(லூக்.13:21)
கொதிக்க வைத்து ஆற வைத்த பாலுக்குள் சிறிது புளிக்கும் மோரை ஊற்றினால் மறுநாள் பால் முழுவதும் தயிராகி விழுகிறது.
தயிரைக் கடைந்தால் மோர் கிடைக்கிறது.
ஆக மோருக்கு பாலை மோராக ஆக்கும் ஆற்றல் இருக்கிறது.
முந்திய நாள் ஆட்டிய மாவை புளிக்க வைத்தால்தான் மறுநாள் அதைக் கொண்டு பண்டங்கள் செய்ய முடியும்.
மூன்றுபடி மாவைப் புளிக்க வைக்க அதில் சிறிதளவு ஏற்கனவே புளித்த மாவை சேர்க்க வேண்டும்.
புளித்த மாவுக்கு புளியாதிருக்கும் மாவையும் புளிக்க வைக்கும் ஆற்றல் உண்டு.
கடவுளின் அரசுக்கு அவரைச் சாராத அரசை அவரது அரசாக மாற்றும் வல்லமை உண்டு.
இறையரசை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமையை இயேசு நமக்குத் தந்திருக்கிறார்.
பேனாவுக்கு எழுதும் சக்தி உண்டு. ஆனால் பேப்பர் மீது பேனாவை வைத்துவிட்டால் அது எழுதாது. நாம் அதைக் கையில் எடுத்து எழுத வேண்டும்.
நாம் ஞானஸ்நானம் பெரும்பொழுது இறையரசுக்குள் நுழைகிறோம்.
நமக்குள் இறையரசு இருக்கிறது.
நமக்குள் இருக்கும் இறையரசை உலகெங்கும் பரப்ப வேண்டும்.
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை இதைச் சார்ந்தது தான்.
நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்க வேண்டுமானால் நாம் உலக மக்களிடையே நற்செய்தியை வாழ வேண்டும்.
இறையரசை உலகெங்கும் சென்று பரப்ப வேண்டுமானால் நாம் உலக மக்களிடையே இறையரசை வாழ வேண்டும்.
எப்படி புளிப்பு மாவைச் சாதாரண மாவுடன் கலக்கும்போது அது முழுவதும் புளிப்பு மாவாக மாறிவிடுகிறதோ,
அதே போல் தான்,
கடவுளின் அரசை நாம் மக்களிடையே வாழும்போது மக்கள் அனைவரும் கடவுளின் அரசில் சேர்ந்து விடுகிறார்கள்.
கி.பி. முதல் நூற்றாண்டிலேயே புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தியை அறிவிக்க வந்துவிட்டார்.
அனேகர் நற்செய்தியை ஏற்று ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.
தமிழ்நாட்டில் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும் போது இயேசுவுக்காக வேத சாட்சியாக மரித்தார்.
கிறிஸ்துவின் அரசு கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டது.
இப்போது நடந்து கொண்டிருப்பது 21ஆவது நூற்றாண்டு.
ஆண்டவர் எதிர்பார்க்கிற கணக்கின்படி பார்த்தால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக மாறியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு நபரும் மற்றொரு நபரை இறையரசுக்குள் கொண்டு வந்திருந்தால் கூட கிறிஸ்தவம் இந்தியாவில் பொங்கி பிற நாடுகளை நோக்கி பரவியிருக்க வேண்டும்.
ஆனால் நாம் இன்று சிறுபான்மையினராகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
காரணம் கிறிஸ்தவமாகிய புளிப்பு மாவை இந்தியாவாகிய மாவுக்குள் நாம் என்னும் கலக்கவில்லை.
நாம் பட்டும் படாமலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
காந்தம் இரும்பை தன்நோக்கி இழுப்பது போல,
நமது கிறிஸ்தவ வாழ்வு இன்னும் மற்றவர்களை நம்மை நோக்கி இழுக்கவில்லை.
காரணம் நாம் இன்னும் கிறிஸ்தவர்களாக வாழ வில்லை.
ஞானஸ்நானம் பெற்ற நாம் கோவிலுக்கு போவது மட்டும் கிறிஸ்தவ வாழ்வு அல்ல.
நாம் இன்னும் முழுமையான இறை நம்பிக்கையில் வளரவில்லை.
கேளுங்கள் தரப்படும் என்று கூறிய ஆண்டவரிடம்
எத்தனை பேர், "நாங்கள் நல்ல, முன்மாதிரிகையான கிறிஸ்தவர்களாக வாழ வரம் தரும் ஆண்டவரே" என்று கேட்கிறோம்?
"தேர்வில் வெற்றி பெற உதவி செய்யும்,
நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும்,
ஒரு புது வீடு கட்ட ஆவன தந்து உதவும்,
ஒரு ஆண் குழந்தையைத் தாரும்"
என்று ஆன்மீகம் சாராத உதவிகளைத் தானே கேட்டு ஜெபிக்கிறோம்.
நமது பிறர் அன்பு பணிகள் விளக்குத் தண்டின் மேல் வைத்த விளக்கின் ஒளி தெரிவது போல் மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
நமது பிறர் அன்பு பணிகளைப் பார்த்து பிற சமயத்தவர் கிறிஸ்துவைப் நோக்கி வரக்கூடிய அளவிற்கு நமது பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.
நம்மைப் பார்ப்பவர்கள் அவர்களில் ஒருவராக பார்க்கின்றார்களே தவிர ஆன்மீகத்தில் அவர்களை விட வித்தியாசமானவர்களாக நம்மை பார்க்கவில்லை.
ஏனெனில் நாம் வித்தியாசமானவர்களாக இல்லை.
கிறிஸ்துவின் வார்த்தைகளில் நாம் புளிப்பு மாவாக செயல்படவில்லை.
புளியாத மாவு புளியாத மாவாகவே தொடர்கிறது.
நமது தவறை நாம் ஏற்றுக் கொண்டு,
நல்ல கிறிஸ்தவர்களாக,
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழக்கூடிய கிறிஸ்தவர்களாக,
இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக
கிறிஸ்து அவர்களாக வாழ்வோம்.
நாம் முயன்றால் உலகையே இறை அரசுக்குள் நம்மால் கொண்டு வர முடியும்.
உலகம் மாவென்றால் , நாம் நாம் புளிப்பு மாவாக செயல்படுவோம்.
லூர்து செல்வம்.