http://lrdselvam.blogspot.com/2020/07/2028.html
"என் ஆண்டவரே, என் கடவுளே!
(அரு. 20:28)
************************************
தோமையாரைச் சந்தேகத் தோமையார் என்று அழைப்பதுண்டு.
சந்தேகத்தைப் பொறுத்தமட்டில் மற்ற அப்போஸ்தலர்களும்
தோமையாருக்குச் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல
இயேசு தனது மூன்று வருட பொது வாழ்வின்போது
தனது பாடுகளைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், உயிர்ப்பைப் பற்றியும்
அவர்களுக்குக் கூறியிருக்கிறார்..
விசுவாசத்தின் அவசியம் பற்றியும் அடிக்கடிப் பேசியிருக்கிறார்.
அவர்களது விசுவாசம் ஆழமாக இருந்திருந்தால்
இயேசுவின் பாடுகளின்போது விடாமல் அவருடன் இருந்திருப்பார்கள்.
இயேசுவைத் தலைமைக் குருவின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றபோது இராயப்பர் உடன் இருந்தார்.
ஆனால் இயேசுவை மூன்று முறை மறுதலித்தார்.
அருளப்பர் மட்டும்தான் சிலுவை அடியில் நின்றார்.
இயேசு உயிர்த்த பின்னும் சீடர்கள் யாரும் நம்பியதாகத் தெரியவில்லை.
நம்பியிருந்தால் இயேசு தங்களிடம் வருமட்டும் ஒன்றாய் செபித்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.
பெண்களுக்கு இருந்த விசுவாசம் கூட அவர்களிடம் இல்லை.
இயேசு உயிர்த்ததை அறிந்தபின்பு
கல்லறையை விட்டுத் திரும்பிவந்த பெண்கள் பதினொருவருக்கும், மற்றெல்லாருக்கும் அறிவித்தனர்.
ஆனால் "பெண்கள் கூறியது வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் அவர்கள் நம்பவில்லை."
இராயப்பரோ எழுந்து கல்லறைக்கு ஓடினார்.
இயேசு உயிர்த்துவிட்டதை நம்பியிருந்தால் ஏன் கல்லறைக்கு ஓட வேண்டும்?
அன்றே அவர்களுள் இருவர் யெருசலேமிலிருந்து ஏழு கல் தொலைவிலிருந்த எம்மாவுஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
இதிலிருந்து சீடர்களின் விசுவாசத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
சர்வ வல்லப கடவுள் ஏன் தனது சீடர்களாக இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
நன்கு படித்த, சொல்வதை முழுவதும் புரிந்து கொள்ளும் தன்மையுடைய நபர்களை சீடர்களாக ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?
அன்னை மரியாள் அவளுடைய உறவினளாகிய
எலிசபெத்தம்மாள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது
பாடிய புகழ்ச்சிக்கீதத்தில் (Magnificat)
ஆண்டவரை ஏத்திப் போற்றிப் பாடும்போது கூறிய
"தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்."
"தாழ்ந்தோரை உயர்த்தினார்."
"பசித்தோரை நலன்களால் நிரப்பினார்,"
"அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே."
என்ற வாழ்த்துக்களிலிருந்து,
நெஞ்சிலே செருக்குற்றவர்கள்,
வலியோர், செல்வர்
ஆகியோரை விட
அடிமை நிலைமையில் உள்ளவர்,
தாழ்ந்தோர், பசித்தோர்
அவருக்கு அஞ்சுவோர்
ஆகியோரே அவரது இரக்கத்தால் அதிகம் பயன் பெறுவர் என்று தெரிகிறது.
ஆகவேதான் ஒரு ஏழைக் கன்னியைத் தன் தாயாக தேர்ந்தெடுத்த இயேசு
ஏழைகளை,
படியாதவர்களை,
சொன்னததை உடனே புரிந்து கொள்ள முடியாதவர்களை,
பயந்த சுபாவம் உள்ளவர்களை, குறைகள் உள்ளவர்களைத்
தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.
துப்பாக்கியால் ஒரு சிங்கத்தைக் கொல்பவன் வீரனா?
ஒரு எலும்பைக் கொண்டு ஒரு சிங்கத்தைக் கொல்பவன் வீரனா?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
சக்தி மிக்க ஆயுதம் இல்லாமல்
சாதாரண கூழாங்கல்லைக் கொண்டு
கோலியாத்தைக் கொன்றதுதான் தாவீதுக்குப் பெருமை.
குறைகள் உள்ள சீடர்களைத் தேர்ந்தெடுத்து,
அவர்களது குறைகளைத் திருத்தி,
அவர்களைக் கொண்டு திருச்சபையை உலகம் எங்கும் பரப்பியதுதான் இயேசுவுக்கு மகிமை.
பாவிகளைப் பரிசுத்தமானவர்கள் ஆக்க வந்தவர் இயேசு.
அதனால்தான் குறைகள் உள்ளவர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களை நிறைவுள்ளவர்களாக மாற்றினார்.
தோமையார் சந்தேகப் பட்டார், உண்மைதான்.
ஆனால் சந்தேகம் நீங்கியவுடன் அவர் செய்த விசுவாச அறிக்கை
ஒரு சக்தி வாய்ந்த செபம்.
"என் ஆண்டவரே, என் கடவுளே!"
புனித தோமையார் செய்த இந்த
சக்தி வாய்ந்த செபம்
ஒவ்வொரு நாளும்
உலகம் எங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால்
திருப்பலியின் நடுப் பூசையில் எழுந்தேற்றத்தின்போது
சொல்லப் பட்டுக் கொண்டிருக்கிறது!
நற்கருணை நாதரைப் பார்க்கும் போதெல்லாம் நமது நாவில் முதலில் வருவது இந்த செபம்தான்.
நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கிறார்
(really present) என்ற விசுவாச சத்தியத்தை
நற்கருணை நாதரைப் பார்க்கும் போதெல்லாம் சொல்ல வைத்தவர் தோமையார்தான்.
தோமையார் சந்தேகப் படாதிருந்திருந்தால் இந்த செபம உருவாகி இருக்குமா?
எப்போதுமே தாழ்மையானவர்கள் உயரும்போது மிக உயரத்துக்குப்
போவார்கள்.
சந்தேகப்பட்டவரது வாயிலிருந்து மிகப் பெரிய விசுவாச அறிக்கை உணர்ச்சிகரமாக வெளி வருகிறது.
ஒரு குறைவிலிருந்து நிறைவு பிறக்கிறது!
பெந்தேகோஸ்தே திருநாள் அன்று சீடர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்த அதே நொடியில்
சீடர்களது எல்லா பலகீனங்களும் மறைந்துவிட்டன.
ஆவியானவர் அளித்த உற்சாகத்துடன், கொஞ்சங்கூட பயம் இல்லாதவர்களாய் சீடர்கள் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.
உலகெங்கும் சென்று நற்செய்தியைப் போதிக்கச் சென்றவர்கள்,
இயேசுவுக்காகத் தங்கள் உயிரையே கொடுக்கும் அளவிற்கு பயமில்லாமல் நற்செய்தியை அறிவித்தார்கள்.
உண்மையில் பரிசுத்த ஆவியானவர்தான் அவர்கள் மூலமாகப் போதித்தார்.
இன்றும் அதே பரிசுத்த ஆவிதான் திருச்சபையை வழி நடத்தி வருகிறார்.
நமது தாய் ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை.
நமது தாய் பரிசுத்தமானவள்.
ஆனால் நாம் எல்லோரும் பாவிகள்.
நாம் வாழ்வது பாவிகளின் கூடாரம், ஆனால் பரிசுத்தமான கூடாரம்.
சுத்தமான நீருள்ள குளத்தில்தானே அழுக்கானவர்கள் குளித்து, சுத்தமாவார்கள்.
எல்லோரும் குறைவுள்ளவர்கள்.
நம்மை வழி நடத்துபவர்கள் நம்மிடமிருந்து சென்றவர்கள்தான்.
ஆனால் உண்மையில் வழி நடத்துபவர் பரிசுத்த ஆவியானவர்தான்.
ஞானஸ்நானம் கொடுக்கிற குரு மனிதர், ஆனால் பாவங்களை மன்னிப்பவர் கடவுள்.
பாவசங்கீர்த்தனம் கேட்கும் குரு மனிதர், ஆனால் பாவங்களை மன்னிப்பவர் கடவுள்.
திருப்பலியை ஒப்புக்கொடுக்கும் குரு மனிதர், ஆனால் பலியாகுபவர் இயேசு.
பாப்பரசர் நம்மைப் போல மனிதர். ஆனால் நமக்கு விசுவாச சத்தியங்களைப் போதிக்கும் போது அவரைத் தவறாமல் காப்பவர் பரிசுத்த ஆவி.
நாம் கிறிஸ்துவின் ஞான சரீரம்.
தலை கிறிஸ்து. சரீரத்தை எப்படிக் காப்பது என்று தலைக்கு தெரியும்.
கிறிஸ்துவின் பிரதிநிதி பாப்பரசர்.
நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம்,
அவருக்குக் கீழ்ப்படிவதுதான்.
The safest way to salvation is obedience.
நம் ஆண்டவரும், தேவனுமாகிய
இயேசுவின் ஒளியில்,
குறைவுள்ள நாம் அனைவரும்
நிறைவை நோக்கிப் பயணிக்கிறோம்.
நம்மை வழி நடத்துபவர் பரிசுத்த ஆவியானவரே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment