"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத். 28:20)
************************************
மனிதராய்ப் பிறந்த எல்லோருக்கும் உள்ள முக்கிய திறமைகள்: சிந்தனை, சொல், செயல்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி.
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று திறமைகளையும் தனி மனிதனாக, தனக்குத் தானே யாராலும் பயன்படுத்த முடியாது.
இறைவன் அன்பு, இரக்கம், சுதந்திரம் போன்ற தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டது போலவே,
தனது பகிர்ந்தளிக்கும் பண்பையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
பகிர்வு என்பது சமூகத்தில்தான் முடியும்.
நாம் சிந்திக்கும் எண்ணங்களை நமக்கு வேண்டியவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
சமூகம் இல்லாமல் நமக்கு செயல்களும் இல்லை.
இறைவன் நம்மை சமூகமாகப் படைத்ததே அன்பைப் பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.
சமூகம் சுமூகமாக இயங்க அதற்கென்று சில ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
கருத்துக்களைப் பரிமாறி கொள்வதானாலும்
பொருட்களைப் பரிமாறி கொள்வதானாலும் சில ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மீறினால் சமூகம் சுமூகமாக இயங்காது.
சமூகத்தில் அதிகாரப்பூர்வமான அமைப்பு ஒன்றும், சாதாரண அமைப்பு ஒன்றும் இருக்கின்றன.
நாட்டை எடுத்துக்கொண்டால் அரசாங்கம் அதிகாரபூர்வமான அமைப்பு.
மக்கள் சாதாரணமான அமைப்பு.
அந்தந்த அமைப்பிலுள்ளோர் அவரவர் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்.
ஒருவர் கடமைகளை மற்றவர் செய்தால் நாட்டில் குழப்பம் ஏற்படும்.
வரி வசூலிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
அரசுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி சாதாரண குடிமகன் வரி வசூலில் இறங்கலாமா?
மருத்துவ துறையின் சான்றிதழ் பெற்ற டாக்டர் பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்கலாம்.
மருத்துவ கல்லூரியில் படிக்காத ஒருவர்,
"எனக்கு நோயும் தெரியும், மருந்தும் தெரியும், ஊசி போடவும் தெரியும் என்று கூறி மருத்துவமனை நடத்தலாமா?
எனக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும். எனக்கு தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுத வாசிக்க சொல்லிக் கொடுப்பதில் தவறு இல்லை.
எனக்கு எழுத வாசிக்க தெரியும் என்பதற்காக அரசின் அனுமதி இன்றி பள்ளிக்கூடம் நடத்தலாமா?
ஒருவர் தனக்குச் சட்டம் தெரியும் என்பதற்காக தானே வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லலாமா?
உலகியல் வழக்கில் உள்ள இந்த விதி முறைகள் ஆன்மீக அமைப்புகளுக்கும் பொருந்தும்.
இயேசு விண்ணகம் எய்து முன் சீடர்களை நோக்கி,
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்." என்றார்.
அப்போஸ்தலர்கள் இயேசு ஏற்படுத்திய திருச்சபையின் அதிகாரப்பூர்வமான நற்செய்தி போதகர்கள்.
அவர்கள் காலத்திற்குப் பிறகு
அவர்களால் அதிகாரப்பூர்வமாக
நியமிக்கப்பட்ட ஆயர்கள்,
அவர்களால் அதிகாரப்பூர்வமாக
நியமிக்கப்பட்ட குருக்கள் ஆகியோர்
இராயப்பரின் வாரிசான பாப்பரசரின் கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வமான நற்செய்தி போதகர்கள்.
திருச்சபையின் ஆளுமை சம்மந்தப்பட்ட சட்டங்களை இயற்றவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும்
அவர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு.
நான்கு நற்செய்தியாளர்களும்,
திருமடல் எழுதியவர்களும் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.
பழைய ஏற்பாட்டு நூல்களையும் கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக் கொண்டது.
ஆகவே பைபிளுக்கு அதிகாரப்பூர்வமான விளக்கம் கொடுக்க கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
அப்போஸ்தலர்களின் அதிகாரப் பூர்வமான வாரிசுகளுக்குதான்
அதிகாரப் பூர்வமாக நற்செய்தியைப் போதிக்க அதிகாரம் உண்டு என்றால்,
விசுவாசிகளுக்கு (Laity) நற்செய்தியை அறிவிக்கக் கடமை இல்லையா?
விசுவாசிகளுக்கும் (Laity) நற்செய்தியை அறிவிக்கக் கடமை உண்டு.
கத்தோலிக்கத் திருச்சபையினுள் உள்ள இரண்டு அமைப்புகள்:
பணிக்குருத்துவம்.
பொதுக் குருத்துவம்.
இரண்டு அமைப்பினருமே கிறிஸ்துவின் குருத்துவத்தில்
பங்கு பெறுகிறார்கள்.
பணிக்குருத்துவத்தினர் கிறிஸ்துவின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகள்.
அவர்களுக்கு மட்டும்தான் நற்செய்தியைப் போதிக்கும் அதிகாரம் இருக்கிறது.
அவர்கள்தான் அதிகாரப்பூர்வமான போதகர்கள். (Preachers)
And he said to them: “Go forth to the whole world and preach the Gospel to every creature.
"ஏனெனில், அவர் மறைநூல் அறிஞர்போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்." (மத். 7:29 )
அந்த போதிக்கும் அதிகாரத்தைத் தான் இயேசு அப்போஸ்தலர்களுக்கு வழங்கினார்.
குருவானவர் திருப்பலியின் பிரசங்க நேரத்தில் நற்செய்தியை போதிக்கிறார்.
பொதுக்குருத்துவத்தினர், அதாவது, விசுவாசிகள் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும்.
ஆனால் கோவிலில் பிரசங்க மேடை (pulpit) மேல் ஏறி போதிக்க அதிகாரம் இல்லை.
இயேசுவால் நேரடியாக நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களுடைய வாரிசுகள் மட்டும் தான் அதிகாரத்தோடு போதிக்கலாம்.
அப்படிப் போதிப்பவர்கள் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனையைத்தான் போதிக்க வேண்டும்.
திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனைக்கு மாறாக போதித்தால் அது போதகம் அல்ல, பேதகம்.
தற்காலத்தில் ஆயிரக்கணக்கானோர்,
இராயப்பரின் தலைமையை ஏற்காதவர்கள்,
அப்போஸ்தலர்களின்
நேரடி வாரிசுகளாகவும் இல்லாதவர்கள்,
போதனா அதிகாரமே
இல்லாதவர்கள்
ஆளுக்கொரு பைபிளை மட்டும் எடுத்துக் கொண்டு போதித்துக் கொண்டு திரிவதைப் பார்க்கிறோம்.
இவர்கள் போதிக்கும் அதிகாரத்தைத் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்டார்கள்.
இதில் மிகவும் கவலைக்குரிய விசயம்,
கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசிகள் கூட கூட்டங்கூட்டமாக அவர்கள் பின்னே போவதுதான்!
நம்மவர்களில் அநேகர் 'சுகமளிக்கும் கூட்டங்கள்' என்ற பெயரில் யார் கூட்டம் போட்டாலும் போய்விடுவார்கள்.
நமது கோவிலுக்கும் வருவார்கள்.
அவர்களுக்குப் புத்திமதி சொல்லப்போனால்.
"நம்மிடமும் பைபிள் இருக்கிறது,
அவர்களிடமும் பைபிள் இருக்கிறது,
நாமும் இயேசுவைப் பின்பற்றுகிறோம்,
அவர்களும் இயேசுவைத்தான்
.பின்பற்றுகிறார்கள்"
என்று கூறி நமது வாயை அடைப்பார்கள்.
கடவுள் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
நமது திருச்சபையின் பொதுக்குருத்துவத்தினருக்கும்
நற்செய்தியை மற்றவர்கட்கு அறிவிக்க கடமை உண்டு.
(போதிக்க அல்ல)
திருச்சபையின் போதனையிலிருந்து கற்றவற்றை நாம் கடைப்பிடிப்பதோடு,
மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்
நமது அறிவித்தல் திருச்சபையின் போதனைக்கு மாறாக இருந்து விடக்கூடாது.
நற்செய்தியின்படியிலான நமது வாழ்வே ஒரு நற்செய்தி அறிவிப்பாக இருக்க வேண்டும்.
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன் பைபிள் கையினாலேயே எழுதப்பட்டதால் எண்ணிக்கை குறைவு.
ஆகவே கோவிலில் மட்டும் ஒரு பைபிள் இருக்கும். பங்குக் குரு அதை வாசித்து, மக்களுக்குப் போதிப்பார்.
மக்கள் போதனைப் படி வாழ்ந்தனர்.
ஆனால் இப்பொழுது ஆளுக்கொரு பைபிள் இருக்கிறது.
பைபிள் இறைவனின் வார்த்தை. அது எல்லோரிடமும் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்.
தினமும் பைபிள் வாசிக்கும் பழக்கம் மக்களிடையே இருக்கிறது.
அதுவும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்தான்.
கவலைக்குரிய விசயம், பைபிளுக்கும் நம் வாழ்வுக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதுதான்.
அதைவிட கவலைக்குரிய விசயம் பைபிள் வசனங்களுக்கு அவரவர் இஸ்டப்படி விளக்கம் கொடுத்துக் கொள்வது.
உதாரணத்துக்கு:
"ஏனெனில், திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே
மனிதன் விசுவாசத்தினாலே
இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்படுகின்றான் என்பது என் கருத்து."
(உரோமை, 3:28)
என்ற வசனத்தை வாசித்துவிட்டு
"மீட்பு பெற விசுவாசம் மட்டும் போதும், நற்செயல்கள் தேவை இல்லை" என்று தாய் வீட்டை விட்டு விட்டு தனிக்குடித்தனம் சென்றோர் கூறுகின்றார்கள்.
ஆனால் அந்த வசனத்தை எழுதிய அதே சின்னப்பர் தான்
"அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.
7 நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு முடிவில்லாத வாழ்வை வழங்குவார்."
(உரோமை, 2:6.7)
என்றும் எழுதியுள்ளார்.
இறைவன் யாருக்கு
முடிவில்லாத வாழ்வை வழங்குவார்.?
"நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு."
இரண்டாவது அதிகாரம், 6, 7 வசனங்களில் நற்செயல் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் சின்னப்பர், 3:28ல் அதை மறுப்பாரா?
இறைவார்த்தை ஒன்றுக் கொன்று முரண்படுமா?
அப்படியானால்
"திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே"
என்பதன் விளக்கம் என்ன?
சின்னப்பர் குறிப்பிடுவது பழைய ஏற்பாட்டின் திருச்சட்டம்.
"திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும்." (3:19)
சின்னப்பர் புறஜாதியாரின் (gentiles) அப்போஸ்தலர்.
யூதர்களுடைய திருச்சட்டம் விருத்த சேதனத்தை வலியுறுத்துகிறது.
புறஜாதியினர் யூதர்களுடைய திருச்சட்டப் படியிலான விருத்த சேதனத்தை செய்யத் தேவை இல்லை என்பது சின்னப்பருடைய கருத்து.
யூதர்களுடைய திருச்சட்டம் யூதர் அல்லாதோரை எப்படிக் கட்டுப்படுத்தும்?
ஆகவேதான்
திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும்.
திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே
மீட்பு அடையலாம் என்று சின்னப்பர் சொல்கிறார்.
மீட்பு பெறத் தேவையானது
கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம், அவர் வலியுறுத்தும் நற்செயல்கள்.
( மத். 25:34-45 வாசித்தால் இது புரியும்)
பைபிள் வசனங்களுக்கு இஸ்டம் போல் பொருள் கொடுப்பதால்தான்
இன்று 48,000 பிரிவினை சபைகள் தோன்றியிருக்கின்றன!
நாம் கத்தோலிக்கர்.
கத்தோலிக்க திருச்சபையின் போதனைக்கு உட்பட்டு,
நற்செய்தியை வாழ்வோம்,
மற்றவர்களுக்கும் அறிவிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment