Monday, June 19, 2023

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"

என்று தமிழில் ஒரு கூற்று உண்டு.

நமது சிந்தனையில் நமது செயலின் நோக்கம் மிக உயர்ந்ததாகவே இருக்க வேண்டும்.

ஒரு முறை ஒரு மாணவன் SSLC தேர்வுக்கு தயாரித்துக் கொண்டிருந்தான்.

அவனோடு பேசினேன்.

"நன்றாக தயாரித்து விட்டாயா?"

"மிக நன்றாக தயாரித்து விட்டேன், சார்"

"தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?"

"35 மார்க் கட்டாயம் கிடைக்கும், சார்."

Just pass mark எடுப்பதை மிக பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கும் விதத்தில் பாடங்களை தயாரிக்க வேண்டும்.

நாம் ஆன்மீக வாழ்வில் மாணவர்கள்.

இயேசு கேட்கிறார்,

"உலக வாழ்வில் இறுதியில் உனக்கு என்ன கிடைக்கும்."

"மோட்சத்திற்கு வந்துவிடலாம் என்று நம்புகிறேன், ஆண்டவரே.

பாவங்கள் எதுவும் செய்யாமல் என்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்."

"மகனே பாவங்கள் செய்யாமலிருந்தால் மட்டும் போதாது.

புண்ணியங்கள் செய்து கொண்டேயிருக்க வேண்டும்."

"எந்த அளவுக்கு, ஆண்டவரே?"

"உனது வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீயும் நிறைவுள்ளவனாக இருக்கும் அளவுக்கு புண்ணியங்கள் செய்ய வேண்டும்.''

"ஆண்டவரே, வானகத்தந்தை கடவுள். 

சகல நற்பண்புகளிலும் அளவில்லாதவர்.

 நீங்கள் இறை மகன்.

 தந்தையைப் போலவே நிறைவுள்ளவராக இருக்கிறீர்கள்.

நானோ மனிதன்.

அளவுள்ளவன்.

நான் எப்படி தந்தையை போல நிறைவுள்ளவனாக இருக்க முடியும்?''

"தந்தை யாரை நேசிக்கிறார்?"

"அனைவரையும் நேசிக்கிறார்.

 நல்லவர்களையும் நேசிக்கிறார்,
கெட்டவர்களையும் நேசிக்கிறார்.

பாவமே செய்யாதவர்களையும் நேசிக்கிறார். பாவிகளையும் நேசிக்கிறார்."

"நீ யாரை நேசிக்கிறாய்?"

"எனது நண்பர்களை நேசிக்கிறேன்"

"உன்னை பகைப்பவர்களை நேசிக்கிறாயா?"

"முயற்சி செய்கிறேன்."

"முயற்சி செய்தால் மட்டும் போதாது. வானகத் தந்தை அவரை நேசிக்காதவர்களையும் நேசிப்பது போல நீயும் உன்னை நேசிக்காதவர்களையும் நேசிக்க வேண்டும்.

அதாவது வானகத் தந்தையைப் போல நீயும் நேசிக்க வேண்டும்.''

"அதாவது என்னை பகைப்பவர்களை நான் பகைக்காமலிருந்தால் மட்டும் போதாது,  நேசிக்க வேண்டும்.

நண்பர்களை நேசிப்பது போல பகைவர்களையும் நேசிக்க வேண்டும்.

சரியா, ஆண்டவரே?"

"சரி. நீ உனது பகைவனை நேசித்தால், 

அவன் உனக்கு தீமை செய்யும்போது

 நீ அவனுக்கு நன்மை செய்வாய்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்களைக் கூட வானகத் தந்தைதான் பராமரித்து வருகிறார்."

"இனி எனக்கு தீமை செய்பவர்களுக்கும், நான் நன்மை செய்வேன்.

தந்தையைப் போலவே செயல்படுவேன்."

"வானகத் தந்தையை போல நீ செயல்பட ஆரம்பித்தால் அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் தந்தையே செய்வார்."

''ஆண்டவரே, வானகதந்தை அளவில்லாதவர்.

நான் அளவுள்ளவன்.

நான் தந்தையைப் போல செயல்படுவதாக எப்படிக் கூற முடியும்?

அவர் நிறையுள்ளவர். 
He is perfect.

 நான் எப்படி நிறைவுள்ளவனாக மாற முடியும்?
How can I be perfect?"

"உன்னுடைய நண்பனுடைய பணப்பையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது.

உன்னுடைய பணப்பையில் நூறு 
ரூபாய் மட்டுமே இருக்கிறது.

உன்னுடைய நண்பன் 10 ஆயிரம் ரூபாயையும் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டான்.

நீ  உன்னிடம் உள்ள 100 ரூபாயையும் காணிக்கையாகக் கொடுத்து விட்டாய்.

உனது நண்பன் கொடுத்ததற்கும் நீ கொடுத்ததற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூறு."

"இருவரும் கொடுத்த நன்கொடை அளவுகளில் வித்தியாசம் இருக்கிறது. இது வேற்றுமை.

ஆனால் அவன் தன்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்தது போலவே நானும் என்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து விட்டேன். இது ஒற்றுமை."

"அதேபோல்தான் வானகத் தந்தை கொடுக்கும் அளவிற்கு 
உன்னால் கொடுக்க முடியாமலிருக்கலாம்.

ஆனாலும் தந்தை முழு மனதோடு கொடுப்பது போலவே,

நீயும் முழு மனதோடு கொடுக்கலாமே.

தாயைப்போல பிள்ளை இருப்பது போல,

குருவைப் போல சீடன் இருப்பது போல,

 நீயும் உதவி செய்வதில் முழு மனதுடன் செயல் படுவதில் வானகத் தந்தையைப் போல் இருக்கலாமே.

அதனால் தான் என்னை பின்பற்றுபவர்களுக்கு நான் கூறுகிறேன்,

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

"இப்போது புரிகிறது ஆண்டவரே.

உங்கள் அன்னை தன்னை முழுவதும் உங்கள் பணிக்கு அர்ப்பணித்து விட்டது போல,

நானும் என்னை முழுவதும் உங்கள் பணிக்கு அர்ப்பணித்து விடுகிறேன்.

வானகத் தந்தை என்னைப் படைக்கும் போது என்னோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்புகளை,

அவற்றை அவர் எப்படிப் பயன்படுத்துகிறாரோ அப்படியே பயன்படுத்தி,

அவரைப் போலவே,

அவருக்காக மட்டும் வாழ்வேன்."

"வானகத் தந்தையைப் போல என்னவெல்லாம் செய்வாய்?"

"என்னை அன்பு செய்பவர்களை மட்டுமல்ல, என்னைப் பகைப்பவர்களையும் அன்பு செய்வேன்.

என்னைத் துன்புறுத்துவோருக்காக வேண்டிக் கொள்வேன்.

நல்லவர்களை மட்டுமல்ல கெட்டவர்களையும் அன்பு செய்வேன்.

படைக்கப்பட்ட அனைவரையும் அவர் அன்பு செய்வது போல 

இன வேறுபாடின்றி அனைவரையும் அன்பு செய்வேன்.

உள்ளத்தால் அனைவரையும் அன்பு செய்து,

உடலால் அனைவருக்கும் பணிபுரிவேன்.

இயேசுவே, உமது வார்த்தை, 
எனது வாழ்க்கை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment