Tuesday, June 20, 2023

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)

நமது ஆன்மாவையும், அதன் சிந்தனைகளையும் கடவுளைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது.

நாம் நமது உடலால் செய்யும் செயல்களை கண் உள்ள யாராலும் பார்க்க முடியும்.

நமது உடலை இயக்குவது ஆன்மாதான்.

இயக்குவதன் காரணமும் நோக்கமும் ஆன்மாவுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

 உடல் இயங்குவது அதைப் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

இயக்குவதன் காரணமும், நோக்கமும் சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும்.

இயங்குவதைச் செயல் என்கிறோம்.

இறைவனுடைய அன்பை காரணமாகவும் நோக்கமாகவும் இயங்குவதை நற்செயல் என்கிறோம்.

நமது எல்லா செயல்களும் நற்செயல்கள் அல்ல. 

இறைவனது அன்பை மையமாக வைத்து செய்யப்படும் செயல்களே நற்செயல்கள்.

இறை அன்பினால் உந்தப்பட்டு,
தேவைப்படுகின்றவர்களுக்கு நாம் செய்யும் உதவி நற்செயல்.

இறை அன்பினால் அல்லாமல்,
நமது திருப்திக்காக மட்டும் தேவைப்படுகின்றவர்களுக்கு நாம் செய்யும் உதவி சாதாரண செயல், நற்செயல் அல்ல.

நற்செயல்களுக்கு விண்ணக வாழ்வின் போது சன்மானம் கிடைக்கும்.

சாதாரண செயல்களுக்கு ஆன்மீக சம்பந்தமான எந்தவித சன்மானமும் கிடைக்காது.

நமக்கு திருப்தி வேண்டுமானால் கிடைக்கும்.

அந்த திருப்தியால் ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.

நமது செயல்கள் நமக்கு நித்திய பேரின்ப சம்பாவனையை  ஈட்டித் தர வேண்டுமென்றால்,

 நாம் அவற்றை இறையன்புக்காகவும்,

அதிலிருந்து பிறந்த பிறர் அன்புக்காகவும் மட்டும் செய்ய வேண்டும்.

நமது திருப்திக்காகவும்,

சுய விளம்பரத்திற்காகவும்,

மற்றவர்கள் அவற்றைப் பார்த்து நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காகவும்

செய்யப்படும் செயல்கள் நற்செயல்கள் அல்ல.

நமது சிந்தனைகளிலிருந்து தான் செயல் பிறக்கிறது.

நமது சிந்தனைகள் இறை அன்பை மையமாகக் கொண்டவையாக இருந்தால்,

நமது செயல்களும் இறை அன்பை மையமாகக் கொண்டவையாக இருக்கும்.

நமது சிந்தனைகள் எப்படிப் பட்டவை என்று நமக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

ஆகவே அவற்றிலிருந்து பிறந்த செயல்கள் நற் செயல்களா, அல்லது சாதாரண செயல்களா என்பதும் நமக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

அனேக சமயங்களில் நாம் மற்றவர்களைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு அவர்களது செயல்களின் தன்மையைக் கெடுத்து விடுகிறோம்.

ஒருவர் 25 ஆண்டுகளாக உண்மையிலேயே இறையன்பின் அடிப்படையில் சேவை செய்து நற்செயல்கள் புரிந்து வாழ்ந்திருப்பார்.

விண்ணகத்திலும் தனது நற்செயல்களுக்கு இறைவனின் சம்பாவனையை ஈட்டி வைத்திருப்பார்.

ஆனால் நாம் அவரது சேவைகளைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு,

அவரது சேவைகளுக்கு வெள்ளி விழாக் கொண்டாடுவதன் மூலம்,

உண்மையிலேயே இறைவனுக்காக செய்த சேவைகளைப் பற்றி,

அவர் மனதில் தற்பெருமையை ஊட்டி விடுகிறோம்.

தற்பெருமையால் தான் லூசிபெர் சாத்தானாக மாறியதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்பெருமை தலையான பாவங்களில் முதன்மையானது.

தாழ்ச்சிக்கு நேர் எதிரானது.

மற்றவர்கள் மனதில் தற்பெருமையை ஊட்டுபவர்கள் சாத்தானின் வேலையைத்தான் செய்கின்றார்கள்.

மற்றவர்கள் பார்க்க வேண்டும், நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக நாம் எந்த செயலையும் செய்யக்கூடாது.

விசுவாசத்தோடு நற்செயல்களும் சேர்ந்து தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தருகின்றன.

இறைவனது மகிமைக்காக மட்டுமே வாழ்ந்து,

இறைவனோடு நித்திய காலம் வாழும் பாக்கியத்தைப் பெறுவோம்.

இறைவன் மட்டுமே நமது செல்வம்.

அவரோடு நித்திய காலம் வாழ்வது நமது பாக்கியம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment