இது ஒரு தொழு நோயாளியின் செபம்.
உடல் ரீதியாக தொழு நோயாளிகள் தொடக்கூடாதவர்கள் தான்.
தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும்.
ஆனால் ஆன்மீக ரீதியாக அவர்களிடம் நல்ல குணங்கள் இருந்தால் ஆன்மாக்கள் தொட்டுக் கொள்ளலாம்.
அவர்களிடம் உள்ள நற்குணங்களை ஏற்றுக் கொள்ளலாம்.
ஒரு தொழு நோயாளி ஆண்டவரைப் பார்த்து,
" என்னை குணமாக்கும்" என்று கேட்கவில்லை.
"நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"
என்றுதான் வேண்டுகிறான்.
"ஆண்டவரே எனக்கு எது நல்லது என்று உமக்குத் தெரியும்.
நான் விரும்புவது எனக்கு நன்மை பயக்குமா, தீமை பயக்குமா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் உமக்குத் தெரியும்.
நீர் சர்வ வல்லவர். உம்மால் எல்லாம் முடியும்.
நீர் விரும்பினால் நான் வேண்டுவதை உன்னால் தர முடியும்.
நான் விரும்புவதைத் தாரும் என்று உம்மிடம் கேட்கவில்லை.
நான் கேட்காமலேயே என்னை ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தீர்.
நான் கேட்காமலேயே என்னைப் பராமரித்து வருகிறீர்.
நான் எனது விருப்பத்தை தெரிவித்து விட்டேன்.
நீர் உமது விருப்பம் போல் செய்யும்."
என்றுதான் நாம் இறைவனிடம் வேண்ட வேண்டும்.
நாம் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் கூறியுள்ளார்.
நமது அன்புக்கு இறைவன் தான் முதலிடம்.
நாம் அடுத்த இடம் தான்.
இறைவனுடைய விருப்பம், நமது விருப்பம் என்ற இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமானால்
இறைவனது விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
நமது விருப்பம் நமக்கு நேரடியாகத் தெரியும்.
இறைவனது விருப்பம் என்னவென்று நமக்கு நேரடியாகத் தெரியாது.
"ஆண்டவரே உமது விருப்பம் எதுவாக இருந்தாலும் அது என்னில் நிறைவேறட்டும்."
என்று இறைவனிடம் ஒப்படைத்து விட்டால்,
அதன்பின் நமக்கு எது நடந்தாலும் இறைவன் விருப்பப்படி தான் நடக்கும்.
நாம் நம்மை முற்றிலும் அவர் கையில் ஒப்படைத்து விட்டால்
அவர் நம்மை எப்படி வழி நடத்துகிறாரோ அப்படியே நாம் நடக்க வேண்டும்.
ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
வேலை வேண்டுமென்பது நமது விருப்பமாக இருக்கலாம்.
ஆனால் அது இறைவனது விருப்பமா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது.
ஆகவே "ஆண்டவரே நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.
அது உமது விருப்பத்திற்கு ஒத்ததாக இருந்தால் அதைப் பெற்றுத் தாரும்.
உம்மால் எல்லாம் முடியும்.
நான் விண்ணப்பித்திருக்கிற வேலை உமது விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்தால் அதைத் தாரும்.
எதிராக இருந்தால் அதைத் தர வேண்டாம்.
உமக்கு விருப்பமான வேலையை எனக்கு நீர் தந்தால் அதை எனக்கு விருப்பமானதாக ஏற்றுக் கொள்கிறேன்.
என்னில் எது நடந்தாலும் அது உமது விருப்பப்படியே நடக்கட்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான மன்றாட்டு."
இறைவன் கையில் ஒப்படைத்த பிற்பாடு நாம் விண்ணப்பித்திருக்கிற வேலை நமக்கு கிடைக்காவிட்டால்
இறைவனது சித்தம் நம்மில் நிறைவேறியதற்காக நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" என்பது இறைவாக்கு.
இறைவாக்கு நமது வாழ்வாக மாற வேண்டும்.
என்ன நடந்தாலும் இறைவன் சித்தப்படி தான் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும்.
துன்பங்கள் கூட மகிழ்ச்சியையே தரும்.
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"
என்ற இயேசுவின் செபமே நமது
செபமாகவும் இருக்கட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment