Friday, June 30, 2023

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."(மத்.8:8)

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."
(மத்.8:8)

 திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப் பட்டுக் கொண்டிருந்த தன் ஊழியனுக்குக் குணம் கொடுக்கும்படி இயேசுவைக் கேட்க வந்த நூற்றுவர்தலைவனின் வார்த்தைகள் இவை.


"நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" 

என்று சொன்ன இயேசுவை நோக்கி,

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்"

என்று கூறினான்.

இயேசுவும் அவனது விசுவாசத்தின் ஆழம் கருதி,

அவனது இல்லத்திற்குச் செல்லாமலேயே அவனது ஊழியனைக் குணமாக்கினார்.


நூற்றுவர்தலைவன் தான் சொன்ன வார்த்தைகளின் பொருளை உணர்ந்து சொன்னான்.

சர்வ வல்லவரும், பரிசுத்தருமாகிய இயேசு வர பாவியாகிய தனது இல்லம் தகுதி அற்றது என்பதை உணர்ந்து சொன்னான்.

 நாம் திவ்ய நற்கருணை மூலம் நமது ஆண்டவரை நமது இதயமாகிய இல்லத்திற்கு வரவேற்கும் போது 

இதே வார்த்தைகளை நாமும் கூறுகிறோம்.

ஆனால் வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கூறுகிறோமா,

 அல்லது 

வெறும் சடங்கின் அடிப்படையில் கூறுகிறோமா?

உணர்ந்து கூறினால் பாவ நிலையோடு திவ்ய நற்கருணை ஆண்டவரை நமது இல்லத்திற்குள் வரவேற்க மாட்டோம்.

திருப்பலிக்கு முன்பே நமது இதயத்தைப் பாவ சங்கீர்த்தரத்தின் மூலம் பரிசுத்தம் ஆக்கிவிட்டு,

அப்புறம் தான் திருப்பலியிலும் திருவிருந்திலும் கலந்து கொள்வோம்.

ஒவ்வொரு நாளுமோ, ஞாயிற்றுக்கிழமை தோறுமோ திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டியதிருப்பதால்,

பாவ சந்தர்ப்பங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம்.

பாவ சோதனை வரும்போது நமது இதயத்தை அசுத்தப்படுத்திவிட கூடாது என்பதற்காக,

பாவத்தை விலக்குவதிலும்,

நமது பரிசுத்தத் தனத்தைக் காப்பாற்ற வேண்டிய அருள் வரங்களைத் தரும்படி இறைவனை வேண்டுவதிலும் கவனமாக இருப்போம்.

மன வல்லப செபங்களைக் கூறுவதின் மூலமும்,

செபமாலைகளைப் பக்தியுடன் செபிப்பலின் மூலமும் 

நமது இருதயப் பரிசுத்தத் தனத்தைக் காப்பாற்றுவோம்.

திவ்ய நற்கருணை வாங்குவதற்கு மட்டுமல்ல,

எந்த வினாடியும் மரணத்தின் வழியாக 

இயேசுவோடு இணைந்து வாழ விண்ணகம் செல்வதற்கும் தயாராக இருப்போம்.

பெயருக்கு மட்டுமல்ல உண்மையிலேயே இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

நமது இருதயம் பரிசுத்த ஆவி வாழும் ஆலயம்.

அந்த ஆலயத்தின் பரிசுத்தத் தனத்தை பரிசுத்த ஆவிக்காகக் காப்பாற்றுவோம்.

இறைவாக்கை வாசிப்பதில் மட்டுமல்ல, அதை வாழ்வாக்குவதிலும் அக்கறை காட்டுவோம்.

"ஆண்டவரே நீர் என் இல்லத்திற்குள் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்.

தயவுகூர்ந்து எனது பாவங்களை எல்லாம் மன்னித்து, உம்மை எனது இதய இல்லத்திற்குள் ஏற்றுக்கொள்ள தகுதி உள்ளவனாக மாற்றும்.

நான் எந்த வினாடி இறந்தாலும் என்னை உமது இல்லமாகிய விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொள்ளும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment