Sunday, July 23, 2023

கையில் திவ்ய நற்கருணை.

கையில் திவ்ய நற்கருணை.


"மிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க"

"'என்ன விஷயம்?"

"நீங்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்குக் கட்டுப்பட்டவரா அல்லது இஷ்டம் போல் வாழ்பவரா?"

"'உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்? நீங்கள் ஒரு கத்தோலிக்கர் என்று நினைக்கிறேன்."

"கத்தோலிக்கராக இருப்பதால்தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

திருச்சபை அனுமதித்திருக்கும் விசயங்களைத் தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?"

"'சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்."

"திருச்சபை திவ்ய நற்கருணையைக் கையில் கொடுக்க அனுமதித்திருக்கிறது.

அதைத் தவறு என்று எப்படி நீங்கள் கூறலாம்?"

"'நீங்கள் ஒரு குடும்பத்தில் பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடனும் வாழ்பவர் தானே."

"எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?"

"' குடும்பத்தில் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுண்டா?"

"பரிமாறிக் கொள்வது மட்டுமல்ல,

கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தால் வாக்குவாதங்கள் கூட செய்வதுண்டு.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீங்கள் என்னைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்."

"'கத்தோலிக்கத் திருச்சபை ஒரு குடும்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?"

"அதாவது குடும்ப உறுப்பினர் என்ற அளவில் உங்களுக்குக் கருத்துக்களைக் கூற உரிமை உண்டு என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?"

"'விசுவாச சத்தியங்களை எல்லா கத்தோலிக்கர்களும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமை இல்லை. 

உதாரணத்திற்கு, 

திவ்ய நற்கருணையில் 

இறை மகன் இயேசு உண்மையாகவே கன்னிமரியின் வயிற்றில் உற்பவிக்கும் போது எடுத்த அதே உடலோடு,

மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த அதே உடலோடு,

நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த அதே உடலோடு 

இருக்கிறார் என்பது விசுவாச சத்தியம்.

இதைப் பற்றி அவரவருக்குத் தோன்றுகிற கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் திவ்ய நற்கருணையை மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது நடைமுறையை சார்ந்த விஷயம்.

விசுவாச சத்தியங்கள் மாற முடியாதவை.

நடைமுறைகள் மாறக்கூடியவை.

மாற்றங்கள் வளர்ச்சியினால் அல்லது  தளர்ச்சியினால்  ஏற்படுபவை.

சிறு குழந்தை வளர்ந்து பெரிய மனிதன் ஆகிறது.

ஆனால் அதன் ஆன்மா மாறுவதில்லை.

விசுவாச சத்தியங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிர்.

இயேசு நமக்காக தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பது விசுவாச சத்தியம்.

அதன் ஞாபகமாக ஒவ்வொரு நாளும் குருத்கள் திருப்பலி நிறைவேற்றுவது நடைமுறையை சார்ந்த விஷயம்.

நடைமுறையைச் சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்படும் முன் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பாப்பரசர் தலைமையில் ஆயர்களின் கருத்து பரிமாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று

குருவானவர் மக்களை நோக்கி நின்று,

அந்தந்த நாட்டு மொழியில் திருப்பலி நிறைவேற்றுவது.

அதற்கு முன் குருவானவர் பீடத்தை நோக்கி நின்று, லத்தின் மொழியில் திருப்பலி நிறைவேற்றினார்.

இது விசுவாச சத்தியத்தைச் சார்ந்தது அல்ல,
 நடைமுறையைச் சார்ந்தது.

இதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் இதைப்பற்றி கருத்துக்கள் கூறுவதில் தவறு இல்லை.

இதுவரைப் பேசியது உங்களுக்கு புரிந்திருந்தால் தான் தொடர்ந்து பேசலாம்,

அதாவது கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்."

"விசுவாச சத்தியங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் நடைமுறையைச் சார்ந்த விஷயங்களைப் பற்றிக் கருத்துக்கள் பரிமாறி கொள்ளப் படலாம்.

சரியா?"

"'சரிதான். திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார்,

அதன் ஒவ்வொரு துகளிலும் இயேசு இருக்கிறார்.

இது விசுவாச சத்தியம்.

திவ்ய நற்கருணையை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது நடைமுறையை சார்ந்த விஷயம்.

இதைப் பற்றி நாம் இருவரும் ஒருவருக்கொருவர் நமது கருத்துக்களை பரிமாறி கொள்ளலாமா?"

"பரிமாறிக் கொள்வோமே."

"'திவ்ய நற்கருணையை வாங்கும்போது,

 நம்மைப் படைத்து,

நமக்காக மனிதனாகப் பிறந்து,

பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசுவையே வாங்குகிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?"

"இது விசுவாசம் சார்ந்த விஷயம். இதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்."

"'இப்போது நடைமுறைக்கு வருவோம்.

நம்மைப் படைத்த கடவுள் நம்மிடம் வரும்போது அவரை எப்படி வரவேற்க வேண்டும்?"

"கடவுளுக்குரிய மரியாதையோடு வரவேற்க வேண்டும்."

"'நின்று கொண்டு வரவேற்பது, முழந்தாள் படியிட்டு வரவேற்பது

இந்த இரண்டில் எது கடவுளுக்கு ஏற்றதாக இருக்கும்?"

"நின்று கொண்டு மனிதர்களை வரவேற்கிறோம்.

ஆகவே முழந்தாள் படியிட்டு வரவேற்பதுதான் பொறுத்தமாக இருக்கும்."

"'நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு."என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே திவ்ய நற்கருணை ஒரு ...."

"உணவு."

"'உணவை எப்படி வாங்கி உண்டால் பொறுத்தமாக இருக்கும்?

நான் சொல்வது சாதாரண உணவை அல்ல. இயேசுவாகிய உணவை."

"கையாலும் வாங்கி உண்ணலாம்,

நேரடியாக வாயாலும் வாங்கலாம்.

சாதாரண உணவை பெரியவர்கள் கையால் அள்ளி சாப்பிடுவார்கள்,

குழந்தைகள் வாயில் வாங்கி சாப்பிடுவார்கள்."

'''நாம் பேசிக் கொண்டிருப்பது சாதாரண உணவைப் பற்றி அல்ல, இறை மகன் இயேசுவாகிய உணவைப் பற்றியது.

திவ்ய நற்கருணையின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பதில் சொல்லுங்கள்."

"நீங்கள் இப்போது எனது கருத்தைக் கேட்கவில்லை, மாறாக உங்கள் கருத்தை என்னிடம் திணிக்கப் பார்க்கிறீர்கள்."

"'எதை வைத்துச் சொல்கிறீர்கள்?"

"ஒவ்வொரு துகளிலும் இயேசு இருக்கிறார்.

 நற்கருணையைக் கையில் வைத்தால் துகள்கள் கையில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

 அந்தத் துகள்கள் வாய்க்குள் போகாது.

 தரையில் விழ வாய்ப்பு இருக்கிறது.

 இது உங்கள் கருத்து."

"'எனது இந்தக் கருத்து சரியா, தவறா என்பது பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்."

"கருத்தில் தவறு இல்லை.

ஆனால் இது தாய்த் திருச்சபைக்கும் தெரியுமே.

தாய்த் திருச்சபை பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுகிறாள் என்பதும் உங்களுக்குத் தெரியுமே.

தாய் திருச்சபையைப் பார்த்து உங்களது இந்த கருத்தைச் சொன்னால் அது பரிசுத்த ஆவியைப் பார்த்து சொன்னது போல் இருக்குமே.

பரிசுத்த ஆவியைப் பார்த்துக் கருத்து சொல்ல உங்களுக்கு யார் உரிமையைக் கொடுத்தது?"

"'பரிசுத்த ஆவியானவர் மொத்தத் திருச்சபையையும் வழி நடத்துகிறார்.

மனுக் குலமே அவரது கண்காணிப்பில்தான் இருக்கிறது.

நற்கருணைப் பகிர்வு. விஷயத்தில் நாம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்வது பரிசுத்த ஆவியோடு அல்ல,

 அவரது கண்காணிப்பில் உள்ள அவரது பிள்ளைகளோடு,

 அதாவது திருச்சபையின் உறுப்பினர்களோடு.

அதாவது பிள்ளைகள் ஒருவர் ஒருவரோடு.

பரிசுத்த பாப்பரசர் நமது தந்தை.

நமது ஆயர்களும், குருக்களும் நம்மை வழி நடத்துபவர்கள்.

திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள்.

நமக்குள் தான் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், கடவுளோடு அல்ல.

கடவுளுக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமை இல்லை.

ஆனாலும் நமக்குள்ளே நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களில் பரிசுத்த ஆவியின் உள் தூண்டுதல்கள் (Inspirations) இருக்கும்.

நாம் பரிபூரண சுதந்திரத்தோடு செயல்பட கடவுள் நமக்கு முழு அனுமதி கொடுத்திருக்கிறார்.

இப்போது நமது கருத்துக்கு வருவோம்.

ஒரு கையில் வைக்கப்பட்ட திவ்ய நற்கருணையை மறு கையால் எடுத்து வாயில் வைத்த பின்,

கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு துகள்கள் என்ன செய்யும்?"
.
"தரையில் விழுந்து மிதிபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.

இது திவ்விய நற்கருணையை நமது கையில் வைத்த குருவானவருக்கு தெரியும் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன்."

'"அது எனக்கும் தெரியும்.

நான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் திவ்ய நற்கருணையை நாவில் வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

குருவானவர் நாவில் தர மாட்டேன் என்று சொல்ல மாட்டார்."

"நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு உங்களது கருத்தைத் தொடருங்கள்.

திருச்சபை திவ்ய நற்கருணையைக் கையில் கொடுக்க அனுமதித்திருக்கிறது.

அதைத் தவறு என்று எப்படி நீங்கள் கூறலாம்?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment