Friday, June 23, 2023

"இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே."(1 இராய.1:7)

"இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே."
(1 இராய.1:7)

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

என்று விண்ணகத் தந்தையை நோக்கித் தினமும் வேண்டுகிறோம்.

மாணவர்கள் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து படித்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆசிரியர் அவர்களுக்குத் தேர்வு வைக்கிறார்.

நமக்குப் போதிக்கப்பட்ட நற்செய்தியை நமது வாழ்வில் ஒழுங்காக கடைபிடிக்கிறோமா என்பதைக் கண்டறிய நமக்கு இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்.

"உங்கள் பகைவர்களை நேசியுங்கள், உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்"

என்று இயேசுவின் நற்செய்தி போகிறது.

இதை நாம் நமது வாழ்வில் கடைபிடிக்கிறோமா என்பதை நாமே எப்படி அறிய?

நாம் நம்மை நேசிப்பவர்கள் மத்தியில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால்,

"உனது பகைவர்களை நேசி" என்ற போதனைக்கு எதிராக எதுவும் செய்திருக்க மாட்டோம்.

அதை வைத்து நற்செய்திப்படி வாழ்கிறோம் என்று தீர்மானித்து விட முடியாது.

ஆகவே தான் நமது வாழ்வில் சோதனைகளை இறைவன் அனுமதிக்கிறார்.

இன்றைய நமது வாழ்க்கைச் சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம்.

நம்மைச் சுற்றி வாழ்வோர் அனைவரும் கிறிஸ்துவின் போதனைப்படி வாழும் புனிதர்களா?

மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

அதற்குக் காரணமானவர்களை நாம் நேசிக்கிறோமா அல்லது வெறுக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம்.

அதற்கான பதில் நாம் கிறிஸ்துவின் போதனைப்படி வாழ்கிறோமா என்பதை நமக்கு எடுத்துக்காட்டும்.

"என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

இது இயேசுவின் வாக்கு.

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் இன்றைய இந்தியாவின் நிலை இதுதான்.

நம்மை ஆள்பவர்களே நாம் கிறிஸ்தவர்கள் என்பதால் நம்மை வெறுக்கிறார்கள்.

இதன் விளைவு தான் வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் படும் பாடு.

இந்த சூழ்நிலையிலும் நாம் நம்மை வெறுப்பவர்களை நேசிக்க வேண்டும்.

நமக்கு எதிராக அவர்கள் செய்யும் தீமைக்குப் பதிலாக நாம் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

அவர்கள் மனம் திரும்பி மீட்பு அடையும் படி அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.

"தந்தையே, இவர்களை மன்னியும்"

என்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது இயேசு தந்தையை நோக்கி கேட்டதை நமது ஞாபகத்தில் வைத்துக் கொள்வதோடு

அவர்களை மன்னிக்கும்படி நாமும் தந்தையை நோக்கி வேண்ட வேண்டும்.

"பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல் நமது விசுவாசம் புடமிடப் பட்டுக் கொண்டிருக்கிறது.

விசுவாசத்திற்கு எதிரான அழுக்குகள் நீக்கப்பட்டு நமது விசுவாசம் பரிசுத்தமடையும்.

 இயேசுவின் இரண்டாவது வருகையின் போது அவ்விசுவாசம் நமக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும்."

 நமது விசுவாசம் உண்மையானதென்று நாம் நிரூபித்துக்காட்டவே

 இச்சோதனைகளை இறைவன் அனுமதித்திருக்கிறார்.

நிரூபித்துக்காட்டுவோம்.

"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து"

என்பது வரலாறு நமக்குக் கற்பித்திருக்கும் உண்மை.

நமக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது
என்பதையே நிகழ்கால நிகழ்ச்சிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பள்ளிக்கூடத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது நமது திறமையை நிரூபிக்கவே.

இன்றைய சோதனைகள் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும்.

மணிப்பூரில் சிந்தப் பட்டுக் கொண்டிருக்கும் இரத்தம் கிறிஸ்தவம் செழித்து வளர்வதற்கான தண்ணீர்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்" என்பது இறைவாக்கு.

அன்று இயேசு நமக்காக இரத்தம் சிந்தினார்.

நம்மை மீட்டதற்காக நன்றி கூறிக் கொண்டிருக்கிறோம்.

"இயேசுவே, விசுவாசிகள் சிந்திக் கொண்டிருப்பது உம்முடைய இரத்தம்.

இந்தியாவை மீட்பதற்காக சிந்தப்பட்டுக் கொண்டிருக்கும் இரத்தம்.

இந்தியர் அனைவரையும் மீட்டருளும்.

இயேசுவே, நன்றி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment