கடவுள் நம்மை அவருடைய சாயலில் படைத்தார்.
அவர் அசல், நாம் நகல்.
நகலைப் பார்த்தாலே அசல் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது நமது சான்றிதழின் Xerox copy யைத்தானே அனுப்புகிறோம்.
நம்மில் நாம் கடவுளைப் பார்க்கிறோம்.
நமது அயலானும் நம்மைப் போல் தான் இருக்கிறான்.
ஆகவே நம்மில் கடவுளைப் பார்ப்பது போல் நமது அயலானிலும் கடவுளைப் பார்க்க வேண்டும்.
நாம் நம்மை நேசிப்பது போல் நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் சொல்கிறார்.
நம்மைப் பற்றி தப்பாக நினைக்க நமக்கு மனசு வருமா?
எப்போதும் நம்மைப் பற்றி நாம் உயர்வாக நினைக்கவே ஆசைப்படுகின்றோம்.
அப்படியானால் நமது அயலானைப் பற்றித் தப்பாக நினைக்கலாமா?
மற்றவர்களைத் தீர்ப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.
மற்றவர்களைத் தீர்ப்பிட்டால் நாமும் அதே தீர்ப்புக்கு உள்ளாவோம்.
மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.
அப்போதுதான் நாம் அவர்களை நம்மை நேசிப்பது போல நேசிக்க முடியும்.
மனிதருள் குற்றம் இல்லாதவர் யாருமில்லை.
மற்றவர்களிடம் உள்ள ஒரு குற்றம் நம் கண்ணில் பட்டால் அதே குற்றம் நம்மிடமும் இருக்கிறது என்று அர்த்தம்.
பனை மரத்தின் அடியில் அமர்ந்து ஒருவன் பால் சாப்பிட்டாலும்,
குடிகாரனுக்கு அவன் கள் சாப்பிடுவது போலவே தோன்றும்.
நாம் ஒரு இடத்துக்குச் சென்று ஒரு தப்பு செய்தால், அந்த இடத்துக்கு செல்வோரெல்லாம் அதே தப்பைச் செய்வதாக நமக்குத் தோன்றும்.
நமது கண்ணில் குற்றம் இருந்தால் அந்த கண்ணைக் கொண்டு யாரைப் பார்க்கிறோமோ அவர்களிடமும் அதே குற்றம் இருப்பது போல் தோன்றும்.
ஏனெனில் நமது கண் மற்றவர்களிடம் பிரதிபலிக்கும்.
நமது பிரதிபலிப்பை நாம் பார்த்து அதுதான் நமது அயலான் என்று தீர்மானித்து விடக்கூடாது.
இப்போது ஒரு கேள்வி எழலாம்.
மற்றவர்கள் தப்பு செய்யும் போது அதைத் திருத்தும் கடமை நமக்கு இல்லையா?
முதலில் நம்மை நாமே பரிசோதித்து,
நமது குற்றங்களைக் கண்டறிந்து
அவற்றைத் திருத்தியபின் மற்றவர்களை திருத்த முயல வேண்டும்.
நமது வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு
மற்றவர்களிடம் "சிகரெட் பயன்படுத்துவது தவறு" என்று சொன்னால் அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.
"நீ முதலில் திருந்து," என்பார்கள்.
24 மணி நேரமும் இருமிக் கொண்டிருக்கும் ஒரு வைத்தியர் இருமலுக்கு மருந்து கூறுவதை யார் நம்புவார்கள்?
ஆகவே ஒன்றை மனதில் வைத்துக் கொள்வோம்.
உலகைத் திருத்த ஆசைப்படுமுன் முதலில் நாம் திருந்துவோம்.
அப்போதுதான் நமது ஆசை நியாயமானதாக இருக்கும்.
நாம் யாராலும் தீர்ப்பிடப்பட ஆசைப்படுவதில்லை.
நாமும் மற்றவர்களைத் தீர்ப்பிட வேண்டாம்.
மனிதர்களைத் தீர்ப்பிடும் உரிமை அவர்களைப் படைத்த கடவுளுக்கே உண்டு.
கடவுளின் உரிமையில் தலையிட நமக்கு உரிமை இல்லை.
முதலில் நாம் திருந்துவோம்.
மற்றவர்களை சகோதர உரிமையோடு தீர்ப்பிடாமல், திருத்துவோம்.
ஒரு நல்ல மாணவர் தான் நல்ல ஆசிரியர் ஆக முடியும்.
அவரால் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.
யாரையும் தீர்ப்பிடுவதில்லை என்று தீர்மானம் எடுப்போம்.
நாம் திருந்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment