Friday, July 21, 2023

"அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" (அரு.20:15)

"அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" 
(அரு.20:15)

இயேசுவை அடக்கம் செய்திருந்த கல்லறையில் அவரது உடலைக் காணாததால் அழுது கொண்டிருந்த மதலேன் மரியாளை நோக்கி 

அவர் "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார்.

அவள் ஏன் அழுது கொண்டிருந்தாள் என்று இயேசுவுக்குத் தெரியும்.

தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல்,

தோட்டக்காரன் வேடத்தில் நின்று கொண்டு இந்தக் கேள்வியை கேட்டார்.

அவர்கள் நின்று கொண்டிருந்த சூழ்நிலையை நமது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு,

அதே போன்ற இன்னொரு சூழ்நிலையை கற்பனை செய்து கொண்டு,

நமது ஆன்மாவுக்கு பயன்படும் வகையில் இந்த வசனத்தை தியானிப்போம்.

மதலேன் மரியாள் இயேசுவின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த சீடத்திகளில் ஒருவள்.

இயேசு உயிர்த்தவுடன் முதல் முதல் காட்சி கொடுத்தது தன்னைப் பெற்ற அன்னை மரியாளுக்கு. 

மற்றவர்கள் இயேசு உயிர்ப்பார் என்ற நம்பிக்கை இல்லாததால் தான் அவரது உடலுக்கு பரிமளம் பூச கல்லறைக்கு வந்தார்கள்.

ஆனால் அன்னை மரியாள் இயேசுவின் உயிர்ப்பில் உறுதியான விசுவாசம் கொண்டிருந்ததால் கல்லறைக்கு வரவில்லை.

தனது அன்னைக்கு அடுத்தபடி இயேசு முதல் முதல் காட்சி கொடுத்தது மதலேன் மரியாளுக்குதான்.

மதலேன் மரியாள் இயேசுவைத் தேடியது போல நாமும் அவரைத் தேட வேண்டிய சூழ்நிலைகள் நமது ஆன்மீக வாழ்வில் வரும்.

மன அமைதி இல்லாத நேரங்களில்,

மன அமைதிக்காக இயேசுவை நினைத்துப் பார்த்து செபிப்பதற்காக  நமது மனது முயற்சி செய்யும்.

ஆனால் முயற்சி வெற்றி பெறாது.

திவ்ய நற்கருணை பேழையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்,

பேழை மட்டும் கண்ணுக்குத் தெரியுமே அன்றி இயேசு நமது உள்ளத்துக்குள் வரும் உணர்வு நமக்கு ஏற்படாது.

ஏதோ ஒரு வெற்றிடத்தில் மாட்டிக் கொண்டது போல உணர்ச்சி ஏற்படும்.

கோவிலை விட்டு வெளியே வந்தால் அங்கே நமது பங்குக் குருவானவர் நின்று கொண்டிருப்பார்.

நமது முகம் வேறு பட்டிருப்பதைப் பார்த்து,

"ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? என்ன பிரச்சனை?" என்று நம்மிடம் கேட்பார்.

பங்குக் குருவானவர் இயேசுவின் பிரதிநிதி.

நமது ஆன்மீக வழிகாட்டி.(Spiritual Director)

இயேசுவின் பாதத்தில் கொட்ட வேண்டிய நமது உணர்வுகள் அனைத்தையும் அவருடைய பிரதிநிதியிடம் கொட்டி விடுவோம்.

அவரது வார்த்தைகள் நமக்கு மன ஆறுதலையும் நாம் செல்ல வேண்டிய ஆன்மீகப் பாதையையும் காண்பிக்கும்.

அன்று தோட்டக்காரன் வேடத்தில் நின்று கொண்டிருந்த இயேசு,

இன்று பங்கு குருவின் உருவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீகத்தில்  நமக்குத் தொடர்புடைய அத்தனை அதிகாரங்களையும் இயேசு தனது குருக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

குருக்கள் மூலமாகத்தான்

 தனது நற்செய்தியை நமக்கு அறிவிக்கிறார்.

நாம் செல்ல வேண்டிய ஆன்மீகப் பாதையைக் காண்பிக்கிறார்.

நமது பாவங்களை மன்னிக்கிறார்.

தன்னை நமது உணவாகத் தருகிறார்.

அன்று இயேசு மக்களோடு  வாழ்ந்தது போல,

குருவானவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

குருவானவரோடு நாம் பேசும்போது இயேசுவுடன்தான் பேசுகிறோம்.

குருவானவர் தரும் ஆலோசனை இயேசு நமக்குத் தரும் ஆலோசனை. நாம் அதன்படி வாழும் போது இயேசுவின் ஆலோசனைப்படி தான் வாழ்கிறோம்.

அவருடைய ஆலோசனைப்படி நாம் இயேசுவுடன் தொடர்பு கொண்டால் அந்தத் தொடர்பு நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்தால் ஒரு உண்மை நமக்குப் புரியும்.

அவர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனைப்படி தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

மதலேன் மரியாள் தோட்டக்காரன் வேடத்தில் நின்ற இயேசுவோடு பேசி இயேசு உயிர்த்ததை அறிந்தது போல,

நமது ஆன்மீக வழிகாட்டியாக நமது பங்கு குருவின் உருவத்தில் நம்மோடு வாழும் இயேசுவோடு பேசி 

நமது ஆன்மீகப் பாதையில் வெற்றி நடை போடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment