Monday, June 26, 2023

இடுக்கமான வாயில்வழியே நுழையுங்கள்." (மத்.7:14)


"இடுக்கமான வாயில்வழியே நுழையுங்கள்." (மத்.7:14)

தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்வுக்குரிய பாடத்தைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.

முழு நேரத்தையும் பாடத்தைக் கற்பதற்கே செலவழிக்க வேண்டும்.

பாடத்தை வாயிலாகவும் தேர்வை வீடாகவும் கற்பனை செய்து கொண்டால்,

தேர்வாகிய வீட்டுக்குள் செல்லும் வாயில் மிகக் குறுகலானது.

அங்கு பாடத்திற்கு மட்டும்தான் இடம் இருக்கும்.

வெறும் பொழுதுபோக்கை வீடாக எடுத்துக் கொண்டால்,

அதற்குரிய வாயில் மிக அகலமானது.

எதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மனதுக்கு எதன்மேல் ஆசை வருகிறதோ அதை இஷ்டம் போல் செய்து நமது பொழுதைப் போக்கலாம்.

தேர்வுக்குத் தயாரிப்பவர்கள் இஷ்டம் போல் பொழுது போக்கினால் தேர்வு எழுத முடியாது.

விண்ணகமாகிய வீட்டிற்குச் செல்லும் வாயில் மிகக் குறுகலானது. 

இறைவனையும், பிறனையும் அன்பு செய்து, இறைவனது கட்டளைகளின் படி வாழ்பவர்களே விண்ணகமாகிய வீட்டிற்குள் செல்ல முடியும்.

இஷ்டப்பட்ட உலகப் பொருள்களின் மீது அன்பு கொண்டு,

இறைவனது கட்டளைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல்,

தங்கள் விருப்பம் போல் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை ஜாலியாக இருக்கும்.

அத்தகைய வாழ்க்கை நரகத்தின் வாயில்.

வாழும்போது ஜாலியாக வாழ்பவர்கள்,

மரணத்தின் போது வேதனை மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைவார்கள்.

வாழும்போது இறைவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள், நித்திய பேரின்ப வாழ்க்கைக்குள் நுழைவார்கள்.

நாள் முழுவதும் இறைவனது பிரசன்னத்தில் நடக்க வேண்டும்.

அதுவும் கட்டளைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

இஷ்டம் போல் நினைக்க கூடாது, இஷ்டம் போல் பார்க்கக் கூடாது, இஷ்டப்பட்டதை எல்லாம் கேட்கக்கூடாது.

நமது சொந்த விருப்பங்களைத் தியாகம் செய்துவிட்டு,

இறைவனது விருப்பத்தை மட்டும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்க்கை சிலுவைகள் நிறைந்தது.

சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்.

கசப்பான மருந்தைக் குடிப்பவர்கள் மட்டும் உடல் நலம் பெறுவது போல,

சிலுவைகளை முழு மனதோடு சுமப்பவர்கள் மட்டும் விண்ணக வாழ்வைப் பெறுவார்கள்.

விளக்குமாற்றைப் பயன்படுத்தாத வீடு தூசிகள் நிறைந்திருக்கும்.

சுவாசிக்கத் தூய காற்று கிடைக்காது.

இஷ்டம்போல் கட்டளைகளை மீறி,

பாவ மன்னிப்புப் பெறாதவர்களின் ஆன்மா,

பாவம் அழுக்கால் நிறைந்திருக்கும்.

பாவத்திற்கு விண்ணகத்தில் இடமில்லை.

ஐம்பொறிகளை அடக்கி, தூய உள்ளத்தோடு வாழ்பவர்களுக்கு மட்டும் விண்ணகத்தில் இடம் கிடைக்கும்.

இதை மனதில் கொண்டு குறுகலான வாயில் வழியே விண்ணகத்திற்குள் நுழைவோம்.

பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment