(மாற்கு.12:14)
பரிசேயராலும், ஏரோதியராலும் அனுப்பப்பட்ட ஆட்கள் இயேசுவிடம் வந்து முதலில் அவரைப் புகழ்வது போல் நடிக்கிறார்கள்.
"போதகரே நீர் உண்மையுள்ளவர். எவர் தயவும் உமக்கு வேண்டியதில்லை. ஏனெனில், முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும்."
இந்த வார்த்தைகள் அவர்களுடைய உள்ளத்திலிருந்து வந்திருந்தால்
அவர்கள் பரிசேயர்களின் தூதுவர்களாக வந்திருக்க மாட்டார்கள்.
பரிசேயர்களுக்கு இயேசுவின் வார்த்தைகளில் குற்றம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்வதே வேலை.
அவர்கள் இயேசுவைக் கொலை செய்வதற்குக் காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்களின் தூதுவர்களாக வந்தவர்களின் வாயிலிருந்து எப்படி புகழ்ச்சியான வார்த்தைகள் வரும்?
"செசாருக்கு வரி கொடுப்பது முறையா? இல்லையா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?"
இது அவர்கள் மூலமாக பரிசேயர்களும், ஏரோதியரும் அனுப்பிய கேள்வி.
இதில வேடிக்கை என்னவென்றால்
பரிசேயர்கள் ரோமையர் ஆட்சியை விரும்பாதவர்கள்.
ஏரோதியர் ரோமையர் ஆட்சியை விரும்புகிறவர்கள்.
வெவ்வேறு கருத்துக்களை உடைய இவர்களின் ஒருமித்த கருத்து இயேசுவைக் கொலை செய்ய வேண்டும் என்பதுதான்.
செசாருக்கு வரி கொடுக்கலாம் என்று இயேசு சொன்னால் அவர் அன்னியர் ஆட்சியை விரும்புகிறார் என்று யூதர்களை அவருக்கு எதிராகத் திருப்பிவிடலாம்.
வரி கொடுக்கக் கூடாது என்று சொன்னால் ரோமை அரசை அவருக்கு எதிராகத் திருப்பிவிடலாம்.
அவர்களுடைய கபட நாடகத்தை அறிந்திருந்த இயேசு
"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்"
என்று பதில் சொன்னார்.
இயேசுவின் பதிலில் யாருக்கும் எதிரான எந்தக் கருத்தும் இல்லை.
இயேசுவின் சீடர்கள் உட்பட யூதர்கள் அனேகருக்கு இயேசு யூதர்களை ரோமர்களின் ஆட்சியில் இருந்து விடுவித்துத் தனது ஆட்சியை நிறுவுவார் என்ற எண்ணம் இருந்தது.
இயேசுவின் ஆட்சியில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும் என்று சீடர்கள் கூட நம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இறைமகன் இயேசு உலகிற்கு வந்தது உலகைச் சார்ந்த ஆட்சியை நிறுவுவதற்கு அல்ல.
உலகைப் படைத்தவர் என்ற முறையில் உலகை ஆண்டு கொண்டிருந்தவரே அவர் தான். ஆண்டு கொண்டிருப்பவரும் அவர்தான்.
உலகை ஆள்பவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிகாரம் கூட இறைவன் அவர்களுக்கு கொடுத்தது தான்.
"மேலிருந்து உமக்கு அருளப்படாதிருந்தால், என்மேல் உமக்கு எவ்வதிகாரமும் இராது."
(அரு.19:11)
ஆனால் இறைவனால் தங்களுக்கு அருளப்பட்ட அதிகாரத்தை அனேக ஆளுநர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பிலாத்துவும் அதையே செய்தான்.
"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்"
என்ற வார்த்தைகளின் மூலம் இயேசு நமது கடமையை தெளிவாக்குகிறார்.
நமது உடல் இவ்வுலக ஆட்சிக்கு உட்பட்டது.
நமது ஆன்மா விண்ணுலக ஆட்சிக்கு உட்பட்டது.
நாம் உலகத்தில் வாழ்வதால் நமது லௌகீக கடமைகள் இவ்வுலக அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை.
இவ்வுலக ஆட்சிக்கான செலவு வகைகளுக்கான வரியை உலகை ஆள்பவர்களிடம் கொடுக்க வேண்டும்.
இவ்வுலக ஆட்சி ஒரு நாள் முடிவுக்கு வந்துவிடும்.
முடிவே இல்லாத இறையாட்சிக்கு உரியதை இறைவனிடம் கொடுக்க.
இறைவனிடம் கொடுக்கப்பட வேண்டியது வரி அல்ல, நமது வாழ்க்கை.
இறைவனுக்காக வாழ்வதன் மூலம் இறைவனுக்கு உரியதை இறைவனிடம் கொடுக்கிறோம்.
இறையன்பும் பிறர் அன்பும் நிறைந்தவர்களாக வாழ்வதுதான் இறைவனுக்காக வாழும் வாழ்க்கை.
இறைவனை நேசித்து,
அந்த நேசத்தை நமது பிறர் அன்புச் செயல்களில் வெளிப்படுத்தி
வாழ்ந்தால்
நாம் நம்மையே விண்ணுலக
நிலை வாழ்வுக்காக தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
பரிசேயர் அனுப்பிய ஆட்கள் ரோமை ஆட்சிக்குக் கொடுக்கப்பட வேண்டிய வரியைப் பற்றி மட்டுமே கேட்டார்கள்.
விண்ணுலக ஆட்சிக்காக வாழ வேண்டியதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை.
இயேசு விண்ணக அரசர்.
அவர் உலகிற்கு வந்ததன் நோக்கமே இறை அரசுக்கு நம்மை அழைத்துச் செல்வது மட்டுமே.
யாரும் அழைத்து அவர் உலகுக்கு வரவில்லை.
அவரால் படைக்கப்பட்ட உலகுக்கு அவர் வந்தார்.
ஆகவேதான் பரிசேயர் அனுப்பிய ஆட்கள் கேட்காமலேயே
கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
இதிலிருந்து நாம் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது ஆன்மாவின் மீட்பு சம்பந்தப்பட்ட உதவிகளை மட்டுமே இயேசுவிடம் கேட்க வேண்டும்.
இவ்வுலக சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்க நேர்ந்தால் அவை நமது ஆன்மாவின் மீட்புக்கு உதவிகரமாய் இருக்குமா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
அவை நமது ஆன்மாவின் மீட்புக்கு உதவிகரமாய் இருந்தால் மட்டுமே இயேசு அவற்றை நமக்குத் தருவார்.
இயேசு கேட்டுக் கொண்டபடி கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்கே கொடுப்போம்.
நமது வாழ்க்கை கடவுளுக்குதான் உரியது.
உலக ரீதியாக நம்மை ஆள்வது யாராக இருந்தாலும்,
ஆன்மீக ரீதியாக நம்மை ஆள்வது நம்மைப் படைத்த கடவுள் மட்டுமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment