Wednesday, June 21, 2023

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."(மத்.6:11)

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."(மத்.6:11)

நாம் பிறந்த நாளிலிருந்து நமது இறுதி முடிவு வரை உள்ள காலக்கட்டம்

ஆண்டுகளாக இருக்கலாம், அல்லது மாதங்களாக இருக்கலாம், 
அல்லது நாட்களாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் உயிர் வாழத் தேவையான உணவு, மற்றும் பொருள்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறோம்.

பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குத் தேவையான உணவை ஒரே நாளில் சாப்பிட முடியாது.

அதேபோல பல நாட்களுக்கு அல்லது பல மாதங்களுக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களை ஒரே நாளில் பயன்படுத்தி விட முடியாது.

தங்கள் பெற்றோர் மீது நம்பிக்கை உள்ள பிள்ளைகள்  அன்றன்றைக்குத் தேவையானவற்றை அன்றன்றைக்குத் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

எந்த குழந்தையும் தனது தாயிடம்,

"அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான உணவை இன்றே என்னிடம் தந்துவிடு" என்றுக் கேட்பதில்லை.

தாயும் பல நாட்களுக்குத் தேவையான உணவை ஒரே நாளில் கொடுத்து விடுவதில்லை.

ஒவ்வொரு நேரமும் குழந்தை பசித்து அழுத பின்பு தான் பால் கொடுக்கிறாள்.

இயேசுவும்,

"விண்ணக தந்தையே, எங்களுக்கு அன்றன்று தேவையானதை அன்றன்று தாருங்கள்.''

என்றுதான் கேட்க வேண்டும் என்று கற்பித்திருக்கிறார்.

"பல ஆண்டுகளுக்கு தேவையானதை மொத்தமாகத் தாருங்கள்" என்று கேட்கச் சொல்லவில்லை.

ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

வீட்டில் ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

மூன்று பேருக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவுப் பொருள் இருந்தால் 

அது ஒரு ஆளுக்கு 3 ஆண்டுகளுக்குப் போதும்.

மூவரில் ஒருவன் மூன்று பேருக்குத் தேவையானதை மொத்தமாக அவனே எடுத்துக் கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

அவன் மூன்று ஆண்டுகள் கவலை இல்லாமல் ஒரு வேலையும் பார்க்காமல் உணவை சாப்பிடலாம்.

ஆனால் மற்ற இருவரும் மூன்று ஆண்டுகளும் பட்டினி கிடக்க வேண்டும்.

இருவரைப் பட்டினி போட்டு ஒருவன் மட்டும் உண்டு வாழ்வது நீதிக்குப் புறம்பானது.

கடவுள் உலகைப் படைக்கும் போது அதில் வாழப்போகும் அத்தனை பேருக்கும் தேவையான பொருட்களோடு தான் படைத்தார்.

அவற்றை உலகில் வாழும் மக்கள் தினமும் பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுத்தார்.

மக்கள் கடவுளை நேசிப்பது போல அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசித்தால் 

அவரால் படைக்கப்பட்ட அனைவரும் தினமும் பயன்படுத்தும் படி தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வார்கள்.

வாழ்நாளெல்லாம் உழைக்காமல் உண்ணலாம் என்ற சுயநல நோக்கோடு பலரைப் பட்டினி போட்டு சிலர் மட்டும் எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ள மாட்டார்கள்.

உண்மையான இறையன்பும், அதிலிருந்து பிறந்த பிறரன்பும் 
இல்லாத நாடுகளில் இதுதான் நடக்கிறது.

தொழிலாளிகளைப் பட்டினி போட்டு முதலாளிகள் சொகுசாக வாழ்கின்றார்கள்.

எல்லாம் அனைவருக்கும் சமம் என்று தத்துவம் பேசும் சோசலிச நாடுகளில் முதலாளிகள் செய்வதை அரசே செய்து விடுகிறது.

இறையன்பும், பிறரன்பும் இல்லாதவர்கள் ஆளும் நாடுகளில் நிலவும் நிலை இது.

தங்கள் குடும்பம் பல ஆண்டுகள் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக

பெரும்பாலான சொத்துக்களை அபகரித்து வாழும் முதலாளிகள் 

அன்றன்றைய பயன்பாட்டுக்கு மட்டும் மட்டும் தேவையானதை வைத்துக் கொண்டு 

மீதியை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறரையும் நாம் நேசித்தால் இது இயல்பாக நடந்து விடும்.

நமது அடுத்த வீட்டு அயலான் உண்ண உணவின்றி இருக்கும்போது

நாம் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.

ஏழைகள் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் போது,

பணக்காரர்கள் ஆடம்பரமாக வாழ்வது 

அன்பு இல்லாமையின் விளைவுதான்.

ஆடம்பரமான உணவும், வாழ்க்கை முறையும் தான் இன்றைய அனேக தீமைகளுக்குக் காரணம்.

எதிர்கால பயன்பாட்டுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று உலகியல்வாதிகள் கூறுவது 

அவர்களைப் படைத்த இறைவன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.

நமது விசுவாசப் பிரமாணம் நமது வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவனை நாம் உண்மையிலேயே விசுவசித்தால், 

இன்று நம்மை காப்பாற்றிய அவர் நாளையும் காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

அவரால் படைக்கப்பட்ட நமது அயலானோடு நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வோம்.

நாம் வாழ்வது போல நமது அயலானும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதில் தான் நமது பிறர் அன்பு அடங்கி இருக்கிறது.

நம்மை படைத்தவர் விருப்பப்படி நம்மிடம் இருப்பதை அனைவரோடும் பகிர்ந்துண்டு வாழ்வோம்.

அன்றன்றைய உணவு வாழ் நாள் முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும்.


"எனது அன்றாட உணவை எனக்கு இன்று அளித்தருளும்''
என்று செபிக்க இயேசு கற்பிக்கவில்லை.


"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."

என்று செபிக்கவே அவர் கற்பித்துள்ளார்.

அனைவருக்கும் அன்றன்றைய உணவு அன்றன்றைக்குக் கிடைக்க இறைவனோடு ஒத்துழைப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment