உலக ரீதியில்
வியாபாரிக்குக் கொடுப்பது விலை.
அரசியல்வாதிக்குக் கொடுப்பது இலஞ்சம்.
நல நிருவனங்களுக்குக் கொடுப்பது நன்கொடை.
பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காகக் கொடுப்பது கட்டணம்.
இவற்றையெல்லாம் சட்டரீதியாக நமது பணத்திலிருந்து கொடுக்கிறோம்.
ஆன்மீகத்தில் இறைவனுக்குக் கொடுப்பது காணிக்கை.
இறைவனுக்குக் கொடுக்கப்படும் காணிக்கை நமது பணம் அல்ல,
இறைவனுடைய பணம்.
நமது ஆன்மாவும், நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், நாம் இவ்வுலகில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற அனைத்துப் பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டவை. ஆகவே முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்.
கடவுளுக்கு காணிக்கையாக எதையும் நாம் கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு சொந்தமான பொருளையே எடுத்து அவரிடம் கொடுக்க வேண்டும்.
உலக ரீதியாக யாருக்காவது எதையாவது கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கப்பட வேண்டிய பொருளை மட்டும் கொடுப்போம்.
ஆனால் இறைவனுக்கு காணிக்கை கொடுக்கும் போது அவருக்கு சொந்தமான பொருளை அவருக்கே கொடுப்பதால் நாம் எதையும் கொடுத்ததாக நம்மால் சொல்ல முடியாது.
ஆகவே நமக்கு சொந்தமான ஏதாவது ஒன்றை காணிக்கையோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
ஆனால் நமக்கு சொந்தமானது எதுவும் நம்மிடம் இல்லை. நாமே அவருக்குத்தான் சொந்தம்.
அப்படியானால் அவருக்கு பிடித்தமாக எப்படி காணிக்கை செலுத்துவது?
முதலில் அவர் நமக்குத் தந்திருக்கும் உள்ளத்தில் உலகச் சார்ந்த எதற்கும் இடம் கொடுக்காமல்,
நமது முழு உள்ளத்தையும் இயேசுவுக்குக் கொடுத்து,
அவரை அதில் குடியேற்றி,
இயேசு தங்கியிருக்கும் நமது உள்ளத்தை முழுவதும் அவரோடு சேர்த்து தந்தை இறைவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.
"தந்தையே உமக்கு காணிக்கையாகத் தர எனக்குச் சொந்தமான எந்த பொருளும் என்னிடம் இல்லை.
ஆகவே எனக்காக நீர் உலகிற்கு அனுப்பிய உமது மகனையே அன்பின் மூலம் எனக்குச் சொந்தமாக்கி அவரை உமக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறேன்.
அவரோடு சேர்த்து நீர் எனது பயன்பாட்டிற்காகத் தந்திருக்கிற உலக பொருட்கள் முழுவதையும் உமக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்.
என்னிடம் உள்ள பொருட்கள் யாவற்றையும் உமக்குக் காணிக்கையாக தந்துவிட்டால் நான் செலவுக்கு என்ன செய்வேன் என்று கேட்கிறா?
சர்வ உலகத்துக்கும் சொந்தமான நீர் என்னுடைய தந்தையாக இருக்கும்போது நான் எதற்குக் கவலைப்பட வேண்டும்?
தாயின் மடியில் இருக்கும் குழந்தை எதற்கும் கவலைப்படாது.
உமது கையில் இருக்கும் என்னை நீர் கவனித்துக் கொள்வீர் என்று எனக்குத் தெரியும்."
இயேசு நமக்கு கற்பித்த செபத்தில் அன்றாட தேவைகளுக்காக மட்டும் தந்தையிடம் கேட்க சொல்லியிருக்கிறார்.
நம்மிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும் முழுவதையும் தந்தையிடம் கொடுத்துவிட்டு அன்றன்றய தேவைகளைப் பூர்த்தி செய்யச் சொல்லுவது எவ்வாறு சாத்தியமாகும்?
நம்மிடம் உள்ள அனைத்து பொருள்களையும் காணிக்கை பெட்டியில் போடுவதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.
இறைவனிடம் கொடுப்பதைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.
பொருள் நம் கையில் இருந்தாலும் அது இறைவனுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.
அது இறைவனுடைய பொருளாகையால் அதை நாம் தவறாகச் செலவு செய்ய மாட்டோம்.
அவரது விருப்பத்திற்கு ஏற்ப பிறர் அன்பு பணி செய்வதற்கும், கோவில் காரியங்களுக்கும்
இவை போன்ற இறைவனுக்குப் பிரியமான காரியங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவோம்.
உலக ரீதியில் சொல்வதானால் பிள்ளைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைத் தந்தையிடம் கொடுத்துவிட்டு அவரால் கவனித்துக் கொள்ளப் படுகிறார்கள் அல்லவா, அதேபோல,
ஆன்மீக ரீதியில் நம்மையும், நம்மிடம் உள்ளவற்றையும் இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு அவரால் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு ஏழைப் பெண் தனது பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையும் கோவில் காணிக்கைப் பெட்டியில் போட்டதைப் பற்றி இயேசு கூறுகிறார்.
அவள் காணிக்கைப் பெட்டியில் போட்டதைப் போல, நாம் வைத்திருக்கும் அனைத்தையும் இறைவன் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நம்மிடம் உள்ள அனைத்தையும் இறைவனது விருப்பப்படி மட்டும் பயன்படுத்த வேண்டும்.
ஆடம்பரமான வாழ்க்கை இறைவனது விருப்பத்திற்கு ஏற்றது அல்ல.
போசனப்பிரியம் இறைவனது விருப்பத்திற்கு ஏற்றது அல்ல.
லஞ்சம் கொடுப்பது இறைவனது விருப்பத்திற்கு ஏற்றது அல்ல.
இறைவன் வசம் ஒப்படைத்து விட்ட பணத்தை அவர் விரும்பாத காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
இறைவனது விருப்பத்திற்கு ஏற்ப மட்டும் நம்மிடம் உள்ள பொருளைப் பயன்படுத்தினால் நம்மால் இறைவனுக்கு எதிராக பாவம் செய்ய முடியாது.
காலையில் எழுந்து அன்றைய நேரத்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால்
அன்றைய நேரத்தை பாவம் செய்யப் பயன்படுத்த மாட்டோம்.
நம்மை முழுவதும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் நாள் முழுவதும் இறைவனது பிள்ளைகளாகவே வாழ்வோம்.
இறைவன் நம்மில் வாழ்வார்,
நமது தந்தையாக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment