Thursday, June 15, 2023

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."(மத்.11:28)

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
(மத்.11:28)

"தாத்தா, சுமை என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்."

'''நமது ஆன்மாவை பொருத்தமட்டில் சுமைகள் இருவகை.

சுமக்க கூடாதவை ஒரு வகை.

சுமக்க வேண்டியவை இன்னொரு வகை.

பாவம் சுமக்க கூடாத வகையைச் சேர்ந்தது. செய்யும்போது இன்பத்தைத் தரும் பாவம் செய்து முடித்த பின் சுமையாக மாறுகிறது.

பாவச் சுமையினால் சோர்ந்திருப்பவர்கள் அதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால்,

பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த இயேசுவை அணுக வேண்டும்.

பாவங்களை எல்லாம் அவரிடம் அறிக்கையிடுவதின் மூலம் நமது பாவச் சுமையை இயேசுவின் முன் இறக்கி வைத்து விட வேண்டும்.

இறக்கி வைத்த வினாடியே நாம் பாவ சுமையிலிருந்து விடுதலை பெறுவோம்."

"'தாத்தா, இயேசு இப்போது விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாவங்களை அறிககையிடுவதற்காக நம்மால் விண்ணகம் செல்ல முடியுமா?"

"'பாவம் இல்லாத நிலையில் நாம் மரணம் அடைந்த பின்பு தான் விண்ணகம் செல்ல முடியும்.

இப்போது நமது பாவச் சுமையை இறக்கி வைப்பதற்காகவே இயேசு தனது பிரதிநிதிகளாக குருக்களை உலகெங்கும் அனுப்பியிருக்கிறார்.

பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டபின்,

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருக்கும் குருவானவரிடம் சென்று, 

நமது பாவங்களை அறிக்கையிட்ட வினாடியே நாம் பாவச் சுமையிலிருந்து விடுதலை பெறுவோம்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.''

"சுமக்க வேண்டிய சுமை எது?"

"'சிலுவைகள்.

உலகில் வாழும் போது நமக்கு துன்பங்கள் ஏற்படுவது இயல்பு.

துன்பங்களைத் துன்பங்களாகவே நினைத்தால்
அவை கஷ்டப்பட்டு சுமக்க வேண்டிய சுமைகளாக மாறிவிடும்.

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு சுமந்தாரே அந்த சிலுவைகளாக நினைத்து,

அவற்றைச் சுமக்க உதவும் படி இயேசுவை அணுக வேண்டும்.

சிலுவைகளிடமிருந்து விடுதலை பெற ஆசைப் படக்கூடாது.

மாறாக அவற்றை இயேசுவிடம் ஒப்புவிக்க வேண்டும்.

நமது சிலுவைகளை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவிடம் ஒப்புவித்து விட்டால் அவரும் நம்மோடு சேர்ந்து நமது சிலுவையைச் சுமப்பார்.

சிலுவையைச் சுமப்பது இன்பமான அனுபவமாக மாறிவிடும்.

உலக இன்பங்களைத் துறந்து, 
இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமப்பதற்கென்றே துறவற  சபைகளில் சேர்ந்திருப்பவர்களின் முகத்தைப் பாருங்கள்.

எப்போதும் புன்சிரிப்போடு இருக்கும்.

உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சி தான் முகத்தில் புன்சிரிப்பாக வெளிவரும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

சிலுவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டுமென்றால் 

நாம் அவற்றை இயேசுவுக்காக இயேசுவோடு சேர்ந்து சுமக்க வேண்டும்."

'"பாவச்சுமையை இயேசுவின் முன் இறக்கி வைத்துவிட்டு,

அவர் சுமந்த சிலுவைச் சுமையை அவரோடு சுமந்தால்,

அவரைப் போலவே ஒரு நாள் மரித்து,

அவரைப்போலவே ஒரு நாள் உயிர்ப்போம்.

புனித வெள்ளியை ஏற்றுக்கொண்டால்,

ஈஸ்டர் ஞாயிறு இலவசமாகவே கிடைக்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment