Sunday, June 18, 2023

"ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு." (மத்.5:39)

"ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு." (மத்.5:39)

நன்மையே உருவான கடவுளால் படைக்கப்பட்டவர்கள் நாம்.

நன்மைக்கு எதிராக எதைச் செய்தாலும் அது நம்மைப் படைத்தவருக்கு எதிரானதாகத் தான் இருக்கும்.

யாராவது நமக்குத் துன்பம் செய்தால் அதை இயேசு பாடுகளின் போது ஏற்றுக்கொண்டது போல நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு."  

என்ற இயேசுவின் கூற்றில் ஒரு நயம் இருக்கிறது.

நம்மைத் தாக்குபவர்கள் இரு வகையினர்.

நேருக்கு நேர் எதிர்த்து நின்று தாக்குபவர்கள் ஒருவகை.

நமக்கு தெரியாமல் பின்னால் நின்று தாக்குபவர்கள் மற்றொரு வகை.

இரண்டாம் வகையினர் கோழைகள்.

எதிர்த்து நின்று நமது வலக் கன்னத்தில் அறைய முடியாது.

எதிர்த்து நிற்கப் பயந்து நமது முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு அறைந்தால்தான் நமது வலது கன்னத்தில் அறைய முடியும்.

அப்படி யாராவது அறைந்தால் நாம் திரும்பி நின்று நமது இடது கன்னத்தையும் காட்ட வேண்டும்.

அதுதான் உண்மையான வீரம்.

இயேசு சர்வ வல்லப கடவுள். 

"உண்டாகுக" என்ற ஒரே வார்த்தையால் நாம் வாழும் உலகையே படைத்தவர்.

அவரை அடித்தவர்களை அழிக்க வார்த்தையே தேவையில்லை, நினைத்தாலே போதும்.

ஆனால் நாம் மீட்புப் பெறுவதற்காக எதிரிகள் கொடுத்த அடிகளையும், உதைகளையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்.

பாவமே செய்ய முடியாத கடவுள் நமது பாவங்களுக்காக அடிகள் பட்ட போது,

பாவிகளாகிய நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக அடிபட ஏன் தயங்க வேண்டும்?

மாறாக, நமது பாவங்களுக்கு நாம் பரிகாரம் செய்ய வாய்ப்புகளை அனுமதித்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

நமக்குத் துன்பங்கள் வரக் கடவுள் அனுமதிப்பது அவருக்கு நம் மீது உள்ள அன்பின் காரணமாகத்தான்.

நாம் நமது துணி மணிகளை ஓங்கி அடித்துத் துவைப்பது அவற்றில் உள்ள அழுக்கைப் போக்குவதற்காகத் தானே!

நம் மீது உள்ள பாவ அழுக்கைப் போக்குவதற்காகத் தான் நாம் துன்பப்பட கடவுள் அனுமதிக்கிறார்.

அதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

நமக்கு உண்ண உணவு தரும் தாய்க்கு நன்றி கூறும் நாம்,

நம்மை நமது நோயிலிருந்து விடுவிப்பதற்காக கையில் ஊசி போடும் மருத்துவருக்கும் நன்றி கூற வேண்டாமா?

யார் மூலமாக நமக்கு கடவுள் துன்பங்களை அனுமதிக்கிறாரோ 

அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நமக்காக நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வது போல

அவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ள வேண்டும்.

துன்பம் மருந்து மாதிரி, கசப்பாகத்தான் இருக்கும்.

ஆனால் அதன் விளைவு இனிப்பாக இருக்கும்.

நமக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக மாற்றி இயேசுவைப் பின் செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment