Thursday, July 13, 2023

சுரூபங்களும், திவ்ய நற்கருணையும்.(தொடர்ச்சி)

சுரூபங்களும், 
திவ்ய நற்கருணையும்.
(தொடர்ச்சி)

சுரூபங்கள் நினைவுபடுத்தும் கருவிகளே.

புனித அந்தோனியாருடைய சுரூபம் அவரை நமக்கு நினைவு படுத்துகிறது. அது அந்தோனியார் அல்ல.

ஆனால் திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கின்றார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த அதே இயேசு தான் திவ்ய நற்கருணை.

சுருபங்களுக்குக் கொடுக்கும் அதே மரியாதையை திவ்ய நற்கருணைக்கும் கொடுத்தால்

திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

புனித அந்தோனியாருக்குக் கொடுக்கும் அதே மரியாதையை இயேசுவுக்கும் கொடுத்தால்,

இயேசுவைக் கடவுள் என்று நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

புனிதருக்கு முன் தலை வணங்கி நமது மரியாதையைக் கொடுக்கிறோம்.

ஆனால் இயேசுவின் முன் முழங்கால் படியிட்டு அவருக்கு உரிய ஆராதனை கலந்த மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

புனிதர் வணக்கத்திற்கு உரியவர்.
கடவுள் ஆராதனைக்கு உரியவர்.

வேலைக்காரனுக்கு கொடுக்கும் அதே மரியாதையை முதலாளிக்கும் கொடுத்தால் 

முதலாளியை அவமதிப்பதாக அர்த்தம்.

புனிதருக்கு கொடுக்கும் அதே மரியாதையைக் கடவுளுக்கும் கொடுத்தால் நாம் கடவுளை அவமதிப்பதாக அர்த்தம்.

திவ்ய நற்கருணைக்கு முன் முழங்கால் படியிட்டு எழும் பழக்கம் திருச்சபையில்  முன்பு இருந்தது.

ஆனால் இப்பொழுது தலைவணங்கும் பழக்கமாக மாறிவிட்டது.

தலையை மட்டும் வணங்குபவர்கள் திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை விசுவசிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

அவர்களிடம் கேட்டால் விசுவசிக்கிறோம் என்று தான் சொல்வார்கள்.

ஆனால் செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்று அவர்களுக்குத் தெரியும்.

சிந்தனையில் உள்ள விசுவாசம் சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

இயேசு உலகில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதே இயேசு தான் என்றும் நம்மோடு திவ்ய நற்கருணையில் வாழ்கிறார்.

அவரை நாவில் வாங்கினால் கொரோனா நோய் பரவும் என்று கையில் வாங்கும் பழக்கம் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது?

இயேசுவால் நோய்களைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலா,

அல்லது,

இயேசு நோய்களைப் பரப்புவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலா? 

கொரோனா காலத்தில் நமது ஆலயங்களை இழுத்துப் பூட்டி விட்டோம்.

"ஆண்டவரே நோய்கள் குணம் அடைய மக்கள் கூட்டம் கூட்டமாய் உம்மிடம் வந்ததாக நற்செய்தி நூலில் வாசிக்கிறோம்.

ஆனால் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தால் நோய் ஒருவரை ஒருவர் தொற்றிக் கொள்ளும் என்று ஆலயத்தை அடைத்து விட்டு வீட்டிலேயே இருக்கிறோம், நற்செய்தி நூலை வாசித்துக் கொண்டு.

குணம் பெற்றவர்களை நோக்கி,

"உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று" என்று சொன்னவர் நீர்.

எங்களுக்கும் விசுவாசத்தைத் தாரும், ஆண்டவரே"

நடுத் தீர்வை நாளில் ஆண்டவர் நம்மிடம்,

"கொரோனா நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."
என்று சொல்ல வேண்டுமா?

அல்லது,

கொரோனா நோயுற்றும் சிறையிலும் இருந்தேன், என்னைப் பார்க்க வரவில்லை "
என்று சொல்ல வேண்டுமா?

என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கும் இயேசு,

நித்தியப் பேரின்ப வாழ்வைத் தேர்ந்தெடுக்கவும்,

வேண்டாம் என்று சொல்லி விடவும் முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

பைபிளுக்கு முழுமையான உருவம் கொடுத்தவர்கள் நாம்தான்.

ஆனால் அரைகுறை பைபிளைக் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றும் நமது பிரிவினை சகோதரர்கள் 

அவர்கள் தான் முழுக்க முழுக்க பைபிள் படி வாழ்வதாகவும்,

நாம் பைபிளைப் பற்றி கவலைப்படாமல் பாரம்பரியத்தை மட்டும் பற்றி கொண்டு வாழ்வதாகவும் 

ஒரு பொய் வதந்தியை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

"நாங்களும் பைபிள் படியே வாழ்கிறோம்"

என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக 

நம்மவர்கள் செய்த செயல்களில் ஒன்றுதான் 

அதுவரை நமது பலிபீடத்தில் நடு மையத்தில் இருந்த திவ்ய நற்கருணைப் பேழையை  

ஒரு பக்கவாட்டில் வைத்து விட்டு,

மையப் பகுதியை பைபிளுக்குக் கொடுத்தது.

திவ்ய நற்கருணை இறைவன். 
பைபிள் இறைவாக்கு. 

இறைவாக்கிற்கு பீடத்தின் மையப் பகுதியையும்,

இறைவனுக்கு பீடத்தின் ஒரு பக்க பகுதியையும் கொடுத்த காலத்திலிருந்து 

திவ்ய நற்கருணைக்கு நாம் காட்டிக் கொண்டிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

அதுவரை திவ்ய நற்கருணை முன் முழந்தாள் படியிட்டு எழுந்த நாம்

 தலை வணங்க ஆரம்பித்தோம்.

முழந்தாள் படியிட்டு இறை உணவை வாங்கிய நாம் நின்று கொண்டு வாங்க ஆரம்பித்தோம்.

அதன் பின் நாவில் வாங்கிய இறை உணவை கையில் வாங்க ஆரம்பித்தோம்.

திவ்ய நற்கருணையின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கின்றார்.

கையில் நற்கருணையை வாங்கும் போது ஒன்றிரண்டு துகள்கள் கையில் தங்க நேரிடும்.

கையில் உள்ள துகள்கள் தரையில் விழ நேரிடும்.

தரையில் விழுந்த துகள்கள் வருவோர் போவோரால் மிதிபட நேரிடும்.

அப்படி மிதி படுவது நம்மைப் படைத்த இறைவன் என்ற உணர்வு யாருக்கும் இல்லை.

திவ்ய நற்கருணையின் பெருமையை வாய் நிறையப் பேசிவிட்டு 

செயலளவில் எதிர்மறையாக நடந்தால் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு முன்பும் குருவானவர் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருப்பார்.

திவ்ய நற்கருணை வாங்க விரும்புவோர் பூசைக்கு முன்பு பாவ சங்கீர்த்தனம் செய்வார்கள்.

ஏனெனில் பரிசுத்தமான இதயத்தோடு தான் திவ்ய நற்கருணை பெற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.

இதற்கு பாவங்கள் குறைந்துவிட்டன என்று அர்த்தமா,

அல்லது பாவத்தைப் பற்றிய பயம் குறைந்துவிட்டது என்று அர்த்தமா?

தின்பண்டத்தை வாங்குவது போல கையில் வாங்கிய நற்கருணையை வாயில் போட்டுவிட்டு 

கையில் Cell phone ஐ எடுத்துக்கொண்டு,

வாயால் பேசுவதற்காக கோவிலை விட்டு வெளியேறுபவர்களைப். பற்றி என்ன சொல்ல?

இயேசுவோடு இருந்து கொண்டு அவரிடம் பேசாமல் ஏதோ ஒரு நண்பரோடு பேசினால்

இயேசு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

"உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருப்பேன்"

என்று இயேசு நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.

நம்மோடு இருக்கும் இயேசுவோடு நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி சிந்திப்போம்.

புனித வியாழனன்று இயேசு பன்னிரண்டு அப்போஸ்தவர்களுக்குத் தன்னையே உணவாக கொடுத்தார்.

ஆனால் அவர்களில் பதினொருவர் தான் அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள்.

அவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோம்.

ஒருவர் மட்டும் நற்கருணையை வாங்கிய உடனே வெளியேறிவிட்டார்.

அவரது சகவாசம் நமக்கு வேண்டாம்.

திவ்ய நற்கருணை மீது நமக்கு இருக்க வேண்டிய பக்தியைச் செயலில் காண்பிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment