Tuesday, July 21, 2020

ஆண்டவரிடம் ஒரு கேள்வி.(தொடர்ச்சி)

ஆண்டவரிடம் ஒரு கேள்வி.
(தொடர்ச்சி)
************************************

எனது தேவசுபாவத்தில் பாவப் பரிகாரமாக துன்பப்பட முடியாது.

ஆகவேதான் மனிதனாய்ப் பிறந்தேன்.

அதாவது, உனது பாவத்திற்குப் பரிகாரமாகத்  துன்பப்படுவதற்காகவே
மனுவுரு எடுத்தேன்.

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பிறப்பு முதல் இறப்புவரை கஸ்டமான வாழ்க்கையே வாழ்ந்தேன்.

எனக்குத் தாயாக வசதியுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க என்னால் முடிவும்.

ஆனால், ஒரு ஏழைக் கன்னியிடமிருந்துதான் பிறந்தேன்.

என்னை வளர்ப்பதற்கு ஒரு ஏழைத் தச்சனைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்த பிரபஞ்சமே எனது படைப்பு.  ஆனால் பிறக்கச்  சத்திரத்தில் கூட இடம் கிடைக்காமல், மாட்டுத் தொழுவில் பிறந்தேன். 

மாட்டுச் சாண வாசனையில்,

தீவனத் தொட்டியில்,

மார்கழிக் குளிரில் என் உடல் நடுங்கப் படுத்திருந்தேன்.

ஏரோது மன்னன் என்னைக் கொலை செய்யத் தேடினான்.

'உண்டாகுக' என்ற ஒரே வார்த்தையால் உலகைப் படைத்தவன் நான்.

'அழிக' என்று நினைத்தாலே ஏரோது அழிந்திருப்பான்.

ஆனால் அதைச் செய்யவில்லை.

எகிப்துக்கு ஓடினேன், என்னைப் பெற்ற தாயையும் வளர்த்த தகப்பனையும் கஸ்டப்படுத்திக் கொண்டு.

நசரேத்துக்குத் திரும்பிய பின், பெற்றதாய்க்கும், வளர்த்த தகப்பனுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன்.

உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் உணவளிக்கும் நான்,

30 வயது வரை தச்சுத் தொழில் செய்துதான் பிழைத்தேன்.

3 ஆண்டு பொது வாழ்வில் சென்றவிடமெல்லாம் நன்மைகளே செய்தேன்.

ஏழைகளோடு வாழ்க்தேன்,

என்னை, ''இதோ! போசனப் பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் " என்று சொன்னார்கள். .

என்னைக் கொல்லவே வழிதேடினார்கள்.

தேவனாகிய என்னையே தேவ தூஷணம் சொல்வதாகக் கூறினார்கள்.

குறித்த காலம் வந்தவுடன் என்னால் படைக்கப் பட்டவர்களே என்னைக் கைது செய்து கொண்டு போனார்கள்.

குற்றவாளியை விசாரிப்பதைப் போல் கடவுளாகிய என்னையே விசாரித்தார்கள்.

கற்றூணில் கட்டி வைத்து  அடித்தார்கள்.

முள்ளால் முடி பின்னி என் தலையில் வைத்து அடித்தார்கள்.

முடியின் முட்கள் மண்டை ஓட்டில் துளை இட்டு, மூளை வரை இறங்கியதால் தலையிலிருந்து இரத்தம் அருவி போல் கொட்டியது.

எவ்வளவு வேதனை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்!

என் மேல் காரித் துப்பினார்கள். செருப்புக் காலால் என்னை உதைத்தார்கள்.

மிகப் பாரமான சிலுவையை என் மேல் சுமத்தினார்கள்.

சுமக்க முடியாமல் சுமந்து,

நடக்க முடியாமல் நடந்தேன், நடந்த இடமெல்லாம் இரத்தத்தைச் சிந்திக்கொண்டு.

சுமக்க முடியாமல் மூன்று முறை கீழே விழுந்தேன்.

மாட்டைச் சாட்டையால் அடித்து எழுப்புவதுபோல் என்னை காலால் உதைத்து எழுப்பினார்கள்.

கல்வாரி மலைக்குச் சென்றவுடன் நான் சுமந்து சென்ற சிலுவையிலேயே என்னை ஆணிகளால் அறைந்தார்கள்.

ஆணிகள் எனது கைகளையும், பாதங்களையும் துழைத்து, சிலுவை மரத்தையும் துழைக்கும் வரை அறைந்தார்கள்.

அப்போது நான் பட்ட வேதனையை விபரிக்க வார்த்தைகளே கிடையாது.

ஆணிகள் அந்தப் பக்கம் சென்றவுடன் சிலுவையை மாற்றிப் போட்டு ஆணிகள் வளையும் வரை அடித்தார்கள்.

குப்புறக் கிடந்த என் மேல் பாரச் சிலுவை அழுத்தியது.

என் உடல் வேதனையால் துடித்தது.

பின் சிலுவையை இரண்டு கள்வர்களின் சிலுவைகளுக்கு நடுவே நட்டார்கள்.

கடவுளாகிய நான்  திருடர்களோடு சிலுவையில் தொங்கினேன்.

தாங்கமுடியாத வேதனை மட்டுமல்ல , அவமானம்!

என் உயிரைத் தந்தையிடம் ஒப்படைக்கும் வரை வேதனை, அவமானம்!

மனித குல மீட்பிற்காக இரத்தம் எல்லாம் சிந்தியாயிற்று.

நான் இறந்த பின்னும் மிச்சமிருந்த ஒன்றிரண்டு துளி இரத்தத்தையும் என் விலாவில் ஈட்டிகொண்டு குத்தி வெளியேற்றி விட்டார்கள்.

எல்லா வேதனைகளையும்
பொறுத்துக் கொண்டேன்.

யாருக்காக?

உனக்காக. மனித குலத்திற்காக.

எதற்காக?

மனிதன் செய்த பாவங்களுக்காக!

துன்பப்படவே முடியாத நான் துன்பப்படுவதற்காகவே மனிதனாய்ப் பிறந்தேன்.

சாகவே முடியாத நான் சாவதற்காகவே மனிதனாய்ப் பிறந்தேன்.

துன்பத்தையும், சாவையும் எதற்காக நான்  தேர்ந்தெடுத்தேன்?

உன்மேல், மனுக்குலத்தின் மேல், கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாக மட்டும்தான்.

உன்னை நேசித்தேன், ஆகவே துன்பத்தை நானே  ஏற்றுக் கொண்டேன்.

நீ எனது சீடன்.

நீ கேட்கிறாய்,

"உம்மை நேசிக்கும் எங்களுக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறீர்?"
என்று!

மனிதர்களை  நேசித்த ஒரே காரணத்திற்காக வேதனைகளை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட என்னைப் பார்த்து கேட்கிறாய்

"உம்மை நேசிக்கும் எங்களுக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறீர்?"
என்று!

நீ செய்த பாவத்திற்காக நான் பரிகாரம் செய்ய துன்பங்களை அனுபவித்தேன்,

நீ செய்த பாவத்திற்காக நீ பரிகாரம் செய்ய நீ துன்பங்களை அனுபவிக்கக்கூடாதா?"

"மன்னியுங்கள், ஆண்டவரே, யோசிக்காமல் கேட்ட  கேள்விக்காக மன்னியுங்கள்.

உலகக் கண்ணோடு பார்க்காமல், விசுவாசக்  கண்ணோடு பார்த்திருந்தால்

துன்பங்களைப் பற்றிய உண்மையைப் புரிந்து கொண்டிருந்திருப்பேன்.

ஆண்டவரே, உலகம் சிலுவையை குற்றவாளிகளின் தண்டனைச் சின்னமாகப் பார்த்தது.

ஆண்டவரே, நீர் அதைப் பாவிகளின் மீட்புச் சின்னமாக மாற்றி விட்டீர்.

பாவத்தின் விளைவாகிய துன்பத்தை பாவப் பரிகாரமாக மாற்றிவிட்டீர்.

பாவப் பரிகாரம் மன்னிப்பைப் பெற்றுத்தரும்,

மன்னிப்பு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும்.

ஆகவே துன்பங்களை விண்ணக வாழ்விற்கான வழியாக மாற்றி விட்டீர்.

நன்றி. ஆண்டவரே, நன்றி."

"இப்போ என் கேள்விக்குப் பதில் சொல்.

உலகோர்  பேரிடராக நினைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"ஆண்டவரே, மனதில் பட்டதைச் சொல்லவா?"

"உன் அடிமனம் வரை அறிந்தவர் நான்.  சொல்லு."

"நீர் அனுப்பியுள்ள இந்தத் துன்பம்

கெட்டுக் கொண்டிருக்கும் உலகைத்

திருத்துவதற்காக நீர் எடுத்துள்ள நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனாலும் உம்மை விசுவசிப்பவர்கள்

மீட்பிற்காக நீர் ஏற்படுத்தியுள்ள தேவத் திரவிய அனுமானங்களைப் பெற முடிய வில்லையே

என்ற கவலைதான் எங்களை வாட்டுகிறது.

ஆகவே கொரோனாவை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் உம்மை வேண்டுவதில் தவறு இல்லை என்று எண்ணுகிறேன்."

"தன்னுடைய பிள்ளையைப் பலியிடும்படி நான் அபிரகாமைக்  கேட்ட போது அவர் முழு மனதோடு கீழ்ப்படிந்தது பற்றி என்ன நினைக்கிறாய்?"

"அவர் மகன் வழியே ஒரு பெரிய சந்ததியைத் தருவதாக ஏற்கனவே வாக்களித்திருந்தீர்.

நீர் கொடுத்த வாக்கை மீற மாட்டீர் என்று அபிரகாம் உறுதியாக விசுவதித்தார்.

அவரது விசுவாசம் அவரைக் கீழ்ப்படிய வைத்தது."

" அந்த விசுவாசம் உங்கள் அனைவருக்கும் வேண்டும்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று உங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்.

நான் உங்களோடு இருக்கும்போது நீங்கள்
ஏன் பயப்ட வேண்டும்?"

"எங்கள் மேல் அளவிடமுடியாத
அன்பு நிறைந்த,

சர்வ வல்லப கடவுளாகிய உம் மடியில் இருக்கிறோம். ஆகவே எதற்கும் பயப்பட மாட்டோம்.

துன்பங்கள் எங்களை விண்ணகத்திற்கு ஏற்றிச் செல்ல நீர் ஏற்பாடு செய்துள்ள விண்கப்பல்கள்.

அவற்றில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கிறோம்.

நன்றி, ஆண்டவரே, நன்றி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment