Wednesday, July 19, 2023

பாவிகளின் கூடாரம்.

பாவிகளின் கூடாரம்.

"தாத்தா, ஒவ்வொரு முறை மங்கள வார்த்தை செபம் சொல்லும்போதும்,

"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்."

என்று சொல்லுகிறோம்.

எத்தனை முறை இந்த செபத்தைச் சொன்னாலும் "பாவிகளாய்" என்ற வார்த்தை மாறப்போவதில்லை.

நாம் எப்போது பரிசுத்தவான்களாய் மாறுவோம்?

பரிசுத்தவான்களாய் மாறுவதற்காகத் தானே செபம் சொல்லுகிறோம்."

"'உனக்கு,

 "பரிசுத்தவான்களாய் இருக்கிற எங்களுக்காக" 

என்று சொல்ல ஆசையாக இருக்கிறது, அப்படித்தானே."

''தாத்தா,

" நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" 

என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

நோயாளிகளைக் குணமாக்க டாக்டர் வருவது போல,

பாவிகளை நீதிமான்களாய் மாற்றுவதற்காகத் தானே இயேசு உலகிற்கு வந்தார்.

வாழ்நாள் முழுவதும் பாவிகளாகவே இருந்தால் எப்போது நீதிமான்களாய் மாறுவது?"

"'உனக்குப் பிரச்சனை மங்கள வார்த்தை செபத்தில் உள்ள "பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக" என்ற வார்த்தைகள் தானே?

பாவம் செய்த நமது முதல் பெற்றோரின் வாரிசுகள் அனைவருக்கும் 

அதாவது மனுக்குலம் முழுமைக்கும் பாவிகள் என்ற வார்த்தை பொருந்தும்.

இயேசு உலகிற்கு வந்தது மனுக்குலம் முழுவதையும் மீட்பதற்காகத்தான்.


"ஆயக்காரரோடும் பாவிகளோடும் நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்ட பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் பாவிகள்தான், நீதிமான்கள் அல்ல.

அவர்களையும் மீட்கவே இயேசு உலகத்துக்கு வந்தார்.

"பாவிகளோடும் நீங்கள் உண்பது ஏன்?"

என்ற கேள்விக்கு பதிலாகத்தான் இயேசு,

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"

என்று பதில் சொன்னார்.

உலகில் நீதிமான்கள் யாரும் இல்லையே!

அன்னை மரியாள் பாவ மாசின்றி உற்பவித்தது சுய முயற்சியால் அல்ல, கடவுளின் விசேச வரத்தினால். 

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் பாவ மன்னிப்புப் பெற்று விட்டாலும், மனம் திரும்பிய பாவிகள் தான்.

பரிசுத்தர்களாய் மாறுவதற்காகத் தான் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் செல்வோம்.

உத்தரிக்கிற ஸ்தலத்தைக்
கடந்து மோட்சத்துக்குள் நுழையும் போது தான் பரிசுத்தர்களாக இருப்போம்."

"பூமியில் வாழும்போது பரிசுத்தர்களாக மாற முடியாதா?"

"'முடியும். நாம் ஞானஸ்நானம் பெற்றவுடனே நமது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு பரிசுத்தர்களாய் மாறுவோம்.

அந்த வினாடி நாம் இறந்தால் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் செல்லாமல் நேரடியாக மோட்சத்திற்குச் செல்வோம்.


ஞானஸ்நானம் பெற்றபின் அற்பப் பாவம் கூட செய்யாமல் வாழ்ந்தால் நமது பரிசுத்தத்தனத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் நமது பழுதடைந்த மனித சுபாவத்திற்கு அது மிகவும் கடினம்.

புனிதர்கள் கூட தங்கள் வாழ்நாளில் பாவ சங்கீர்த்தனம் செய்திருக்கிறார்கள்.

தங்கள் துன்பங்களை பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களும் தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நமது பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை பாவிகளின் கூடாரம், 

பரிசுத்தமான கூடாரம்.

மருத்துவ மனைகள் நோயாளிகளின் கூடாரம் தானே.

குணம் பெறுவதற்காக நோயாளிகள் தங்கும் கூடாரம்.

குணம் பெற்ற பின்னும் தாங்கள் நோயாளிகளாய் இருந்ததை மறந்து விடக்கூடாது.

அப்போதுதான் நோய்களுக்கான காரணங்களுக்குள் அகப்படாமல் தங்கள் சுகநிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அதுபோல்தான் நாம் பாவ மன்னிப்பு பெற்ற பின்பும் பாவ சந்தர்ப்பங்களில் விழாமல் இருக்க நாம் பாவிகளாய் இருந்ததை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் குணமான பாவிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

அதற்காகத்தான் நாம் மங்கள வார்த்தை செபம் சொல்லும்போது நமது அன்னையிடம்,

"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்." என்று செபிக்கிறோம்.

நம்மிடம் பாவம் இல்லாவிட்டாலும் பாவம் இருந்ததற்கான தழும்பு இருக்கும்.

அந்த தழும்பு அகல்வதற்காக தான் பரிகாரங்கள்.

பரிகாரங்கள் போதாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலம்.

பாவம் இருந்ததற்கான இடமே தெரியாமல் நமது ஆன்மா எப்போது சுத்தம் ஆகிறதோ

 அப்போதுதான் நாம் பரிசுத்தர்கள்.

 அதுவரை நாம் பாவிகள் தான்.

யாரிடமாவது ஏதாவது உதவியைப் பெற வேண்டுமென்றால் முதலில் நமது இயலாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பரிசுத்த நிலையை அடைய வேண்டுமென்றால் முதலில் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வங்கியிலிருந்து ஏதாவது பணிக்குக் கடன் பெற வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் நாம் ஒன்றுமில்லாதவர்கள்.

ஒன்றுமில்லாமையிலிருந்து தான் நம்மை இறைவன் படைத்தார்.

இறைவனிடமிருந்து ஏதாவது உதவியைப் பெற வேண்டுமென்றால் 

முதலில் நமது ஒன்றுமில்லாமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் பரிசுத்தமடைய வேண்டுமென்றால் முதலில் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்."

"நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால்?"

"'நமக்கும் பரிசேயர்களுக்கும், அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞர்களுக்கும்  வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

அவர்கள் தாங்கள் மட்டுமே சட்டப்படி வாழ்வதாகவும், மற்றவர்கள் அனைவரும் பாவிகள் என்றும் நினைத்தார்கள்.

அவர்கள்தான் இயேசுவின் சிலுவை மரணத்துக்குக் காரணமானவர்கள்.

தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக்கொண்ட சாதாரண மனிதர்கள் தான்

உடல் சார்ந்த நோய்களிலிருந்தும்,

பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்றார்கள்.

இயேசு பரிசேயன் ஒருவன் வீட்டில் உணவருந்திய போது,

அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசிய பெண்ணைப் பற்றி,

"அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. "

என்று இயேசு கூறினார்.

அவள் செய்த பாவங்களை அவள் ஏற்றுக் கொண்டதால் தான் அவைகள் அவளுக்கு மன்னிக்கப்பட்டன.

அவள் மனம் திரும்பிய பாவியாய் மாறினாள்.

நாமும் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

பாவ நிலைக்குத் திரும்பாமல் பரிசுத்தத் தனத்தை நோக்கி நடை போடுவோம்.

இறைவன் அருள் நம்மை வழி நடத்தும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment