"உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்:"
(எரேமி.14:22)
***********************************
"நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்."
(மத்.18:3)
குழந்தைக்கும், பெரியவர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.
பெரியவர்கள் உலகத்திற்குள் நுழைந்துவிட்டதால் பல தரப்பட்டவர்களைச் சந்திக்கிறார்கள்.
பல வித சந்தர்ப்பங்களைச் சந்திக்கின்றார்கள்.
பல வித கருத்துக்களைச் சந்திக்கின்றார்கள்.
பல வித தத்துவங்களைச் சந்திக்கின்றார்கள்.
ஆனால் யாரை, எதை நம்பி வாழ்க்கைக்குள் நுழைவது என்று தெரியாமல் தருமாடுகிறார்கள்.
ஒவ்வொரு இடமாகச் சந்தித்துத் தோல்வி அடையும்போது வாழ்க்கையில் விரக்தியும் அடைகிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற சமுதாயச் சூழ்நிலையில் யாரையும் யாரும் நம்பத் தயாரக இல்லை.
ஆகவே மக்கள் மனதில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
ஆனால்,
குழந்தையைப் பொறுத்த மட்டில் அதன் உலகமே அப்பாவும், அம்மாவும் தான்
பிறந்த நாளிலிருந்து அதன் குழந்தைப் பருவத்தைக் கடக்கும் வரை அதன் பெற்றோரை மட்டுமே நம்பியிருக்கிறது.
நம்பியிருக்கிறது மட்டுமல்ல நம்புகிறது.
இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது.
நம்பியிருக்கிறது என்றால் சார்ந்திருக்கிறது.
நம்புகிறது என்றால் கேட்டது கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
பெற்றோர் மட்டில் உள்ள அதன் நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது.
அதனால்தான் பெற்றோரால் குழந்தையைத் தங்கள் விருப்பம் போல் வளர்க்க முடிகிறது.
இறைவன் முன்னால் நாம் எல்லோரும் குழந்தைகள்தான்.
இறைவன் நமது தந்தை என்பதையும் நாம் அவரது குழந்தைகள் என்பதையும் நாம் மனமார ஏற்றுக் கொண்டால்
நம்பிக்கை இயல்பாக வந்துவிடும்.
நமது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையே
விசுவாசம் - இறைவனைத் தந்தை என்று ஏற்றுக் கொள்ளுதல்.
நம்பிக்கை - அவர் தந்தைக்குரிய பாசத்தோடு நம்மைப் பராமரித்து வழி நடத்தி, நமக்கு பேரின்ப நிலை வாழ்வைத் தருவார் என்பதில் உறுதி.
தேவ சிநேகம் - இறைவனை முழு
இருதயத்தோடு பிள்ளைக்குரிய நெருக்கத்தோடு நேசித்தல்.
இந்த மூன்று தேவ சம்பந்தமான
புண்ணியங்களும் இருந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.
ஆழமான விசுவாசம் இருந்தால் உறுதியான நம்பிக்கை தானே வரும்.
நண்பர் ஒருவரிடம் ஒரு உதவி கேட்கப் போகிறோம்.
போகும்போதே,
'உதவி செய்வாரோ, செய்ய மாட்டாரோ'
என்று சந்தேகப் பட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம்?
நட்பு நெருக்கமானது இல்லை என்று அர்த்தம்.
கடவுளிடம் ஒரு உதவி கேட்டு செபிக்கிறோம்.
நமது செபம் உறுதியாகக்
கேட்கப்படும் என்ற நம்பிக்கை வர வேண்டும் என்றால்,
1. இறைவன் நமது அன்புத் தந்தை என்ற விசுவாசம் ஆழமாக இருக்க வேண்டும்.
2. நமது மீட்பு ஒன்றுதான் அவரது ஏகக் குறிக்கோள், அவர் நமக்காக என்ன செய்தாலும் நமது மீட்புக்காகத்தான் என்பதை விசுவசிக்க வேண்டும்.
3. நமது மீட்புக்குப் பாதகமான எதையாவது நாம் நமது அறியாமையால் கேட்டால்
நமது நன்மை கருதி அதைத் தரமாட்டார், அதற்குப் பதிலாக நமது மீட்புக்குப் பயன் படக்கூடியதைத்தான் தருவார் என்ற விசுவாசமும் இருக்க வேண்டும்.
ஆழமான விசுவாசத்தோடு நாம் கடவுளிடம் எதைக் கேட்டாலும்,
அது நமக்குப் பயன் தருமானால் உறுதியாகத் தருவார் என்று நம்ப வேண்டும்.
"நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும்." என்ற ஒரு பாடல் வரி உண்டு.
நம்பிக்கையோடு நாம் செபித்தால் நமக்கு என்ன நடந்தாலும் அது நன்மைக்காத்தான் - என்பது இவ்வரியின் பொருள்.
கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.
நமது நன்மைக்காகத்தான் அவர் நம்மைப் படைத்தார்.
நமக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும்.
ஆகவே நமக்கு நலன் தருவதை மட்டும்தான் நமக்குத் தருவார்.
நமது அறிவு அளவு உள்ளது.
நாம் விரும்புவது நமக்கு நன்மை தருமா அல்லது தீமையில் முடியுமா என்று நமக்கே தெரியாது.
ஆனால் கடவுளுக்குத் தெரியும்.
அவர் நம் மீது உண்மையான அன்புடைய நல்ல தந்தை.
ஆகவே நாம் விரும்புவது
நமக்கு நன்மை தருவதாக இருந்தால் மட்டுமே தருவார்.
நமது பையன் நம்மிடம் வந்து,
"விளையாட ஒரு பாம்புப் பிடித்துத் தாருங்கள்"
என்று கேட்டால் கொடுப்போமா?
அளவுள்ள அறிவுள்ள நாமே நமது மகன் கேடு செய்வதைக் கேட்டால் கொடுக்க மறுக்கிறோமே,
அளவில்லா ஞானமும், நம்மீது அளவில்லா அன்பும் கொண்ட கடவுள் நமக்குக் கேடு விளைவிப் பதைக் கேட்டால் தருவாரா?
அநேக சமயங்களில் இதை உணர்ந்து கொள்வதில்லை.
நாம் சொல்வது:
ஆண்டவரே, உம்மை விசுவசிக்கிறோம்.
உம்மை நம்புகிறோம்.
உம்மை நேசிக்கிறோம்.
நாங்கள் கேட்பதைத் தாரும்.
இதிலே வேடிக்கை என்னவென்றால்
நாம் கடவுளை நேசிப்பதும், நம்புவதும், நேசிப்பதும்
அவர் நாம் கேட்பதைத் தருவதற்காகத்தான்.
இதை நாம் வெளிப்படையாகச் சொல்வதில்லை.
ஆனால் நடைமுறையில் அதைக் காட்டுகிறோம்.
எப்படி?
வேலைக்கு விண்ணப்பித்து விட்டு, அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
நேர்ச்சை எல்லாம் வைக்கிறோம்.
ஆனால் நமக்கு வேலை கிடைக்கவில்லை.
அவ்வளவுதான், நமது நம்பிக்கை தளர ஆரம்பிக்கிறது.
நமது சிந்தனை, சொல் , செயலில் தளர்வு பிரதிபலிக்கிறது.
சில சமயங்களில் கட்சி மாறிவிடுகிறோம்.
எப்படி?
திருச்சபையைச் சேராத ஒருவர் கையில் பைபிளை வைத்துக் கொண்டு கூட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பார்.
"அவரிடம் போனால் கேட்டது கிடைக்கும்" என்று யாராவது காதில் ஊதுவார்கள்.
உடனே அங்கே ஓடிவிடுவோம்.
அங்கேயும் கிடைக்காவிட்டால் அடுத்த போதகரிடம்.
இப்படியே ஓடிக் கொண்டிருப்போம்.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
நாம் கிறிஸ்தவர் என்ற பெயரில் வாழ்ந்தாலும்,
நமது வாழ்வில் கிறிஸ்து மையமாக இருப்பதில்லை. நம்மையே மையமாக வைத்து வாழ்கிறோம்.
கிறிஸ்து நாம் கேட்பதைத் தருவதற்காக.
ஆனால் கிறிஸ்தவ வாழ்வில் மையமாக இருக்க வேண்டியது கிறிஸ்து.
கிறிஸ்து நமக்காகத் தன்னையே பலியாக்கினார்.
நாம் கிறிஸ்துவுக்காக பலியாக வேண்டும்.
"இதோ ஆண்டவருடைய அடிமை."
நம் விண்ணகத் தாயின் இந்த வார்த்தைகள் நம் வாழ்வாக வேண்டும்.
Total Surrender!
முழுமையான அர்ப்பணிப்பு.
அர்ப்பண உணர்வோடு விசுவசிக்க வேண்டும்.
அர்ப்பண உணர்வோடு நம்ப வேண்டும்.
அர்ப்பண உணர்வோடு நேசிக்க வேண்டும்.
"கேளுங்கள்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
ஆகவே ஆசைப்படுவதைக் கேட்கலாம்.
கேட்டது கிடைக்கும் என்று நம்ப வேண்டும்.
எப்படி நம்ப வேண்டும்?
"ஆண்டவரே, எனது விண்ணப்பத்தை உம்மிடம் ஒப்படைத்து விட்டேன்.
நான் கேட்பது நான் ஆசைப்படுவது தான்.
ஆனால் அது எனக்கு நன்மை தரக்கூடியதா என்று எனக்குத் தெரியாது.
உமக்குத் தெரியும்.
நான் கேட்பதை எனது ஆன்மீக வாழ்வுக்கு நன்மை தரக்கூடிய விதமாகத் தருவீர் என உறுதியாக நம்புகிறேன்.
என் நம்பிக்கையையும் உமக்கே அர்ப்பணித்து விட்டேன்.
உமது சித்தம் போல் எனக்கு ஆகட்டும்."
நாம் கேட்காமலேயே நமக்கு என்ன வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.
நமக்கு நன்மை பயக்கக்கூடியதைத் தருவார் என உறுதியாக நம்புவோம்.
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்."
என்பதுதான் நமது செபமாக இருக்க வேண்டும்.
நமது செபம் உறுதியாகக் கேட்கப்படும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment