------------------------------------------------------------
இறைவன் நம்மை தனது சாயலில் படைத்தார்.
தந்தை, மகன், தூய ஆவி மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே அன்பு.......
நமது
உள்ளத்தின் நினைப்புக்கும்,
வாயின் வார்த்தைக்கும்,
செய்யப்படும் செயலுக்கும்
ஒரே நோக்கம்.
இறைவனது மகிமை.
இறைவனது மகிமைக்காக நினைக்க வேண்டும்,
இறைவனது மகிமைக்காக
பேச வேண்டும்.
இறைவனது மகிமைக்காக
செயல் புரிய வேண்டும்.
காலையில் ,
"நினைவிலும், சொல்லிலும்
செயலிலும்
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் இன்றைய நாளை ஆரம்பிக்கிறேன்"
என்ற செபத்தோடு எழ வேண்டும்.
"அன்பு தந்தையே, இன்றைய நாளில் எனது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் உமது மகிமைக்காகவே.
உலகில் வாழ்ந்தாலும் உமது பிரசன்னத்தில் தான் வாழ்வேன்."
என்ற எண்ணங்களால் நாம் பகல் முழுவதும் இயக்கப்பட வேண்டும்.
நமது அந்தஸ்தின் கடமைகள் அத்தனையையும் நமது திருப்திக்காக அல்லாமல் இறைவனை திருப்திப்படுத்தும் நோக்கோடு செய்ய வேண்டும்.
நமது உள்ளத்தில் இயேசுவே நமக்காகச் சிந்திப்பார்.
நமது வாய் மூலம் அவர் பேசுவார்.
அவரே நம்மில் செயல் புரிவார்.
புனித சின்னப்பரோடு சேர்ந்து நாம் துணிந்து சொல்லலாம்:
வாழ்வது நான் அல்ல, இயேசுவே என்னில் வாழ்கிறார்.
நம்மில் இயேசு செயல் புரியும்போது விண்ணக தந்தையின் சித்தம் நம் மூலமாக நிறைவேறும்.
"உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல மண்ணகத்திலும் செய்யப்படுவதாக" என்ற கர்த்தர் கற்பித்த செபம்
நம்மில் வாழும் இயேசுவால் நம்மில் செயல் வடிவம் பெறும்.
நாம் உலகில் வாழும் போதே விண்ணக வாழ்வின் ருசி நமது ஆன்மாவில் இருக்கும்.
திருமண விருந்தின் போது மட்டன் பிரியாணி போடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால்,
மணமக்களை விட அழைக்கப்பட்டவர்கள் தான் திருமண நாளை ஆவலுடன எதிர் நோக்கிக் கொண்டிருப்பார்கள்.
விண்ணகத்தில் நாம் அனுபவிக்கப் போவது பேரின்ப வாழ்வு என்ற உண்மை நம் உலக வாழ்வின் போது நமக்கு உறுதியாகிவிட்டால்,
விண்ணக வாழ்வையே எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருப்போம்.
இயேசுவே நம்மில் வாழ்ந்தால் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது விண்ணக வாழ்வின் ருசியைத் தானே!
விண்ணக வாழ்வின் ஆரம்பமாகிய மரணத்தை எண்ணி பயப்பட மாட்டோம்.
எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment