நாம் இறைவனோடு சமாதான நிலையில் இருக்கிறோம் என்பதற்கு வெளி அடையாளம் தான் நாம் செலுத்தும் காணிக்கை.
நமது வீட்டுக்கு நமக்கு நெருக்கமான உறவினர்கள் வந்தால் அவர்களை வெறுமனே "வாருங்கள்" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம்,
குடிப்பதற்குப் பானமும், உண்பதற்கு உணவும் கொடுத்து உபசரிப்போம்.
நமது உபசரிப்பு நமது உள்ளார்ந்த அன்புறவின் வெளி அடையாளம்.
இறைவனோடு சமாதான நிலையில்,
அதாவது அன்புறவில் இருக்கிறோம் என்றால்,
அவரால் படைக்கப்பட்ட நமது அயலானோடும் சமாதானமாக,
அதாவது அன்புறவில்
இருக்கிறோம் என்று தான் பொருள்.
இறைவனோடு உண்மையிலேயே சமாதான உறவில் இருப்பவன் தன்னுடைய அயலானோடு சமாதான உறவில் இருப்பான்.
அயலானோடு சமாதான உறவில் இல்லாவிட்டால் இறைவனோடும் சமாதான உறவில் இல்லை என்று தான் அர்த்தம்.
சமாதானம் இல்லாமல் செலுத்தும் எந்தக் காணிக்கையும் பயனற்றது.
ஏனெனில் அது நமது உறவினால் கொடுக்கப்படுவது அல்ல.
நாம் நமது அயலானோடு சமாதானமாக இருந்தாலும்,
அவன் நம்மோடு சமாதானமாக இல்லாவிட்டால்,
அதன் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்து,
உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
புதுப்பித்துக் கொண்ட பின்புதான் இறைவனுக்குரிய காணிக்கையை செலுத்த வேண்டும்.
இறைவன் விரும்புவது நமது காணிக்கையை அல்ல,
அவரோடும் நமது பிறரோடும் நமக்கு இருக்கும் சமாதான உறவையே அவர் விரும்புகிறார்.
"இறைவனை நேசிக்க வேண்டும்,
நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்"
என்ற இரு கட்டளைகளின் பொருள்,
"இறைவனோடு சமாதான உறவில் இருக்க வேண்டும்,
நம்மோடு நாமே சமாதான உறவில் இருக்க வேண்டும்,
நமது அயலானோடும்
சமாதான உறவில் இருக்க வேண்டும் என்பது தான்.
ஒரு வேலைக்கு நேர்காணலுக்குச் செல்லும்போது முதலில் நம்மிடம் எல்லா சான்றிதழ்களும் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொள்கிறோம்.
அதேபோல் தான் இறைவனுக்கு காணிக்கை செலுத்தச் செல்லும்போது நாம் அதற்கு தகுதியானவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதாவது நமது பிறனோடு நாம் சமாதான உறவில் இருக்கின்றோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தங்கள் பிறனோடு தகராறு செய்து கொண்டிருக்கிறவர்கள்,
இறைவனோடும் தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள்.
தகராற்றைச் சரி செய்து கொள்ளாமல் இறைவனுக்குக் காணிக்கை செலுத்த முடியாது.
துணிந்து செலுத்துபவர்களின் காணிக்கையை இறைவன் ஏற்க மாட்டார்.
காணிக்கை காணிக்கைப் பெட்டிக்குள் போகலாம்,
இறைவனிடம் போகாது.
நாம் சமாதானம் செய்ய முயன்றும் நமது பிறன் சமாதானத்திற்கு வர மறுத்துவிட்டால்,
அது நம்முடைய குற்றம் இல்லை.
அவன் இறைவனுடைய சமாதான வழிக்கு வரும்படி வேண்டிக் கொண்டு நமது காணிக்கையைச் செலுத்த வேண்டியதுதான்.
நாம் நமது அயலானுக்கு விரோதமாக ஏதாவது தப்புச் செய்திருந்தால், அதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நமது அயலான் நமக்கு விரோதமாக ஏதாவது தப்புச் செய்திருந்தால், நாம் அவனை மன்னிக்க வேண்டும்.
அவனை நாம் மன்னித்தால் தான் நமது விண்ணகத் தந்தை நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பார்.
சமாதான உறவு சரிப்பட உரிய மருந்து மன்னிப்பு தான்.
மன்னிக்கும் குணம் இருக்கும் இடத்தில் உறுதியாக சமாதான உறவு இருக்கும்.
பாவ சங்கீர்த்தனத்தில் நமது பாவங்களைச் சங்கீர்த்தனம் செய்த பின்
குருவானவர்இயேசுவின் இடத்தில் இருந்து கொண்டு நம்மை நோக்கி,
''தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நான் உனது பாவங்களை மன்னிக்கிறேன், சமாதானமாகப் போ" என்கிறார்.
நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன்னுடைய குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
இயேசு நமது பாவங்களை மன்னிக்கும் போது நாம் அவருடைய சமாதான நல்லுறவுக்குள் நுழைகிறோம்.
நாம் எத்தனை கோடிப் பாவங்கள் செய்திருந்தாலும் இயேசுவின் சமாதான நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
அவரால் மாற முடியாதாகையால்
நாம் பாவம் இல்லாத நிலையில் நம்மோடு எப்படி இருந்தாரோ
அதே போல் தான் நாம் பாவ நிலையில் இருக்கும் போதும் இருப்பார்.
மாறுவது நாம்தான்.
நரகத்தில் உள்ளவர்கள் மேலும் இறைவனின் அன்பு மாறாது.
ஆனால் அவர்களால் மாற முடியாது.
உலகில் வாழும் போது நம்மால் மாற முடியும்.
ஆகவே பாவங்கள் செய்து விட்டாலும் மனம் திரும்பி மன்னிப்பு பெற்று சமாதான நிலைக்கு திரும்ப வேண்டும்.
பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாவம் செய்யக்கூடாது.
யாராவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக கீழே விழுந்து கை கால்களை முறித்துக் கொள்வார்களா?
நமது பெருமையை வெளிக்காட்டி கொள்வதற்காக,
அதாவது விளம்பரப் படுத்திக் கொள்வதற்காகச் செலுத்தப்படும் காணிக்கையால் நமக்கு எந்தவித ஆன்மீக பலனும் இல்லை.
புதிதாக கோவில் கட்டுவதற்காக நன்கொடை பிரிப்பதற்காக
ஒருவரிடம் வருகிறார்கள்.
எவ்வளவு நன்கொடை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்களது பெயர் கல்வெட்டில் எழுதப்பட்டு கோவில் சுவரில் பதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
நன்கொடை கொடுப்பவர் தனது பெயர் கல்வெட்டில் எழுதப்பட வேண்டும் என்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அது காணிக்கை அல்ல.
சுய விளம்பரம்.
இறையன்பினால் உந்தப்பட்டு ஒரே ஒரு ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்றது.
சுய விளம்பரத்திற்காக லட்சக் கணக்கில் கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்றது அல்ல.
சமாதான நிலையில் நம்மால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவோம்.
இறைவன் விரும்புவது நமது சமாதான நிலையைத்தான்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment