இயேசு உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது அப்போஸ்தலர்களுக்குக் காட்சி அளித்தார்.
அப்போது தோமையார் அவர்களோடு இல்லை.
இயேசுவைக் கண்டதாக அப்போஸ்தலர்கள் கூறிய போது, தோமையார் நம்பவில்லை.
"அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்"
எட்டு நாளுக்குப்பின் அப்போஸ்தலர்களுக்குக் காட்சியளித்த இயேசுவை நேரில் பார்த்த பிறகு அவர் விசுவசித்தார்.
அப்போது இயேசு தோமையாரிடம்,
"என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" என்று கூறினார்.
இயேசுவின் இந்த கூற்றின் அடிப்படையில் தியானிக்கும் போது,
நாம் பேறு பெற்றவர்கள் என்ற உண்மை நமக்கு புரியும்.
அப்போஸ்தலர்கள் இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டு,
மூன்று ஆண்டுகள் அவரோடு தங்கி,
அவர் சென்ற இடம் எல்லாம் அவரோடு சென்று,
அவரது போதனைகளை நேரில் கேட்டவர்கள்.
தான் பாடுகள் பட்டு, மரித்து, மூன்றாவது நாள் உயிர்க்கவிருக்கும் நற்செய்தியை இயேசுவே கூறியதைத் தங்கள் காதுகளால் கேட்டவர்கள்.
அவர்களே இயேசு உயிர்த்ததை உடனே விசுவசிக்கவில்லை.
அவர் அவர்களுக்குக் காட்சியளித்த பிறகுதான் விசுவசித்தார்கள்.
நாம் இயேசு உலகில் வாழ்ந்த காலத்திற்கு 2000 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையைக் கேட்டு,
அவரை நேரில் பார்க்காமலேயே விசுவசித்து வாழ்கிறோம்.
இயேசு திவ்ய நற்கருணை மூலமாக நம்மோடு வாழ்வதையும் விசுவசிக்கிறோம்.
ஆனாலும் நமது விசுவாசம் இயேசு எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கிறதா என்பதைப் பற்றி தியானிக்கக் கடமை பட்டிருக்கிறோம்.
நாம் எல்லோருமே சாப்பிடுகிறோம்.
ஆனாலும் நமக்கு நோய் நொடிகள் வந்து நமது வளர்ச்சியைப் பாதிக்கின்றனவே, ஏன்?
நாம் சாப்பிடுவது உண்மை. ஆனால் சத்துள்ள உணவைப் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.
ஆகவே நாம் சாப்பிடும் உணவே நமது நோய் நொடிகளுக்கு காரணமாகி விடுகிறது.
நாம் விசுவசிக்கிறோம் என்பது உண்மைதான்.
ஆனால் எப்படி விசுவசிக்க வேண்டுமோ அப்படி விசுவசிக்காததுதான் நம்முடைய ஆன்மீக வளர்ச்சி இன்மைக்குக் காரணம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம். ஒரு அரிசிக்கு பதம். பார்ப்போம்.
"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தை இறைவனை விசுவசிக்கிறேன்."
ஒவ்வொரு நாளும் பல முறை சொல்கிறோம்.
யாரை விசுவசிக்கிறோம்?
பரலோகத்தையும் பூலோகத்தையும் ஒன்றுமில்லாமைலிருந்து படைத்த இறைவனை நமது தந்தை என்று விசுவசிக்கிறோம்.
ஒரு பிச்சைக்காரனின் மகன் நாளை உணவுக்கு என்ன செய்வது என்று ஏங்குவதில் அர்த்தம் இருக்கிறது.
ஆனால் ஒரு நாட்டின் அரசனின் மகன் நாளை உணவுக்கு என்ன செய்வது என்று ஏங்கினால்
அவனைப் பற்றி என்ன சொல்லுவோம்?
சர்வத்தையும் படைத்த சர்வ வல்லவ கடவுளின் மக்கள் நாம்.
நடைமுறையில் நமது எண்ணங்களையும், பேச்சுக்களையும், செயல்களையும் பார்த்தால் அப்படியா தெரிகிறது?
நாளைக்கு நாம் எப்படி வாழப் போகிறோம்,
நமது தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறோம்,
நமது கஷ்டங்களில் யார் துணை நிற்கப் போகிறார்
என்றெல்லாம் எண்ணி நாம் கவலைப்படுவதைப் பார்க்கும் போது நம்மைப் பார்க்க சர்வ வல்லவரின் பிள்ளைகள் போலவா தெரிகிறது?
நமது செயல்களைப் பார்க்கும் போது நாம் எல்லாம் வல்ல கடவுளின் பிள்ளைகள் என்று நாம் நம்புவது போல் தெரியவில்லையே!
நமக்கு வேண்டியதைக் கேட்கும்போது மக்களுக்கு உரிய மனப்பாங்குடனா கேட்கிறோம்?
"அப்பா, தாருங்கள்."
என்று கேட்பதற்கும்,
"ஐயா, சாமி 10 பைசா தர்மம் போடுங்கள்"
என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
கர்த்தர் கற்பித்த செபத்தைப் பிள்ளைக்குரிய மன உணர்வுடன் செபித்தால் இது புரியும்.
"இறைமகன் நமக்காக மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்து நம்மை மீட்டார்." என்று நாம் விசுவசிப்பதாக கூறுகிறோம்.
நமது விசுவாசம் உண்மையானால் பாவங்கள் செய்ய நமக்கு மனது வருமா?
"நமக்காகப் பாடுகள் பட்டார்" என்று நாம் விசுவசிப்பது உண்மையானால்,
அவருக்காகக் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குவோமா?
"திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாகவே தனது ஆத்மாவோடும் சரீரத்தோடும் இருக்கிறார்"
என்று நாம் விசுவசிப்பதாகக் கூறுகிறோம்.
நமது விசுவாசம் உண்மையானால்
அவரை ஒரு தின்பண்டத்தை வாங்குவது போல் வாங்கி வாயில் போட்டு விட்டு,
உடனே நண்பனோடு உரையாட கோயிலை விட்டு வெளியே வருவோமா?
நமது விசுவாசத்தையும், நமது வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலனாகும்.
அநேக சமயங்களில் நமது விசுவாசத்திற்கும், நமது வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்ற உண்மை தெரியவரும்.
என்று நமது விசுவாசம் வாழ்க்கையாக மாறுகிறதோ
அன்றுதான் நாம் பேறு பெற்றவர்கள்.
நாம் பேறு பெற்றவர்களா
அல்லது
பேருக்கு மட்டும் விசுவாசிகளா என்பதைத் தியானித்து அறிவோம்.
பேறு பெற்றவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment