சவேண்டியதில்லை!

இயேசுவே நன்றி!"

நண்பர் செப உணர்வோடு சிந்தித்துத் கொண்டிருந்தமையால் நான்கு வயது பூட்டியின் பேச்சில் இயேசுவின் குரலைக் கேட்க முடிந்தது.

வெறுமனே பய உணர்வோடு சிந்தித்துக் கொண்டிருந்தால் இறைவன் குரல் கேட்டிருக்காது.

நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் 
இவ்வுலகைச்  சார்ந்தவர்கள் அல்ல.

(We are in this world, but not of this word.)

இறையுலகையே சார்ந்தவர்கள்.

நாம் எப்போதும் இறைவன் சந்நிதானத்தில் வாழ்ந்தால் இறைவன் குரல் நமக்குக் கேட்கும்.

நமது பிரச்சனையே நாம் இடையிடாது கடவுளிடம் பேசிக்கொண்டே, ஏதாவது விண்ணப்பித்துக் கொண்டே இருப்பதுதான்.

கடவுளைப் பேச விடுவதே இல்லை.

திருப்பலி தாய்த் திருச்சபையின் அதிகாரப் பூர்வமான செபம்.
(official prayer of the Church.)

அதில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இறைவன் நம்மோடு பேசுவதற்வதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அந்நேரத்தில் வாசகங்கள், பிரசங்கம் மூலமாக இறைவன் நம்மோடு  பேசுகிறார்.

ஒரு சில நிமிடங்கள்தான் நமது விண்ணப்பங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மீதி நேரம் முழுவதும் திருப்பலியோடுதான் ஒன்றித்திருக்க வேண்டும்.

திருப்பந்தியில் இயேசு நம்மிடம் வரும்போது அவரைப் பேச விட வேண்டும்.

அமைதியாகத் தியானிக்கும்போது தான் இயேசுவின் குரல் நமக்குக் கேட்கும்.

நம்மை வழிநடத்தும் இறைவன் சில சமயங்களில் தடங்கல்கள் மூலமாகக் கூட வழிநடத்துவார்.

அதாவது நமது பார்வையில் தடங்கல் போல் தெரிவது இறைவனைப்     'பொறுத்த மட்டில் கைகாட்டி.

நாம் ஒரு இடத்திற்குப் போகும்போது எதிர் பாராமல் தடங்கல் ஏற்பட்டால்,

நாம் அங்கே போக வேண்டாம் என்று இறைவன் கூறுவதாகப் பொருள்.


 நமது வாழ்வின் தோல்விகளாகத் தோன்றுபவை உண்மையில் தோல்விகள் அல்ல.

வெற்றியை நோக்கித் திருப்பிவிடும் கைகள். 

சில தோல்விகள் நமக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்.

நமக்கு ஏற்படும் நோய் நொடிகள், துன்பங்கள் மூலமாகக் கூட இறைவன் நம்மோடு பேசுவார்.

நமது பார்வைக்குச் சிறந்ததாகப்படும் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பித்திருப்போம்.


அப்போது பார்த்து  காய்ச்சல் வந்து படுத்துக் கொள்வோம்.

அந்த வேலை வேண்டாம் என்று ஆண்டவர் சொல்கிறார்.

பிறகு அதை விடச் சிறந்த வேலை வரும்போது ஆண்டவர் பேசியதன் பொருளைத் தெரிந்து கொள்வோம்.

மழை, காற்று, நிலநடுக்கம், சுனாமி, கொரோனா போன்ற இயற்கை நிகழ்வுகளை

 நமது அறியாமை காரணமாக இயற்கையின் சீற்றங்கள், பேரழிவுகள் என்று நாம் கருதுகிறோம்.

ஆனால் அவை உலகைப் பராமரிப்பதற்காக இறைவனின் நித்திய திட்டத்தின்படி நடை பெறுகின்றன.

அவரின்றி ஒரு அணுகூட அசையாது.

டாக்டர் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போதுகூட

 அறியாமை காரணமாக சில நோயாளிகள் டாக்டர் மீது கோபப்படுவது உண்டு.

நோய் குணமான பின்புதான் டாக்டரின் அருமை புரியும்.

இறைவன் அவரது அளவில்லா ஞானத்தால் உலகை எப்படிப் பராமரித்து வருகிறார் என்று 
நாம் விண்ணகம் சென்ற பின்பு தான் நமக்குத் தெரியும்.

அதுவரை நமது விசுவாசக் காது கொண்டு  அவர் சொல்வதைக் கேட்டு நடப்போம்.

இறைவன் நம்மோடு,
 என்றும் நம்மோடு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment