Tuesday, June 27, 2023

"இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்:"(மத்.7:15)

"இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்:"(மத்.7:15)

மனிதர்களை அவர்களின் இயல்பின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

1. நல்லவர்கள்.
2. கெட்டவர்கள்.
3. நல்லவர்கள் போல் நடிக்கும் கெட்டவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசித்து,

தங்களை நேசிப்பது போல பிறரையும் நேசித்து,

இறைவனுக்கும்,

அவர் பெயரால் மற்றவர்களுக்கும் பணியாற்றி வாழ்பவர்கள் நல்லவர்கள்.

இறைவனையும், பிறரையும் மறந்து, தங்களை மட்டும் மையமாக வைத்து வாழ்பவர்கள் கெட்டவர்கள்.

கெட்டவர்கள் இரு வகை.

மற்றவர்கள் பார்வையிலும் கெட்டவர்களாகவே வாழ்கிறவர்கள் முதல் வகை.

இறைவனையும், மற்றவர்களையும் நேசிப்பது போலவும், 

இறைப்பணியும், பிறர் பணியும் செய்வது போலவும் நடித்து உண்மையில் கெட்டவர்களாக வாழ்கிறவர்கள் இரண்டாம் வகை.

இரண்டாம் வகையினரைப் போல முதல் வகையினர் ஆபத்தானவர்கள் அல்ல.

புலியை புலியாகவே பார்த்தால் பார்ப்பவர்கள் முதலிலேயே தப்பித்து ஓடி விடுவார்கள்.

புலி ஆட்டுத் தோலை அணிந்து, ஆடு போல் காட்சி அளித்தால்

 அதை ஆடு என்று நினைத்து அதோடு பழகுபவர்கள்

 இறுதியில் ஆட்டுத் தோல் போர்த்திய புலியால் சாப்பிடப்பட்டு விடுவார்கள்.

அதேபோல, கெட்டவர்கள் நல்லவர்களாக நடிக்காமல் கெட்டவர்களாகவே வாழ்ந்தால்,

நல்லவர்கள் அவர்களைப் பார்த்தவுடன் ஒதுங்கி விடுவார்கள்.

நல்லவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை.

ஆனால் கெட்டவர்கள் நல்லவர்கள் போல நடித்து வாழ்ந்தால்

 உண்மை அறியாத நல்லவர்கள் அவர்களோடு பழகி அவர்களும் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.

நற்செய்தி அறிவிப்பவர்கள்  தாங்கள் போதிக்கும் நற்செய்தியின் படி வாழ்ந்தால்,

அவர்களது முன்மாதிரிகையைப் பின்பற்றி நற்செய்தியைக் கேட்பவர்களும் அதன்படி  வாழ்வார்கள்.

உண்மையில் நற்செய்தியின் படி வாழாமல்,

நல்லவர்கள் போல் நடித்து,

தங்கள் சுயநலனுக்காக நற்செய்தியை அறிவிப்பவர்களோடு பழகுகின்றவர்கள்

 காலப்போக்கில் அவர்களைப் போலவே மாறி விடுவார்கள்.

இந்த நடிகர்களைத்தான் ஆண்டவர்  ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறவர்கள் என்கிறார்.

இவர்களைக் குறித்து நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்களது போதனையும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கிறதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்றாக இருந்தால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்.

அவர்கள் போதனைப்படி நாம் வாழலாம்.

ஆனால் அவர்களது வாழ்க்கையும் போதனையும் வெவ்வேறாக இருந்தால் 

அவர்களோடு  பழகவோ, அவர்கள் கூறுவதைக் கேட்கவோ கூடாது.

இன்று உலக அனுபவத்தில் பைபிளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,

அதன்படி தாங்கள் வாழ்வதாகக் கூறிக் கொண்டு,

ஆனால் சம்பந்தமில்லாமல் வாழ்கிறவர்களைப் பின்பற்றக் கூடாது.

ஏழ்மையை பற்றி போதிப்பார்கள்,  ஆனால் பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

காணிக்கை என்று பெயர் வைத்து அவர்கள் வாங்கும் பணம் அவர்களது ஆடம்பரமான வாழ்க்கைக்கு உணவாகிக் கொண்டிருக்கும்.

கேட்பவர்களது மனதை கவ்விப் பிடித்து இழுக்கும் அளவிற்கு இவர்களது பேச்சு திறமை இருக்கும்.

 இயேசுவையே அவர்கள் வாழ்வது போல் அவர்களது போதனை இருக்கும்.

ஆனால் இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அது எதுவும் இவர்கள் போதனையில் இருக்காது.

பாவ சங்கீர்த்தனத்தைப் பற்றி பேச மாட்டார்கள்.

திருப்பலியைப் பற்றி பேச மாட்டார்கள்.

திவ்ய நற்கருணையைப் பற்றி பேச மாட்டார்கள்.

பாவ மன்னிப்பு பெறாமல்,
திருப்பலியில் கலந்து கொள்ளாமல்,
இயேவை ஆன்மீக உணவாக உட்கொள்ளாமல்

வேறு எதைச் செய்து வாழ்ந்தாலும்

அப்படி வாழ்பவன் கிறிஸ்தவன் அல்ல.

ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு நம்மிடம் வரும் போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாக
இருப்போம். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment