"தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது.'' (அரு.12:33)
பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளிலும் சரி,
புதிய ஏற்பாட்டில் இயேசு கொடுத்த இரண்டு கட்டளைகளிலும் சரி,
வலியுறுத்தப்படுவது இறையன்பும், பிறர் அன்பும்.
இயேசு
"நீ உன்னை நேசிப்பது போல் உனது அயலானையும் நேசி"
என்று கூறும்போது நாம் நம்மை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை பிறரன்புக் கட்டளையோடு இணைத்து கூறுகிறார்.
ஆகவே
எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளை நேசிக்க வேண்டும்,
நம்மை நாமே நேசிக்க வேண்டும்,
நமது அயலானை நேசிக்க வேண்டும்.
கடவுளை முழு உள்ளத்தோடு நேசிக்க வேண்டும்.
நமது அயலானை நம்மை நாம் நேசிப்பது போல நேசிக்க வேண்டும்.
நம்மை நாம் எப்படி நேசிக்க வேண்டும்?
அன்பு அன்பு செய்யப்படுபவரின் நலனில் அக்கறை காட்டும்.
தாய் ஏன் தனது குழந்தையின் நலனில் அக்கறை காட்டுகிறாள்?
ஏனென்றால் அவள் தன் குழந்தையை நேசிக்கிறாள்.
நமது நண்பனின் வாழ்வில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனையிலிருந்து அவனை விடுவிக்க நாம் ஏன் ஆசைப்படுகிறோம்?
ஏனென்றால் நாம் நமது நண்பனை நேசிக்கிறோம்.
உலகின் ஏதோ ஒரு பகுதியில் வாழ்ந்த ஏதோ ஒரு ஆளின் மரணச் செய்தி செய்தித்தாளில் வந்தால் நாம் அவருக்காக உட்கார்ந்து அழுவதில்லை. ஏன்?
ஏனென்றால் நேசிக்க கூடிய அளவுக்கு அவர் யார் என்று தெரியாது.
யார் நலனில் நாம் அக்கறை காட்டுகிறோமோ அவரை நாம் நேசிக்கிறோம்.
அப்படியானால் நமது நலனில் நாம் அக்கறை காட்டும் அளவுக்கு நம்மை நாம் நேசிக்க வேண்டும்.
ஆன்மீக வாழ்வு தான் நமது வாழ்வு என்பது நமக்கு தெரியும்.
நமது ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்டும் அளவுக்கு நாம் நம்மை நேசிக்க வேண்டும்.
ஆன்மீக நலனைப் பற்றிக் கவலைப்படாமல் உடல் நலனைப் பற்றி மட்டும் கவலைப் படுபவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லை.
விண்ணக வாழ்வைத் தேடாமல் மண்ணக வாழ்வில் மட்டும் ஈடுபாடு காட்டுபவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லை.
உண்மையான ஆன்மீகவாதிகள் தான் தங்களைத் தாங்களே நேசிக்கிறார்கள்.
இயேசுவின் கட்டளைப்படி அவர்கள் மற்றவர்களுடைய ஆன்மீக நலனிலும் அக்கறை காட்டுவார்கள்.
புனித சவேரியார் ஏன் தனது சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்?
அவருக்கு அவரது ஆன்மீக நலனில் அக்கறை இருந்தது,
பிற நாடுகளில் வாழும் மக்களின் ஆன்மீக நலனிலும் அக்கறை இருந்தது.
இந்தியர்களின் ஆன்மீக நலனில் அவருக்கு அக்கறை இருந்ததால்தான் அவர் வேதம் போதிக்க இந்தியாவுக்கு வந்தார்.
எல்லா வேத போதகர்களின் நிலையும் இதுதான்.
தங்கள் உடல் நலனில் மட்டும் அக்கறை காட்டுபவர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லை.
அவர்களால் நேசிக்கப்படும் உடல் அவர்கள் ஆசைப்படுவது போல் எப்போதும் வாழாது.
அவர்களின் உடல் மண்ணுக்குள் போகும்போது ஆன்மா நரகத்துக்குப் போகும்.
தங்களது ஆன்மாவை நரகத்திற்கு அனுப்புபவர்கள் எப்படித் தங்களைத் தாங்களே நேசிக்க முடியும்?
தங்களது ஆன்மீக மீட்புக்காக வாழ்பவர்கள் மட்டுமே தங்களைத் தாங்களே நேசிக்கிறார்கள்.
அவர்கள் இயேசுவின் கட்டளைப்படி மற்றவர்களின் ஆன்மீக மீட்புக்காகப் பாடுபடுவார்கள்.
ஆக "உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி"
என்ற இயேசுவின் வார்த்தைகளின் உண்மையான பொருள்,
"நீ விண்ணக வாழ்வுக்கு ஆசைப்படுவது போல உனது அயலானும் ஆசைப்படுவதற்காகப் பாடுபடு.
மற்றவர்கள் ஆன்மீக மீட்பு பெற உழைப்பவர்கள் தான் மற்றவர்களை உண்மையிலேயே நேசிக்கிறார்கள்.
உடல் சம்பந்தப்பட்ட உதவிகளை நாம் செய்யும்போது கூட அவர்களின் ஆன்மீக மீட்பே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
பசித்தவருக்கு உணவு கொடுப்பவரும் மீட்கப்பட வேண்டும்,
அந்த உணவை உண்பவரும் மீட்கப்பட வேண்டும்.
உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பவரும் மீட்கப்பட வேண்டும்,
உடையை உடுப்பவரும் மீட்கப்பட வேண்டும்.
இயேசு உலகிற்கு வந்ததே ஆன்மாக்களை மீட்பதற்காகத்தான்.
அவரது கட்டளைகளும் அதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
இறைவனை நாம் நேசிக்கும் போது
அவருக்கு சேவை செய்து, அவரோடு விண்ணகத்தில் வாழ
நாம் பாக்கியம் பெறுகிறோம்.
நாம் பெறும் பாக்கியத்தை மற்றவர்களும் பெற உழைக்க வேண்டும்.
அதற்காக நாம் உழைத்தால் தான் நமக்கு உண்மையிலேயே பிறர் அன்பு இருக்கிறது.
தான் விண்ணகத்தில் வாழ்வது போல தன்னால் படைக்கப்பட்டவர்களும் வாழ வேண்டும் என்று இயேசு ஆசிக்கிறார்.
குருவைப் போல சீடனும் தன்னால் நேசிக்கப்படும் அனைவரும் விண்ணகத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.
இப்போது ஒன்று புரிந்திருக்கும்.
உண்மையான அன்பு உடல் நலனை அல்ல,
ஆன்மீக நலனையே அடிப்படையாகக் கொண்டது.
அனாதைப் பிள்ளைகளுக்கான இல்லங்கள் நடத்துவோர் அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான் நடத்துகிறார்கள் என்று மற்றவர்கள் குற்றம் சாட்டினால்,
""மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது"
என்று போதித்த இயேசுவின் சீடர்கள் நாங்கள்.
குரு சொன்னபடி நடப்பதே சீடனின் கடமை."
என்று உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
''மற்ற மதத்தினருக்கு நற்செய்தியை அறிவிப்பது குற்றம்"
என்று யாராவது கூறினால்
''அதுதான் எங்கள் பணி"
என்று நமது பணியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அன்னைத் தெரசா செய்தது இறைப்பணியா, சமூகப் பணியா?
முழுக்க முழுக்க இறைப்பணி.
உண்மையிலேயே இறைவனுக்கு பணி செய்பவர்கள், அவரால் படைக்கப்பட்ட சமூகத்திற்கும் பணி செய்வார்கள்.
அன்னைத் தெரசா செய்தது சமூகத்தை உள்ளடக்கிய இறைப்பணி.
தெருவில் இறந்து கொண்டிருக்கும் தொழு நோயாளிகளை இல்லத்திற்கு எடுத்து வந்து அவர்களுக்கு சேவை செய்தார்களே, ஏன்?
தான் முழு உள்ளத்தோடு நேசித்த இறைவனை அவர்களுக்கும் அளிப்பதற்காக அல்லாமல் வேறு எதற்காக இருக்கும்?
முழுமையான இறைப் பணிக்குள் சமூகம் இருக்கிறது.
இறைவனது மகிமைக்காக நாம் சமூகத்திற்குப் பணி செய்தால் அது உண்மையில் இறைப்பணியே.
இறைவனை மறந்து விட்டு சமூகத்திற்கு பணி என்ற பெயரில் என்ன செய்தாலும் அது பணியே அல்ல.
கடவுளை முழுமையாக நேசிப்பவர்களுக்குத்தான் உண்மையான பணியுணர்வு இருக்கும்.
கடவுளை உண்மையாகவே நேசிப்பவன் தான் தன்னையும் நேசிப்பான், தனது பிறனையும் நேசிப்பான்.
கடவுளுக்கு முழுமையாக சேவை செய்வோம்.
மற்ற எல்லா சேவைகளும் அதற்குள் அடங்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment