Monday, July 27, 2020

விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத். 13:33,

''விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத். 13:33,
**************************************

ஒரு புள்ளிவிபரப்படி புதிய ஏற்பாட்டில் 122 தடவைகள் இறையரசைப் பற்றி குறிக்கப்பட்டிருக்கிறது.

Kingdom of God” occurs 122 times in the New Testament.

இயேசுவே கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கவே தான் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்.

"நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன். "
(லூக்.4:43)

இறையாட்சியின் ஒவ்வொரு தன்மையையும் விபரிக்க இயேசு ஒரு உவமையைக் கூறுகிறார்.

27ம் தேதி வாசகக் குறிப்புப் படி இயேசு விண்ணரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்.

பாலைத் தயிராக மாற்ற ஏற்கனவே புளிப்பாக இருக்கும் உறைமோரை ஊற்றுவார்கள்.


அதேபோல ஏற்கனவே புளிப்பாக இருக்கும் மாவில்

சிறிதளவு புளியாத மாவோடு கலந்தால் அதுவும் புளிப்பு ஆகிவிடும்.

உறைமோருக்கும், புளிப்பு மாவுக்கும் உள்ள விசேச குணம் என்னவென்றால்,

இரண்டும் தான் சேரும் பொருட்களைத் தன் நிலைக்கு மாற்றிவிடுகின்றன.

அதேபோல், நாம் எங்கு சென்றாலும்  நமது  தொடர்புக்குள் வருவோரை நம்மைப் போல மாற்றும் சக்தி நமக்கு வேண்டும்

காற்று எங்கும் இருக்கிறது. 
அது நமக்குப் பயன்பட வேண்டுமென்றால் நாம் அதைச் சுவாசிக்க வேண்டும்.

இறையரசு எங்கும் இருக்கிறது.

இறைவன் தான் படைத்த எல்லா மனிதர் உள்ளத்திலும் இருக்கிறார்.

அவர் இருப்பதை உணர்ந்து, அவரைத் தங்கள் அரசராக ஏற்றுக் கொள்பவர்கள் இறையரசை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இறைவனை அரசராக உளமாற, முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள்,

இறைவனுடைய பண்புகளையும் தங்கள் பண்புகளாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

தண்ணீரில் இறங்குபவர்கள் நனையாமல் இருக்கமுடியாது.

நெருப்பைத் தொடுபவர்கள் அதன்  வெப்பத்தை உணராமல் இருக்க முடியாது.

அதேபோல்தான் அன்பு மயமான இறைவனோடு  உளமார இணைந்தவர்கள்,

அன்பு என்ற பண்போடு இணையாமல் இருக்கமுடியாது.

அன்போடு அதிலிருந்து பிரிக்க முடியாத இரக்கம், கனிவு, மன்னிக்கும் தன்மை, பொறுமை போன்ற பண்புகளும் அவர்களைப் பற்றிக்கொள்ளும்.

அன்பு என்பது வெறும் உணர்வு மட்டும் அல்ல.

 இது ஒரு சக்தி. ஈர்ப்பு சக்தி. தன் தொடர்பு எல்கைக்குள் வருவோர் அனைவரையும் இழுக்கும்.

 அன்பு தான் புறப்படும் இடத்திலிருந்து தனியே போகாது.

 இனிய சொற்கள், பயன் தரும் நற்செயல்களோடு சென்று, தொடர்புடைய அனைவரையும் கவரும்.

 கவர்வது மட்டும் அல்ல, அவர்களையும் பற்றிக் கொள்ளும்.

அதனால் அன்பைப் பற்று என்றும் அழைக்கிறோம்.


இறையன்புள்ளவன் எங்கு சென்றாலும் அவனோடு தொடர்பு உடையோர் அனைவரையும் அன்புள்ளவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும் மாற்றிவிடுவான்.

 இவனது ஈர்ப்பின் காரணமாக ஈர்க்கப்பட்டோர் அவனைப்போல் மாறி விடுவர். 

அதாவது அவர்களும் தங்களுக்குள்ளும் அவனுடைய அன்புக்குக் காரணமான  இறைவன் இருப்பதை உணர்ந்து கொள்வர்.

 அவர்களும் இறைவனை அரசராக ஏற்றுக் கொள்வர். 

ஒரே வரியில் சொல்வதானால் இறையரசுக்கு உரியவன் சென்ற இடமெல்லாம் இறையரசைப் பரப்புவான். 

எரியும் மெழுகுதிரியை எங்கு எடுத்துச் சென்றாலும்,

எவ்வளவு இருட்டான இடத்திற்கு எடுத்துச் சென்றாலும்,

அது இருளை நீக்கி ஒளியைப் பரப்பும். அது அதன் இயல்பு.

எப்படி புளிக்கும் மாவு தன்னோடு தொடர்பு உள்ள அனைத்து மாவையும் புளிப்பாக்குகிறதோ,

 அதேபோல இறையரசின் உண்மைக் குடிமகன் தன்னோடு தொடர்புடைய அனைவரையும்  இறையரசின் குடிமக்களாக மாற்றி விடுவான்.

நாம் ஞானஸ்நானம் பெற்ற நாளிலிருந்து இறையரசின்
குடிமக்களாக இருந்திருக்கிறோம்.

நமது அரசரின் எதிர்பார்ப்புப்படி நாம் 'புளிக்கும் மாவு' போல் இருந்திருந்தால் இதற்குள் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடாக மாறியிருக்கும்.

இந்தியர் அனைவருமே கிறிஸ்தவர்களாக மாறியிருப்பர்.

ஆனால் மாறவில்லை.

ஏன் மாறவில்லை?

நாம் இயேசுவின் எதிர்பார்ப்புப்படி இல்லை.

நம்மிடம் அன்பு இருக்கிறது.

தம்ளர் நிறைய தண்ணீர் இருக்கிறது.

ஆறு நிறையவும் தண்ணீர் இருக்கிறது.

ஆற்றுத் தண்ணீருக்கு அகப்பட்டவனை இழுத்துச் செல்லும்  சத்தி உள்ளது.

தம்ளர் தண்ணீருக்கு?

ஆற்றுத் தண்ணீரும், தம்ளர் தண்ணீரும் ஒரே குணமுள்ள தண்ணீர்தான்.

ஆனால் அததன் அளவைப் பொறுத்து சக்தியில மாறுபடுகின்றன.

நமது அன்பு தம்ளர் தண்ணீர் மாதிரி தான். இருக்கும் இடம் விட்டு ஒரு பக்கமும் போகாது.

அன்னைத் தெரெசாவிடமும் அன்பு இருந்தது. காட்டாற்று வெள்ளம் போல சக்தி வாய்ந்ததாக இருந்தது.

அவள் செய்த அன்புச் செயல்களுக்குக் கணக்கே இல்லை.

அவளது உண்மையான அன்பை அனுபவித்தவர்கள் அவளுக்குள் இருந்து இயேசு செயலாற்றுவதை உணர்ந்தனர்.

ஒரு முறை தெருவில் கவனிப்பாரற்று சாகக் கிடந்த ஒரு குஷ்டரோகியைத் தூக்கி, 

இல்லத்திற்குக் கொண்டு வந்து,

 அவனது புண்களைக் கழுவி,
மருந்திட்டு, 

தனது இறையன்பை அனுபவித்துக் கொண்டே சாகவிட்டாள். 

தன்னை அன்பு செய்ய யாரும் இல்லையே என்ற எண்ணத்தில் சாகக் கிடந்தவனுக்கு


'நேசிக்க இயேசு இருக்கிறார்' என்று உணர்த்தி, இறையரசின் அன்புக் குடிமகனாக புன்முறுவலோடு 
 சாகவிட்டாள்.

இயேசு குறிப்பிட்ட புளிக்கும் மாவிற்கு அன்னைத் தெரெசா சரியான எடுத்துக் காட்டு.

எல்லாரும் அன்னைத் தெரெசாவைப் போல இருக்க ஆசைப்படலாம்.

ஆசைப்பட வேண்டும்.

அவர்கள் அளவுக்கு நம்மால் இருக்க முடியா விட்டாலும் நம்மால் இயன்ற அளவு இருக்க முயலலாம்.

மற்றவர்களிடம் பேசும்போது அன்புடன் பேசுதல்,

மற்றவர்கள் கஷ்டப்படும்போது ஆறுதல் சொல்லுதல்,

ஏதாவது உதவி தேவைப் படும்போது நம்மால் இயன்ற உதவி செய்தல்,

புறணி பேசாதிருத்தல்,

திறமைகளைப் பாராட்டுதல்,

இறையரசைப் பற்றி பேசுதல்

போன்ற காரியங்களைச் செய்தாலே உறவு வளரும்.

எதிர்மறை நினைவுகளை அகற்றி நேர்மறையாகச் சிந்திக்க ஆரம்பித்தால்,

நமது பேச்சும், செயலும் நேர்மறையாக மாறிவிடும்.

பிறரை நேர் மறையாக அணுகும்போது, உறவு வளரும்.


நமது உறவின் ஆழத்தைப் பொறுத்து நமது சிந்தனை, சொல், செயல்கள் அவர்களது வாழ்க்கை முறையையே மாற்றம்.

நமது உறவின் மையம் இயேசுவின் அன்பாக மட்டும் இருந்தால் அவர்களும் இயேசுவின் அன்பால் ஈர்க்கப்படுவர்.


அவர்களும் இயேசுவின் சீடர்களாக மாறி, இறையரசை ஏற்றுக்கொள்ளவர்.

இயேசு விரும்பியபடி புளிப்பு மாவாக மாற்றுவோம்,

உலகையே மாற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment