."என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
(மத்.10:37)
*****************************************
இயேசு நமக்குத் தந்திருக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டு,
1. இறைவனை அன்பு செய்ய வேண்டும்.
2. நம்மை நாம் அன்பு செய்வதுபோல் நம் அயலானையும் அன்பு செய்ய வேண்டும்.
அன்பு இறைவனுக்கு உரிய பண்பு.
அவர் நம்மைத் தனது சாயலாகப் படைத்தபோது நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளுள் மிக முக்கியமானது அன்பு.
கடவுள் அன்பு மயமானவர்.
ஆகவே நம்மைக் கடவுளின் சாயலாக ஆக்கியிருக்கும் பண்புகளில் மிக முக்கியமானது அன்பு.
கடவுளால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
கடவுள் தன்னைத் தானே அளவற்ற விதமாய் நேசிக்கிறார்.
தன்னைத் தானே அளவற்ற விதமாய் நேசிப்பது போலவே, நம்மையும் அளவற்ற விதமாய் நேசிக்கிறார்.
நம்மால் அளவற்ற விதமாய் நேசிக்க முடியாது, ஏனெனில் நாம் அளவு உள்ளவர்கள்.
அளவற்ற தன்மை இறைவனுக்கு மட்டுமே உரியது.
நாம் அளவு உள்ளவர்கள்தான்.
ஆனாலும், நமது அளவுக்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா?
அந்த அளவை நாம் முழுமையாகப் பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரம் 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
மற்றொரு பாத்திரம் 5 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
5 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பாத்திரம்
10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பாத்திரத்தை விட சிறியதாய் இருக்கலாம்.
ஆனால் தன்னிலே அது முழுமையானது.
10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் வைத்திருப்பவன் 5 லிட்டர் கொடுத்தால் அவன் பாதிதான் கொடுக்கிறான்.
அவன் மனது பாதிதான் கொடுக்கச் சொன்னது.
5 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பாத்திரம்
வைத்திருப்பவன் 5 லிட்டர் கொடுத்தால் அவன் முழுமையாகக்
கொடுக்கிறான்.
இவன் மனது முழுவதுமே கொடுக்கச் சொன்னது.
கொடுக்கப்பட்டதன் தன்மை (quality)
கொடுக்கப்பட்டதன் அளவில் (quantity)
இல்லை.
மனதின் தன்மையில்தான் இருக்கிறது.
"ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்"
(மாற்கு 12:44)
ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த
'முழுவதுமே போட்டுவிட்டாள்'
மற்றவர்கள் தங்களிடம் இருந்ததில் ஒரு பகுதியைப் போட்டார்கள்.
இயேசு தன்னை முழுமையாக நமக்குத் தந்தார்.
நம்மை முழுமையாக எதிர்பார்க்கிறார்.
"ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக"
(மாற்கு.12:30)
அன்பைப் பொறுத்த மட்டில் எல்லோருடைய இருதயங்களும் ஒரே கொள்ளளவு உடையவை என்று சொல்ல முடியாது.
இயேசுவின் இதயம் அளவற்றது.
மரியாளின் இதயம் அளவு உள்ளதுதான், ஆனால், நமது இருதயங்களோடு ஒப்பிட்டால் மிக அதிக அன்பளவு உள்ளது.
ஏனெனில் அளவற்ற அன்புள்ளவர் அவளிடமிருந்து பிறந்தார்.
தன் இதயம் முழுவதையுமே இறைவனின் அடிமையாக்கிவிட்டார்.
தனது முழு இருதயத்தோடு இறைவனை நேசித்தாள்.
நம்மிடமிருந்தும் இயேசு முழு இருதயத்தையும் கேட்கிறார்.
கொடுக்கிறோமா?
சடப்பொருளை அளப்பதற்குக் கருவிகள் உள்ளன.
பண்பை அளப்பது எப்படி?
எல்லா சடப்பொருள்களையும்கூட கருவிகளால் அளக்க முடியாது.
சென்ற ஆண்டு மழை பெய்தது. இந்த ஆண்டும் மழை பெய்தது.
எந்த ஆண்டு அதிக மழை பெய்தது?
என்று கேட்டால் எப்படிப் பதில் சொல்ல?
மழையை மரக்கால் வைத்து அளக்க முடியுமா?
சென்ற ஆண்டு பெய்த மழையினால் இரண்டு குளங்கள் நிரம்பின.
இந்த ஆண்டு பெய்த மழையினால் 10 குளங்கள் நிரம்பியுள்ளன.
ஆகவே இந்த ஆண்டு அதிக மழை பெய்தது.
எதை வைத்து மழையை அளந்தோம்?
மழையை வைத்தா?
இல்லை. அதன் சாதனையை வைத்து.
அதேபோல்தான், அன்பையும் அதன் சாதனைகள்,
அதாவது
நற்செயல்களை (good works). வைத்தே மதிப்பீடு செய்யலாம்.
"அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்."
(உரோ. 2:6)
கடவுளை நம் முழு இருதயத்தோடு அன்பு செய்ய வேண்டுமென்றால்,
நம் இதயத்தில் வேறு யாருக்கும் இடம் இருக்கக் கூடாது என்று அர்த்தமா?
அப்படி அர்த்தம் என்றால், இரண்டாவது கட்டளையை நிறைவேற்ற முடியாதே?
"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
என்றால் என்ன பொருள்?
நாம் நமது தாயை நேசிக்கிறோம்.
நாம் யாரை நேசிக்கிறோமோ,
அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நாம் எப்படி எதிர்வினை (react) ஆற்றுகிறோமோ
அதைப் பொறுத்துதான் அவர்கள் மேல் நாம் கொண்டுள்ள அன்பின் அளவு இருக்கும்.
அம்மாவுக்குச் சுகமில்லை. அதை நாம் கண்டு கொள்ளவே இல்லை என்றால் நமது அன்பு 0 தான்.
எந்த அளவுக்கு அவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி, உதவியாய் இருக்கிறோமோ அந்த அளவிற்கு நம் அன்பின் ஆழமும் வெளிப்படும்.
நம் தாயைக் காப்பாற்ற நமது உயிரையே தியாகம் செய்தால் நமது அன்பு முழுமையானது என்பது புரியும்.
இப்போ கேள்வி,
தாயின் மேல் நமக்கு உள்ள அன்பு முழுமையானது என்றால்,
இறைவன் மீது நமக்கு அன்பே இல்லை என்று அர்த்தமா?
வேறு யார் மீதும் நமக்கு அன்பே இல்லை என்று அர்த்தமா?
இறைவன் மீது மேல் நமக்கு உள்ள அன்பு முழுமையானது என்றால்,
மற்றவர்களை அன்பு செய்யவே முடியாதா?
முழுமை -- முழுமை =zero தானே?
என்னிடம் 1000 ரூபாய் இருந்தது. . அது முழுவதையும் என் நண்பனிடம் கொடுத்து விட்டேன். இப்போ வேறு யாரும் உதவி கேட்டால் என்னிடம் எதுவும் இருக்காது அல்லவா?
எந்தக் கேள்விக்கும் விடை வராது, ஏனெனில் நாம் சடப்பொருட்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளை ஆன்மீக விசயங்களுக்குக் கேட்டிருக்கிறோம்.
யாரும் தன்னைத் தானே அரைகுறையாய் அன்பு செய்வதில்லை.
நம்மை நாமே முழுமையாகத்தான் அன்பு செய்கிறோம்.
கட்டளைப்படி நம்மை நாமே அன்பு செய்வது போல மற்றவர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்றால்
மற்றவர்களையும் நாம் முழுமையாக அன்பு செய்ய வேண்டும்.
இறைவனையும் முழு இருதயத்தோடு அன்பு செய்ய வேண்டும்.
ஆன்மீக ரீதியில் பார்த்தால்,
முழுமை என்பது quantity அல்ல,
quality என்பது புரியும்.
அதாவது முழுமையாக அன்பு செய்வது என்றால், நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு செய்வது.
அன்பு என்பது பண்பு, பொருள் அல்ல.
கட்டளைகள் இரண்டாயினும், அவை ஒன்றிற்குள் ஒன்றாக இருக்கின்றன.
ஒரு கட்டளையை நிறைவேற்றுகிறவன், அடுத்ததையும் நிறைவேற்றுகிறான்.
ஒன்றை நிறைவேற்றாதவன் அடுத்ததையும் நிறைவேற்றவில்லை.
"நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு,
ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்."
(1 அரு. 4:20)
ஒருவன் இரண்டாவது கட்டளையை நிறைவேற்றவில்லை என்றால்,
அவன் முதல் கட்டளையையும் நிறைவேற்றவில்லை.
"நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்."
35 நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்
(அரு.13:34,35)
இயேசு கூறுகிறார்
"நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல
(இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு)
நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்."
(நாம் நமது இறையன்பை காட்டும் முறை. நாம் நம் அயலானுக்குச் செய்வதை கடவுளுக்கே செய்கிறோம்.)
நாம் இயேசுவை நேசிக்கிறோம் என்று மற்றவர்கள் அறிய வேண்டுமென்றால்
நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
ஆக, நம்மால் இயன்ற அளவு, கடவுளை நேசிக்க வேண்டும்,
நமது பெற்றோரையும் நேசிக்க வேண்டும்.
"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
ஆங்கிலத்தில் Crucial point என்று ஒரு phrase உண்டு.
அதாவது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய point of time.
என்னிடம் ஒரு Smart phone இருக்கிறது. என் உயிரை நேசிக்கும் அளவிற்கு அதை நேசிக்கிறேன். திடீரென்று ஒரு நாள் ஒரு திருடன் வந்து ஒரு கத்தியை என் நெஞ்சுக்கு நேரே நீட்டி,
"உனக்கு உன் உயிர் வேண்டுமா? அல்லது. Phone வேண்டுமா.
இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு.
உயிர் வேண்டுமென்றால் phone ஐ என்னிடம் கொடுத்து விடு.
Phone தான் வேண்டுமென்றால் உயிரை விடு."
என்று கூறி கத்தியை நெஞ்சில் அழுத்துகிறான்.
அந்த நொடியில் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல் நமக்கு மிகவும் பிரியமான அப்பா, அம்மா, மகன், மகள், அல்லது இதேபோல் வேரொரு ஆளோ, பொருளோ ஒருபக்கம்,
இறைவன் இன்னொரு பக்கம்
இரண்டில் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,
அப்படி ஒரு நிலை வந்தால்
"நீ என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்." என்கிறார் இயேசு.
நாம் இயேசுவைத் தேர்ந்தெடாமல் தந்தையையோ, தாயையோ தேர்ந்தெடுத்தால்,
நாம் கடவுளை விட தந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அர்த்தம்.
அதாவது கடவுளை முழு இருதயத்தோடு நேசிக்க வில்லை என்று அர்த்தம்.
தாய், தந்தையை நேசிக்க வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை.
தன்னை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு இயேசு அழுத்தம் (emphasis) கொடுக்கிறார்.
"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு. 15:13)
நம் நண்பனுக்காக உயிரையே தியாகம் செய்யலாம், ஆனால் கடவுளையே தியாகம் செய்துவிடக் கூடாது.
இயேசுவுக்காக நமது உயிரையே தியாகம் செய்து,
வேதசாட்சிகள் ஆக நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நாம் வாழ்வது இயேசுவுக்காக,
இயேசுவுக்காக மட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment