Saturday, July 1, 2023

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மைப் படைத்தவர் கடவுள்.

கடவுள் மட்டுமே நமது முதல் உறவு.

மற்ற உறவுகள் எல்லாம் நாம் படைக்கப்பட்ட பின் ஏற்பட்டவையே.

கடவுள் நமது ஆன்மாவைப் படைத்த பின்னரே நமது பெற்றோருக்கு பிள்ளையாக உற்பவித்தோம்.

எந்தப் பெற்றோருக்கு நாம் பிள்ளையாக உற்பவித்துப் பிறக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் கடவுள்.

அன்பு என்னும் தனது பண்பை நம்மோடு பகிர்ந்து கொண்டவர் கடவுள்.

தன்னை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்திருப்பவரும் கடவுளே.

எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும் என்றால்,

நம்மை நாம் நேசிப்பதற்கு மேலாக கடவுளை நேசிக்க வேண்டும்.

நம்மை முழுவதும் கடவுளுக்காகத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

"உனக்கு கடவுள் வேண்டுமா, உனது உயிர் வேண்டுமா?"

 என்று யாராவது நம்மிடம் கேட்டால் 

நாம் கொடுக்க வேண்டிய பதில்,
"எனக்கு கடவுளே வேண்டும். 

எனது உயிரின் மேல் முழு உரிமையும் உடையவர் கடவுளே.

என் உயிரை நான் நேசிப்பதற்கு மேலாக அதைப் படைத்த கடவுளையே நேசிக்கிறேன்.

கடவுளை நேசிப்பது எனது கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட.

ஏனெனில் நான் அவரது பிள்ளை."

எனக்குப் பெற்றோரைக் கொடுத்தவரும் கடவுளே.

எனது பெற்றோருக்கும் மேலானவர் கடவுளே.

எனக்கு மற்ற உறவினர்களைக் கொடுத்தவர் கடவுளே.

நான் வாழ்வதற்கென்று உலகையும், அதில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எனக்குக் கொடுத்தவர் கடவுளே.

ஆகவே எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நேராகவும்,

இந்த உலகில் உள்ள அனைத்துப் படைக்கப்பட்டப் பொருட்களுக்கு மேலாகவும் 

நான் கடவுளை நேசிக்க கடமைப்பட்டிருக்கிறேன்."

"உனக்கு இந்த உலகில் நீண்ட நாள் வாழ விருப்பம்.

ஆனால் கடவுளுக்கு நீ உடனே மரித்து விண்ணகம் செல்ல வேண்டும் என்பது விருப்பம்.

நீ நிறைவேற்ற வேண்டியது உனது விருப்பத்தையா, கடவுளின் விருப்பத்தையா?"

"'கடவுளின் விருப்பத்தையே நிறைவேற்ற வேண்டும்.

இந்த உலகில் நான் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று தீர்மானிப்பவர் கடவுளே.

நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருடைய தீர்மானமே நிறைவேறும்.

நான் அவருடைய தீர்மானத்தை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டால் 

எனக்கு பிரதிபலனாக கிடைக்க விருப்பது நித்திய பேரின்ப வாழ்வு."

உலகில் உள்ள அத்தனை பொருட்களையும் நாம் பயன்படுத்துவதற்காகத்தான் கடவுள் படைத்துள்ளார்.

ஆனால் நமது விருப்பப்படியல்ல, கடவுளது விருப்பப்படியே நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நமது ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும்,

ஒரே வார்த்தையில்,

நமது வாழ்க்கை முழுவதும்

 நமக்காக அல்ல, இறைவனுக்காக மட்டுமே.

அதனால் தான் நமது ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து, 

தந்தை, மகன், தூய ஆவியின் மகிமைக்காகச் செய்து,

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் முடிக்க வேண்டும்.

இவ்வுலகில் கடவுளுக்காக வாழ்ந்து,

மறுவுலகில் கடவுளோடு வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment