Saturday, July 25, 2020

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."(மத். 20:27)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."
(மத். 20:27)
**************************************

"என் மக்கள் இவ்விருவரும் உம் அரசில், 

ஒருவன் உமது வலப்பக்கமும்,

 மற்றவன் உமது இடப்பக்கமும் அமரச் செய்வீர் 

என வாக்களியும்" என்றாள்". 

இந்த உறுதிமொழியை இயேசுவிடம் கேட்டவள் அருளப்பர், வியாகப்பர் ஆகியோருடைய தாய்.

இயேசு எதற்காக உலகிற்கு வந்தார் என்ற விபரம் அந்த அம்மாவிற்குத் தெரியவில்லை என்று தெரிகிறது.

வலது பக்கமும், இடது பக்கமும் அமர்வது என்பது முக்கிய பதவி வகிப்பது.

இயேசு மெசியா என்ற விபரம் சீடர்களுக்குத் தெரியும்.

ஆனால் மெசியாவைப் பற்றி உண்மையில்லாத ஒரு கருத்து மக்களிடையே நிலவியிருந்தது.

மெசியா யூதர்களை உரோமையர்களின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு, 

அவர்களுக்கென்று தனி அரசு அமைப்பார் மக்கள் எண்ணிக்கொண்டிருந்தனர்.

ஆகவேதான் அவருடைய அரசில் தன் மக்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்க வேண்டுமென்று அந்த அம்மா கேட்டார்கள்.

ஆனால், இயேசு பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்பதற்காக

 பாடுபட்டு, மரிப்பதற்காகவே பிறந்திருக்கிறார் என்ற உண்மை அவளுக்குத் தெரியாது.

தெரிந்திருந்தால் பதவி  கேட்டு விண்ணப்பித்திருக்க  மாட்டாள்.

இயேசு உண்மையிலேயே அரசர் தான். ஆனால் அவருடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.

மறுவுலகைச் சார்ந்தது.

அவருடைய அரசு லௌகீக அரசு அல்ல. ஆன்மீக அரசு.

இவ்வுலக அரசில் உயர்ந்தவன் என்பதற்கும், 

மறுவுலக ஆன்மீக அரசில் உயர்ந்தவன் என்பதற்கும், 

பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

ஒப்புமைக்காக மரத்தை எடுத்துக் கொள்வோம்.

ருசியுள்ள பழங்களைத் தரக்கூடிய ஒரு பெரிய மரம்.

அதன் முக்கிய பகுதி அடிப்பகுதியா, உச்சிப் பகுதியா?

அடிப்பகுதியால் உச்சிப் பகுதி வாழ்கிறதா?

அல்லது

உச்சிப் பகுதியால் அடிப்பகுதி வாழ்கிறதா?

நமது பார்வைக்கு உச்சிப் பகுதி அழகானதாகவும், பயன் தருவது போலவும் தோன்றலாம்.

அடியிலுள்ள வேர்ப்பகுதி கண்ணுக்கே தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் வேரில்லாவிட்டால் மரத்தால் நிற்கவும் முடியாது, பழங்கள் தரவும் முடியாது.

உச்சிப் பகுதியை வெட்டிவிட்டால் மரம் திரும்பவும் தளிர்க்கும்.

ஆனால் வேரை வெட்டிவிட்டால் அப்புறம் மரமே இல்லை.

ஆன்மீக அரசில் ஊழியனாய் இருப்பவன்தான் முதல்வன்.

இயேசு நம்மைப் படைத்த கடவுள்.
அவர்தான் நமது அரசர்.
அவர் தான் நமது தலைவர்.

''மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

படைத்தவராகிய அவரே தன்னால் படைக்கப் பட்டவர்களுக்கு 'பணிவிடை புரியவும்,'

அவர்களது 'மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்.'

அவர் நமக்குக் கூறும் அறிவுரை :

"எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."

 உலகத் தலைவர்கள் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வார்கள், அதைத் தலைவனின் கடமை என்று எண்ணிக் கொண்டு.

ஆனால் அவர்கள் உபதேசத்தில் ஒன்றையாவது அவர்கள் கடைப் பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் இயேசு அப்படி அல்ல.

அவர் செய்யும் ஒவ்வொரு உபதேசத்தையும் அவரே அவரது வாழ்வில் கடைப்பிடித்தார். 

சர்வத்தையும் படைத்ததால் சர்வத்திற்கும் அதிபதியான அவர் 

தாழ்ச்சியைப் பற்றியும், பிறருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் போதிக்கு முன்,

சர்வவல்லபராகிய அவர் பலகீனங்கள் நிறைந்த  மனித உரு எடுத்து, 

அவரால் படைக்கப்பட்ட மனிதர்களாகிய அன்னை மரியாளுக்கும், சூசைப்பருக்கும் 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.

அவரது பணிவாழ்விலும் எல்லோருக்கும் பணி செய்துதான் வாழ்ந்தார்.

கடைசி இரவு உணவு அன்று சீடர்களுடைய பாதங்களைக் கழுவும் அளவிற்குத் தன்னையே தாழ்த்திக் கொண்டார்.

இயேசுவின் சீடர்கள் நாம்.

இயேசு இயல்பிலேயே உயர்ந்தவர். அவர் தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டார்.

நாம் இயல்பிலேயே ஒன்றுமில்லாதவர்கள்.

அதற்குக் கீழே தாழ்த்துவதற்கு  நம்மிடம் ஒன்றுமே இல்லை.

நமது இயல்பான நிலையை ஏற்றுக் கொள்வதுதான் நமக்குத் தாழ்ச்சி.

நமது இயல்பான நிலையை ஏற்றுக் கொண்டால், நாம் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

அதை ஏற்றுக் கொண்டால் நம்மைப் படைத்தவர்  தந்த கட்டளைகளையும் ஏற்றுக் கொள்வோம்.  


கட்டளைகளையும் ஏற்றுக் கொண்டால் அவற்றின்படி

இறைவனை முழு இருதயத்தோடு நேசிப்போம்.

நமது அயலானையும் நேசிப்போம்.

அயலானை நேசிப்பதில்தான் அயலானுக்கு ஊழியம் செய்வது அடங்கியிருக்கிறது.

இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

கிறிஸ்தவன் என்றாலே இறைவனுக்காக பிறருக்குச் சேவை செய்பவன் என்றுதான் பொருள்.

சேவை செய்தல் என்றால் என்ன?

உலகியல் பற்றி பேசுவதற்கும், ஆன்மீகம் பற்றி பேசுவதற்கும் நம்மிடம் ஒரு மொழிதான் இருக்கிறது.

ஒரு வார்த்தைக்கு உலகியலில் ஒரு பொருள் இருந்தால்,

அதே வார்த்தைக்கு ஆன்மீகத்தில் வித்தியாசமான பொருள் இருக்கும்.

உதாரணத்திற்கு,

மீட்பு என்ற வார்த்தை உலகியலில் 

ஒருவனை ஏதாவது ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றுவது என்று பொருள்படும்.

 உ . ம்: தண்ணீருக்குள் விழுந்தவனை மீட்கிறோம். வியாதியிலிருந்து மீட்கிறோம்.


ஆனால் ஆன்மீகத்தில்

 பாவத்திலிருந்து கிடைக்கும் விடுதலையைத் தான் மீட்பு என்கிறோம்.

அதேபோல் அன்பு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

உலகியலில் இருவர் அல்லது பலருக்கு இடையே உள்ள ரீதியாக ஏற்படும் ஈர்ப்பை அன்பு என்கிறோம்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு இடையே கூட அன்பு இருக்கலாம்.


ஆனால் ஆன்மீகத்தில் அன்பு இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய பண்பு. 

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள ஈர்ப்பு, 

இறைவனுக்காக நம் அயலான் மீது ஏற்படும் ஈர்ப்பு. 

இந்த தெய்வீகப் பண்புதான் அன்பு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஞான உபதேசத்தில் இந்த அன்பு தேவ சிநேகம் (Charity) என்று குறிக்கப்பட்டிருக்கும்.

தேவசிநேகத்தில இறையன்பும், பிறரன்பும் அடக்கம்.

ஆன்மீகத்தில் அன்பு என்றாலே கடவுளைத்தான் குறிக்கும்.

God is Love.

நமக்கும் நம் அயலானுக்கும் இருக்கும் அன்பு கடவுளை மையமாகக் கொண்டது.

கடவுளுடைய பிள்ளை என்ற அடிப்படையில் மற்றவர்களை நேசிப்பதுதான் உண்மையான ஆன்மீக அன்பு. இயேசு குறிப்பிடும் அன்பு ஆன்மீக அன்புதான்.

வெறுமனே உடன்பிறந்தவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காக மட்டும் நேசித்தால் அது உலகியல் அன்பு.


அதேபோல, சேவை என்ற வார்த்தைக்கும் உலகியலில் பொருள் வேறு, ஆன்மீகத்தில் பொருள் வேறு.

உலகியலில்:

ஒருவருக்கோ, அல்லது பலருக்கோ பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும் உதவியை சேவை (Service) 
என்போம்.

பிரதிபலனாக சம்பளத்தை எதிர்பார்த்தால் அது வேலை. (job)
வேலையைக் கூட சேவை உணர்வோடு செய்யலாம்.

தனிநபரும் சேவை செய்யலாம்.
சேவை மையங்களும் சேவை செய்யலாம்.

உலகியல் சேவையின் மையம் மனிதம் அல்லது மனிதாபிமானம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சேவை செய்கின்றனர், மனிதாபிமான அடிப்படையில்.


ஆன்மீகத்தில்:

ஆன்மீகத்திலும் சேவை பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்வது தான். ஆனால் சேவையின் மையம் அல்லது நோக்கம் கடவுள், கடவுள் மட்டும்தான். (God centred)

 மனிதன் என்பதற்காக அல்ல,

 கடவுளின் பிள்ளை, கடவுளில் நமது சகோதரன் என்பதற்காக,

 கடவுளின் மகிமைக்காக செய்யப்படுவதுதான் 

ஆன்மீக சேவை அல்லது இறை ஊழியம்.

இயேசு கடவுள்.

 அவர் மனிதனாய்ப் பிறந்து,

 நற்செய்தியைப் போதித்தலாகிய ஊழியம் செய்து, 

நமது மீட்பிற்காகத் தன் உயிரைப் பலியாக்கியது பிரதிபலன் எதிர்பார்த்து அல்ல.

அவர் கடவுள். நிறைவானவர். அவருக்கு எந்தப் பலனும் தேவை இல்லை.

நமது மீட்பிற்காக தன் உயிரைப் பலியாக்கினார்.

நம்மை மீட்டு அவரோடு சேர்த்துக் கொள்வதற்காகவே உயிரை விட்டார்.

இயேசு மனிதருக்கு ஊழியம் செய்தது, அவரது தெய்வீக அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக மட்டும்தான்.


இயேசு எந்த நோக்கத்திற்காக ஊழியம் செய்தாரோ அதே நோத்கத்திற்காக மட்டும் ஊழியம் செய்ய வேண்டும்.

நாம் உதவியை மனிதனுக்குதான் செய்கிறோம். ஆனால் இறைவனது பிள்ளை என்பதற்காக, இறைவனது மகிமைக்காகச் செய்கிறோம்.

இறைவார்த்தையை அறிவிப்பதையும் அவருக்காகவே செய்கிறோம். 

இயேசுவின் பிரதிநிதிகளாகிய நமது ஞான மேய்ப்பர்கள்

இயேசுவைப் போலவே,

நம்மை இறைவன் பாதம் சேர்ப்பதற்காகவே,

தன்னலம் கருதாமல் இறை ஊழியம் செய்கிறார்கள்.

புனித சவேரியார், புனித அருளானந்தர், வீரமாமுனிவர் போன்ற எண்ணிக்கையற்ற மறைப் பணியாளர்களை இயக்கியது இறையன்பு மட்டும்தான், தன்னலம் அல்ல.

நாம் எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதற்கு best sample புனித கல்கத்தா தெரசா!

தாய் தன் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வது போல

இறையன்பால் உந்தப்பட்டு,

 ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தாயன்புடன் பணிவிடை செய்ததால்

 அன்னை தெரெசா என்று அழைக்கப் பட்டாள்.

 நாமும் இயேசுவுக்காக இறைப் பணி செய்வோம், 

இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

 
.

No comments:

Post a Comment