Saturday, June 10, 2023

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு". (அரு.6:51)

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு". (அரு.6:51)

மண்ணில் வாழ மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நமது உடலுக்கு வேண்டிய உணவு மண்ணிலிருந்து வருகிறது.

அப்படியானால் சொல்லாமலே விளங்கும் விண்ணில் வாழ இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மாவுக்கு வேண்டிய உணவு விண்ணிலிருந்து வரவேண்டும்.

உடலுக்கு மண் உணவு. உடலுக்கான உணவு மண்ணில் உள்ள தாதுப் பொருட்களால் ஆனது.

ஆன்மாவுக்கு உணவு இறைவன்.

 இயேசுவின் வருகைக்கு முன் இறைவன் தனது அருளை ஆன்மாக்களுக்கு உணவாகக் கொடுத்து வந்தார்.

இறைமகன் மனுவுரு எடுத்து, திவ்ய நற்கருணையை ஏற்படுத்திய பின்,

தன்னையே தனது அருள் வரங்களுடன் நமது ஆன்மாக்களுக்கு உணவாகத் தந்து வருகிறார்.

இதைத்தான் இயேசு,

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு".

என்று சொன்னார்.

ஒவ்வொரு நாளும் திருப்பலியின் போது நமக்கு தரப்படும் திரு விருந்தில் குருவானவர் நமக்கு இயேசுவை ஆன்மீக உணவாக அளிக்கிறார்.

குருவானவர் இயேசுவின் பிரதிநிதி.

அன்று புனித வியாழக் கிழமை இயேசு அப்பத்தைத் தனது உடலாகவும், ரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றி தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

இன்று குருவானவர் திருப்பலியின்போது இயேசு சொன்ன அதே வசீகர வார்த்தைகளைப் பயன்படுத்தி 

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தைத் அவரது இரத்தமாகவும் மாற்றி நமக்கு உணவாகத் தருகிறார்.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது இந்த உணர்வுடன் வாங்குகிறோமா?

நாம் வாங்குவது உயிருள்ள உணவு.

விண்ணிலிருந்து வந்த உயிருள்ள 
 உணவு.

கையில் வாங்கி வாயில் போடப்பட வேண்டிய தின்பண்டம் அல்ல.

குருவானவர் திவ்ய நற்கருணை கொடுக்கும் போது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால்

விண்ணிலிருந்து வந்த உயிருள்ள கடவுளை உணவாகப் பெறுவது போல் தெரியவில்லை.

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சுதந்திர தினக் கொடியேற்றத்தின் போது ஆசிரியர் கொடுக்கும் ஆரஞ்சு வில்லையை கையில் வாங்கி வாயில் போடுவது போல் தெரிகிறது.

உயிருள்ள கடவுளுக்கு ஆரஞ்சு வில்லைக்கு கொடுக்கும் மரியாதையைக் கொடுத்தால்

அது கடவுளை அவமானப் படுத்துவதற்குச் சமம்.

நம் மீது இரங்கி நமக்குத் தன்னையே உணவாகத் தரும் இறை மகனை

ஆராதனை கலந்த பக்தி உணர்வோடு நாவில் பெறுவதற்குப் பதிலாக

தின் பண்டத்தை வாங்குவது போல் கையில் வாங்கி வாயில் போட்டால்

நம்மைப் போல் நன்றி மறந்தவர்கள் யாருமில்லை.

ஒரு குழந்தை தன் வாயைத் திறந்து தாய் ஊட்டும் உணவைப் பெறுவது போல,

நாமும் நமது வாயைத் திறந்து குருவானவரிடமிருந்து இறையுணவைப் பெறுவோம்.

நம்மிடம் வருவது நம்மைப் படைத்த இறைமகன் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment