"உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்."
(லூக்.2:44)
இயேசுவுக்கு 12 வயது.
ஒவ்வொரு ஆண்டும் பாஸ்காத் திருவிழாவிற்குச் செல்வது போல
அன்னை மரியாளும் சூசையப்பரும் 12 வயது இயேசுவை அழைத்துக்கொண்டு ஜெருசலேம் ஆலயத்திற்குச் சென்றார்கள்.
திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார்.
இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
யாத்திரிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருநாள் வழிநடந்த பின்னர்
உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்.
அவரைக் காணாததால் தேடிக்கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.
12 வயதில் காணாமல் போன இயேசுவைத் தேடிக்கொண்டு மாதாவும் சூசையப்பரும் யெருசலேம் வந்ததையும்,
அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்ததையும் பற்றி
தினமும் செப மாலை சொல்லும் போது தியானிக்கிறோம்.
இயேசு இறை மகன், சர்வ வல்லப கடவுள் என்று மாதாவுக்கும் தெரியும், சூசையப்பதற்கும் தெரியும்.
கடவுள் காணாமல் போவதற்கு பிரபஞ்சத்தில் எங்கும் இடமில்லை.
ஏனெனில் அவர் எங்கும் இருக்கிறார்.
கடவுளாகிய இயேசு தொலைந்து போக மாட்டார், எப்படியாவது தங்களிடம் வந்து விடுவார்கள் என்று மாதாவும் சூசையப்பரும் அவரைத் தேடாமல் ஊருக்கு வந்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த பாசம் அப்படிச் செய்ய விடவில்லை.
இயேசு சிறு குழந்தையாக இருந்த போது ஏரோதுவிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக
அவரை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போகும்படி கபிரியேல் தூதர் சொன்ன போதும்
கடவுள் ஒரு மனிதனுக்குப் பயந்து தப்பித்துச் செல்ல வேண்டுமா என்று கேட்கவில்லை.
"இதோ ஆண்டவருடைய அடிமை"
என்று இறைப்பணிக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தவள் அன்னை மரியாள்.
அடிமைக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிவது.
மாதாவும், சூசையப்பரும்
கீழ்ப்படிந்தார்கள்.
மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடிகள் போல் வாழ்ந்தார்கள்.
12 வயதில் காணாமல் போன இயேசுவைப் பாசத்தால் உந்தப் பட்டு தேடி அலைந்தார்கள்.
பாசமும், கீழ்ப்படிதலும் இறைப் பணியாளர்களின் முக்கிய பண்புகள்,
கடவுளாகிய இயேசு கூட பாசத்துடனும், கீழ்ப்படிதலுடனும் திருக் குடும்பத்தில் வாழ்ந்தார்.
இயேசுவைப் பற்றியும், மரியாளைப் பற்றியும், சூசையப்பரைப் பற்றியும் தினமும் செபமாலை சொல்லும்போது தியானிக்கும் நாம்,
நமது ஆன்மீக வாழ்வில் இந்தப் பண்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
பாசமும், கீழ்ப்படிதலும் இல்லாவிட்டால் ஆன்மீக வாழ்வு இல்லை.
நமது ஆன்மீக அனுபவத்திலும் இயேசுவைக் காணாமல் நாமும் தேடி அலைய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
ஆன்மீகத்தில் இதை The Dark Night of the Soul: என்பார்கள்.
பொருத்தமான தமிழ் வார்த்தை தெரியவில்லை.
இயேசு நமக்குள் தான் இருப்பார்.
ஆனால் அவரைத் தியானிக்கும் போது சாதாரணமாகத் தோன்றக்கூடிய பக்தி உணர்வு, உற்சாகம் ஆகியவை காணாமல் போய்விடும்.
ஒரு விதமான உலர்ந்த உணர்வு (Dry feeling) ஏற்படும்.
ருசியாக இருக்கும் போது உணவை உண்ணும் நாம்,
உணவில் ருசி இல்லாவிட்டாலும் உடல் நலம் கருதி உண்பது போல,
பக்தி உணர்வு பொங்கி வடியும் போது செபம் சொல்வதில் உற்சாகம் காட்டும் நாம்,
உணர்ச்சிகள் உடன் இல்லாவிட்டாலும் இறைவன் அன்பைத் தியானிப்பதையும்,
இறைவன் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும் விட்டுவிடக்கூடாது.
அன்னை மரியாளும், சூசையப்பரும் இயேசுவைத் தேடியது போல,
நாமும் தேட வேண்டும்.
மூன்றாவது நாள் அவர்கள் இயேசுவைக் கண்டு மகிழ்ந்தது போல
நாமும் இயேசுவை பக்தி உணர்வுப்பூர்வமாகக் காண்போம்.
உண்மையான பக்தி உணர்ச்சிகளில் இல்லை,
உள்ளத்தில் இறைவனைத் தியானிப்பதிலும், இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலும் இருக்கிறது.
அன்னை மரியாளும்,
சூசையப்பரும் மூன்றாவது நாள்
இயேசுவைக் கண்டு மகிழ்ந்தது போல நாமும் ஒருநாள் அவரைக் கண்டு மகிழ்வோம்.
அந்த மகிழ்ச்சி நித்திய காலமும் நீடிக்கும்.
https://ucatholic.com/blog/the-dark-night-of-the-soul-when-even-saints-feel-separated-from-god/
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment