Sunday, July 5, 2020

"புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ்சித்தைகளில் ஊற்றி வைப்பதில்லை. வைத்தால் சித்தைகள் வெடிக்கும்: இரசம் சிந்திப்போகும்: சித்தைகளும் பாழாகும். ஆனால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் கெடாமலிருக்கும்" என்றார்.(மத்.9:17)



"புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ்சித்தைகளில் ஊற்றி வைப்பதில்லை. வைத்தால் சித்தைகள் வெடிக்கும்: இரசம் சிந்திப்போகும்: சித்தைகளும் பாழாகும். ஆனால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் கெடாமலிருக்கும்" என்றார்.

(மத்.9:17)

-------------------------------------------------------


பழைய ஏற்பாடு காலத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களை இரட்சகரின் வருகைக்காகத் தயாரிக்கிறார்.


கடவுள் முதலில் அபிரகாமோடும் (ஆதி. 15:18)


பிறகு மோயீசன் வழியாக இஸ்ரயேல் மக்களோடும்,  உடன்படிக்கை செய்து கொண்டார்.


மோயீசன்  "உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்க வாசித்தார், அவர்கள்: ஆண்டவர் சொன்னபடியெல்லாம் செய்வோம் என்றார்கள்."

(யாத். 24:7)


இந்த உடன்படிக்கையில் பத்துக் கட்டளைகளும், அவர்களது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய மற்ற விதிமுறைகளும் குறிக்கப்பட்டிருந்தன.


இரட்சகரின் வருகைக்கைக்காகத் தயாரிப்பதே பழைய உடன்படிக்கையின் நோக்கம்.


பழைய, புதிய இரண்டு ஏற்பாடுகளின் ஆசிரியரும் (author) ஒரே பரிசுத்த ஆவிதான்.


  ஒருவகையில் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் அடங்கி இருக்கிறது.


பழைய ஏற்பாடு இயேசுவின் வருகைக்காகத் தயாரிக்கிறது.


புதிய ஏற்பாட்டில் இயேசு பிறக்கிறார்.


பழைய ஏற்பாட்டில் மக்கள் இயேசுவின் வருகையை எதிர்பார்த்தார்கள்.


புதிய ஏற்பாட்டில் மக்கள் இயேசுவோடு வாழ்ந்தார்கள்.


பழைய உடன்படிக்கையை வாசித்துவிட்டு


"மோயீசன் பாத்திரத்தில் வார்த்து வைத்திருந்த (பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின்) இரத்தத்தை மக்களின் மேல் தெளித்து:


இந்த எல்லா வார்த்தைகளின் படியும் ஆண்டவர் உங்களுடன் செய்தருளிய உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று " கூறினார்.


புதிய உடன்படிக்கையை இயேசு

தன் இரத்தத்தால் முத்திரை இட்டார்:


"அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என்  புதிய உடன்படிக்கை.

(லூக். 22.20)


பழைய உடன்படிக்கையில் கூறப்பட்டவை


யாத்திராகமம் 20, 21,22, 23 அதிகாரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.


புதிய உடன்படிக்கை மிகச்சுருக்கமாய் இருக்கும்:


The New Covenant is the covenant in the blood of Jesus, the once-for-all sacrifice by which we are forgiven and by which we are redeemed.


"இயேசு கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, அவர்களுக்கு அளித்து, "இதிலே அனைவரும் பருகுங்கள்.


ஏனெனில், உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது: பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்."

(மத். 26:27, 28)


என்று சொல்லி கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே புதிய உடன்படிக்கையாக நற்கருணையை ஏற்படுத்தினார்.     


இயேசுவுக்கும், நமக்கும் ஏற்பட்ட புதிய உடன்படிக்கையை இயேசு தனது இரத்தத்தால் முத்திரை இடுகிறார்.


உடன்படிக்கை என்பது இரண்டு


பகுதியினருக்கு இடையே (between two parties) ஏற்படுவது.


புதிய உடன்படிக்கையில் ஒரு பக்கத்தில் இயேசு, மறு பக்கத்தில் நாம்.


இரு பக்கத்தினருக்கும் பொறுப்புகள்  உண்டு.


ஒரு பக்கத்தினர் பொறுப்புகளைச் செய்யாவிட்டால்


மறுபக்கத்தினர் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.


இரண்டு நாடுகள் பொருளாதார உடன்படிக்கை செய்திருந்தால்


ஒரு நாடு உடன்படிக்கையை மீறினால் அடுத்த நாடு உடன்படிக்கையை கை கழுவி விடும்.


'"பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்."


"இயேசு நமது மீட்பிற்காக, அதாவது பாவமன்னிப்பிற்காக இரத்தம் சிந்தி பாடுபட்டு, தன்னையே பலியாக ஒப்புக் கொடுப்பது."


இது இயேசுவின் பொறுப்பு.


நமது பொறுப்பு,  இயேசு தந்திருக்கும் புதிய கட்டளைப்படி நடப்பது.


"நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.


35 நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால்தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."

(அரு. 13:34,35)


இயேசு தன் பங்குக்கு பாவப் பரிகாரம் செய்துவிட்டார்.


நம் பங்குக்கு நாம் புதிய கட்டளைப்படி அன்பு செய்ய வேண்டும்.


பழைய, புதிய இரண்டு உடன்படிக்கைகளும் இறைவனால் தான் செய்யப்பட்டன.


ஆகவே உடன்படிக்கைகளில் குறை காண முடியாது.


பழைய உடன்படிக்கையை எதிர்காலத்தில் மாற்றப் போவதாக


இறைவன் எரேமியா தீர்க்கத் தரிசி  மூலமாக பழைய ஏற்பாட்டு காலத்திலேயே அறிவித்துவிட்டார்.


"இதோ, நாட்கள் வருகின்றன: அப்போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை செய்வோம், என்கிறார் ஆண்டவர்:


.........நாம் அவர்களின் தலைவராய் இருந்தும் நம் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

(எரேமி. 31:31, 32)


பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கையை  இஸ்ரயேலர்கள் சரியாக அனுசரிக்க வில்லை என்பதற்கு


பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் வல்லுனரும் ஆதாரம்.


இவர்கள் சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்,


அதன் நோக்கத்தைப் பற்றி கவலைப்படவில்லை.


They gave importance to the letter of the law, not to its spirit.


புதிய உடன்படிக்கையில் இயேசு கொடுத்திருப்பது அன்பின் கட்டளை,


ஆகவே புதிய ஏற்பாட்டின் மக்கள் கட்டளையை கட்டளைக்காக அல்ல,


அது வலியுறுத்தும் அன்பிற்காகவே நிறைவேற்ற வேண்டும்.


அதனால்தான் ஆண்டவர்,


"புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ்சித்தைகளில் ஊற்றி வைப்பதில்லை.


வைத்தால் சித்தைகள் வெடிக்கும்: இரசம் சிந்திப்போகும்: சித்தைகளும் பாழாகும்.


ஆனால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் கெடாமலிருக்கும்" என்றார்.

(மத்.9:17)


அதாவது புதிய உடன்படிக்கை யின் அன்பின் கட்டளையை


வழைய உடன்படிக்கையின் கட்டளைகளை அனுசரித்தது போல் அனுசரிக்கக் கூடாது.


உதாரணத்திற்கு,


ஒரு நாள் இயேசு செபக்கூடத்திற்கு வந்த போது,


"அங்கே சூம்பின கையன் ஒருவன் இருந்தான். அவர்மேல் குற்றம் சாட்டும்படி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா?" என்று   பரிசேயர் கேட்டனர்.


   அதற்கு அவர், "தனக்கு இருக்கும் ஒரே ஓர் ஆடும் ஓய்வுநாளில் குழியில் விழுந்துவிட்டால் உங்களில் எவனாவது அதைத் தூக்கிவிடாமல் இருப்பானா ?


12 ஆட்டைக்காட்டிலும் மனிதன் எவ்வளவோ மேலானவன்! ஆதலால், ஓய்வுநாளில் நன்மை செய்வது முறையே" . ஆயிற்று."

(மத்.12:10-13)


பரிசேயர்கள் பழைய சட்டத்தைச் சுட்டிக் காட்டி ஓய்வுநாளில்  குணமாக்குவது குற்றம் என்கிறார்கள்.


இயேசு பிறரன்பைச் சுட்டிக்காட்டி

ஓய்வுநாளாக இருந்தாலும் அயலானுக்கு உதவுவது குற்றம் அல்ல என்கிறார்.


உண்மையில் ஓய்வு நாள் தரப்பட்டிருக்கிறதே இறைவனை வழிபடவும், பிறருக்கு உதவி செய்யவும்தான்.


ஞாயிறு திருப்பலி முடிந்த பின்


மட்டன் சாப்பாடு சாப்பிடுவது முக்கியமில்ல,


பிறர் பணியில் ஈடுபடுவது தான் முக்கியம்.


பரிசேயர் ஓய்வு நாளில்

கதிர்களைக் கொய்து தின்பது கூட  தவறு என்கிறார்கள்.


ஆனால் இயேசு அதை மறுக்கிறார்.


புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழும் நாம்,


பழைய உடன்படிக்கையில் வாழ்ந்த மக்களின்  மனப்பக்குவத்தோடு கட்டளைகளை அனுசரிக்கக் கூடாது.


நமது மனப்பக்குவம் இயேசுவின் அன்பின் மனப்பக்குவம் ஆக இருக்க வேண்டும்.


ஓய்வுநாளில் திருப்பலி காண வேண்டும் என்பது  சட்டம்.


நாம்  சட்டம் என்பதற்காக அல்ல,


இறைவனுக்கு அன்பின் பலியை செலுத்த வேண்டும் என்பதற்காகவே


திருப்பலிக்குச் செல்ல வேண்டும்.


மற்ற நாட்களில்  சட்டம் இல்லாவிட்டாலும்கூட


நாம் அன்பின் காரணமாக திருப்பலிக்குச் செல்ல வேண்டும்.


சட்டத்திற்குப்  பணிந்து திருப்பலிக்குச் சென்றால்


அது பழைய உடன்படிக்கையை அனுசரித்த மக்களின் மனப்பக்குவம். (பழஞ்சித்தையில் ஊற்றப்படும் இரசம்)


இறை அன்பினால் உந்தப்பட்டு 

திருப்பலிக்குச் சென்றால் அது புதிய உடன்படிக்கையின் மனப்பக்குவம். (புதுச் சித்தையில் ஊற்றப்படும் இரசம்)


தபசு காலத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்ற சட்டத்திற்காக நோன்பிருந்தால் அது பழஞ்சித்தையில் ஊற்றப்படும் இரசம்.


இயேசுவின் பாடுகள் நம்மில் தோற்றுவிக்கும் அன்பினால் உந்தப் பட்டு, பாடுகளுக்குக் காரணமான நமது பாவங்களுக்குப் பரிகாரமாக


நோன்பிருந்தால் அது புதுச்சித்தையில் ஊற்றப்படும் இரசம்.


அருளப்பருடைய சீடர்கள் அவரிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.


இயேசு அவர்களிடம்


"மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்."

என்றார்.


பரிசேயரின் நோன்பு பழைய உடன்படிக்கைப் படியான நோன்பு. சட்டப்படியானது


இயேசுவின் சீடர்கள் இருக்கப்போகும் நோன்பு


புதிய உடன்படிக்கையின் நோன்பு. இயேசுவின் அன்பினால் ஆனது.


ஆகவே,


நாம் தாய்த் திருச்சபையின் சட்டங்களை அனுசரிப்போம்,


இறைவனுக்குப் பயந்து அல்ல,


இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்பினால்.


இயேசு நீதியின் சட்டப்படி மட்டும் இயங்கியிருந்தால்


மனுக்குலம் ஆதாம், ஏவாளோடு முடிந்திருக்கும்.


அன்பின்படி இயங்கியதால்தான் நமக்காகத் தன்னையே பலியாக்கி, நம்மை மீட்டார்.


நாம் இறையன்பினால் இயங்குவோம்.


இறைவனோடு இணைவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment