"தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்."(மத்.8:34)
கதரேனர் நாட்டில் பேய்பிடித்த இருவரை இயேசு குணமாக்கினார்.
பேய்கள் சற்றுத் தொலைவில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த
பன்றிகளுக்குள் புகுந்தன.
பன்றிகள் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தன.
பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.
இயேசுவைப் பார்க்க வந்த நகர மக்கள் பேய்பிடித்தவர்களைக் குணமாக்கியதற்காக
அவருக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக
அவரைத் தம் நாட்டை விட்டு அகலுமாறு வேண்டினர்.
ஏன் என்று யூகிக்க முடிகிறது.
இரண்டு மனிதர்களை குணப்படுத்துவதற்காக,
கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளை இழக்க வேண்டியிருந்தது
அந்த ஊர் மக்களுக்குப் பிடிக்கவில்லை.
அழியாத ஆன்மாக்களால் வாழ்ந்து வந்த மக்களை விட
இந்த உலகை சார்ந்த அழிந்து போகக்கூடிய பன்றிகளாகிய சொத்து அவர்களுக்குப் பெரியதாக தெரிந்திருக்கிறது.
இயேசுவை ஊருக்குள் விட்டால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களது உலக சொத்துக்களை அழித்து விடுவார் என்ற பயம் இருந்திருக்க வேண்டும்.
இயேசு எங்கும் அப்படி செய்யவில்லை.
சென்ற இடமெல்லாம் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்தார்.
அவரைப் பற்றித் தவறாக நினைத்து அவரை தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டியிருக்க வேண்டும்.
நாமும் கூட அனேக சமயங்களில் அந்த ஊர் மக்களைப் போல் நடந்து கொள்கிறோம்.
இந்த உலகப் பொருள்களை நமது பயன்பாட்டுக்காகத் தான் இறைவன் படைத்திருக்கிறார்.
'நமது' என்ற வார்த்தை கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் குறிக்கும்.
நாம் பயன்படுத்தும் பொருள்கள் நமது கையை விட்டுப் போய்விட்டால் அவை அழிந்துவிட்டன என்று அர்த்தம் அல்ல.
நம்மைப் போல வேறு யாராலும் அவை பயன்படுத்தப்படும்.
நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பொருட்களைத் தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம் வாசித்த புதுமையில் கூட,
கடவுள் என்ற வகையில் மனிதர்களைப் போலவே பன்றிகளும், அவை விழுந்து மடிந்த கடலும், கடலில் வாழும் பிராணிகளும் அவருக்கே சொந்தம்.
பன்றிகள் உயிரோடு இருந்திருந்தால் அவைகளை மேய்த்த மனிதர்கள் சாப்பிட்டிருப்பார்கள்.
கடலில் விழுந்த பன்றிகளை அங்கு வாழ்ந்த மீன்கள் சாப்பிட்டிருக்கும்.
மனிதர்களைப் பராமரிக்கும் கடவுள் தான் மீன்களையும் பராமரிக்கிறார்.
மீன்களும் மனிதர்களுக்குத் தான் உணவாகப் போகின்றன.
இப்பொழுது நம்மை எடுத்துக் கொள்வோம்.
நாம் இயேசுவை முழுமையாகப் பின்பற்றுவதற்காக நாம் பயன்படுத்தும் உலகப் பொருட்களை தியாகம் செய்து
அவர் பின்னால் போக வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.
நாம் தியாகம் செய்த பொருட்கள் வீணாகப் போய்விடப் போவதில்லை.
மற்றவர்களால் பயன்படுத்தப்படும்.
உதாரணத்திற்கு ஒரு பெற்றோருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
அவர்களில் ஒருவர் தேவ அழைத்தலை ஏற்று, தனக்கு உரிய தனது பெற்றோரின் சொத்துக்களைத் தியாகம் செய்து குருவானவர் ஆகிவிடுகிறார்.
அவர் தியாகம் செய்த சொத்துக்கள் அழிந்து போவதில்லை.
அவை அவரது சகோதரர்களால் பயன்படுத்தப்படும்.
ஒருவர் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக ஒரு நாள் நோன்பு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அதனால் மீதமாக உணவை யாராவது அயலானுக்குக் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் நமது நோன்பு முழு பலன் தரும்.
இன்று தியாகம் செய்த உணவை நாளை நாமே சாப்பிட்டு விட்டால் நமது தியாகத்திற்கு அர்த்தமே இல்லை.
இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அனைவருக்கும் சொந்தம்.
நாம் நமது கையில் உள்ள பொருள்கள் நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் நாம் அவற்றின் காவலாளிகள் தான்.
அவற்றை நாம் பயன்படுத்துவது போலவே நமது அயலானும் பயன்படுத்த அனுமதித்தால் தான் நாம் அயலானுக்குப் பணி புரிய முடியும்.
அவற்றை நேரடியாக நமது அயலானுக்குக் கொடுக்க முடியாவிட்டாலும்
தர்ம நிறுவனங்களின் வழியே கொடுக்க வேண்டும்.
"நான் படித்தேன்,
நான் உழைத்தேன்,
நான் சம்பாதித்தேன்,
அனைத்தும் எனக்குதான் சொந்தம்"
என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது.
நமது உழைப்பினால் நமக்குக் கிடைக்கும் பொருட்களில் ஒரு பகுதியை அயலானுக்கு உதவியாகக் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
நமது அயலானுக்குக் கொடுப்பதை உண்மையில் இயேசுவுக்கே கொடுக்கிறோம்.
நமக்கு உரியதை நமது அயலானுக்குக் கொடுக்க மறுத்தால்
நாம் கதரேனர் நாட்டு மக்களைப் போல நம்மை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டுகிறோம்.
இயேசுவின் போதனைகளையும், அவரது வாழ்நாளில் நிகழ்ந்தவைகளையும்
நற்செய்தி நூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் எழுதி வைத்திருப்பது அவர்களது பொழுது போக்கிற்காக அல்ல,
அவற்றை நாம் வாசித்து ஆன்மீகப் பலன் பெறுவதற்காகத் தான்.
இயேசுவுக்காக நாம் செய்யும் தியாகங்களின் மூலமாகத்தான் நாம் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைய முடியும்.
இவ்வுலகில் நாம் தியாகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும்
மறு உலகில் நமக்கு நித்திய பேரின்ப சம்பாவனை உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.
ஒரு தம்ளர் தண்ணீரை நாம் குடிக்காமல் நமது அயலான் குடிக்கக் கொடுத்தால் அதற்கும் விண்ணகத்தில் சம்பாவனை உண்டு என்று இயேசு சொல்கிறார்.
இயேசு சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.
இயேசுவுக்காக தியாகம் செய்வது நமக்கு ஒரு இழப்பு அல்ல, நித்திய பேரின்ப சம்பாத்தியம்.
"இயேசுவே எம்மோடு தங்கும்.
உமக்காக உம்மைத் தவிர வேறு எல்லாவற்றையும் இழக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நீர்தான் எங்களுக்கு எல்லாம்.
நீர் முழுவதும் எங்களுக்குச் சொந்தம்,
நாங்கள் முழுவதும் உமக்கு சொந்தம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment