Thursday, July 2, 2020

"மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." (மத்.9:2)

 "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன."

(மத்.9:2)

************************************

மக்கள் திமிர்வாதக்காரன் ஒருவனைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் கொண்டுவந்தனர்.


திமிர்வாதக்காரன் நோயிலிருந்து குணம் பெறுவது அவர்களது  நோக்கம்.


 அவர்களுக்கு  இயேசுவின் மீது விசுவாசம் இருந்தது.


இயேசு  திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.


சொல்லப்பட்டிருக்கிற விசயத்திலிருந்து சொல்லப்படாத விசயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


"இது பைபிளில் எங்கே இருக்கிறது?"


என்று கேட்கக் கூடாது.


ஒருவன் "நான் காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் வருகிறேன்" என்று சொன்னால் 


அவனது வீட்டில் சாப்பாடு இருந்தது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இயேசு உலகில் மனிதனாகப் பிறந்தது நமது உடல் நோய்களை  குணமாக்க அல்ல.


ஆன்ம நோயைக் குணமாக்க, அதாவது, பாவத்திலிருந்து மனிதரை மீட்க.


அதுமட்டும்தான் அவர் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம்.


அவர் எப்போதும் அவரது நோக்கத்தில்தான் குறியாக இருந்தார்.


அவர் சென்ற இடமெல்லாம் உடல் நோய்களைக் குணமாக்கிக் கொண்டே சென்றதே இந்நோக்கத்திற்காகத்தான்.


நாம் எல்லோரும் பாவிகள்.


பாவம் நமக்கும் கடவுளுக்கும் இருக்கிற உறவை அறுத்து விடுகிறது.


அறுந்த உறவு  மீண்டும் ஒட்ட முதலில் நமது பாவங்கள்  நீங்க வேண்டும்.


கடவுள் நமது பாவங்களை மன்னித்தால்தான் அவை நீங்கும்.


பாவங்கள் மன்னிக்கப்பட நம்மிடம் அத்தியாவசியமாக இருக்க வேண்டியவை கடவுள் மீது விசுவாசம், பாவங்களுக்காக மனஸ்தாபம். (Contrition) 


இயேசு குணமாக்கிய ஒவ்வொருவரிடமும் இந்த இரண்டும் இருந்தன என்பதை  யாரும் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.


ஆனாலும் இயேசு இவற்றை அப்பப்போ சொல்லுவார்.


ஒவ்வொரு வியாதியையும் குணமாக்கிய பின்பு,


"உனது விசுவாசம் உன்னைக்குணமாக்கிற்று." என்று சொல்லுவார்.


திமிர்வாதக்காரனை குணமாக்கும்போது பாவ மன்னிப்பையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.


"மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன."


இறைமகன் அவனது பாவங்களை மன்னித்ததிலிருந்து,


 அவனிடம் பாவங்கள் மன்னிக்கப்படத் தேவையான மனஸ்தாபம் இருந்தது என்பதைச் சொல்லாமலே நாம் புரிந்து கொள்ளலாம்.


இயேசு ஒரு பரிசேயன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது 


பாவியாகிய பெண் ஒருத்தி



அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து,


 அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து


 அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள்.


பாவியாகிய அந்தப் பெண் இயேசு தன்னைப் படைத்த,


தனது பாவங்களை மன்னிக்க வல்ல


 கடவுள் என்பதை விசுவசித்தாள்.


அந்த விசுவாசத்தோடுதான் தனது பாவங்களுக்காக வருந்தி, அழுது,


மன்னிப்புக் கேட்கும் விதமாகத்தான்


அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்தாள்.


இயேசு பரிசேயனை நோக்கி,


"அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. குறைவாக மன்னிப்புப் பெறுபவனோ குறைவாக அன்புசெய்கிறான்"


என்று கூறிய பின்,


அப்பெண்ணை நோக்கி,


" உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன......


  உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.  


பாவியின் பாவங்கள் மன்னிக்கப் பட்டதன் காரணம் அவளது ஆழ்ந்த இறையன்பும், மனஸ்தாபமும் தான்.


அந்தப் பாவிக்கு இருந்த விசுவாசம், பரிசேயன் வீட்டில் அப்போது இருந்த மற்றவர்கட்கு இல்லை.



ஆகையால்தான்


 " பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" 


என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.


மற்றொரு சமயத்தில்


விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஒரு பெண்ணை 


மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் கொண்டுவந்து நடுவில் நிறுத்தி,


இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்று கேட்டபோது,


"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.


இயேசுவுக்குத் தெரியும் அவர்கள் யாவரும் விசுவாசம் இல்லாத பாவிகள் என்று.


விபச்சாரம் செய்த பெண் பாவியாய் இருந்தாலும் 


இயேசுவின் மீது விசுவாசம் இருந்தது.


ஆகவேதான் அவரை "ஆண்டவரே" என்று அழைத்தாள்.

(அரு. 8:11 )


பாவியான அவளுக்கு ஆண்டவரைக் கண்டவுடன் மனஸ்தாபம் ஏற்பட்டது.


இயேசு அவளை நோக்கி,


"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்.


இயேசு அவள் செய்த எல்லா பாவங்களையும் மன்னித்ததோடு, "இனிமேல் பாவம் செய்யாதே" என்று அறிவுரை கூறி அனுப்பினார்.


"அவளுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது." என்று பைபிளில் எங்கே இருக்கிறது என்று கேட்கக் கூடாது,


மனஸ்தாபம் இல்லாமல் பாவ மன்னிப்புப் பெற முடியாது,


இயேசு அவளை மன்னித்ததால் அவள் மனஸ்தாபப்பட்டாள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இயேசு செய்த எல்லா புதுமைகளும் நற்செய்து நூல்களில் எழுதப்படவில்லை.


அவரது பொது வாழ்வின் போது ஒவ்வொரு நாளும் மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். 


தினமும் அநேகர் குணம் பெற்றிருப்பார்கள்.


மூன்று ஆண்டுகளிலும் குணமாகியவர்கள் ஆயிரக்கணக்கான பேர் இருப்பார்கள்.


அத்தனை பேரிடமும் விசுவாசமும், மனஸ்தாபமும் இருந்தது என்பதற்கு அவர்கள் குணம் பெற்றதே சான்று.



நாம் தினமும் நற்செய்தி வாசிக்கிறோம்.



நற்செய்தி நூல்களில் உள்ள வசனங்களில் மற்ற  எல்லா வசனங்களையும் விட நமக்கு அதிகமாகப் பிடித்த வசனம்:


"கேளுங்கள், கொடுக்கப்படும்."


நமக்குக் கொடுப்பதைவிட கேட்பது அதிகமாக பிடிக்கும்.


ஆகவேதான் நமது செபங்களில் பெரும்பகுதியைக் கேட்பதற்கே ஒதுக்குகிறோம்.


ஆனால், மிகப்பெரிய உண்மை, எப்படிக் கேட்பது என்று  நமக்குத் தெரியவில்லை.


"திருநெல்வேலிக்குப் போக வேண்டும்.  எப்படிப் போவதென்று தெரியவில்லை."


"இது பெரிய காரியமா. Bus Stand க்குப் போ. திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறு.


Bus திருநெல்வேலி Bus Stand க்குப் போனவுடன் இறங்கி விடு."


நானும் நண்பன் சொன்னபடி பஸ்ஸில் ஏறினேன்.


பஸ் சாலைப் புதூரைத் தாண்டியவுடன் கண்டக்டர் என்னிடம் வந்து,


"எங்கே போக வேண்டும்? "


"திருநெல்வேலிக்கு."


அவர் ஒரு தாளைக் கிழித்து என்னிடம் தந்தார்.


"இருபது ரூபாய்."


"எதுக்கு?"


"எதுக்கா? டிக்கட்டுக்கு."


"நான் டிக்கட் கேட்கவில்லையே."


"பாஸ் இருக்கா?"


"பாஸா? அப்படீன்னா?"


கண்டக்டர் விசில் ஊதினார். Bus நின்றது. 


"இறங்கு?"


"ஏன்?"


அவர் பதில் சொல்லவில்லை. 

என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், இறக்கிவிட்டு விட்டார்.


பஸ் போய் விட்டது. எனக்கு நண்பன் மேல் கோபமாக வந்தது. 


கஸ்டப்பட்டு நடந்து, நேரே நண்பன் வீட்டுக்குப் போனேன்.


"ஏண்டா, திருநெல்வேலிக்குப் போகவில்லையா?"


"போடா முட்டாள். இல்லை, உன் பேச்சைக் கேட்ட நான்தான் முட்டாள்."


"ஏண்டா, என்னாச்சி?"


நடந்ததைச் சொன்னேன்.


"அப்போ  நீ முட்டாள்தான். டிக்கட் இல்லாமல் Busல் போக முடியாது என்ற அடிப்படை விசயம் கூட தெரியாமல் இருக்கிறாய்!"


எனக்கு என்மேல் கோபம் வந்தது.



ஆண்டவர்,


"கேளுங்கள், கொடுக்கப்படும்." என்று சொன்னார்.


நாமும் கேட்கிறோம். ஆனால் ஒரு அடிப்படை விசயத்தை மறந்து விடுகிறோம்.


நம்மிடம் பாவம் இல்லாதிருந்தால், நமக்கும் இறைவனுக்கும் இடையில் உறவுப் பாலம் இருக்கும்.


அதன் வழியே நடந்து, இறைவனிடம் போய் வேண்டியதைக் கேட்கலாம்.


அவரும் நமக்கு நலமாய் இருப்பதைத் தருவார்.


ஆனால் நாம் பாவம் செய்யும்போது, உறவுப்பாலம் உடைந்து விழுந்து விடும்.


ஆண்டவர் நமக்காகக் காத்திருப்பார். 


ஆனால் பாலம் 

உடைந்துவிட்டதால் நம்மால் அவரிடம் போக முடியாது.


ஆகவே, ஆண்டவரிடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் பாவம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.


We must examine our conscience to see if we have any sin.


பாவம் இருந்தால், மாஸ்தாபப் பட்டு, 


(சாவான பாவம் இருந்தால் பாவசங்கீர்த்தனம் செய்து,)


 முதலில் மன்னிப்புப் பெற வேண்டும்.


பாவ மன்னிப்புதான் உடைந்த உறவுப் பாலத்தை மீண்டும் கட்டித் தரும்.


சுத்தமான உள்ளத்தோடு ஆண்டவரிடம் கேட்டால் தருவார்,

நாம் கேட்பது நமக்கு நலமாய் இருந்தால்.


அநேக சமயங்களில் நம் நிலையை ஆராய்ந்து பார்க்காமல்,


"ஆண்டவரே, என் வியாதியைக்குணமாக்கும், உமக்கு ஆயிரம் ரூபாய் காணிக்கை தருகிறேன்." என்று நேர்ச்சை செய்வோம்.


ஆண்டவர் விரும்புவது ஆயிரம் ரூபாயை அல்ல, நம்மை.


நமது உறவைத்தான் அவர் விரும்புகிறார்


நாம் பாவத்தினால் இழந்த உறவை மீண்டும் மீட்டுத் தரத்தான் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.


நாம் சுமக்க அவர் சிலுவையைத் தருவதே நாம் மனஸ்தாபப்பட்டு,


பாவமன்னிப்புப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.


ஆண்டவர் நற்செய்தி அறிவித்த காலத்தில்  அவர் புதுமைகள் செய்து அவர் குணப்படுத்தியது ஆன்ம நோயையும், உடல் நோயையும்  சேர்த்துதான்.



நாம் இயேசுவிடம் எதைக்கேட்பதாக இருந்தாலும்,


முதலில் பாவ மன்னிப்புக் கேட்போம்.


அப்புறம் வேண்டியதைக் கேட்போம்.


பஸ் டிக்கட் இன்றி பஸ்ஸில் பிரயாணம் செய்ய முடியாது.


பாவமன்னிப்பு இன்றி விண்ணகப் பயணம் செய்ய முடியாது.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment