"ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன்." (மத்.11:25)
****************************************
மனித மூளையினால் அளவிட. முடியாத அளவிற்குப் பரந்து கிடக்கும் மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன்தான்,
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரையும் படைத்தார்.
ஞானிகளைப் படைத்த இறைவன்தான், மந்த புத்தியுள்ள சாதாரண மனிதனையும் படைத்தார்.
ஞானமுள்ளவன் தன்னிடமுள்ள ஞானத்திற்காக பெருமைப் பட்டுக் கொள்ள ஏதுமில்லை,
ஏனெனில் அவனிடமுள்ள ஞானம் அவனுக்கு உள்ளது அல்ல, இறைவன் கொடுத்த நன்கொடை..
மந்த புத்தியுள்ள சாதாரண மனிதன் அதற்காக வருந்த வேண்டியதில்லை
ஏனெனில் அப்படி அவனைப் படைத்தவரும் ஞானிகளைப் படைத்த அதே இறைவன்தான்.
தலையைப் படைத்த இறைவன்தான் காலையும் படைத்தார்.
தலை சிந்திக்க, கால் நடக்க.
தலை நமக்கு மட்டும்தான் சிந்திக்க முடியும் என்று கர்வம் கொள்ளக் கூடாது, கால் உதவி இல்லாவிட்டால் அதனால் நடக்க முடியாது.
கால் "தலை ஆகாயத்தைத் தடவி வர, நாம் மட்டும் தரையைத்
தடவுகிறோமே" என்று வருத்தப் படக்கூடாது,
தலைக்கு உதவுவது குறித்து மகிழ வேண்டும்.
புத்தியால் பெற்ற அறிவை சரிவரப் பயன்படுத்தத் தெரிந்தவன் ஞானி.
புத்தி மந்தமாய் இருப்பவன்
சுய அறிவு கம்மியாக இருப்பதால்
புத்தி உள்ள, அறிவு உள்ள, ஞானம் உள்ளவர்களின் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து நடப்பான்.
இரத்தினச் சுருக்கமாக,
ஞானம் உள்ளவன் சிந்திப்பான், அற்றவன் செயல்புரிவான்.
ஒரு விஞ்ஞானி மின்சாரத்தைத் கண்டுபிடித்தான்.
ஆனால் பயன்படுத்துபவர்களில் அநேகருக்கு மின்சாரம் என்றால் என்ன என்றே தெரியாது.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம்
Switch போட்டால் light எரியும்.
button ஐ press பண்ணினால் motor ஒடும். அவ்வளவுதான்.
அதேபோல் ஞானம் உள்ளவர்களை விட அவர்கள் சொற்படி நடப்பவர்கள்தான் அதிகம் பயன்பெறுவார்கள்.
என்னுடைய அம்மா முதல் வகுப்பு கூட முடித்ததில்லை.
ஆனா, ஆவன்னா எப்படி இருக்கும் என்றே தெரியாது.
வீட்டில் மழைய பைபிள் ஒன்று
இருந்தது.
அதில் ஒரு வரி கூட வாசித்ததில்லை.
அவர்களுக்கு பங்குச் சாமியார்தான் பைபிள்.
ஆனால் அவர்களிடம் இருந்த விசுவாசம் மிக ஆழமானது.
அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்:
கீழ்ப்படிதல்தான் மீட்பு அடைய உறுதியான, பத்திரமான வழி.
Obedience is the surest and safest way to salvation.
உண்மையான ஞானம் கீழ்ப்படிதலில் உள்ளது.
மாதாவை 'ஞானம் நிறை கன்னிகை' என்று அழைக்கிறோம்.
அவளுடைய கீழ்ப்படிதல்தான் நமக்கு மீட்பரைப் பெற்றுத் தந்தது.
இறைமகன் இயேசுவே தனது
கீழ்ப்படிதலினால் நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.
"அவர் இறைமகனாய் இருந்தும், பாடுகளினால் கீழ்ப்படிதலை நேரில் துய்த்துணர்ந்தார்."
(எபி. 5:8)
"தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
(பிலி. 2:8)
கீழ்ப்படிதல் இல்லாவிட்டால் அறிவு இருந்தாலும் ஞானம் இல்லை என்றுதான் அர்த்தம்.
திருச்சபைத் தலைவருக்குக் கீழ்ப்படிய மறுத்து,
பிரிந்து சென்றவர்களெல்லாம் அறிவு உள்ளவர்கள்தான்.
ஆனால் அறிவை பயன்படுத்தத் தெரியாமல் அவர்கள் இஸ்டம் போல்
பயன்படுத்தியதால் அவர்களிடம் ஞானம் இல்லை.
கீழ்ப்படிதலும் இல்லை.
இன்றும் யாருக்கும். கீழ்ப்படியாத சிலர்,
தாங்களாகவே ஆளுக்கொரு பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு
யாருடைய கட்டுப்பாடும் இன்றி,
தங்கள் இஸ்டம் போல் பைபிளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டு
போதித்துக் கொண்டிருக்கிறார்களே,
அவர்களிடம் இறை ஞானம் இருக்கிறதா?
கீழ்ப்படியத் தெரியாத யாரிடமும் ஞானம் இருக்க முடியாது.
இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலோர் கல்வி அறிவு அற்ற சாதாரண மக்கள்.
பழைய ஏற்பாட்டில் மெசியாவின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த
ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் கிடைக்காத பாக்கியம்
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இறையறிவிலும், ஞானத்திலும் சிறுவர்களாகிய நாம் நமக்கு எதுவும் தெரியவில்லையே எனக்கவலைப் பட வேண்டாம்.
நமக்கு இருக்கவேண்டியதெல்லாம் விசுவாசமும் அன்பும்தான்.
இந்த இரண்டும் இருந்தால் இறைவன் நமது உள்ளங்களைத் தன் உள்தூண்டுதல்களால் (Inspirations) நிரப்பி வழிநடத்துவார்.
மீட்புப் பெற தேவ சாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் தேவை இல்லை.
நல்ல மனது மட்டும். வேண்டும்.
நம்முடனும் இறைவன் பேசுவார்.
கேட்டு, அதன் வழி நடக்க வேண்டியது தான் நமது வேலை.
குருக்களை விட நாம்தான் பாக்கியம்
பெற்றவர்கள்.
அவர்கள் உலக இன்பங்களைத் துறந்து,
14 ஆண்டுகள் கஸ்டப்பட்டு படித்து,
அவர்கள் படித்ததை நமக்கு வேண்டிய அளவிற்குப் போதிப்பார்கள்.
நாம் கஸ்டப்படாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு,
அதன்படி நடந்தால் போதும்
மீட்பு உறுதி.
இறைவனைப் பற்றி அறிந்திருப்பவர்களை விட,
இறைவன் சொல்லுக்குக் கீழ்ப்படிபவர்கள்தான் பெரிய ஞானிகள்.
கீழ்ப்படிவோம்,
மேலோகம் நமக்கே!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment