"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத்.13:58)
**************************************
நடந்த நிகழ்ச்சி:
ஒரு முறை வங்கியில் பணம் எடுக்கச் சென்றவன், Withdrawl Slip ஐ நிரப்பிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, benchல் உட்கார்ந்திருந்தேன்.
ஒரு இளைஞர் என்னிடம் வந்து, நிரப்பப்படாத ஒரு Withdrawl Slip ஐக் கொடுத்து,
"சார், பணம் எடுக்க வேண்டும். கொஞ்சம் நிரப்பிக் கொடுங்களேன்."
"உட்காருங்கள். எவ்வளவு எடுக்க வேண்டும்?*
"பத்தாயிரம்."
கையில் பேனாவை எடுத்துக் கொண்டு,
* Account number சொல்லுங்க."
"தெரியாது. நான் பள்ளியில் படிக்க வில்லை."
"Bank passbook ஐ கொடுங்க."
"என்னிடம் இல்லை."
"passbook இருந்தால்தான் நம்பர் எழுத முடியும்."
"அப்படீன்னா என்ன சார்?"
"உங்களுக்கு இந்த Bank ல Account இருக்கா?"
"அப்படீன்னா?"
"நீங்க இந்த Bank ல பணம் போட்டிருக்கீங்களா? அதாவது,
இந்த Bank ல உங்க பணம் இருக்கா?"
"இல்ல சார்."
"உங்களுக்கு Bank ல Account ம் இருந்து அதில் பணமும் இருந்தால்தான் எடுக்க முடியும்."
"அப்படியா, சார். எல்லாரும் பணம் வாங்கறாங்களே, நாமும் வாங்கலாம்னு பார்த்தேன்."
அந்த இளைஞர் கொஞ்ச நேரம் நின்று விட்டு, பிறகு போய்விட்டார்.
நாமும் இதே மாதிரிதான் சில சமயங்களில் நடந்து கொள்கிறோம்.
கடவுளிடம் Account ஏதும் திறக்காமலேயே எதையாவது கேட்போம்,
கேட்டது கிடைக்காவிட்டால்,
"கடவுளுக்கு என்மேல் இரக்கமே இல்லை.. நான் என்ன கேட்டாலும் தரவே மாட்டேங்கிறார்." என்று அவரைக் குறை சொல்வோம்.
நாம் கேளாமலேயே கடவுள் நம்மைப் படைத்து விட்டார்.
நாம் கேளாமலேயே நம்மைப் பராமரித்து வருகிறார்.
ஆனால் நாம் நம்மைப் படைத்தவரைப் பற்றி கவலைப் படாமல்,
அவர் தந்த திறமைகளை
நம்முடையவை என நினைத்துக் கொண்டு வாழ்கிறோம்.
எப்போதாவது நமது திறமைகளால் முடியாவிட்டால், அப்போதுதான் கடவுள் ஞாபகம் வருகிறது.
வேண்டியதைக் கேட்கிறோம்.
நாம் கேட்பது கிடைப்பதற்கு நமக்கு கடவுள் மேல்
விசுவாசம் இருக்க வேண்டும்.
நம்பிக்கை இருக்க வேண்டும்.
பக்தி இருக்க வேண்டும்.
இந்த மூன்றும் நம்மிடம் வர வேண்டும் என்பதற்காகவே, அவை நம்மிடம் வருமட்டும் கடவுள் நமது வேண்டுதலைக் கேளாதது மாதிரி இருப்பார்.
முதலில் நாம் கடவுளிடம்
நமக்கு விசுவாசம், நம்பிக்கை, பக்தி
ஆகியவற்றைத் தரும்படி கேட்க வேண்டும்.
அவற்றைத் தந்த பின் மற்றவற்றைக் கேட்க வேண்டும்.
இயேசு தனது பொதுப்பணியை ஆரம்பித்த பின்
அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது.
பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும்,
பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.
அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.
கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
ஆனால் அவர் சொந்த ஊருக்கு
வந்தபோது
அங்கு உள்ளவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.
மற்ற இடங்களில் புதுமைகள் செய்து ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கியர்,
அதை அந்த அளவுக்கு ஏன் சொந்த ஊரில் செய்யவில்லை?
ஏனெனில் அவர்கள் இயேசுவைத்
தச்சனின் மகனாகவும், மரியாளின் மகனாகவும்தான் பார்த்தார்களேயொழிய,
இறைமகனாகப் பார்க்கவில்லை.
அவர்களிடம் விசுவாசம் இல்லை. ஆகவே இயேசு அவர்களிடம் புதுமைகள் செய்யவில்லை.
எங்கிருந்தோ ஒரு குரல் வருகிறது,
நம்மிடம் விசுவாசம் இருக்கிறதே, நாம் கேட்பதும் சில சமயங்களில் கிடைப்பதில்லையே, ஏன்?
ஒரு பிச்சைக்காரன் கேட்டான்,
"இந்த லாட்ஜ் இவ்வளவு பெரியதாக இருக்கிறதே, இங்கே யார்
தங்குவார்கள்?"
"இது பணக்காரர்கள் தங்குமிடம்."
"பணக்காரர்கள்னா"
"பணம் வைத்திரும்பவர்கள்."
அதைக் கேட்டவுடன் அவன்
லாட்ஜ்குச் சென்று,
Receptionist டிடம்,
"சார், ஒரு ரூம் வேண்டும்,"
"உனக்கா?"
"ஆமா."
"பணம் இருக்கா?"
"இருக்கு, சார், இன்றைக்குப் பிரிந்த 100 ரூபாய் இருக்கு, சார்."
"ரூம் வாடகை ஒரு நாளைக்கு ஏழாயிரம் ரூபாய்."
"ஏழாயிரமா? பணம் வைத்திருப்பவர்கள் தங்கலாம்னு சொன்னாங்க. 100 ரூபாய் பணம் இல்லையா?"
"பணம்தான். 10 பைசாவும் பணம் தான். அது எதுக்காகும்?"
அந்த ஆளிடம் இருந்த பணத்தின் அளவுக்கும்,
நம்மிடம் இருக்கும் விசுவாசத்தின் அளவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
நம்மிடம் என்று சொல்லும்போது எல்லோரையும் சொல்லவில்லை.
நம்மிடம் ஆழமான விசுவாசம் உள்ள ஆட்களும் இருக்கிறார்கள்.
ஆழமான விசுவாசம் கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதோடு,
அவரே நமக்கு எல்லாம்,
நாம் முழுவதும் அவருக்கே என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும்.
நமக்கு ஆழமான விசுவாசம் இருந்தால்
கடவுளுக்காக நமது உடல், பொருள், ஆவி, உடமைகள், உலகம், சொந்தங்கள் எல்லாவற்றையும்
இழக்கத் தயாராக இருப்போம்.
(சொல்லளவில் மட்டும் அல்ல, செயலளவிலும்)
நமக்கு ஆழமான விசுவாசம் இருந்தால்
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் கடவுளே திட்டமிட்டு செயல்படுத்துகிறார் என்றும்,
நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் நமது ஆன்மீக நலனுக்காகவே நடைபெறுகிறது எனவும் ஏற்றுக்கொள்வோம்.
நமக்கு என்ன நடந்தாலும், அது கடவுளாலேயே நடைபெறுகிறது என்பதால் அதை முழு மனதோடு நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்.
நமக்கு வியாதியோ, வருத்தமோ எது வந்தாலும் நாம் அஞ்சமாட்டோம், ஏனெனில் நம்மைப் படைத்த கடவுள் நம்முடனேதான் இருக்கிறார்.
இந்த அஞ்சாமையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எப்போதும் கடவுள் கையில் இருக்கிறோம். கடவுள் நித்தியர். ஆகவே நித்திய காலமும் அவர் கையில்தான் இருப்போம்.
எதுவும் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்க முடியாது.
"ஏனெனில்,
சாவோ, வாழ்வோ,
வானதூதரோ தலைமை ஏற்பவரோ,
நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ,
39 வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ,
வேறெந்தப் படைப்புப் பொருளோ,
நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்து
நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு."
(உரோமை .8:38, 39)
இந்த வேதவாக்கின்படி
"சாவோ, வாழ்வோ நம்மை இயேசுவிலிருந்து பிரிக்க முடியாது."
இருந்தாலும், இறந்தாலும் நாம் இயேசுவின் கையில்தான் இருப்போம்.
நம்மை இயேசுவின் கையிலிருந்து பிரிக்க முடியாத நோயைக் கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்?
இந்த அளவுக்கு நமது விசுவாசம் இருந்தால் நமது நம்பிக்கையும் ஆழமாகத்தான் இருக்கும்.
ஏனெனில் விசுவாசத்திடமிருந்து பிறப்பதுதான் நம்பிக்கை.
நமது செபத்துக்கு விசுவாசம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நம்பிக்கையும் முக்கியம்.
முழுமையான விசுவாசி ஆண்டவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்கும்போது,
நாம் கேட்பது நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு உதவியாக இருக்குமானால்
கடவுள் கட்டாயமாகத் தருவார் என்று
உறுதியாக நம்புவான்.
தான் கேட்பது தரப்படாவிட்டால் தான் கேட்டது தனக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை முழு மனதோடு ஏற்றுக் கொள்வான்.
இததகைய விசுவாசமும், நம்பிக்கையும் உள்ளவனிடம் உள்ள இறையன்பும் மிக ஆழமாக இருக்கும்.
எப்போவோ வாசித்தது, இதைச் சொன்ன புனிதர் பெயர்
ஞாபகமில்லை.
அவர் தனது செபத்தில்,
"ஆண்டவரே,
நீர் என் கடவுள் என்பதற்காக மட்டும் உம்மை அன்பு செய்கிறேன்.
பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செய்கிறேன்.
நித்திய காலமும் உமது திருமுக தரிசனத்தை எனக்குத் தராவிட்டாலும்,
உம்மை அன்பு செய்துகொண்டுதான்
இருப்பேன்."
இந்த அன்புக்குப் பெயர்தான்
"நிபந்தனை அற்ற அன்பு."
(unconditional love)
ஆனால் இயேசு இத்தகைய அன்புக்கு நித்திய பேரின்பத்தைப் பரிசாக அளிப்பார்.
புனித பிரான்சீஸ் அசிசியாரது அன்புக்குப் பரிசாக இயேசு தனது ஐந்து காயங்களையே கொடுத்தார்.
அதாவது தான் அனுபவித்த வேதனையைத் தன் பக்தனோடு பகிர்ந்து கொண்டார்.
அன்பிற்காக வேதனையையும் உளமாற ஏற்றுக் கொள்ளும்
அன்புதான் உண்மையான அன்பு, கிறிஸ்தவ அன்பு.
நம்மேல் கொண்ட அன்பின் காரணமாக இயேசு எவ்வளவு வேதனைகளை ஏற்றுக் கொண்டார் என்று நமக்குத் தெரியும்.
ஆண்டவரின் வேதனையில் பங்கு பெறுபவன், அவரது நித்திய பேரின்பத்திலும் பங்கு பெறுவான்.
இயேசுவின் சொந்த ஊர்க்காரர்களிடம் விசுவாசமில்லாமையால்
அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.
நாம் புதுமைகளை எதிர்பார்த்து அல்ல, இயேசு நம் ஆண்டவர் என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.
அவரது அன்புக் கரங்களில் பத்திரமாக இருப்போம்.
லூர்து செல்வம்.