"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்."(மத்.5:9)
நம்மைப் படைத்த கடவுள் சமாதானத்தின் தேவன்.
அவர்
அன்பே உருவானவர் போல,
நீதியே உருவானவர் போல,
வல்லமையே உருவானவர்
போல
சமாதானமே உருவானவர்.
சமாதானம் என்றால் நல்லுறவு.
நமது முதல் பெற்றோர் படைக்கப்பட்ட போது இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையில், நல்லுறவு நிலவியது, அதாவது சமாதானம் நிலவியது.
இறைவன் அவர்களோடு சமாதானமாக இருந்தார்.
அவர்களும் இறைவனோடு சமாதானமாக இருந்தார்கள்.
அவர்கள் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தபோது இறைவனோடு கொண்டிருந்த சமாதான உறவிலிருந்து விலகிக் கொண்டார்கள்.
ஆனால் இறைவன் மாறாதவர்.
அவரது பண்புகள் என்றுமே மாறாதவை.
ஆகவே அவரால் படைக்கப்பட்ட மனுக்குலம் சமாதான
உறவிலிருந்து விலகி விட்டாலும்,
இறைவன் நம்மோடு கொண்டுள்ள உறவிலிருந்து விலகவில்லை.
அவருடைய சமாதான உறவு தான் அவரை மனுவுரு எடுத்து,
நமக்காகப் பாடுகள் பற்றி,
அவமானங்கள் நிறைந்த சிலுவை மரணத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தது.
பாவம் செய்தவர்கள் நாம்,
ஆனால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தவர் கடவுள்.
குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை மரணத்தை,
குற்றமே செய்ய முடியாத அவர்
குற்றவாளிகளாகிய நமக்காக ஏற்றுக் கொண்டார்.
சமாதானமே உருவான அவர்,
சமாதானத்தை, அதாவது, அவரையே நமக்குத் தருவதற்காகத்தான் இவ்வாறு செய்தார்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நமது உறுப்புக்களால் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக
அவரது எல்லா உறுப்புகளும் அடி வாங்கின.
அவர் கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்ட போது கழுத்திற்கு கீழே உள்ள அத்தனை உறுப்புகளும் நமது பாவங்களுக்காக அடி வாங்கி பரிகாரம் செய்தன.
அவர் முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட போது,
தலையிலுள்ள நமது மூளையின் துணை கொண்டு நாம் செய்த பாவங்களுக்கும்,
கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றின் துணை கொண்டு நாம் செய்த பாவங்களுக்கும்
பரிகாரமாக அவரது தலை அடி வாங்கியது.
நாம் பயணம் செய்து செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் கனமான சிலுவையைத் தூக்கிக் கொண்டு கல்வாரி மலைக்குப் பயணம் செய்தார்.
நாம் பயணம் செய்யும்போது உண்பதற்காக வகை வகையான உணவுப் பதார்த்தங்களோடு பயணம் செய்வோம்.
ஆனால் சமாதானத்தின் தேவன் இயேசுவுக்கு கனமான சிலுவையே உணவு.
சிலுவையில் ஆணிகளால் அறையப்படும் பொழுது ஏற்பட்ட வேதனையையும்,
கையில் அறையப்பட்ட ஆணிகளிடமிருந்து உடலின்
பாரம் கீழ் நோக்கி இழுக்கும் பொழுது கைகளிலும், உடலிலும் ஏற்பட்ட வேதனையையும்
இயேசு தாங்கிக்கொண்டது தனது சமாதானத்தை பாவிகளாகிய நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்.
நாம் அவரது சமாதான உறவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் சிலுவை வேதனையை அனுபவித்தார்.
இயேசு பிறந்த அன்று
"நல்மனதோற்கு சமாதானம் உண்டாகுக"
என்று வானவர் பாடிய கீதம் செயல் வடிவம் பெறுவதற்காகவே
"தந்தையே, இவர்களை மன்னியும்."
என்று தந்தையை வேண்டினார்.
தனது சிலுவை மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையை வேண்டும்போது
அவரைச் சிலுவையில் அறைந்த யூதர்கள் மட்டுமல்லாமல்,
நாமும் அவர் மனதில் இருந்திருக்க வேண்டும்.
அவரது சிலுவை மரணத்திற்கு காரணமானவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்த நாம் தானே.
நல் மனது என்றால் பாவம் இல்லாமல் இறைவனோடு நல்உறவில் உள்ள மனது.
பாவம் செய்யும்போது நல்ல மனது கெட்ட மனதாக மாறி விடுகிறது.
பழையபடி அது நல் மனது ஆக வேண்டும் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.
பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் நமது பாவம் மன்னிக்கப்பட வேண்டும்.
நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் உண்டாக என்று வானவர்கள் பாடினார்கள்.
நம்மை நல்ல மனது உள்ளவர்களாக மாற்றுவதற்காகத் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு வேதனைகள் அனுபவித்துக் கொண்டிருந்தபோது
நமது பாவங்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டுகிறார்.
எங்கே மன்னிப்பு இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்கும்.
நாம் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு நாமும் தந்தையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
யார் மன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் இழந்த சமாதானம் திரும்பி வரும்.
கடவுள் எப்போதும் சமாதான நல் உறவோடுதான் இருக்கிறார்.
அந்த உறவில் நாம் இணைய நாம் செய்த பாவங்களுக்கு நாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
"கேளுங்கள், கொடுக்கப்படும்" என்று இயேசு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
நாம் இயேசுவிடம் நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கும் போது அது கட்டாயம் கொடுக்கப்படும்.
மன்னிப்போடு சமாதானமும் சேர்த்துக் கொடுக்கப்படும்.
இயேசு கடவுள், நாம் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள்.
தாயைப்போல் பிள்ளை என்பார்கள்.
தந்தையைப் போல் பிள்ளை என்றும் சொல்லலாம்.
இயேசு தனது விண்ணக தந்தையை
"எங்கள் தந்தையே"
என்று நாமும் அழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
விண்ணகத் தந்தை சமாதானத்தின் தேவன்.
நாமும் சமாதானம் உள்ளவர்களாக இருந்தால்தான் அவரது பிள்ளைகள் என்று அழைக்கப்பட தகுதி உள்ளவர்கள் ஆவோம்.
யாரெல்லாம் விண்ணகத்
தந்தையோடும்,
தங்கள் அயலானோடும்
சமாதான உறவில் இருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள்.
அதனால் தான் இயேசு,
"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." என்று கூறினார்.
நம்மை படைத்த இறைவனோடும்,
நம்மோடு படைக்கப்பட்ட நமது அயலானோடும்.
சமாதானமாய் வாழ்வோம்.
இறைவனது பிள்ளைகள் என்ற நமது அந்தஸ்தைக் காப்பாற்றுவோம்.
இயேசு உயிர்த்தபின் தனது சீடர்களுக்கு காட்சி கொடுக்கும் போதெல்லாம்,
"உங்களுக்கு சமாதானம் உண்டாகுக."
என்று வாழ்த்தினார்.
நாமும் நமது அயலானை அவ்வாறே வாழ்த்துவோம்.
"அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment