Wednesday, November 29, 2023

என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.(மத். 4:19)

'என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.
(மத். 4:19)

கடவுளின் வழிகள் அற்புதமானவை.

மனித மூளையால் முழுமையாக கண்டுபிடிக்க முடியாதவை.

ஒரு பெரிய படையால் வெல்ல முடியாத,

ஆறு முழம் ஒரு சாண் உயரமுள்ள,

 தலையில் வெண்கலத் தொப்பியும், மீன் செதிலைப் போன்ற ஒரு போர்க்கவசமும் அணிந்திருந்த. 

 கால்களில் வெண்கலக் கவசத்தையும், தோள்களின் மேல் ஒரு வெண்கலக் கேடயத்தையும் அணிந்திருந்த,

 நெசவுக்காரனின் தறிமரம் போன்றிருந்த அறுநூறு சீக்கல் இரும்பாலான  ஈட்டியை வைத்திருந்த 

கோலியாத் என்னும் பிலிஸ்தியர்படை தளபதியை வெல்ல

ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த தாவீது என்ற சிறுவனைக் கடவுள் பயன்படுத்தினார்.

அவன் ஒரு கவணையும், ஓடையில் பொறுக்கிய ஐந்து கூழாங்கற்களையும் பயன்படுத்தி கோலியாத்தைக் கொன்றான்.

கவணையும், கூழாங்கற்களையும் பயன்படுத்தி ஒரு பெரிய படையையே வென்ற தாவீதின் வம்சத்தில் தான் இறைமகன் மனுவுரு எடுத்தார்.

இயேசு கடவுள். சர்வ வல்லமையும், அளவற்ற ஞானமும் உள்ளவர்.

தனது நற்செய்தியை உலகெங்கும் போதிக்க,

 படிப்பறிவில்லாத பாமர சீடர்களையே பயன்படுத்தினார்.

ஒரு நாள் அவர்  கலிலேயாக் கடலோரமாய்  நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், 

அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரர்கள்  

கடலில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

படிப்பறிவில்லாத அவர்கள் வாழ பயன்படுத்திய தொழிலே மீன் பிடித்தல் தான்.


மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்ட அவர்களைப் பார்த்து,

 "என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

மனிதர்களுக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை  இறைவனிடம் கொண்டுவரும் பணிக்காக இயேசு அவர்களை அழைத்தார்.

இன்று 14 ஆண்டுகள் தேவ சாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்ற பின்பு தான் ஒருவர் குருவானவர் ஆக முடியும்.

ஆனால் இயேசு பள்ளி கூட வாசமே பட்டறியாத சீமோனுக்கு இராயப்பர் என்று பெயரிட்டு 

அவரைத் தனது திருச்சபைக்கு தலைவராக நியமித்தார்.

அவர்கள் மீன் பிடித்தது உலக வாழ்க்கைக்கான தொழில்.

உண்ண உணவும், உடுந்த உடையும், உறங்க உறைவிடமும் கிடைப்பதற்காக செய்த தொழில்.

அவர்களை  ஆன்மீக அர்ப்பண வாழ்வுக்காக இயேசு அழைத்தார்.

உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

தங்கள் குடும்பத்தினருக்கு உணவும் உடையும் எப்படி அளிப்பது என்பதைப் பற்றி அவர்கள்  சிந்தித்துப் பார்க்கவில்லை.

இயேசு அழைத்தார். அவரைப் பின் சென்றார்கள்.

அருளப்பரும், யாகப்பருங்கூட  மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தான்.

அவர்களையும் இயேசு அழைத்தார்.

உடனே அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

இயேசு அழைத்தவுடன் உலகத்தை விட்டு விட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் தான் அவருடைய சீடர்களாக வாழ முடியும்.

நாம் எப்படி?

உலகில் வாழ்வது உண்மைதான்.
உணவும், உடையும், உறைவிடமும் நமக்குத் தேவை என்பதும் உண்மைதான்.

ஆனால் அவற்றுக்காக வாழ வேண்டும் என்பது உண்மையல்ல.

உணவுக்காக வாழ்வது வேறு, வாழ்வதற்காக உண்பது வேறு.

அதேபோல்தான் உடைக்காக வாழ்வது வேறு, வாழ்வதற்காக உடுப்பது வேறு. 

நாம் உலகில் வாழ்வது உலகிற்காக அல்ல,

விண்ணகம் செல்லும் வரை வாழ்வதற்காகவே உலகம்.

இந்த உலகை விட்டு விட்டு தான் நாம் விண்ணகம் செல்ல வேண்டும்.

நாம் என்ன செய்தாலும் அது விண்ணகத்தையே நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும்.

இயேசுவும் உண்டார், உடுத்தினார், உறங்கினார்,

ஆனால் அதுவெல்லாம் நமக்காக.

நமக்கு நற்செய்தியைப் போதிப்பதற்காக.

நமக்காக பாடுகள் பட்டு மரிப்பதற்காக.

உருவமற்ற கடவுள் மனித உருவம் எடுத்தது நமது உடலை மீட்பதற்காக அல்ல, ஆன்மாவை மீட்பதற்காக.

நாம் உடலோடு வாழ்வது உடல் நலனுக்காக அல்ல ஆன்மாவின் நலனுக்காக.

நாம்  நமது உடலைப் பேணுவதே ஆன்மாவுக்காகத்தான்.

ஒரு வண்டியின் சக்கரங்கள் உருள்வது உருள வேண்டும் என்பதற்காக அல்ல,

 வண்டி நகர வேண்டும் என்பதற்காக.

இயேசு நம்மை அழைக்கிறார்.

நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின் செல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் எப்படி விடுவது?

நமது உறவுகளின், நாம் பயன்படுத்தும் பொருட்களின் உலக பயன்பாட்டை விட்டுவிட்டு

 அவற்றை இறைவனுக்காக பயன்படுத்த புறப்பட வேண்டும்.

இறை பணி செய்து வாழ்வதற்காக உண்ண வேண்டும்.

நாம் செய்யும் இறை பணிக்கு ஏற்ற உடை அணிய வேண்டும்.

அதனால் தான் நமது குருக்கள் இயேசு ஆண்டவர் உடுத்தது போன்ற உடுப்பை உடையாக அணிகிறார்கள்.

ஒரு காலம் இருந்தது, அப்போது குருக்களை குருத்துவ உடையில் மட்டுமே பார்க்க முடியும்.

உடையில் குருத்துவம் இல்லை, ஆனால் உடை குருத்துவத்தின் அடையாளமாக இருந்தது.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

நடக்க முடியாத வயதானவர்கள், ஓடியாடி விளையாடிய இளமைப் பருவத்தை நினைத்துப் பார்ப்பது போல

நான் பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

காலம் மாறும்.

விண்ணக வாழ்வுக்காக உலகில் வாழ்வோம்.

நாம் ஈட்டும் செல்வத்தை விண்ணக வாழ்வுக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காகப் பயன்படுத்துவோம்.

ஆன்மீக வாழ்வு வாழ தைரியம் கிடைப்பதற்காக உண்போம்.

நாம்  யாருக்காக வாழ்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக நமது நடை, உடை, பாவனைகள் இருக்க வேண்டும்.

மற்றவர்களை ஆன்மீகத்தில் வாழ வைப்பதற்காக நாம் வாழ்வோம்.

இயேசு நம்மை அழைக்கின்றார் மனிதர்களைப் பிடிப்பதற்காக.

மனிதர்களைப் பிடித்து இயேசுவிடம் அழைத்து வருவோம்.

நாம் வாழ்வதே அதற்காகத்தான்.

லூர்து செல்வம்.

Sunday, November 26, 2023

சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

இறை வார்த்தையை வாசித்தால் மட்டும் போதாது, சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும்.

இறை வார்த்தை நமது வாழ்வாகும்போதுதான் நாம் பயன் பெறுவோம்.

அனைவரும் விண்ணுலகத் தந்தையின் பிள்ளைகள்.

இறைமகனின் சகோதரர்கள்.
நமக்கும் சகோதரர்கள்.

ஒரே குடும்பத்துப் பிள்ளைகள் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம்.

அம்மா சமைத்ததை அனைவரும் பகிர்ந்து உண்பது வழக்கம்.

நாம் விண்ணகத் தந்தையிடம் வேண்டும்போது,

"எங்கள்  அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்" என்று சொல்கிறோம்.

'எனக்கு' என்று சொல்லவில்லை 'எங்களுக்கு' என்று சொல்கிறோம்.

ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் கொடுத்து சாப்பிட்டால் பெற்றோருக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!

அதைவிட அதிகமாக கடவுள் மகிழ்வார் அவருடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கொடுத்து உண்டால்.

ஒருவருக்கொருவர் கொடுத்து உண்பதற்காகத்தான் 'எங்களுக்கு' உணவு தாரும் என்று விண்ணகத் தந்தையிடம் கேட்கிறோம்.

நமது ஜெபம் உணர்வுப்பூர்வமானதா அல்லது வெறும் வார்த்தைகளால் ஆனதா?

நம் அநேகருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது நாம் உணர்வுப் பூர்வமாக ஜெபிப்பதாகத் தெரியவில்லை.

நமது அயலானுக்கு எதைக் கொடுத்தாலும் கடவுளுக்கே கொடுக்கிறோம்.

கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரனுக்கு 10 பைசா கொடுக்க மனதில்லாமல்

 கோவிலுக்குள் சென்று உண்டியலில் பத்து ரூபாய் போட்டால் எந்தவித ஆன்மீகப் பலனும் இல்லை.

கடவுள் கைநீட்டிக் கேட்பதைக் கொடுக்காமல் உண்டியலில் மட்டும் போட்டால் கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம்.

கடவுள் நம் தந்தை.
அயலான் நமது சகோதரன்.

'நம்முடைய சகோதரர்களோடு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து உண்டு வாழ்ந்தால் தந்தை மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்.

இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து உண்போம்.

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்ட நம் விண்ணகத் தந்தைக்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரிய காணிக்கை.

நம்மிடம் இருப்பதெல்லாம் நமது தந்தையிடமிருந்து பெற்றதுதான்.

கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதே நமது சிறிய சகோதரர்களுக்கு கொடுப்பதற்காகத்தான்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அவர் விண்ணகத்தையே பரிசாகக் கொடுப்பார்.

தந்ததைக் கொடுப்போம்.
 தருவதைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, November 24, 2023

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது: வழி பரந்தது: அதன் வழியே நுழைபவரும் பலர்."(மத்.7:13)

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது: வழி பரந்தது: அதன் வழியே நுழைபவரும் பலர்."
(மத்.7:13)

தியானிக்கும் போது கருத்தில் பட்டவை:

இப்படித்தான் நடக்க வேண்டும்,
இது விண்ணகம் நோக்கி செல்லும் பாதை.

எப்படியும் நடக்கலாம், இது அழிவை நோக்கி செல்லும் பாதை.

விண்ணகப் பாதையின் இருமறுங்கிலும் இப்படி நடக்கக்கூடாது  என்ற பாதுகாப்பு வளையம் இருக்கும்.

அழிவை நோக்கி செல்லும் பாதையில் எந்த பாதுகாப்பும் இருக்காது.

நம்மை படைத்தவரை முழுமையான உள்ளத்தோடு நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

இந்த பாதை வழியே மட்டும்தான் நடக்க வேண்டும்.

இறைவனின் கட்டளைகளை மீறி பாவம் செய்யக்கூடாது. இது பாதுகாப்பு வளையம். இதைத் தாண்டினால் அழிவின் பாதையில் நடக்க நேரிடும். 

குறுகலான விண்ணகப் பாதையில் நம்மை வழி நடத்துபவர் நமது ஆண்டவராகிய இயேசு.

உண்மையில் அவர்தான் வழி.

நமது கண்ணும், கருத்தும் எப்போதும் அவர் மேலேயே இருக்க வேண்டும்.

இயேசு சொல்கிறார்:

உலகப் பற்றை விடு, 
என்னை இறுகப் பற்றிக்கொள்.

உன்னைப் பகைப்பவர்களை நேசி.

உனக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்.

உன் மனதை யாராவது நோகச் செய்திருந்தால் அவர்களை மன்னித்து விடு.

மன்னிப்பு மட்டும் தான் மீட்புக்கான ஒரே வழி.

 உன்னை மன்னிப்பதற்காகவே நான் உலகிற்கு வந்தேன்.

 என்னைச் சிலுவையில் அறைந்தவர்களையே நான் மன்னித்து விட்டேன். 

எனது சீடன் நீ. 
என்னைப் பின்பற்று.

மன்னிப்பவர்களுக்கு மட்டுமே மன்னிப்புக் கிடைக்கும்.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும் நமது காதுகளில் விழுந்து, கருத்தில் பதிந்து, கால்களை வழி நடத்த வேண்டும்.

இயேசுவின் விருப்பப்படி நடப்பவர்கள் குறுகலான விண்ணகப் பாதையில் நடக்கிறார்கள்.

தங்கள் விருப்பப்படி நடப்பவர்கள் பேரிடர்ப் பாதையில் நடக்கிறார்கள்.

பேரிடர்ப் பாதை அகன்றது, கட்டுப்பாடுகள் அற்றது.

இயேசுவின் விருப்பப்படி இயேசுவாகிய பாதையில் நடப்போம்.

விண்ணக வாசல் திறந்திருக்கிறது, உள்ளே நுழைவோம்.

லூர்து செல்வம்.

Thursday, November 23, 2023

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: (மத்.7:7)

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: (மத்.7:7)

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் ஆண்டவர் சொன்னார்.

கேட்கிறோமா?

கேட்கிறோம். நமக்குப் பிரியமானதைக் கேட்கிறோம்.

அவருக்கு பிரியமானதை, அவர் கேட்கச் சொன்னதைக் கேட்கிறோமா?

அப்பத்தைக் கேட்கிறோமா? 
கல்லைக் கேட்கிறோமா?

அப்பத்தின் வடிவில் வாழ்கின்றார் இயேசு.

அவரைத் தினமும் என்னுள் வாரும் என்று கேட்கிறோமா?

வந்து என்னுள் தங்கும் என்று கேட்கிறோமா?

தங்கி என்னை ஆளும் என்று கேட்கிறோமா?

உமது அருளைத் தாரும் என்று கேட்கிறோமா?

உமது அன்னையை அருளால் நிரப்பியது போல எங்களையும் நிரப்பும் என்று கேட்கிறோமா?

உமது அன்னை உமக்கு அடிமையாய் வாழ்ந்தது போல நாங்களும் வாழ வரம் தாரும் என்று கேட்கிறோமா?

உமது சிலுவையின் பின்னால் அவள் நடந்தது போல நாங்களும் நடக்க வரம் தாரும் என்று கேட்கிறோமா?

சிலுவையின் அடியில் அவள் நின்றது போல நாங்களும் நிற்க வரம் தாரும் என்று கேட்கிறோமா?

எங்களுக்காக அல்லாமல் உமக்காக மட்டும் வாழ வரம் தாரும் என்று கேட்கிறோமா?

எங்களது மரண நேரத்தில் எங்களோடு இருந்து, எங்களை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கேட்கிறோமா?

இதையெல்லாம் கேட்டால் நீர் கட்டாயம் கொடுப்பீர்.

நாங்கள் எதைக் கேட்கிறோம்?

ஒன்றுக்கும் உதவா கல்லை அல்லவா கேட்கிறோம்!

கல்லாலும், மண்ணாலும் ஆனது உலகம்.

கடவுள் நம்மை படைத்தது மண்ணுக்காக அல்ல, விண்ணுக்காக.

நம்மை விண்ணுக்கு வழி கேட்கச் சொன்னால், நாம் மண்ணுக்கு அல்லவா வழி கேட்கிறோம்?

விண்ணுக்கு வழி கேட்டால் காட்டுவார்.

மண்ணுக்கு வழி கேட்டால் விண்ணுக்கு கேட்கு மட்டும் அமைதியாகக் காத்திருப்பார்.

நாம் கேட்பதை அவர் தராவிட்டால்,

தர விரும்பாததை கேட்கிறோம் என்று அர்த்தம்.

அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தது, நம்மை விண்ணுக்கு அழைத்துச் செல்ல, மண்ணில் வாழ வைக்க அல்ல.

அவர் பாடுகள் பட்டு மரித்தது நமது ஆன்மாவை மீட்க, உடலை வளர்க்க அல்ல.

ஆன்மீக மீட்புக்கான உதவிகளைக் கேட்போம், கட்டாயம் தருவார்.

ஆன்மீக மீட்புக்கு உதவாததைக் 
கேட்டால் தர மாட்டார்.

அவர் கேட்கச் சொன்னதை கேட்போம்.

கட்டாயம் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, November 22, 2023

உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?(மத்.7:3)

உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?
(மத்.7:3)

கண்கள் இரண்டு வகை.
 புறக் கண்கள், அகக்கண்.

புறக் கண்கள் நமது முகத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளன.

இவற்றால் தங்களைத் தாங்களே பார்க்க முடியாது.

தங்களுக்கு வெளியே புறத்தே உள்ள பொருள்களையும் மனிதர்களையும் மட்டும் பார்க்க முடியும்.

மனிதர்களின் புறத்தை மட்டுமே அவற்றால் பார்க்க முடியும்,

 அவர்களின் அகத்தை அவர்களால் பார்க்க முடியாது.

அகக்கண் மனதில் உள்ளது.

அவற்றால் நமது மனதின் உட்புறத்தை பார்க்க முடியும்.

நமது புற கண்கள் வழியே மனதுக்குள் வரும் உருவங்களையும் பார்க்க முடியும்.

நமக்கு இருவகைக் கண்கள் இருந்தும் அவை எதற்காக படைக்கப்பட்டனவோ அதை மட்டும் செய்ய நாம் விடுவதில்லை.

நாம் புற உலகில் நடமாட நமக்கு உதவ நமது புற கண்கள் படைக்கப்பட்டுள்ளன.

ஆனால் நாம் நடமாடுவதோடு நிறுத்தி விடுவதில்லை.

புறக்கண்களால் பார்க்கப்படும் உருவங்களை நமது மனதுக்குள் அனுப்பி அவற்றின் அகத்தைப் பற்றி ஆராய ஆரம்பித்து விடுகிறோம்.

நமது அகக் கண்ணின் முக்கியமான வேலை நமது அகத்தைப் பற்றி ஆராய்வது தான்.

நாம் எப்படிப்பட்டவர்கள்,
நல்லவர்களா, கெட்டவர்களா,
நம்மிடம் என்னென்ன திறமைகள் உள்ளன, 
அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்,
நாம் என்னென்ன பாவங்கள் செய்தோம், அவற்றிலிருந்து விடுதலை பெற என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறோம்

என்பன போன்ற நமது உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்வதே நமது அகக்கண்ணின் வேலை. 

ஆனால் அனேக சமயங்களில் நாம் அதைச் செய்வதில்லை.

மாறாக நமது புற கண்கள் பார்க்கும் மனிதர்களின் அகத்தைப் பற்றி ஆராய ஆரம்பித்து விடுகிறோம்.

உண்மையில் யாருடைய அகமும் வெளியிலுள்ள யாருக்கும் தெரியாது.

நமது புறக் கண்களில் படுகின்ற மனிதர்களின்,

நம்மால் பார்க்க முடியாத அகத்தைப் பற்றி ஆராய்ந்து, 

அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

உதாரணத்திற்கு, ஒருவன் டாஸ்மார்க் கடையிலிருந்து வெளியே வருவதை பார்க்கிறோம்.

அவன் அங்கே எதற்காகப் போனான், அங்கே என்ன செய்தான் என்பன எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனால் டாஸ்மார்க் கடையிலிருந்து வருபவன் மது அருந்திவிட்டு தான் வருகிறான் என்று தீர்மானிப்பதோடு

 அவனை ஒரு குடிகாரன் என்றும் தீர்மானித்து விடுகிறோம்.

டாஸ்மாக் கடைக்குள் குடிக்கத்தான் போக வேண்டும் என்று அவசியம் இல்லை.

கடைக்காரனுக்கு கொடுத்த கடனை வசூலிக்கவும் போகலாம்.

கோவிலுக்கு போகின்றவர்கள் எல்லாம் பக்தர்கள் என்று அர்த்தமில்லை.

மதுரைக்குச் சுற்றுலா போகும்போது மீனாட்சி அம்மன் கோவிலை பார்ப்பதற்காக உள்ளே நுழைகிறோம்.

மீனாட்சி அம்மனை வணங்கவா போகிறோம்?

ஹோட்டலுக்குள் நுழைப்பவர்கள் எல்லாம் சாப்பிடத் தான் போகிறார்கள் என்று அர்த்தம் இல்லை.

மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நமது புறக் கண்களால் பார்க்க முடியாது.

பார்க்க முடியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அதைப் பற்றி நாம் சொல்லும் தீர்ப்பு சரியாக இருக்குமா?

நமது உட்புறத்தை ஆராய வேண்டிய மனக் கண்ணில் உதவியால் பிறரின் உட்புறத்தை ஆராய முயற்சி செய்வதே தவறு.

அதனால் தான் ஆண்டவர்,

"உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?"
என்று கேட்கிறார்.

ஒரு பள்ளிக்கூடத்தில் விடுதியில் நடந்த சம்பவம்.

Study Hallல் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அவர்கள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக மேற்பார்வையாளர் அவர்களைச் சுற்றி சுற்றி வருகிறார்.

ஒரு பையன் அருகே வந்தவுடன் நிற்கிறார்.

அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் அட்டையைப் பார்க்கிறார்.

அதில் "குமுதம், பொங்கல் மலர்" என்று எழுதி இருந்தது.

அதன் அடியில் 

"நீங்கள் ரசித்துக் கொண்டிருப்பது குனேகா மரிக்கொழுந்தின் ரம்யமான வாசனை"

 என்றும் எழுதி இருந்தது.

மேற்பார்வையாளர் படித்துக் கொண்டிருந்த பையனிடம் எதுவும் சொல்லாமல் புத்தகத்தைப் பிடுங்கினார்.

பையன் திரும்பிப் பார்த்தான்.

தன் பின்னால் வரும் படி சைகை காட்டினார். அவனும் பின்னால் சென்றான்.

அவருடைய அறைக்குச் சென்று புத்தகத்தை அவரது மேஜையின் மேல் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.

பையன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன படித்துக் கொண்டிருந்தாய்?"

"Child Psychology, Sir"

"நீ படித்துக் கொண்டிருந்த புத்தகம் உனது முன்னால் தான் கிடைக்கிறது.

எவ்வளவு தைரியம் உனக்கு?

துணிந்து பொய் சொல்கிறாய்."

"சத்தியமாக சொல்கிறேன் நான் படித்துக் கொண்டிருந்தது "Child Psychology, Sir."

மேற்பார்வையாளர் புத்தகத்தைக் கையில் எடுத்துத் திறந்து பார்த்தார்.

அது உண்மையிலேயே Child Psychology தான்.

"எதற்காக குமுதத்தின் அட்டையை போட்டிருக்கிறாய்?"

"குனேகா மரிக்கொழுந்தின் ரம்யமான வாசனைக்காக."

"குமுதத்தை எங்கே?"

"Desk க்குள் இருக்கிறது. அதை படிப்பு நேரத்தில் வாசிக்க மாட்டேன். Recreation சமயத்தில்  வாசிப்பேன்."

"அட்டையை கழற்றி Waste paper box க்குள் போட்டுவிடு.

அதுதான் உன் பெயரைக் கெடுத்து விட்டது."

"மன்னிக்க வேண்டும். என் புத்தகத்தைப் பிடுங்கியவுடனே திறந்து பார்த்திருந்தால் என் பெயர் கெட்டிருக்காது."

மேற்பார்வையாளர் பதில் ஒன்னும் சொல்லவில்லை.

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிப்புறத்தை வைத்து மட்டும் எதையும் தீர்மானித்து விடக்கூடாது.

நமது கண்களுக்கு வருவோம்.

நமது புறக் கண்களால் வெளி பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பார்த்த உடனேயே பார்க்கப்பட்ட ஆளைப் பற்றியோ, பொருளைப் பற்றியோ தீர்ப்பு சொல்லி விடக்கூடாது.

பிறரைப் பற்றி தீர்ப்பு கூற நமக்கு எந்த உரிமையும் இல்லை. 

சகலத்தையும் அறிந்த கடவுளுக்கு மட்டும்தான் தீர்ப்பு கூறும் உரிமை உண்டு.

அந்த உரிமையை அவர் நம்மோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

  நம்மோடு அன்பைப் பகிர்ந்து கொண்ட கடவுள்,

இரக்கத்தைப் பகிர்ந்து கொண்ட கடவுள்,

மன்னிக்கும் குணத்தைப் பகிர்ந்து கொண்ட கடவுள்

தீர்ப்புக் கூறும் உரிமையைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

தன்னிடம் வரும் நோயாளியின் நோயைத் தெரிந்து கொண்டால்தான் மருத்துவரால் மருந்து கொடுக்க முடியும்.

நமது அயலானை நேசிக்க கடமைப்பட்டுள்ள நாம்,

அவனுக்கு உதவி செய்யவும், அவனை நல்வழிப்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அவனது நடத்தையைப் பற்றி தீர்ப்பிட முடியாத நாம் எப்படி அவனை நல்வழிப்படுத்துவது?

நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் கடமை நமக்கு உண்டு.

நற்செய்தியின் அடிப்படையில் புத்திமதிகள் கூறும் கடமையும் நமக்கு உண்டு.

நமது கூற்றை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவனது சுதந்திரத்தின் பால் பட்டது.

இயேசு தனது சீடர்களை நோக்கி,

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.


 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்"

நற்செய்தியை அறிவிக்கும் கடன் நமக்கு உண்டு.

விசுவசிக்க வேண்டியவர்கள் அறிவிக்கப்பட்டவர்கள்.

திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் பிரசங்கத்தின் போது நற்செய்தியை விளக்குவார்.

விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது நமது கடமை.

விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் குருவானவர் என்ன செய்வார்?

ஆசிரியர் வகுப்பில் பாடம் போதிக்கிறார்.

40 மாணவர்களும் கேட்கிறார்கள்.

அனைவரும் தேர்வு எழுதுகின்றார்கள்.

40 பேரில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகின்றவர்களும் இருக்கிறார்கள்.

நூற்றுக்கு 50 மதிப்பெண்கள் பெறுகின்றவர்களும் இருக்கிறார்கள்.

நூற்றுக்கு 0 மதிப்பெண் பெறுகின்றவர்களும் இருக்கிறார்கள்.

ஆசிரியர் என்ன செய்வார்?

பிறரைப் பற்றி தீர்ப்புக் கூறுவதை விட்டுவிட்டு நமது அகக்கண்ணால் நம்மையே ஆராய்வோம்.

முதலில் நாம் திருந்துவோம்.

திருந்தி நல்ல வாழ்வு வாழ்வோம்.

நம்மைப் பார்ப்பவர்கள் மனம் திரும்ப சந்தர்ப்பம் கொடுப்போம்.

மற்றவர்களைப் பற்றி தீர்ப்புச் சொல்வதற்குப் பதிலாக 

நாம் நன்றாக வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.


லூர்து செல்வம்.

Tuesday, November 21, 2023

சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும் .( லூக்.19:5)

.சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும் .
( லூக்.19:5)

 சக்கேயு தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன்.

ஆயக்காரன் என்றால் வரி வசூலிப்பவன்.

யூதர்களிடம் வரி வசூலித்து, வரிப்பணத்தை ரோமை அரசுக்கு செலுத்துபவன்.

வரி வசூதிப்பவர்கள் யூதர்களால் பாவிகள் என கருதப்பட்டார்கள்.

மனிதர்கள் அனைவருமே பாவிகள் தான்.

பாவிகளைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

இயேசு யெரிக்கோ வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது சக்கேயு அவரைப் பார்க்க ஆசைப்பட்டான்.

ஆனால் அவன் குள்ளமாக இருந்ததால் கூட்டத்தில் அவரால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆசைப்படும் முன்பே இயேசு அவனைப் பார்க்க ஆசைப்பட்டு விட்டார்.

இயேசுவின் ஆசை நித்தியமானது.

யெரிக்கோ வழியாக செல்லும் போது சகேயுவைப் பார்க்க வேண்டும்,

 அவனது வீட்டில் வந்து அன்று தங்க வேண்டும் என்று அவர் நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டு விட்டார்.

அந்தத் திட்டப்படி சக்கேயுவின் மனதில் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டவரும் அவரே.

அவன் அந்தத் தூண்டுதலை ஏற்றுக் கொண்டான்.

இறைவனின் தூண்டுதலை (Inspiration) ஏற்றுக் கொள்வது தான் மீட்புக்கு முதல் படி.

சக்கேயுவை அழைத்த இயேசு அவனோடு அவனது வீட்டுக்குச் சென்றார்.

இதைக் கண்ட அனைவரும், "பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தனர்.

இயேசு அவர்களது முணுமுணுப்பைப்
 பற்றி கவலைப்படவில்லை.

அவரது எண்ணம் ஒரு பாவியை மனம் திருப்புவதிலேயே இருந்தது.

அவரது எண்ணப்படி பாவியும் மனம் திரும்பி விட்டான்.


சக்கேயு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்.

 எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னான்.


அதற்கு இயேசு, " இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

இயேசு பாவிகளைத் தேடி உலகிற்கு வந்த போது பாவிகளை மொத்தமாக பார்த்து விட்டுப் போக வரவில்லை.

அளவில்லாத ஞானமுள்ள அவர் மனதில் உலகில் உள்ள அத்தனை பாவிகளின் எண்ணமும் இருந்தது.

சக்கேயுவை அவர் தேடி வந்தது போல நம் ஒவ்வொருவரையும் தேடி வந்தார்.

சக்கேயுவை நோக்கி,    
"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" 

என்று சொன்னது போல நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார்.

சக்கேயு வெறுமனே இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படவில்லை.

 அவரால் மீட்பு அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால்தான் அவர் பார்க்கும் படி அத்தி மரத்தின் மேல் ஏறிக்கொண்டான். 

அவர் அழைத்தவுடன் இறங்கி அவரது விருப்பப்படி தனது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றான். தனது மீட்பின் மீது உள்ள ஆவலை இயேசுவுக்குத் தெரிவித்தான்.

நித்திய காலத்திலிருந்தே உலகத்தில் உள்ள அத்தனை பாவிகளும் இயேசுவின் மனதில் தனித்தனியே உள்ளனர்.

உலக அரசு நாட்டு நன்மை கருதி திட்டம் போடும்போது நம் ஒவ்வொருவரையும் பற்றி தனித்தனியே நினைப்பதில்லை.

மக்கள் தொகையை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு திட்டம் போடுவார்கள்.

திட்டத்தினால் பயன்படாதவர்களைப் பற்றி அரசு கவலைப்படாது.

நாட்டின் பிரதமருக்கு ஜனத்தொகை பற்றிய புள்ளி விவரங்கள் தெரியும்.

ஆனால் ஒவ்வொரு குடிமகனையும் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்த கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனைப் பற்றிய முழு விவரங்களும் நித்திய காலமாகவே தெரியும்.

ஒவ்வொருவரையும் தனித்தனியே அவரவர் தேவைகளுக்கு ஏற்ப கடவுள் வழி நடத்துகிறார்.

இந்த வரி எழுதும்போது அடுத்த வரி எதுவாக இருக்க வேண்டும் என்று மனதில் தூண்டுபவர் அவரே.

பாவிகளாகிய நாம் பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டும் என்று உள் தூண்டுதல் நம் உள்ளத்தில் உதிக்கும் போது அன்று சக்கேயு மனம் திரும்பியது போல நாமும் மனம் திரும்ப வேண்டும்.

அன்று சக்கேயுவிடம் சொன்னது போல நம்மிடமும் ஆண்டவர் சொல்கிறார்,

"மகனே, பாவ நிலையிலிருந்து இறங்கி வா. நான் உன் உள்ளத்தில் தங்க வேண்டும்."

 "ஆண்டவரே, வாரும். என் உள்ளத்தில் தங்கி என்னை வழி நடத்த வாரும்.

நான் உமக்கு விரோதமாகச் செய்த எல்லா பாவங்களுக்காகவும் உண்மையாகவே மனஸ்தாபப்படுகிறேன்.

என் பாவங்களை மன்னியும்.

நீர் மன்னிக்கும் போது பரிசுத்தமாகும் எனது உள்ளத்தை புண்ணிய மலர்களால் அலங்கரிப்பேன்.

உமது விருப்பத்திற்கு இணங்க முழுமையான உள்ளத்தோடு உம்மை நேசிப்பதோடு, என்னை நேசிப்பது போல் எனது அயலானையும் நேசிப்பேன்.

என்னிடம் உள்ளதை எல்லாம் எனது அயலானோடு பகிர்ந்து கொள்வேன்."

என்று நாம் கூற வேண்டும்.

இயேசு நமது உள்ளத்தில் ஒரு நாள் மட்டுமல்ல, நமது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு வினாடியும் தங்குவார்.

அவர் நமது உள்ளத்தில் இருக்கும் போது நமது எண்ணங்கள் எல்லாம் அவரைப் பற்றிய இருக்க வேண்டும்.

"இயேசுவே என் மேல் இரக்கமாயிரும்.
என் பாவங்களை மன்னியும்."

என்ற மனவல்லப ஜெபத்தை அடிக்கடி சொல்ல வேண்டும்.

அன்று இயேசு சிலுவையில் தன்னையே நமக்காகப் பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்.

நாமும் இயேசு நமக்காக பட்ட பாடுகளையும், அவரது சிலுவை மரணத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.


"விண்ணகத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே,

உமது திருமகனும், எங்கள் 
ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வேதனை நிறைந்த பாடுகளையும், சிலுவை மரணத்தையும் 

எனது பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."

ஜெபம் சிறியதாக இருக்கலாம், அது நமது உள்ளத்தில் இருந்து வரும்போது நமது தந்தைக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

அதன் ஆன்மீகப் பலன் மிகவும் பெரியதாக இருக்கும். -

இயேசு அன்று சக்கேயுவிடம் சொன்னது போல நம்மை நோக்கி,

 " இன்று உனக்கு மீட்பு உண்டாயிற்று. நீயும் என் மகன்தானே." என்பார்.

'உனக்கு மீட்பு உண்டாயிற்று' என்றால் நீ என்னோடு நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வாய்" என்று அர்த்தம்.


நமது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் இயேசுவோடு உரையாடுவதின் மூலம் நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு தகுதி உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

இவ்வுலகில் நாம் வாழ்வதும் நோக்கமே அதுதான்.

சக்கேயுவைப் போல நாமும் இயேசுவை நமது உள்ளமாகிய வீட்டுக்கு அழைத்துச் செல்வோம்.

அவரோடே எப்போதும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, November 20, 2023

சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.( மத்.13:8)

சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.
( மத்.13:8)

விவசாயம் செய்பவர்களுக்கு விதை விதைப்பவன் விதைக்கச் சென்ற  உவமையின் கருத்து நன்கு புரியும்.

விதை தரமானதாக இருந்தாலும் அது விழும் நிலம் தரமானதாக இருந்தால்தான் முளைத்து வளர்ந்து பலன் தரும்.

விவசாயி விதைப்பதற்கு முன்னால் நிலத்தை முதலில் பண்படுத்துவான்.

அதில் கிடக்கும் கற்கள், முள் செடிகள், களைச் செடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவான்.

அதன் பின் நிலமெங்கும் இயற்கை எருவை பரப்புவான்.  (மாட்டுச் சாணத்திலிருந்து கிடைக்கும் எரு.)

பிறகு நிலத்தை நன்கு உழுது,
 மண்ணை விதையிலிருந்து வெளிவரும் வேர்கள் ஊன்றி வளர்வதற்கு ஏற்றதாக மாற்றுவான்.

அதன் பின்பு தரமான விதையை அங்கு விதைப்பான.

மழை பெய்யும் போதோ அல்லது வாய்க்காலிலிருந்து நீர் பாய்ச்சும் போதோ தண்ணீர் எங்கும் பரந்து செல்வதற்காக நிலத்தை சமப்படுத்துவான்.

விதைகள் முளைத்து வளரும் போது அவற்றோடு முளைக்கும் களைகளை களைகொத்தி கொண்டு அப்புறப்படுத்துவான்.

அடிக்கடி எருவைத்  தூவி தேவையான போதெல்லாம் நீர்ப் பாய்ச்சுவான்.

பயிர் நன்கு வளர்ந்து மிகுந்த பலன்தரும்.

இயேசு கூறிய உவமையின் வழியே ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.

நிலம் நமது உள்ளம்.

விதை இறை வார்த்தை.

காலையில் எழுந்தவுடன் வேதாகமத்தை வாசிக்கிறோம்.

கோவிலுக்குத் திருப்பலியில் கலந்து வழிபாடு செய்யும்போது குருவானவர் வைக்கும் பிரசங்கத்தைக் கேட்கிறோம்.

நாம் வேதாகமத்தை வாசிக்கும் போதும், குருவானவரின் பிரசங்கத்தைக் கேட்கும் போதும் இறை வார்த்தையாகிய விதை நமது உள்ளத்தில் விதைக்கப்படுகிறது.

நமது உள்ளம் எப்படி இருந்தால் விதை முளைத்து வளர்ந்து பலன் தரும்?

நமது உள்ளத்தில் கற்கள், முள் செடிகள் ஆகியவற்றைப் போன்ற எண்ணங்கள், அதாவது இறை வார்த்தைக்குப் பொருந்தாத எண்ணங்கள் நமது உள்ளத்தில் இருந்தால்.

நமது உள்ளம் இறை வார்த்தை முளைக்க தகுதியற்றது.

காலையில் வேதாகமத்தை வாசிக்கும் போது நமது உள்ளம் விளையாட்டு மைதானத்தில் இருந்தால்,

இறைவார்த்தை நமது உள்ளத்தில் விழாது.

குருவானவரின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது நமது உள்ளம் பூசை முடிந்த பின் போக வேண்டிய கசாப்புக் கடையிலும், நண்பகலில் சாப்பிட வேண்டிய பிரியாணியிலும்,
T.V.யில் பார்க்க வேண்டிய கிரிக்கெட் உலகக் கோப்பை விளையாட்டிலும் இருந்தால்

குருவானவரின் பிரசங்கம் காதில் விழுந்து, வழுக்கி வெளியே விழுந்து விடும், நமது உள்ளத்துக்குள் போகாது.

உள்ளத்துக்குள் போகாத விதை எப்படி அங்கு முளைக்கும்?

அப்படியே போனாலும் இறை வார்த்தைக்கு எதிரான எண்ணங்கள் மத்தியில் விழுந்து அது பலன் தராது.

பூசை முடிந்தவுடன் ஒரு நண்பர் சொல்கிறார்,

"சுவாமியார் பிரசங்கத்தை மிகவும் நீட்டி விட்டார். எட்டு மணிக்கு ஆரம்பித்த பூசை பத்து மணிக்கு முடிந்திருக்கிறது. இனி கசாப்பு கடைக்குப் போனாலும் நல்ல கறி கிடைக்காது."

உடல் கோவிலிலும், உள்ளம் கோவிலுக்கு வெளியிலும் இருந்தால் இறை வார்த்தை விதை விழுந்தாலும் அது முளைக்காது.

அதற்கு சம்பந்தம் இல்லாத எண்ணங்கள் அதை அமுக்கி விடும்.

நமது உள்ளம் இறைவனோடு ஒன்றித்து இருந்தால்தான் அவரது வார்த்தை நம் உள்ளத்தில் பதியும்.

இறை வார்த்தை நமது உள்ளத்தில் பதிந்தால் தான் அது நமது சொல்லிலும், செயலிலும் வெளிப்பட்டு

நமது ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்தும்.

நமது உள்ளமாகிய நிலத்தில் பாவ ஆசைகளாகிய முள்செடிகள் இருக்கக் கூடாது.

ஏனெனில் அவற்றினிடையே விழுந்த இறை வார்த்தையால் நமக்கு எந்த பயனும் இல்லை.

இறை வார்த்தையைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் நமது உள்ளத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.

பசியோடு இருந்தால்தான் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகும்.

உண்மையான ஆவலுடன் இறைவாதத்தையைக் கேட்டால் தான் அதன் பொருள் நமக்கு புரியும்.

அதன்படி வாழ ஆவல் பிறக்கும்.

விவசாயி தனது நிலத்தைப் பண்படுத்தி விட்டு விதைப்பது போல,

 நாமும் நமது உள்ளமாகிய நிலத்தை பயன்படுத்திவிட்டு இறைவார்த்தையைக் கேட்டுப் பயன்பெறுவோம்.

. லூர்து செல்வம்.

Sunday, November 19, 2023

இதோ, என் தாயும் என் சகோதரரும்.( மத்.12:49)

இதோ, என் தாயும் என் சகோதரரும்.
( மத்.12:49)

இயேசு அவரைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்திற்கு நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அன்னை மரியாளும், அவளுடைய சகோதரியின் பிள்ளைகளும்
இயேசுவைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் கூட்டத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.

அதைக் காதில் வாங்கிக் கொண்ட இயேசு,

தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, 

"இதோ, என் தாயும் என் சகோதரரும்.

வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.

நமது அன்னையை விரும்பாத நமது பிரிவினை சகோதரர்கள்,

இயேசுவின் இந்த வார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனது அன்னைக்குக் கொடுக்கவில்லை என்பது போல் பேசுகிறார்கள்.

இயேசு தனது அன்னையை அளவு கடந்த விதமாய் நேசித்தார்.

தனது தந்தையின் விருப்பப்படி மனிதனாகப் பிறக்கத் தீர்மானத்த இயேசு

கன்னி மரியாள்தான் தனது அன்னையாக இருக்க வேண்டும் என்று நித்திய காலத்திலிருந்தே தீர்மானித்துவிட்டார். 

இங்கே ஒரு முக்கியமான உண்மையை மனதில் கொள்ள வேண்டும்.

தனது நித்திய தந்தையின் விருப்பத்தை மட்டுமல்ல,

தான் தனது தாயாக தேர்ந்தெடுத்த மரியாளின் விருப்பத்தையும் இயேசு நிறைவேற்றினார்.

மரியாள் சிறுமியாக இருக்கும்போதே கடவுளின் முன் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

இறைமகன் மனித சுபாவத்தில் தனது அன்னையாக தேர்ந்தெடுத்த மரியாளின் விருப்பத்திற்கு இணங்க 

அவளது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படாமல், பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவளது வயிற்றில் மனிதவுரு எடுத்தார். 

கன்னி மரியாள் இயேசு அவளது வயிற்றில் மனிதவுரு எடுக்கு முன்னும் கன்னி, 

எடுக்கும் போதும் கன்னி, 

பிறந்த பிறகும் கன்னி, 

முக்காலமும் கன்னி.

ஆக இயேசு தனது இறைத் தந்தையின் சித்தத்தையும், மனிதத் தாயின் சித்தத்தையும் நிறைவேற்றினார்.

அது மட்டுமல்ல தனது அன்னை அவளது தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே அவளை ஜென்மப் பாவ மாசிலிருந்து காப்பாற்றினார்.

உற்பவித்த கணத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் அருள் நிறைந்தவளாக வாழ்ந்த ஒரே பெண்ணரசி அன்னை மரியாள் மட்டும்தான்.

கடவுளின் தூதரே மரியாளை,

"அருள் நிறைந்தவளே வாழ்க," என்று வாழ்த்தும் வரம் பெற்றாள்.

மனுமகன் தனது தாயின் வயிற்றில் 10 மாதங்கள் வாழ்ந்து பிறந்தார்.

பிறந்தபின் 30 ஆண்டுகள் தனது தாய்க்குக் கீழ்படிந்து வாழ்ந்தார்.

இயேசு பொது வாழ்க்கை வாழ்ந்தது மூன்றே ஆண்டுகள் தான். ஆனால் தனது அன்னைக்குக் கீழ்படிந்து வாழ்ந்தது 30 ஆண்டுகள்.

கீழ்ப்படிந்து வாழ்வதன் அவசியத்தை இயேசு தனது வாழ்க்கையின் மூலமே நமக்குப் போதித்தார்.

இயேசு தன்னைப் பெற்ற அன்னைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஆதாரம்.

இயேசு தனது சீடர்களைக் காண்பித்து,

"இதோ, என் தாயும் என் சகோதரரும்."
என்று ஏன் சொன்னார்?

ஒரு காதலன் தனது காதலியை நோக்கி,  

"நீதான் எனக்கு உயிர்"

என்று சொன்னால் அவனுக்கு உயிர் இல்லை என்று அர்த்தம் அல்ல,

அவனது உயிருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை காதலிக்கும் கொடுக்கிறான் என்பது தான் அர்த்தம்.

அதாவது அவனது  காதலி அவனது உயிரைப் போன்றவள் என்பது தான் அர்த்தம்.


இயேசு ஏதாவது ஒரு பொருளை வலியுறுத்த வேண்டுமென்றால் அதை உயர்வு நவிர்ச்சி அணி மூலம் மிகைப்படுத்தி கூறுவது வழக்கம்.

ஒருமுறை ஸ்நாபக அருளப்பரைப் பற்றி கூறும்போது,

இயேசு, "பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை." என்று கூறினார்.

இயேசுவே பெண்ணிடம் பிறந்தவர் தான். அப்படியானால் அருளப்பர் இயேசுவை விட மேலானவர் என்று அர்த்தமா? 

ஸ்நாபக அருளப்பரின் பெருமையை வலியுறுத்துவதற்காகத் தான் இயேசு அப்படிச் சொன்னார்.


இயேசுவின் வார்த்தைகளை அவரது நோக்கிலிருந்து பார்க்க வேண்டும், நமது 
நோக்கிலிருந்து அல்ல.

மரியாள் விண்ணகத் தந்தையின் சித்தத்தின் படி நடந்து கொள்வது போலவே,

இயேசுவின் சீடர்களும் விண்ணகத் தந்தையின் சித்தத்தின் படி நடந்து கொள்கிறார்கள்.

ஆகவே அவர்களும் இயேசுவின் தாய் போன்றவர்கள் தான்.

ஆனாலும் "அருள் நிறைந்த" என்ற வார்த்தைகள் மரியாளுக்கு மட்டுமே பொருந்தும்.

"அருள் நிறைந்த இராயப்பரே" என்று நாம் சொல்ல முடியாது.

ஒரு பாத்திரம் நிறைய நீர் இருந்தால் அதற்குள் வேறு எந்தப் பொருளும் இருக்க முடியாது.

அதேபோல ஒருவரது ஆன்மா அருளால் நிறைந்திருந்தால் அங்கு அருள் தவிற அதற்கு எதிரான ஒரு சிறு மாசு மறு கூட இருக்கக் முடியாது.

இயேசு தனது தாயை மாசு மறு இல்லாமல் அருள் நிறைந்தவளாக படைத்தார்.

தனது அன்னையைப் போலவே வேறு யாரையும் படைக்கவில்லை.

மற்றவர்கள் அருளில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அன்னை மரியாள் அளவுக்கு வளர முடியாது.

உலகத்தில் தனது வாழ்க்கையை ஆண்டவரின் அடிமையாகத் தொடங்கினாள்.

இன்று பரலோக பூலோக இராக்கினியாய் விளங்குகிறாள்.

வேறு எந்த புனிதரையும் அந்த பெயரால் அழைக்க முடியாது.

இன்று மோட்சத்தில் ஆன்மாவோடும் சரீரத்தோடும் இருப்பவர்கள் இயேசுவும், அவரது அன்னையும் மட்டும்தான்.

மற்ற புனிதர்களுக்கு அந்த வரம் இயேசுவின் இரண்டாவது வருகைக்குப் பின் தான் கிடைக்கும்.

இயேசு தனது சீடர்களைக் காண்பித்து,

"இதோ, என் தாயும் என் சகோதரரும்."
என்று கூறினார்.

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றும் நாம் அனைவரும் அவரின் சீடர்கள் தான்.

அப்படியானால் அவருடைய வார்த்தைகள் நமக்குப் பொருந்துமா?

நாம் அன்னை மரியாள் செய்தது போல ஆண்டவரின் அடிமைகளாய் வாழ்ந்து விண்ணகத் தந்தையின் திருச் சித்தத்தை பூமியில் நிறைவேற்றினால் நாமும் அன்னை மரியாளைப் போன்றவர்களே.

"தாயைப் போல் பிள்ளை."

இயேசுவின் உண்மையான சீடர்களாய் நாம் வாழ்ந்தால் 

மற்றவர்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பது போலவே அன்னை மரியாளையும் பார்ப்பார்கள்.

மற்றொரு மரியாளாக வாழ்வோம்..

லூர்து செல்வம்.

உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். (மத்.25:29)

உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். (மத்.25:29)


கடவுள் நம்மைப் படைக்கும் போது 
பரிபூரண சுதந்திரத்தோடும், ஆன்மீகத் திறமைகளோடும் (Talents)படைத்தார்.

திறமைகள் பயன்படுத்துவதற்கு.
சுதந்திரம் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு.

திறமைகளைக் கொடுத்திருப்பது கடவுள்.

ஆகவே அவற்றை கடவுளின் விருப்பப்படி தான் செயல்படுத்த வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

ஒரு கடை உரிமையாளர் அங்கு பணிபுரியும் பையனுக்கு சுதந்திரம் கொடுத்தால் அது கடையின் வியாபாரத்தை அதிகரிப்பதற்காகத்தான் இருக்கும்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் அது படிப்பதற்காக தான் இருக்கும்.

அதேபோல்தான் கடவுள் நமக்குத் தந்திருக்கும் திறமைகளை அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு கடவுள் நமக்குப் பேச்சுத் திறமையை தந்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

நமது உள்ளத்தில் உதிக்கும் கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகப் பேசுகிறோம்.

மற்றவர்கள் நமது கருத்துக்களை நமது உள்ளத்தில் உள்ளபடியே புரிந்து கொண்டு, அவற்றை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பேசினால் நம்மிடம் பேச்சுத் திறமை இருக்கிறது.

திறமையைத் தந்தது கடவுள். பயன்படுத்துவது நாம்.

படிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட Study leave வை மாணவன் விளையாடுவதற்காகப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது மாணவன் தான்.

ஒருவன் கடவுள் கொடுத்த திறமையை அவருக்கு எதிராக பயன்படுத்தினால்
பாதிக்கப்படப் போவது அவன் தான்.

கடவுள் நமக்கு பேச்சுத்திறமையைத் தந்திருந்தால் அதை அவரது நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க பயன்படுத்த வேண்டும்.

நமது திறமையைக் கடவுளது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தினால் திறமை அதிகரித்துக் கொண்டே போகும்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் பலன் அதிகரிக்கும், திறமையின் அளவும் அதிகரிக்கும்.

பயன்படுத்தாமல் விட்டால் காலப்போக்கில் நமது திறமையை இழந்து விடுவோம்.

இறைவனுக்கு எதிராகப் பயன்படுத்தினால் பாவத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

திறமைகளே இல்லாத மனிதர்களே கிடையாது.

ஏதாவது ஒரு திறமையோ அல்லது பல திறமைகளோ ஒவ்வொருவரிடமும் இருக்கும்.

திறமையின் அளவு கூடலாம் அல்லது குறையலாம்.

தங்களது திறமைகளை இறைவனுக்காகப் பயன்படுத்துகிறவர்களுக்கு அவை அதிகரித்துக் கொண்டே போகும்.

பயன்படுத்தாதவர்களுக்கு அவை இல்லாமல் போகும்.


பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, கேட்கும் திறமை, சிந்திக்கும் திறமை, மனதை ஒருநிலைப்படுத்தும் திறமை, செயல் திறமை என்று எண்ணிலடங்கா திறமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அமைதியாக இருப்பது கூட ஒரு திறமை தான்.

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும், அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

யாராவது நம்மைப் பற்றிக் கெடுத்துப் பேசினாலோ, நம்மிடம் வேண்டுமென்றே சண்டைக்கு வந்தாலோ நாம் அமைதியாக இருந்து விடுவது நலம்.

அறிஞர் பெருமக்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் அவையில் நாம் இருக்க நேரிட்டால் ஏதாவது பேசி நமது அறியாமையை வெளிப்படுத்துவதை விட அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்.

ஒரு சமயம் பிரான்சிஸ் அசிசியார் தனது சகோதரர்களை நோக்கி,

"" வாருங்கள் நற்செய்தி அறிவித்து விட்டு வருவோம்" என்று அழைத்தார்.

அவருடன் சில சகோதரர்கள் தெருவில் இறங்கினார்கள்.

அவர் அக்கம் பக்கம் பாராமல் அமைதியாக நடந்தார். அவரைப் பின்பற்றி சகோதரர்களும் நடந்தனர்.

அப்படியே இல்லத்துக்கு வந்த பின் சகோதரர்கள் அவரை நோக்கி,

"""நற்செய்தி அறிவித்துவிட்டு வருவோம் என்று சொன்னீர்கள் ஆனால் நாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!"

என்று கேட்டார்கள்.

'பிரான்சிஸ் அவர்களை நோக்கி,

""நாம் தெரு வழியே பராக்கு பார்க்காமல் அமைதியாக நடந்து வந்ததே மக்களுக்கு நாம் அறிவித்த ஒரு நற்செய்தி." என்றார்.


பேசித்தான் பிரசங்கம் வைக்க வேண்டும் எந்த அவசியமில்லை, நாம் அமைதியாக வைக்கும் பிரசங்கம் தான் அதிக சக்தி வாய்ந்தது.

நம்மை பார்ப்போர் நமது செயல்களைப் பார்த்தே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

கடவுள் நமக்கு எவ்வளவு சிறிய திறமையைத் தந்திருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தி சாதனை படைப்போம்.

லூர்து செல்வம்.
"

Friday, November 17, 2023

தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?(லூக்.18:7)

தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?
(லூக்.18:7)

பள்ளிக்கூடத்தில் அகில இந்திய சுற்றுப்பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

சுற்று பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒரு வாரத்துக்குள் தங்கள் பெயர்களைக் கொடுப்பதோடு பயண சம்பந்தப்பட்ட சகல செலவுகளுக்காகவும் ரூபாய் 5000 கொடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

ஒரு மாணவன் தன் தந்தையிடம் இதைத் தெரிவித்தான்.

"நமது பொருளாதார நிலையில் இத்தகைய பயணங்களில் கலந்து கொள்வது இயலாத காரியம்" என்று தந்தை கூறிவிட்டார்.

ஆனால் மாணவன் விடவில்லை.

ஏழு நாட்களும் ஓயாமல் தந்தையின்  கையைப் பிடித்துக் கொண்டு "Please, Appa'' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

ஏழாவது நாள் தந்தை மனமிரங்கி யாரிடமிருந்தோ ரூபா,ய் 5000 கடன் வாங்கி மகனிடம் கொடுத்தார்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்." என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் ஒரு பக்தன்  ஞாயிறு திருப்பலியின் போது இயேசுவிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறான்.

அதன்பின் தொடர்ந்து ஆறு நாட்களும் தான் கேட்ட உதவி கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தான், ஆனால் கிடைக்கவில்லை.

ஆறாவது நாள் பைபிள் வாசிக்கும் போது,

கடவுளுக்கு அஞ்சாத, மனிதனையும் மதிக்காத நடுவன் ஒருவனிடம் கைம்பெண் ஒருத்தி நீதி கேட்ட உவமையை வாசித்தான்.

நெடு நாள் நீதி வழங்காத நடுவன், கைம்பெண்ணின் தொந்தரவை தாங்க மாட்டாமல் நீதி வழங்கினான்.

இயேசு உவமையைக் சொன்ன பின்,

''தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?

 அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?

 விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

நாம் கடவுளிடம் என்ன உதவியைத் கேட்டாலும் அதைத் திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.

நாம் கடவுளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நாம் கேட்பதைக் கேட்டவுடன் கடவுள் தராமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நாம் தொடர்ந்து விடாமல் கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

உலகியலில் கூட ஒரு காதலன் தன் காதலிக்கு phone செய்யும்போது அவள் உடனே எடுப்பதில்லை.

அவன் அவளுக்கு அடிக்கடி phone செய்ய வேண்டும் என்று அவள் விரும்புவதே அதற்குக் காரணம்.

Call களின் எண்ணிக்கையை வைத்து அவனுடைய காதலின் ஆழத்தை அவள் அளந்து விடுவாள்.

"இயேசுவே என்மேல் இரக்கமாயிரும்" என்பது ஒரு சிறு மனவல்லப ஜெபம்.

ஒருமுறை சொல்ல சில வினாடிகளே ஆகும்.

இதே ஜெபத்தை நாம் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருந்தால் அதன் பலன் மிகவும் மகத்தானது. 

இயேசுவுக்கும் நமக்கும் உள்ள அன்பின் ஆழத்தையும்  நெருக்கத்தையும் அது அதிகரிக்கும்.

பாவ எண்ணங்கள் நம்மை நெருங்காது.

இயேசு எப்போதும் நமது எண்ணத்தில் இருந்தால் சாத்தான் நம்மைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காது.

இந்த சந்தர்ப்பத்தில் வேறொரு உண்மை நமது மனதில் இருக்க வேண்டும்.

இயேசு நமது ஆன்மீகத் தலைவர், அரசியல் தலைவர் அல்ல.

இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவு முழுக்க முழுக்க ஆன்மீக உறவு.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவு கல்வி சம்பந்தமானது.

வகுப்பில் மாணவர்கள் கல்வி நோக்குடன்தான் ஆசிரியர் முன் அமர்ந்திருக்கிறார்கள்.

"ஏதாவது சந்தேகமிருந்தால் கேளுங்கள்" என்று ஆசிரியர் சொன்னால், மாணவர்கள் கேட்கும் சந்தேகம் பாடம் சம்பந்தப்பட்டதாய் இருக்க வேண்டும்.

ஆங்கில ஆசிரியரிடம் போய்,

"ரஷ்யா ஏன் உக்ரேன் மீது போர் தொடுத்தது" என்று கேட்கக் கூடாது.

அது வரலாற்று ஆசிரியரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இயேசு நமது ஆன்மீக மீட்பர்.

ஆகவே அவரிடம் நாம் கேட்க வேண்டிய உதவி நமது ஆன்மாவின் மீட்பு சம்பந்தப்பட்டதாய் இருக்க வேண்டும்.

நம்மை இயேசு இப்போது உலகில் தானே வாழ வைத்திருக்கிறார். இப்போது உலக சம்பந்தப்பட்ட உதவிகளை கேட்க கூடாதா?
 
கேட்கலாம். முதலில் உலகியலை ஆன்மீகமாக மாற்றி உதவியைக் கேட்கலாம்.

உலகியலை எப்படி ஆன்மீகமாக மாற்றுவது?

நாம் ஒரு பல சரக்குக் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நமக்கு சம்பள உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டுகிறோம்.

நமது சம்பளம் உலகியலைச் சேர்ந்தது.

அதன் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவியாகக் கொடுக்க ஒதுக்கி வைத்தால் அதுவே ஆன்மீகமாக மாறி விடுகிறது.

ரயிலில் பயணிப்பது உலகியல்.
அதே ரயிலில் திருயாத்திரையாக வேளாங்கண்ணிக்குப் பயணிப்பது ஆன்மீகம்.

சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் உடலியல்.

ஆனால் திருச்சபையின் கட்டளைகளுக்கு இணங்க பெரிய வெள்ளிக்கிழமை அன்று தாவர உணவு மட்டும் சாப்பிடுவதும்,

ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றைச் சாப்பிடாமலிருப்பதும் ஆன்மீகம்.

உலக சம்பந்தப்பட்ட உதவிகளை முதலில் ஆன்மீக மயமாக்கி, ஆன்மீக நோக்கத்திற்காக அவற்றைக் கேட்பது ஆன்மீகம்.

ஒரு குருவானவருக்குச் சுகம் இல்லை. சுகம் இல்லாமல் இருப்பது உடலியல்.

ஆனால் அதனால் அவரது ஆன்மீகப் பணி பாதிக்கப்படுகிறது.

''இயேசுவே, நான் செய்ய வேண்டிய ஆன்மீகப் பணிகளை ஒழுங்காகச் செய்வதற்காக எனக்கு உடல் நலத்தைத் தாரும்.'' என்று ஜெபிக்க வேண்டும்.

நாம் என்ன உதவி கேட்டாலும் அது நமது ஆன்மாவுக்கு உதவிகரமாக இருந்தால் தான் இயேசு அந்த உதவியைத் தருவார்.

நாம் கேட்கும் உதவியை அவர் தராவிட்டால் அது நமது ஆன்மாவுக்கு ஏற்றது அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீக உதவிகளைக் கேட்போம்.
திரும்பத் திரும்ப கேட்போம்.

தந்தாலும் நன்றி கூறுவோம்.
தராவிட்டாலும் நன்றி கூறுவோம்.

உதவி கேட்பதை நிறுத்தக்கூடாது,

லூர்து செல்வம்.

Wednesday, November 15, 2023

தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.( லூக்.17:33)

தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.
( லூக்.17:33)

மனு மகனின் இரண்டாவது வருகையின் போது உலகத்தினர் 

நோவாவின் காலத்தில் நடந்ததுபோல  நடந்தால் அவர்களைப் போலவே அழிவார்கள்.

லோத்து சோதோமை விட்டுச் சென்ற நாளில் அங்கிருந்த மக்கள்  எப்படி வாழ்ந்தார்களோ அப்படி  வாழ்ந்தால்  அப்படியே அழிவார்கள்.

மனுமகன் எப்போது வருவார் என்பதை அறிந்து கொள்வதை விட அவர் வரும்போது நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்து கொள்வது தான் முக்கியம்.

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது."  என்று இயேசுவே சொன்னார்.

தந்தைக்குத் தெரிவதெல்லாம் மகனுக்கும் தெரியும்,

ஆனால், அந்த நாள் எப்போது வரும் என்று நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடாது என்பதை அழுத்திச் சொல்வதற்காகத் தான் இயேசு மகனுக்குங்கூடத் தெரியாது என்றார்.

அந்த நாள் எப்போது வரும் என்று தெரிவது முக்கியமல்ல,

 அதற்காக வாழ்வதுதான் முக்கியம்.


நாம் நமக்காக வாழாமல் 
நம்மை படைத்த இறைவனுக்காக 
அவரது மகிமைக்காக வாழ வேண்டும்.

நமது உயிரை விட அதை படைத்த கடவுளே நமக்கு முக்கியம்.

கடவுளுடைய மகிமைக்காக நமது உயிரை விட ,

அதாவது,

 நாம் மரணத்தைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு அவர் உயிர் கொடுத்தது நாம் நித்தியமாக அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

ஆகவே அவருக்காக நமது உயிரை கொடுக்கும் போது அது நித்திய பேரின்ப வாழ்வுக்கு ஏற்றதாகிவிடும்.

அதாவது கடவுளுக்காக நமது உயிரை நாம் இழந்தால் நாம் இறைவனோடு இணைந்து அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆனால் இவ்வுலகில் நமது உயிரை இறைவனுக்காகத் தியாகம் செய்ய மனதில்லாமல்,

உயிரோடு வாழ நினைத்தால்,

நித்திய பேரிடர் வாழ்வு வாழ நேரிடும்.

நித்திய பேரின்ப வாழ்வு முக்கியமா, ஒரு நாள் முடிய போகும் இவ்வுலக சிற்றின்ப வாழ்வு முக்கியமா? சிந்திப்போம்.


இயேசு பிறந்த சமயத்தில் அவருக்காக ஆயிரக்கணக்கான மாசில்லாக் குழந்தைகள் தங்களது உயிரைத் தியாகம் செய்தார்கள்.

இன்று அவர்கள் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் தான் இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மதித்த புனிதர்கள் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனுமகனின் இரண்டாவது வருகைக்குப் பின் நாம் நமது ஆன்ம சரீரத்தோடு  நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

நமது ஆன்மாவையும், உடலையும் அந்த நோக்கத்திற்காகத் தயார்படுத்த வேண்டுமே தவிர,

இவ்வுலக நிரந்தரமற்ற வாழ்வுக்காக அவற்றை வீணாக்கி விடக்கூடாது.

இவ்வுலகில் நமது உயிர் பிரிந்தால் நாம் விண்ணகம் செல்வோம்.

இவ்வுலக வாழ்க்கையை விட விண்ணுலக வாழ்க்கையே நமக்கு நிரந்தரமானது.

ஆகவே நமது உயிரை இறைவனுக்காகத் தியாகம் செய்து,

 இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்ல எப்போதும் தயாராக இருப்போம்.

இவ்வுலகில் வாழ்வதற்காக இறைவனுக்கு எதிராக நமது உயிரைப் பாதுகாக்க நாம் ஆசைப்பட்டால் அதை நாம் நித்திய காலமும் இழந்து விடுவோம்.

இறைவனுக்காக அதை இழந்தால் நித்திய காலமும் அவரோடு விண்ணகத்தில் பேரின்ப வாழ்வு வாழ்வோம்,

நமது உயிரை விட நமக்கு இறைவனே முக்கியம்.

 அவருக்காக மரிப்போம்,

அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" (லூக்.17:21)

கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" (லூக்.17:21)

கடவுளின் அரசு எப்பொழுது வரும்?" என்று பரிசேயர் வினவியபோது,

இயேசு "கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.

மெசியாவை பற்றி பரிசேயர்கள் தவறான கருத்து கொண்டிருந்தார்கள். மெசியா வந்து தங்களை அரசியல் ரீதியாக ரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மெசியாவின் வருகை ஆன்மீக ரீதியானது. அவரது வருகையின் நோக்கம் பாவத்திலிருந்து மக்களை மீட்பது.

இயேசு தான் பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட மெசியா.

அவரது ஆட்சி அரசியல் ரீதியானது அல்ல. ஆன்மீக ரீதியானது.

மக்களின் உள்ளம் ஆகிய சிம்மாசனத்தில் அமர்ந்து அவர்களை ஆன்மீக ரீதியாக ஆட்சி புரியவே இறைமகன் மனு மகனாய்ப் பிறந்தார்.

அவருடைய சீடர்களுடைய உள்ளத்திலும், 

விசுவாசத்தோடு அவரிடம் வந்து தங்கள் உடல், உள்ள நோய்களிடமிருந்து விடுதலை பெற்ற மக்களின் உள்ளத்திலும்  

சிம்மாசனம் அமைத்து அவர் ஏற்கனவே ஆன்மீக ஆட்சி புரிய ஆரம்பித்துவிட்டார்.

அவருடைய ஆன்மீக ஆட்சியை ஏற்றுக் கொண்ட மக்கள் அவர் சென்ற இடமெல்லாம் அவரது நற்செய்தியைக் கேட்க அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

ஆனால் பரிசேயர்களும், அவர்களைச் சேர்ந்த யூத மத தலைவர்களும் இயேசுவை மெசியா என்று ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசுவைப் பின்பற்றி சென்ற மக்கள் தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக்கொண்டு, தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றார்கள்.

ஆனால் உண்மையிலேயே பாவிகளாக இருந்தும் தங்களைப் பரிசுத்தவான்களாக எண்ணிக் கொண்டிருந்த பரிசேயர்களும் யூத மத தலைவர்களும் 

தங்களை மீட்க வந்தவரைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள்.

இறையாட்சி ஏற்கனவே மக்களிடையில் வந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசு அறிவித்த நற்செய்தியையும் பரிசேயர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள்.

ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அவர்கள் கொன்றது கடவுளாகிய இயேசுவை.

மிகப்பெரிய பாவம்.

ஆனால் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர் கடவுள்.

பரிசேயர்கள் செய்த மிகப்பெரிய பாவத்திலிருந்து,

மீட்பு என்ற மிகப்பெரிய நன்மையை வரவழைத்தார் இயேசு.

பரிசேயர்களின் கையால் அவர் அடைந்த மரணம் தான் பாவிகளை நித்திய மரணத்திலிருந்து மீட்டது.

இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலமாகத்தான் நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டார். 

சாத்தானின் சூழ்ச்சியால் பாவம் உலகில் நுழைந்தது.

பாவிகளை மீட்க மனுமகனாய் பிறந்த இயேசுவைக் கொன்று விட்டால் 

அவரது மீட்புத் திட்டத்தைச் செயலற்றதாக ஆக்கி விடலாம் என்று சாத்தான் எண்ணியது.

அந்த எண்ணத்தில் தான்  இயேசுவைக் கொல்லும்படி பரிசேயர்களைத் தூண்டிவிட்டது.

சாத்தான் தன்னை அறியாமலேயே தான் பாவம் செய்ய தூண்டிய மக்களை பாவத்திலிருந்து மீட்க உதவியாக இருந்திருக்கிறது.

மீட்புக்கு எதிராக சாத்தான் போட்ட திட்டமே அதனைத் தோல்வி அடையச் செய்து விட்டது.

Satan's plan against our salvation has backfired on him.

சாத்தானை வென்று நம்மைப் பாவத்திலிருந்து மீட்ட இயேசு நமது அரசர்.

நமது உள்ளமே அவர் அமர்ந்து நம்மை ஆளும் சிம்மாசனம்.

இயேசுவின் ஆட்சி ஆன்மீக ரீதியானது, உலக ரீதியானது அல்ல.

நாம்தான் இயேசு அரச வாழும் அரண்மனை.

நம்மிடம் வரும் மக்களை இயேசுவிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும்.

இயேசுவின் அரசை ஏற்று கொள்ளாத மக்கள் ஏராளமான பேர் நம்மைச் சுற்றி வாழ்கின்றார்கள்.

அவர்களை இயேசுவின் அரசுக்குள் கொண்டு வர வேண்டியது நமது கடமை.

நமது நற்செய்திப் பணியின் மூலம் உலக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இயேசு அமர்ந்து ஆள்வதற்கான சிம்மாசனங்களை அமைப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, November 14, 2023

"எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" (லூக்.17:19)

"எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" (லூக்.17:19)

இயேசு குணமாக்கிய பத்து தொழு நோயாளிகளுள் ஒருவன் வந்து அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான்.

இயேசு அவனை நோக்கி,

 "எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

குணமாக்கியது தான்தான் இயேசுவுக்கும் தெரியும், குணமான நோயாளிக்கும் தெரியும்.

இயேசு ஏன்,  "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்? 

நமக்கு மிக அவசரமான, அத்தியாவசியமான ஒரு செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் அந்தப் பணம் இல்லை.

யாரிடம் சென்று கடன் வாங்குவது என்று தெரியவில்லை.

திடீரென்று மனதில் நமது பள்ளிக்கூட காலத்திய நெருங்கிய நண்பன் ஒருவன் நினைவுக்கு வருகிறான்.


பள்ளிக்கூட பருவத்தில் இதயத்தோடு இதயம் ஒட்டிப் பழகிய நண்பன்.

அவனிடம் சென்று நமது தேவையை எடுத்துரைத்தால் தேவையான பணம் கடனாகக் கிடைக்கும் என்று மனதில் ஒரு நம்பிக்கை உதிக்கிறது.

அதன் அடிப்படையில் அவனிடம் சென்று நமது கஷ்டங்களை எடுத்துரைக்கின்றோம்.

நட்பின் அடிப்படையில் நம்மைப் புரிந்து கொண்டு அவன் நமக்குத் தேவையான பணத்தைத் தந்து உதவுகின்றான்.

நமக்கு உதவி செய்வது நமது நண்பன் தான்.

ஆனாலும் நம்பிக்கையோடு நாம் அவனிடம் சென்று உதவி கேட்டாதால்தானே கிடைத்தது.

நமக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்காவிட்டால் அவனிடம் சென்று கேட்டிருக்க மாட்டோம்.

நமக்கு உதவியும் கிடைத்திருக்காது.

ஆகவே உதவியது நண்பன் என்றாலும், அவன் நமக்கு உதவ உதவியது நமது நம்பிக்கை தான்.

இந்த பொருளில் தான்,

 இயேசு "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று." என்றார்.

இயேசு இறைமகன் என்பதையும், 

அவரே நம்மைப் படைத்தவர் என்பதையும், 

நம்மை படைத்ததற்கு காரணம் அவரிடம் உள்ள அளவு கடந்த அன்பு என்பதையும்,

அந்த அன்பின் அடிப்படையில் அவரால் படைக்கப்பட்ட நம்மை ஒவ்வொரு 
வினாடியும் பராமரித்து வருகிறார் என்பதையும், 

அவரது பராமரிப்பினால் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதையும் ஏற்றுக்கொண்டு,
'
அவருக்காக, அவருக்காக மட்டும் நாம் வாழ வேண்டும் என்ற அர்ப்பண உணர்வை உள்ளடக்கிய மனநிலையே நமது விசுவாசம்.

விசுவாசம் உள்ளவர்கள் இயேசுவே தங்களுக்கு எல்லாம் என்ற மனநிலையோடு அவருக்காக மட்டும் வாழ்பவர்கள்.

நாம் நமக்காக மட்டும் பயன்படுத்தும் வண்டியில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை நாமே உடனடியாகச் சரி செய்ய முயற்சி எடுப்பது போல,

இயேசுவுக்காக மட்டும் வாழும் நமக்கு என்ன தேவை என்றாலும் அவரே நிவர்த்தி செய்வார்.

நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

கடவுள் நம்மை படைத்தது நமது ஆன்மா விண்ணகத்தில் நித்திய காலம் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை எல்லாம் இயேசு கொடுப்பார்.

நாம் கேட்டு எதையாவது அவர் கொடுக்காவிட்டால் அது நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு தேவையற்றது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மைப் பெற்ற நமது தாய் காலையில் உணவு கேட்டால் தருவார்கள்.

காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு,

"அம்மா நான் விளையாடுவதற்கு ஒரு பாம்பைப் பிடித்து தாருங்கள்"

 என்று கேட்டால் தருவீர்களா?

 நிச்சயமாகத் தர மாட்டார்கள்.
'
ஏனென்றால் பாம்பு கடிக்கும் குணமுடையது என்று அம்மாவுக்குத் தெரியும்.

நமது உலகியல் அம்மாவுக்கு நம்மைப் பற்றி தெரிவதை விட பல கோடி மடங்கு அதிகமாக நமது விண்ணகத் தந்தைக்கு தெரியும்.

நம்மைப் பற்றி அளவில்லாத விதமாக தெரிந்து கொண்டு,

நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கும் நமது விண்ணகத் தந்தை,

நமது ஆன்மீக வாழ்வுக்கு பயனுள்ள எதையும் நாம் கேட்கும் போது கட்டாயம் தருவார்.

நான் செய்ய வேண்டியதெல்லாம் மூன்றே மூன்று காரியங்கள் தான்.

முதலில் இறைவனை நமது விண்ணகத் தந்தை என்று ஏற்றுக் கொண்டு, நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

அடுத்து அவர் நமக்குத் தேவையானதைத் தருவார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்ய வேண்டும்.

விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு இந்த மூன்றும் தான் நமது ஆன்மீக வாழ்வுக்கு உயிரான புண்ணியங்கள்.

விசுவாசம் உள்ளவர்களிடம்தான் நம்பிக்கையும், இறையன்பும் இருக்கும்.


ஆகவே விசுவாசம் உள்ளவர்கள் கேட்பதெல்லாம் உறுதியாகக் கிடைக்கும்.

இங்கே மற்றொரு உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் உட்பட நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் இறைவன் நமக்கு இலவசமாகத் தந்த பரிசுகள்.

அப்படியானால் விசுவாசமும் இறைவனது பரிசு தான்.

அவர் தருகின்ற பரிசை நாம் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவின் பொது வாழ்வின் போது அவர் சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதாவது முதலில் அவர்களுக்கு விசுவாசத்தைப் பரிசாக கொடுத்தார்.

விசுவாசம் என்ற பரிசை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட நோயாளிகள், 

தாங்கள் இயேசுவிடம் சென்றால் குணம் பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகினார்கள்.

இயேசுவிடம் அவர்களை அழைத்து வந்தது அவர்கள் அவரிடமிருந்து பெற்ற விசுவாசம்தான்.

ஆகவேதான் தான் தான் குணமாக்கிய நோயாளிகளை பார்த்து,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

நாமும் விசுவதிப்போம்.

நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் இயேசுவிடமிருந்து கேட்டுப் பெறுவோம்,

லூர்து செல்வம்.

Monday, November 13, 2023

அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, "நான் மனம் வருந்துகிறேன்" என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.( லூக்.17:4)

அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, "நான் மனம் வருந்துகிறேன்" என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.
( லூக்.17:4)

கடவுள் ஆன்மீக ரீதியாக மனிதனைத் தன் சாயலில் படைக்கும் போது அவர் பகிர்ந்து கொண்ட முக்கியமான பண்பு அன்பு.

அன்பு இருக்கும் இடத்தில் இரக்கமும், மன்னிக்கும் குணமும் இருக்கும்.

கடவுள் அளவில்லாத விதமாய் அன்பானவர்.

ஆகவே அவர் அளவில்லாத விதமாய் இரக்கம் உள்ளவர்.

ஆகவே அளவில்லாத விதமாய் மன்னிக்கும் தன்மை உள்ளவர்.

கடவுள் தன்னுடைய அன்பை மனிதரோடு பகிர்ந்து கொண்டதால், 

அவர்களும் கடவுளைப் போலவே இரக்கம் உள்ளவர்களாகவும்,

 மன்னிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அப்பா மகனிடம் புத்தகம் வாங்க கொடுத்த பணத்தை தின்பதற்கு பண்டம் வாங்கும் பணமாக மகன் மாற்றுவது போல,

மனிதன் ஆன்மீக ரீதியாக தனது பிறனை நேசிப்பதற்காக கடவுள்  கொடுத்த அன்பை மனிதன் உடலியல் ரீதியாக நேசிக்க பயன்படுத்திக் கொள்கிறான்.

ஒரு ஆடவன் உடல் அழகாக இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணை காதலிக்கும் போது,

கடவுள் ஆன்மீக ரீதியாக கடவுளையும் அயலானையும் நேசிக்க அவனுக்குக் கொடுத்த அன்பை 

அவன் உடலியல் ரீதியாக நேசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறான்.

யாரை நேசித்தாலும் அது கடவுளின் மகிமைக்காக இருக்க வேண்டும்.

கடவுளை ஒதுக்கி விட்டு தனது உடல் இன்பத்திற்காக மட்டும் யாரையும் நேசிப்பது இறைவனது திட்டத்திற்கு எதிரானது.

உடலியல் ரீதியாக நேசிக்கும் அன்பில் ஆன்மீக ரீதியான இரக்கமும், மன்னிக்கும் குணமும் இருக்காது.

கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு அளவில்லாதது,

நம்மை அவர் மன்னிக்கும் குணமும் அளவில்லாதது.

மனிதன் கணக்கில்லா முறையில் ஒரே பாவத்தை எத்தனை முறை செய்தாலும் ஒவ்வொரு முறையும் அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டால் ஒவ்வொரு முறையும் கடவுள் தாராளமாக மன்னிப்பார்.

மனிதன் பலகீனமானவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

அவன் எத்தனை முறை பாவம் செய்வான் என்பதும் அவருக்குத் தெரியும்.

அவன் எத்தனை முறை பாவம் செய்தாலும் அவரது மன்னிக்கும் குணம் மாறாது.

நாம் செய்ய வேண்டியது மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பது மட்டும் தான்.

நாமும் அவரைப்போலவே நமது பிறன் நமக்கு விரோதமாக எத்தனை முறை குற்றம் செய்தாலும் அவன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் போது நாம் அவனை மன்னிக்க வேண்டும்.

நாம் விண்ணக தந்தையிடம் ஜெபிக்கும் போதெல்லாம்,

"எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்" என்று சொல்கிறோம்.

அதாவது, 


எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுக்காதது போல எங்கள் பாவங்களைப் பொறுக்காதேயும்" என்று ஜெபிக்கிறோம்.

நமது ஜெபம் கேட்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

நமது பிறன் நமக்கு விரோதமாகச் செய்த குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் நமது பாவங்களை மன்னிக்கும் படி கடவுளிடம் கேட்கும் உரிமை நமக்கு இல்லை.


உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.   (மத்.5:48)

என்று நமது ஆண்டவர் சொல்கிறார்.


"உங்கள் வானகத்தந்தை மன்னிக்கும் குணம் உடையவராய் இருப்பதுபோல, நீங்களும் மன்னிக்கும் குணம் உடையவராக இருங்கள்.''

என்ற பொருளும் அதில் அடங்கியிருக்கிறது.

விண்ணக தந்தையுடன் நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை நமக்கு இருந்தால்,

நமது பிறன் நம்மிடம் எத்தனை தடவைகள் மன்னிப்புக் கேட்டாலும் அத்தனை தடவைகளும் மன்னிப்புக் கொடுக்க வேண்டும்.

இது நமது தந்தையின் சித்தம்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை.

 அளவு கடந்த விதமாய் நமது பிறரை மன்னிப்போம்.

நாமும் அளவு கடந்த விதமாய் இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.


லூர்து செல்வம்.

Sunday, November 12, 2023

விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.''(மத்.25:13)

"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.''
(மத்.25:13)

"', இங்கே வா. இப்போது மணி என்ன?"

''இரவு 10 மணி"

"' தூங்கப்போகல?"

"இன்று இரவு முழுவதும் விழித்திருக்கப் போகிறேன்."

"'தூக்கம் வரவில்லையா?"

"தூக்கம் வந்தாலும் தூங்கப்போவதில்லை''..

"'ஏன்?"

"இன்று இரவு எனது மாமா வரப்போவதாக அப்பா சொல்லி இருக்கிறார்."

"'வருகின்றவரைக் காலையில் பார்த்துக் கொள்ளலாமே அதற்கு ஏன் விடிய விடிய தூங்காமலிருக்க வேண்டும்."

"மாமா வந்தவுடன் அப்பாவை பார்த்துவிட்டு உடனே ஊருக்கு போய்விடுவார்.

என்னையும் அவரோடு கூட்டிக்கொண்டு போய்விடுவார்.

மாமாவுடன் போவதற்காகத் தான் நான் தூங்காமல் விழித்திருக்கிறேன்."


ஆன்மீகத்தில் இந்த பையனின் நிலைதான் நமது நிலையும்,

நமது ஆண்டவராகிய இயேசு நம்மை மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டு போவதற்காக எந்த நேரமும் வருவார்.

அவர் வரும்போது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தயார் நிலையில் என்றால் பாவம் இல்லாமல் என்பது பொருள்.

ஆண்டவர் வரும்போது நாம் பாவ நிலையில் இருந்தால் அவரோடு மோட்சத்திற்குப் போக முடியாது.

ஆகவே எப்போதும் நமது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் நாம் பாவம் இல்லாமல் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆண்டவரை வரவேற்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நாம் தூங்கும் போது அவர் வரலாம்.

விழித்திருக்கும் போதும் வரலாம்.

பயணம் செய்து கொண்டிருக்கும் போதும் வரலாம்.

அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் போதும் வரலாம்.


அவர் நம்மை மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டு போக வர விருப்பதால் அவர் வரும் நேரம் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.

எப்போதாவது நாம் பாவத்தில் விழ நேர்ந்தால் உடனடியாக நமது 
ஆண்டவரிடம் பாவ மன்னிப்பு பெற்று தயார் நிலைக்குத் திரும்ப வேண்டும்.

ஆண்டவர் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்ல வரும் நேரத்தை தானே மரணம் என்கிறோம்.

'ஆனால் யாருக்கும் மரணம் மகிழ்ச்சியை தரும் நேரமாக தெரியவில்லையே. 

இந்த உலகிலேயே எப்போதும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்களுக்குத்தான் மரணம் மகிழ்ச்சியைத் தராது.

மோட்சத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்ற அவர்களுக்கு மரணம் மகிழ்ச்சிகரமான நேரம்.

நாம் பாவமே செய்யாதிருந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

விண்ணகம் தான் நமது நிரந்தரமான வீடு.

அதை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

பயணத்தை விட வீட்டைப் பற்றிய நினைவுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.

ஆண்டவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நாம் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

Friday, November 10, 2023

"எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது." (லூக்.16:13)

"எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது." (லூக்.16:13)

ஒருவன் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசைகளை நோக்கி நடக்க முடியுமா?

கிழக்கு நோக்கி நடப்பவன் அதே நேரம் மேற்கு நோக்கி நடக்க முடியுமா?

ஒருவன் நல்லவனாக இருப்பான், அல்லது, கெட்டவனாக இருப்பான்,

 நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருக்க முடியாது.

ஒரே நேரத்தில் கடவுளுக்கும், செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

செல்வம் கடவுளின் விரோதியா?

உலகையும், அதைச் சார்ந்த பொருட்களையும் செல்வம் என்று அழைக்கிறோம்.

நம்மைப் போலவே அவையும் கடவுளால் படைக்கப்பட்டவையே.

எது எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதோ அது அந்த நோக்கத்திற்காக செயல்பட வேண்டும்.

நாம் இறைவனையும் நமது அயலானையும் அன்பு செய்யவும்,

 இறைவனுக்கும் அயலானுக்கும் பணி புரியவும் படைக்கப்பட்டுள்ளோம்.

நமது பணியில் நமக்கு உதவுவதற்காகவே உலகமும் அதில் உள்ள பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன.

அமர்வதற்காக உருவாக்கப்பட்ட நாற்காலியைத் தலையில் சுமந்து கொண்டு ஒருவன் இருந்தால் அவனைப் பார்ப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?

இறைவனுக்காக வாழ வேண்டிய நாம் அவரால் படைக்கப்பட்ட பொருட்களுக்காக வாழ்ந்தால் நாமும் நகைப்பிற்கு உரியவர்களே.

நாம் உலகில் வாழ்வது செல்வம் ஈட்டுவதற்காக அல்ல.

நாம் செய்ய வேண்டிய பணியில் நமக்கு உதவுவதற்காகவே செல்வத்தை ஈட்டுகிறோம். 

நாம் பள்ளிக்கூடத்துக்குப் போவதற்குச் சைக்கிளை பயன்படுத்துகிறோம்.

ஆனால் சைக்கிளைப் பயன்படுத்துவதற்காக பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.

அதுபோல உலகில் வாழும்போது செல்வத்தை ஈட்டுகிறோம், 

ஆனால் செல்வத்தை ஈட்டுவதற்காக உலகில் வாழவில்லை.

உலகில் வாழ்வது இறைவனுக்கு சேவை செய்ய, செல்வத்தை ஈட்டுவதும் இறைவனுக்கு சேவை செய்யவே.

இறைவனுக்கு சேவை செய்வதுதான் நமது குறிக்கோள், செல்வம் ஈட்டுவது அல்ல.

தங்களைப் படைத்த இறைவனைப் பற்றி கவலைப்படாமல், செல்வம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் செல்வத்துக்குச் சேவை செய்கிறார்கள்.

இறைவனுக்கு சேவை செய்யாதவர்கள் மட்டுமே செல்வத்துக்கு சேவை செய்கிறார்கள்.

அதுபோல செல்வத்துக்கு சேவை செய்யாதவர்கள் மட்டுமே இறைவனுக்கு சேவை செய்கிறார்கள்.

அதனால் தான் இறைவனுக்கும் செல்வத்துக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது என்று ஆண்டவர் சொல்கிறார்.

உடல் நலனுக்காகச் சாப்பிடுபவன் உணவைப் பயன்படுத்துகிறான்.

உடல் நலனைப் பற்றி கவலைப்படாமல் உணவை அதன் சுவைக்காக மட்டும் சாப்பிடுபவன் உணவுக்கு அடிமையாகி விடுகிறான்.

இறையன்பு பிறர் அன்பு பணிகளுக்காக செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும்.

செல்வம் தரும் இன்பத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்துபவன் செல்வத்தின் அடிமை.

நாம் இறைவனுக்கு அடிமை. 
செல்வம் நமக்கு அடிமை.

நாம் நாம் விண்ணைச் சார்ந்தவர்கள்.
 செல்வம் மண்ணைச் சார்ந்தது.

செல்வத்தின் அடிமைகள் விண் நோக்கி பயணிக்க முடியாது..

நாம் பயன்படுத்துவதற்கென்றே இறைவன் செல்வத்தைப் படைத்திருப்பதால் 

நம் அனைவரிடமும் எந்த வகையிலாவது எந்த அளவிலாவது செல்வம் இருக்கும்.

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எப்படி பயன்படுத்துவது?

இறை வழிபாட்டிற்கென்று கட்டப்பட்ட ஆலயங்களைப் பராமரிக்கச் செல்வத்தைப் பயன்படுத்தலாம்.

ஆலயங்களை பராமரித்துக் கொண்டிருப்பவர்களைப் பராமரிக்க நம்மாலான உதவியைச் செல்வத்தைக் கொண்டு செய்யலாம்.

நம்மிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு நமது அயலானுக்கு உதவிகள் செய்யும்போது நாம் இறைவனுக்கே சேவை செய்கிறோம்.

'ஆகவே பிறரன்பு பணிகளுக்கு நம்மிடம் உள்ள செல்வத்தைப் பயன்படுத்தலாம்.

இத்தகைய பணிகளை இறைவனது அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும், தற்பெருமைக்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ செய்யக்கூடாது.


நமது உடல் உட்பட அனைத்து உலகப் பொருட்களையும் இறைவனது சேவைக்காக மட்டும் பயன்படுத்துவோம்.

நாம் இறைவனுக்கு மட்டுமே அடிமைகள், செல்வத்துக்கு அல்ல.

லூர்து செல்வம்.

Thursday, November 9, 2023

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.(லூக்.16:8)

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
(லூக்.16:8)

ஒரு தந்தைக்கு மூன்று பிள்ளைகள்.

மூவரும் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அவர்களை அழைத்து

 ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கையில் கொடுத்து

 இதை வைத்து என்ன தொழில் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

நான் இறந்தவுடன் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாயை எனது சவப்பெட்டியில் வைத்து அதோடு அடக்கம் செய்ய வேண்டும்."

என்று தன் ஆசையைத் தெரிவித்தார்.

மூவரில் மூத்தவன் அந்த பணத்தைக் கொண்டு MBBS படிப்பு படித்து, மருத்துவராகத் தொழில் புரிந்தான்.

இரண்டாவது மகன் அந்த பணத்தைக் கொண்டு ஒரு பல சரக்குக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.

மூன்றாவது மகன் சட்டம் படித்து, வக்கீலாகப் பணி புரிந்தான்.

மூவருக்குமே அவரவர் தொழிலில் நல்ல வருமானம்.

ஒரு நாள் தகப்பனார் இறந்து விட்டார்.

மருத்துவராக பணிபுரிந்த முதல் மகன் தனது வருமானத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து 500 ரூபாய்க் கட்டுகளாக சவப்பெட்டியில் வைத்தான்.

இரண்டாவது மகனும் அப்படியே செய்தான்.

மூன்றாவது மகன் ஒரு வங்கிக் காசோலை எடுத்து, அப்பாவின் பெயருக்கு மூன்று லட்ச ரூபாய் எழுதி

 காசோலையைச் சவப்பெட்டியில் வைத்துவிட்டு 

முதல் இரு மக்களும் வைத்த இரண்டு லட்சம் ரூபாயையும் கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் செய்தது தவறு.

ஆனாலும் அதற்கு ஆலோசனை கொடுத்த அவனது மூளையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார்,

"உன்னுடைய அப்பா காசோலையை மாற்ற முடியாது எனத் தெரிந்தும் நீ அதை வைத்தது தவறு இல்லையா?" என்று கேட்டார்.

அதற்கு அவன் பதிலாக, "எனது அண்ணன்மார் வைத்த பணத்தை மட்டும் அவரால் செலவழிக்க முடியுமா?

அவர்கள் வைத்ததும் பேப்பர். நான் வைத்ததும் பேப்பர்.

ஆனால் எனது அப்பா கொடுத்த பணத்தைக் கொண்டு நான் 2 லட்சம் ரூபாய் அதிகமாகச் சம்பாதித்திருக்கிறேன்.

என்னைப் பாராட்டுவதை விட்டுவிட்டு குறை சொல்கிறீர்கள்!" என்றான்.

இப்படித்தான் அநேகர் தங்களது புத்தியைத் தவறாகப் பயன்படுத்தி உலகியல் ரீதியாக லாபம் ஈட்டுகிறார்கள்.


ஆனால் அனேக ஆன்மீகவாதிகளுக்குத் தங்கள் புத்தியை ஆன்மீக ரீதியாக சரிவரப் பயன்படுத்தத் தெரியவில்லை.

நான் சொல்ல வந்த கருத்தைப் புரிய வைப்பதற்காக கதையில் ஒரு சிறிய மாற்றம் செய்வோம்.

முதல் இரண்டு மக்களும் ஆன்மீகவாதிகள் என்றும், 

இளையவன் முதல் தர உலகியல்வாதி என்றும் வைத்துக் கொள்வோம்.

அப்பாவின் சவப்பெட்டியில் இரண்டு பேரும் இரண்டு லட்சம் ரூபாய் வைக்க வேண்டும்.

இறந்த தங்களது அப்பாவின் கையில் இரண்டு லட்சம் ரூபாயைச் சேர்ப்பிப்பதற்கு,

அவர்களுடைய ஆன்மீக ரீதியான மூளையைப் பயன்படுத்தி,

ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

என்ன முடிவு?

அப்பாவின் ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போயிருக்கும்.

அங்கிருந்து அது மோட்சத்திற்குப் போவதற்கு உதவி செய்தால் அது அப்பாவுக்குச் செய்த உதவிதான்.

ஆகவே அப்பாவுக்குச் சொந்தமான அந்த இரண்டு லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி,

 அன்று அடக்கத்திற்கு வந்தவர்களில் ஏழைகளுக்கு இலவச உணவு பரிமாறி அந்த உதவியை அப்பாவின் ஆன்மீக இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் உலகைச் சார்ந்த பணம் ஆன்மீக ரீதியாக அப்பாவுக்குப் பயன்படும்.

இப்படி செய்வதால் தாங்கள் கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகள் என்று நிரூபிப்பதோடு, அப்பாவின் ஆன்மா மோட்சம் செல்ல பயன்படும்.

அது மட்டுமல்ல இளைய மகனின் திருட்டுப் புத்தியும் செயல்பட்டிருக்காது.

நடது ஆண்டவர் சொல்கிறார்,

"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 

அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்."


நமது கையில் உள்ள பணம் அநீத செல்வமாக, அதாவது உலகைச் சார்ந்த பணமாக, இருக்கலாம்.

அதை ஆன்மீக ரீதியாக பயன்படுத்தி,

திருப்பலி நிறைவேற்றுவதின் மூலமாகவோ, தர்மம் கொடுப்பதன் மூலமாகவோ, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்பினால்,

அவர்கள் நமது ஆன்மீக நண்பர்களாக மாறி,

நமது விண்ணக பயணத்தில் நமக்கு உதவ இறைவனை வேண்டுவதோடு,

நாம் விண்ணகம் செல்லும் போது, விண்ணக வாசலில் நின்று நம்மை வரவேற்பார்கள்.

அவர்கள் மட்டுமில்லை நமது தர்ம செயல்களால் உதவி பெற்றவர்களும் நமக்காக இறைவனிடம் வேண்டுவார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த உலகில். வாழப் பயன்படுத்துவது இந்த உலகப் பொருள்களை.


உலகப் பொருள்களை நாம் பயன்படுத்தும் முறையை வைத்து நாம் ஆன்மீகவாதிகளா, உலகியல்வாதிகளா என்பது தீர்மானம் ஆகும்.

கையில் கத்தி இருக்கிறது.
அதை கொண்டு காய்கறி வெட்டலாம்,
கொலையும் செய்யலாம்.

கத்தியை நாம் பயன்படுத்தும் முறையை வைத்து நாம் சமையல்காரரா, கொலைகாரரா என்பது தீர்மானிக்கப்படும்.

கையில் உள்ள பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வீடு கட்டி, சகல வித உலக வசதிகளோடு சிற்றின்ப வாழ்க்கை வாழலாம். உலகைச் சார்ந்த நண்பர்களையும் தேடிக் கொள்ளலாம்.

ஆனால் ஆடம்பர வாழ்வும், உலகியல் நட்பும் நமது மரணத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

அல்லது,

 பணத்தை ஆன்மீகக் காரியங்களுக்காக பயன்படுத்தி, விண்ணகத்தில் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

விண்ணக வாழ்வு நிரந்தரமாக நீடிக்கும்.

நமது அனுபவத்தில் உலகியல் வாதிகள் தங்கள் மூளையைப் பயன்படுத்துற அளவுக்கு ஆன்மீகவாதிகள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

ஆகவே தான் பாவ வாழ்க்கை வாழ்பவர்களை விட புண்ணிய வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

இந்நிலை மாற வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

ஆண்டவரது விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, November 8, 2023

தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்"  (அரு. 2:16)

தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்"  
(அரு. 2:16)

சப்பரப் பவனியில் சப்பரத்தின் பின்னால் செல்பவர்களுக்கு இப்போது சொல்லப்போவது புரியும்.

 சப்பரத்தில் வரும் சுரூபம் எந்த புனிதரைக் குறிக்கிறதோ அவருக்கு உப்பையும் மிளகையும் கலந்து காணிக்கையாக போடுவது வழக்கம்.
'
சிலர் போடப்பட்ட உப்பு மிளகை அள்ளி வீட்டுக்குக் கொண்டு வருவது வழக்கம்.

போடப்பட்ட உப்பு மிளகு புனிதருக்கான காணிக்கை. 

காணிக்கையாக எதைப் போட்டாலும் அது நல்ல செயல்.


காணிக்கை போட வேண்டிய உப்பு மிளகை விற்பதற்கென்று சிலர் சப்பரத்தின் பின்னால் வருவார்கள்.

அவர்களின் நோக்கம் வியாபாரம்.

வியாபாரம் லாபம் ஈட்டுவதற்காக செய்யப்படுகிற ஒரு செயல்.

லாபம் ஈட்டுவதில் புனிதம் எதுவும் இல்லை.

ஜெருசலேம் ஆலயத்தின் முன்பும் இதே மாதிரியான ஒரு வியாபாரம் நடைபெற்றதை இயேசு பார்த்தார்.

கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.

கோவில் இறைவனை வழிபடுவதற்காக மட்டும் கட்டப்பட்ட ஆலயம்.

அங்கே நடைபெற வேண்டியது இறை வழிபாடு மட்டுமே.

இறை வழிபாடு நடைபெற வேண்டிய இடத்தில் வியாபார நோக்கில் நடைபெற்ற  விற்பனையை இயேசு விரும்பவில்லை.

ஆகவே   அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். 

ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார்.

 நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து,

 பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

இறைவனின் இல்லம் வியாபாரக் கூடமாக மாறுவதை அவர் விரும்பவில்லை.

உலக ரீதியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

திருமண விழாவுக்கு அழைக்கப்பட்ட ஒருவர் புதுமணத் தம்பதிகளுக்கு பரிசு வாங்க கையில் பணம் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறார்.

இதில் நமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை.

ஆனால் புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் மண்டபத்துக்கு உள்ளேயே யாராவது ஒருவர்,

"வட்டிக்கு பணம் கிடைக்கும்" என்று கூவி,
வட்டித் தொழில் புரிவதை யாராவது அனுமதிப்பார்களா?

திருமண மண்டபத்தில் நடைபெற வேண்டியது புதுமணத் தம்பதிகளுக்கு வரவேற்பும், விழாவுக்கு வந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெறும் விருந்தும் தான்.

அதேபோல்தான் கோவிலில் நடைபெற வேண்டியது இறை வழிபாடு மட்டுமே, வியாபாரம் அல்ல.


"தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்"

என்ற இறை வசனத்தை நமது வாழ்வின் அடிப்படையில் தியானித்துப் பார்ப்போம்.

"உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? " (1கொரி 6:19)

நமது உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம், என்பது இறைவாக்கு.

நாம் வாழும் இல்லத்தை எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துக் கொள்கிறோம்!

நமது உடலில் உள்ள பரிசுத்த ஆவி வாழும் இல்லத்தை நாம் எவ்வாறு வைத்துக் கொள்கிறோம்?

நமது உடலில் குடியிருக்கும் நமது ஆன்மா தான் பரிசுத்த ஆவியின் இல்லம்.

பரிசுத்த ஆவியின் இல்லம் என்றாலும், இறை மகனின் இல்லம் என்றாலும், தந்தையின் இல்லம் என்றாலும் ஒரே இல்லம் தான்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள் தான்.

கடவுள் வாழும் இல்லமாகிய நமது ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க ஒரு் குட்டிக் கதை.

ஒரு பணக்காரத் தந்தைக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள்.

அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து மிகுதியான சொத்து சேர்த்து வைத்திருந்தார்.

ஏராளமான நில புலனங்கள் இருந்தன.

அவருடைய வங்கிக் கணக்கில் லட்சக்கணக்காக ரூபாய்கள் இருந்தன.

உலக வழக்கப்படி அவருடைய காலத்திற்குப் பிறகு அவருடைய சொத்துக்கள் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் போய்ச் சேர வேண்டும்.

ஆனால் அவர் வேறு மாதிரி நினைத்தார்.

தான் கஷ்டப்பட்டு  நேர்மையாகச் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்றி,

 இன்னும் கஷ்டப்பட்டு உழைத்து அவற்றை அதிகப்படுத்தத் தகுதியுள்ள மகனுக்கே

 அவற்றைத் தனது காலத்துக்குப் பின் சொந்தமாக வேண்டும் என்று நினைத்தார்.

தகுதி உள்ள மகன் யார் என்று கண்டுபிடிக்க அவர் இருவருக்கும் ஒரு சோதனை வைத்தார்.

"உங்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு தருவேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீடுகளுக்கு வருவேன். 

யாருடைய வீட்டில் வீடு நிறைய பொருட்கள் இருக்கின்றனவோ

 அவன்தான் என்னுடைய எல்லா சொத்துகளுக்கும் வாரிசு"

என்று அவர்களிடம் சொன்னார்.

அவர் சொன்னபடி மறு ஞாயிற்றுக்கிழமை காலையில் முதலில் மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார்.

மூத்த மகன் வாசலில் நின்று கொண்டிருந்தான்.

"கதவை திற. உள்ளே போவோம்."

''அப்பா, நீங்கள் கூறியபடி வீடு நிறைய பொருட்கள் வாங்கி வைத்து விட்டேன். வீடு நிறைந்திருப்பதால் நம்மால் உள்ளே போக முடியாது.''

",பரவாயில்லை, கதவைத் திற. உள்ளே போய்ப் பார்ப்போம்."

கதவை திறந்தான். அவன் சொன்னபடி உள்ளே நுழைய முடியவில்லை, ஏனென்றால் வீடு நிறைய வைக்கோல் கட்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தான்.

"வீடு நிறைய வைக்கோலை வைத்து இருக்கிறேன். உங்கள் சொத்து எனக்கு தான் வர வேண்டும்."

அப்பா பதில் ஒன்னும் சொல்லவில்லை. 

இளைய மகன் வீட்டுக்குச் சென்றார்.

வீடு திறந்திருந்தது.

வாசலில் நின்ற மகன், "வாருங்கள் அப்பா, வீட்டுக்குள் செல்வோம்"

ஊதுபத்தியின் ரம்யமான வாசனை அவர்களை வரவேற்க, ஒளிமயமான இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்தார்கள்.

மின் விளக்குகளின் ஒளி இல்லத்தை நிரப்பியிருந்தது.

சுவர்  கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வீட்டின் எல்லா அறைகளையும் சுற்றி காண்பித்த பின்

''வாருங்கள், அமர்வோம்.'' எனக்கூறி,

  Dining table    முன் உட்கார வைத்தான்.

தந்தைக்காக மேஜை மேல் காத்துக் கொண்டிருந்த அறுசுவை உணவையும் அவனே பரிமாறினான்.

தந்தையின் முகம் மலர்ந்தது.

தன் மகனின் ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி மகிழ்ந்தார்.

தனது உடைமைகள் அனைத்துக்கும் எனது இளைய மகனையே வாரிசாக்கினார்.

நமது ஆன்மாவாகிய தந்தையின் இல்லத்தை ஒளிமயமான புண்ணிய விளக்குகளால் அலங்கரித்திருக்கிறோமா?

பாவ வைக்கோலால் நிரப்பி வைத்திருக்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணக தந்தை பரிசுத்தர். அவர் தங்கும் இல்லமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

அவர் தங்கும் இல்லத்தில் அவருக்கு எதிரான எந்த விதமான எண்ணத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது.


நமது ஆன்மாவும், அதில் அமைந்துள்ள இல்லமும் தந்தையின் ராஜ்ய எல்லைக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் விண்ணகத் தந்தை அங்கே தங்குவார்.


விண்ணக தந்தையை நாம் எப்போதும் புகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

அவருடைய சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல நமது ஆன்மாவிலும் செய்யப்பட வேண்டும்.

அனுதினமும் நமது விண்ணகத் தந்தை தரும் உணவையே உண்ண வேண்டும்.

நம்மைப் போலவே நமது அயலானும் நமது தந்தையின் பிள்ளையே. நமது அயலான் நமக்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால் நாம் அவனை மன்னித்து விட வேண்டும்.

நாம் பாவத்தில் விழ நேர்ந்தால் உடனடியாகத் தந்தையின் மன்னிப்பைக் கேட்டு பெற்று விட வேண்டும்.

விண்ணகத் தந்தை நமது ஆன்மாவில் உள்ள இல்லத்திலேயே தங்கியிருப்பதால் நமக்குப் பாவச் சோதனைகள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற அவரின் உதவியை கேட்டுப் பெற வேண்டும்.

நமது விண்ணகத் தந்தையோடு எப்போதும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.

அவரோடு பேசிக் கொண்டிருந்தால் எந்தத் தீமையும் நம்மை அணுகாது.

சர்வ வல்லமை வாய்ந்த விண்ணகத் தந்தை நம் இல்லத்தில் எப்போதும் இருக்கும் போது நாம் வேறு யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.

தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம் என்ற நமது ஆண்டவரின் அறிவுரைக்கு ஏற்ப,

அதை அருள் வள வாழ்வுக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

இவ்வுலகில் நமது வாழ்வு முடிந்தவுடன் விண்ணகத் தந்தையின் மோட்ச இல்லத்தில் அவரோடு  நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, November 7, 2023

அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.( லூக்.15:2)

அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.
( லூக்.15:2)

நமது முதல் பெற்றோர் செய்த மிகப்பெரிய செயல் நம் அனைவருக்கும் பாவிகள் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது தான்.

அன்னை மரியாளைத் தவிர மனிதர்கள் அனைவரும் ஜென்மப் பாவத்துடன் தான் உற்பவித்துப் பிறந்தோம்.

மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்கவே இறை மகன் மனு மகனாய்ப் பிறந்தார்.

பாவிகள் இரு வகையினர்.

முதல் வகையினர் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்பவர்கள்.

இரண்டாவது வகையினர் தாங்கள் காவிகளாக இருந்தும் தங்களைப் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

இயேசு வாழ்ந்த காலத்தில் முதல் வகைப் பாவிகள் ஆண்டவருடைய நற்செய்தியைக் கேட்டு அதன்படி வாழ்வதற்காக அவர் சென்ற இடமெல்லாம் அவரோடு சென்றார்கள்.

 இயேசுவும் அவர்களோடு நெருங்கிப் பழகினார்.

இரண்டாம் வகையைச் சேர்ந்த பரிசேயர்களுக்கும், 
சதுசேயர்களுக்கும், 
மறை நூல் அறிஞர்களுக்கும்,
யூத மத குருக்களுக்கும்
 இது பிடிக்கவில்லை.

பாவிகளோடு இயேசு பழகுவதை அனுமதித்தால் அவர்கள் மேல் தங்களுக்கிருந்த அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம் தான் அதற்குக் காரணம்.

தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் அவர்கள் இயேசுவை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

அந்த நோக்கத்தோடு அவரிடம் குறை காண்பதற்காகவே அவர்கள் அவரைப் பின் சென்றார்கள்.

அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கவே இயேசு பிறந்தார்.

நோயாளி தனது நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் முதலில் தான் நோயாளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தான் நோயாளி என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் குணம் பெரும்பொருட்டு மருத்துவரை அணுக மாட்டான்.

இயேசு மனித குலத்திற்கு ஆன்மீக மருத்துவர்.

தங்களது பாவங்களை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து விடுதலை பெறும் நோக்கோடு இயேசுவை அணுகுபவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று மீட்பு அடைவார்கள்.

பாவிகளாக இருந்தும் தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மீட்பின் பயனை அடைய மாட்டார்கள்.

பரிசேயர்களிடமிருந்தும், ஆயக்காரர்களிடமிருந்தும் நாம் ஒரு ஆன்மீகப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் அவர்களைப் பற்றிய விவரங்கள் நற்செய்தி நூல்கள் மூலம் நமக்கு தரப்பட்டுள்ளன.

மனிதர்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காகவே மனிதனாகப் பிறந்த இயேசு 

ஜென்மப் பாவத்திலிருந்து நம்மை மீட்க ஞானஸ்தானம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தையும்,

 கர்மப் பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

நாம் குழந்தைகளாக இருக்கும்போது ஞானஸ்தானம் பெற்று ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.

கிறிஸ்தவர்களாக மாறிவிட்டோம்.

நாம் வளர்ந்த பின்பு செய்கின்ற பாவங்களிலிருந்து விடுதலை பெற பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தைப் பயன்படுத்திகிறோமா?

அல்லது பரிசேயர்களைப் போல நாம் பாவிகளாக இருந்தும் நம்மைப் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமா?

பாவிகளாகிய நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

நாம் பாவங்களிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் நாம் இயேசுவைத் தேடிச் செல்ல வேண்டும்.

அதற்காகத்தான் தனது பிரதிநிதிகளாக குருக்களை நம்மிடம் இயேசு 
அனுப்பியுள்ளார்.

பள்ளிக்கூடங்களை நிர்வகிக்கவும், ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் குருக்கள் அனுப்பப்படவில்லை.

நமது பாவங்களை மன்னிக்கவும்,

 திரும்பவும் பாவத்தில் விழாமல் இருக்க வேண்டிய ஆன்மீக தைரியத்தைப் பெறவும்

 நமக்கு இயேசுவையே உணவாகத் தரவுமே குருக்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

அதற்காகவே இயேசு பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திரு விருந்து ஆகியவற்றை இயேசு ஏற்படுத்தினார்.

திருமண அழைப்பை ஏற்று திருமண விழாவுக்குச் சென்றால்
'
அதற்குரிய பரிசு பொருளுடன் திருமணத் தம்பதிகளைப் பார்க்காமலும்,

திருமண விருந்தை சாப்பிடாமலும் திரும்புவோமா?

இயேசு அழைத்திருக்கும் ஆன்மீக திருமண விழாவிற்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய பரிசுப் பொருள் பரிசுத்தத்தனம்.
 
அந்தப் பரிசோடு இயேசுவை சந்தித்து,

அவரையே விருந்தாக அருந்தி விட்டுத்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்..

அநேகர் பரிசுத்தத்தனமாகிய பரிசுப் பொருள் இல்லாமலேயே,

இயேசுவைச் சந்தித்து,

அவரை விருந்தாக அருந்தி விடுகிறார்கள்.

நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தர்களாக மாற்றவே இயேசு உலகிற்கு வந்தார்.

நாம் பரிசுத்தர்களாக மாறாவிட்டால், நாம் பார்க்கும் திருப்பலியாலும், அருந்தும் திரு விருந்தாலும் எந்தப் பயனும் இல்லை.

"ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான்.


28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.

29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்.
(1கொரி.11:27-29)


இயேசு பாவிகளாகிய நம்மை வரவேற்று தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.

பாவிகளாகிய நாம் பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று,

பரிசுத்தமான உள்ளத்தோடு அவரை உணவாக உண்போம்.

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.

 நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

55 என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம். 

56 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."
(அரு. 6:54-56)

பரிசுத்தமான உள்ளத்தோடு 
பரிசுத்தரை உணவாக உண்டு, 
பரலோக சாம்ராஜ்யத்தில் 
அவரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.