"ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள் .( மத். 6:20)
"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது"
என்று இயேசு கூறுகிறார்.
இந்த வசனத்தில் இயேசு இந்த உலகைச் சார்ந்த பொருட்களை செல்வம் என்று குறிப்பிடுகிறார்.
நாம் இந்த உலகில் இறைவனுக்காக வாழ்வதற்கு நமக்கு உதவி செய்வதற்காக
உலகத்தில் உள்ள பொருட்களை, அதாவது, உலகச்செல்வத்தைக்
கடவுள் படைத்திருக்கிறார்.
இறைப் பணியில் நமக்கு உதவி செய்வதற்காக,
அதாவது சேவை செய்வதற்காகப்
படைக்கப்பட்ட செல்வத்துக்கு நாம் சேவை செய்ய ஆரம்பித்தால்
நாம் அதற்கு கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கிறோம்.
உலக செல்வத்தின் மீது நமக்கு பற்று ஏற்பட்டால்,
இறைவன் மீது நமக்கு பற்று ஏற்படாது.
நாம் இப்போது உலகில் தான் வாழ்கிறோம்,
உலக பொருள்களைத்தான் பயன்படுத்துகிறோம்,
உலகப் பொருள்கள் இல்லாவிட்டால் நமக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் கிடைக்காது.
உலகப் பொருள்களை அவற்றின் மீது பற்று இல்லாமல்,
இறைப் பணிக்காக பயன்படுத்த வேண்டும்.
நாம் இறைப் பணி செய்யும்போது இறைவன் நமக்குத் தரும் செல்வம் ஆன்மீக செல்வம்.
இறைவன் நமக்குரிய ஆன்மீகச் செல்வத்தை விண்ணகத்தில் சேர்த்து வைக்கிறார்.
உலகச் செல்வத்தை இறைவனுக்காகப் பயன்படுத்தும் போது நமக்கு விண்ணகத்தில் ஆன்மீகச் செல்வம் சேருகிறது.
நமது மரண நேரத்தில் இவ்வுலக செல்வத்தை உலகிலேயே விட்டுவிட்டு,
இறைவன் நமக்காக சேர்த்து வைத்துள்ள ஆன்மீகச் செல்வத்தை நித்திய காலம் அனுபவிக்க விண்ணகத்திற்குச் செல்வோம்.
இறைவனை மறந்து இவ்வுலகச் செல்வத்தை இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு
விண்ணகத்தில் ஆன்மீக செல்வம் எதுவும் சேர்ந்ததிருக்காது.
அப்படிப்பட்டவர்கள் மரணத்திற்குப் பின் அனுபவிக்க
இவ்வுலகச் செல்வமும் இருக்காது, மறுவுலகச் செல்வமும் இருக்காது.
புத்தியுள்ளோர் இவ்வுலகச் செல்வத்தை, மறுவுலக செல்வத்தை ஈட்டுவதற்காகப் பயன்படுத்துவர்.
எப்படிப் பயன்படுத்துவது?
இறையன்பு, பிறரன்பு பணிகளுக்காக அவற்றைப் பயன்படுத்தும் போது நாம் அவற்றை இறைவனுக்காகப் பயன்படுத்துகிறோம்.
நமது அயலானின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இவ்வுலகச் செல்வத்தைப் பயன்படுத்தினால்,
உண்மையில் அதை இறைவனுக்காகப் பயன்படுத்துகிறோம்.
அதாவது நாம் பிறர் அன்புப் பணி செய்யும்போது உண்மையில் இறையன்புப் பணி செய்கிறோம்.
அதற்குரிய சன்மானம் நமக்கு விண்ணகத்தில் சேர்ந்து கொண்டேயிருக்கும்.
இவ்வுலகில் நாம் இறைவனுக்காக வாழும்போது
விண்ணுலகில் செல்வத்தைச் சேர்த்துவைக்கிறோம்.
இறைவன் தாராள குணம் உள்ளவர்.
இவ்வுலக வாழ்வு குறுகியது.
குறுகிய கால இறைப் பணிக்காக அவர் நமக்குத் தரும் சன்மானமோ நித்தியமானது.
மரணம் வரை இறைவனுக்காக வாழ்வோம்.
மரணத்துக்குப் பின் நித்திய காலம் இறைவனோடு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment