Wednesday, June 28, 2023

''உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்."(லூக்.21:15)

"உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்."
(லூக்.21:15)

நாம் நற்செய்தி அறிவிக்கும் போது அதை கேட்பவர்களில் நல்லவர்களும் இருக்கலாம், கெட்டவர்களும் இருக்கலாம்.

கெட்டவர்களை மனம் திருப்புவதே நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம்.

கெட்டவர்களில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் இருந்தால்,

அவர்கள் நம்மைக் கைது செய்து நம்மை விசாரிக்கலாம்.

அப்படி விசாரிக்கும் போது அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டாம்.

என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதை இயேசுவே நமது உள்ளுணர்வின் மூலம் நமக்கு அறிவிப்பார்.

எல்லோருக்கும் நற்செய்தி அறிவிப்பவர்கள் சொற்பொழிவுக் கலையில் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை.

நற்செய்தி நமது மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அதை வாய் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது கடவுள் அருளால் வார்த்தைகள் தாமாகவே வரும்.

நாம் நற்செய்தியை அரைகுறையாக அறிந்திருந்தால் நம்மால் அதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாக அறிவிக்க முடியாது.

நாம் நற்செய்தியை ஒழுங்காக அறிந்திருந்து 

அதை அறிவிக்கும் ஆசையும் உண்மையாக இருந்தால் 

அதை அறிவிக்கும் போது நமக்கு இறைவனுடைய உதவி கட்டாயம் கிடைக்கும்.

ஆகவே எப்படி அறிவிப்பது என்று திட்டம் போடுமுன்,

நற்செய்தியை நாம் முழுமையாக அறிந்திருந்து,

அதை நமது வாழ்வாக மாற்றியிருக்க வேண்டும்.

நற்செய்தி நமது வாழ்வாக மாறிவிட்டால்,

நமது வாழ்க்கை அனுபவங்கள் நற்செய்தி அனுபவங்களாகவே இருக்கும்.

நமது வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது எளிது.

அப்படி பகிர்ந்து கொள்ளும் போது நற்செய்தியும் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஒருமுறை ஒருவர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் ஏறும்போது,

மற்றொரு நபரும் அவரோடு ஏறி அவர் அருகில் அமர்ந்தார்.

அவர் கையில் ஊழியர்களின் கடமைகள் பற்றிய புத்தகம் ஒன்று இருந்தது.

அதை பார்த்தவுடன் இவர் அவரிடம்,

"நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?" .

, "நற்செய்தி ஊழியம் செய்கிறேன்" 

, "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" 

"நான் ஒரு கத்தோலிக்க ஆசிரியர்" 

"நான் உங்களிடம் கேள்விகள் கேட்கலாமா?" 

"நீங்கள் கேட்கலாம்,
 நான் பதில் சொல்லலாம்.

நான் கேட்கும் போது நீங்கள் பதில் சொல்லலாம்.

ஆனால் நமக்குள் வாக்குவாதம் கூடாது.

No argument."

''நீங்கள் ஏன் மரியாளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?" 

"மரியாள் யார்?"

"இயேசுவின் தாய்."

"நீங்கள் உங்கள் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?"

"என்னைப் பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர்களும், இப்போது என்னைப் பராமரித்து வருகின்றவர்களும் என்னுடைய தாய் தானே.

அவர்களுக்கு எப்படி நான் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முடியும்?"

"இயேசுவை பெற்று, பாலூட்டி சீராட்டி வளர்த்து, பராமரித்து வந்தது மரியாள் தானே.

இயேசு தனது தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா இல்லையா?"

'கட்டாயம் கொடுத்திருப்பார்."

''இயேசுவே தனது தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் போது,

அவரை பின்பற்றுகிற நாங்கள் அவரது தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இயேசு கடவுளும், மனிதனுமாக இருக்கிறார்.

கடவுளாகிய இயேசுவின் தந்தை நமது தந்தை.

மனித உரு எடுத்த இயேசுவின் தாய் நமது தாய்.

நமது தாய்க்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா இல்லையா?"

நாம் மரியாளின் மைந்தர்களாக வாழ்ந்து வந்தால்,

மற்றவர்கள் நமது தாயைப் பற்றி என்ன கேள்வி கேட்டாலும் நம்மால் பதில் சொல்ல முடியும்.

இது ஒரு உதாரணமே.

நற்செய்தி முழுவதையும் நமது வாழ்வாக வாழ்ந்தால்,

நமது நற்செய்தி அனுபவங்களை மிக எளிதாக நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும்.

நமது விசுவாசத்தை வார்த்தைகள் மூலமும், வாழ்க்கையின் மூலமும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள

 நமக்கு இயேசு நமக்கு அருளும் பேச்சு வன்மையும், ஞானமுமே போதும்.

வேறு திறமை எதுவும் தேவையில்லை.

மற்றவர்களோடு எதைப் பகிர்ந்தாலும் அதோடு இயேசுவையும் சேர்த்து தான் பகிர்வோம்.

இது நமது இயல்பு ஆகிவிடும்.

எப்போதும் நம்மோடு இருக்கும் இயேசுவே நம்மை வழி நடத்துவார்.

இயேசு எப்போதும் நம்மோடு இருக்கும்படி நாம் நற்செய்தியை வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment